October 18, 2013

வெற்றி திருநகர் -புத்தகம் பற்றிய பேச்சு

திரு.அகிலன் அவர்கள் எழுதிய வெற்றி திருநகர் என்னும் சரித்திர நாவல் வாசித்தேன் .Dr.மு .வரதராசனார் அவர்களின் முன்னுரையும் அகிலனின் நாவல் பற்றிய முகப்புரையும் ஒரே மூச்சில் நாவலை படிக்க வைத்துவிட்டன. பல்வேறு அந்நிய படையெடுப்புகள் நடந்த போதிலும் தென்னாட்டு கலைசெல்வங்கள் அழியாமல் அரண்போல் நின்று காத்த வெற்றி நகரான விஜயநகர பேரரசின் கதை.இந்தியர்கள் தங்களுக்குள் பிளவுபட்டு வேற்றுமை பாராட்டி கொண்டிருந்த நிலையிலிருந்து தேசிய ஒருமைப்பாட்டை வளர வித்திட்ட காலமது.ராஜிய விஸ்தரிப்புகளாலும் படையெடுப்புகளாலும் மன்னர்கள் தங்களுக்குள் போர் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒன்றுபட்ட பாரத நாட்டுக்காக பாடுபட்ட கிருஷ்ண தேவராயன் எனும் உத்தம அரசனின் கதை



அவரின் வளர்ப்பு மகனாக ,கடமைக்கும் நாட்டுக்கும் மதிப்பளித்து ,பிற்காலத்தில் மதுரையை புனரமைத்த விசுவாச ஊழியன் விசுவநாதனின் கதை . தன் குறிகிய சுயநலத்துக்காக பல சூழ்ச்சிகள் செய்து பெரிய சாம்ராஜ்யத்தை வீழ்த்திய சாளுவ நரசிம்மரின் கதை .தான் கொண்ட காதலால் பல்வேறு சூழ்ச்சிகளில் சிக்கி இறுதியில் தியாக சிகரமாக வாழ்ந்த புண்ணியவதி இலட்சுமியின் கதை.இவ்வாறு பல்வேறு கதைகளுக்கு இடமளித்து சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து நயவஞ்சகர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்த வெற்றி திருநகரின் கதைதான் இது

தன் மகனுக்காக கடமை தவறி அவனாலேயே போர்களத்தில் தோற்கடிக்கப்பட்ட கருவூல அதிகாரி நாகம நாயக்கர் ,மன்னர் கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுதராயர் ,மன்னரின் மருமகன் இராமராயர் ,உண்மை ஊழியர்கள் அரியநாத முதலியார் ,இராமபத்திர நாயக்கர் மற்றும் அப்துல் என பல்வேறு கதாபாத்திரங்கள் நாவலை சுவையுட்டுகின்றன

ஒற்றுமைக்காக வாழ்ந்த மன்னர் கிருஷ்ணா தேவராயரை பற்றி எனும் பொது பெருமையாக உள்ளது .அவர் ஆட்சி திறன் ,பல்வேறு இனத்தவரை கையாண்ட விதம் ,நீதி என நாடு போற்றும்செங்கோல் மன்னனாக திகழ்ந்திருக்கிறார்.அரசன் மக்களின் ஊழியன் என்றும் அரச பரம்பரை தான் அரசாள வேண்டுமென்பதில்லை எனகூரி தன் தம்பியை தனக்கு பின் மன்னராக்கியவர்.குடியாட்சியின் தத்துவத்தை அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார் .

நாட்டு பற்றினால் தன் தந்தையோடு செருக்களத்தில் நேருக்கு நேர் நின்று விசுவநாதன் போர் செய்யும் காட்சிகள் கல்நெஞ்சையும் கரைக்கும் தன்மை கொண்டவை

தமிழகத்தில் சேர ,சோழ ,பாண்டியர்கள் வீழ்ந்து இருந்த காலகட்டதில் ஒரு நிலையான ஆட்சியை உருவாக்க போராடும் விசுவநாதனின் போராட்டம் அருமை .கலை,கடமை,காதல்,போர்கள் என எல்லாம் நிறைந்த அருமையான நாவல்.விசுவநாதன் -இலக்குமி காதல்காட்சிகளில் எதார்த்தம் இழையோடியதை உணர முடிந்தது
பி.கு

பொதுவாக தெனாலிராமன் கதைகளில் மட்டுமே கிருஷ்ணா தேவராயர் எனும் பெயரை கேள்விப்பட்டு இருக்கிறோம் .அதை தாண்டி இந்திய வரலாற்றில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பக்கங்களை பற்றி அறிய அகிலனின் இந்த படைப்பு உதவியது .அரசன் தத்துவ ஞானியாக இருக்க வேண்டும் என்ற புளுட்டோ வின் கூற்றை மெய்பிக்க வந்த மன்னவர்களில் இவருமொருவர் என கூறலாம்

எல்லா சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கும் அந்நிய படையெடுப்புகளும் போர்களும் மட்டும் காரணம் அல்ல என்றும் உற்பகை எனும் கொடிய விசமும் காரணம் என்பதை உணர முடிந்தது


விஜயநகரத்தின் அன்றைய உன்னத நிலையையும் இன்றைய சிதைந்த இழிநிலையையும் எண்ணும் போது ஒரு கணமான உணர்வு நெஞ்சில் ஏற்ப்பட தான் செய்தது .

ஒரு நாவல் எழுதும் முன் அகிலன் செய்யும் ஆய்வுகள் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது .சில அறிய இடங்களின் புகைப்படங்களையும் சேர்த்து தந்திருப்பது சிறப்பு

[
நாவலின் முழு கதையையும் எழுதினால் படிக்கும் ஆர்வம் குறைந்து விடுவதாக நண்பர் ஒருவர் கூறி இருந்தார்.இனி கதையை எழுதாமல் அதன் சிறப்புகளை பற்றி மட்டும் எழுத போகிறேன் ]


நன்றி வணக்கம்


வெற்றி திருநகர்
வகை :சரித்திர புதினம்
ஆசிரியர் :அகிலன்
பதிப்பகம் :தாகம் பதிப்பகம்
விலை : 300(உயர் ரக தாளில் பதிப்பிக்கப்பட்டது )

No comments:

Post a Comment