August 27, 2018

ஒரு வீடும் சில ஞாபகங்களும்வெகு காலத்துக்கு பிறகு போன வாரம் என்னோட அப்பிச்சி (அம்மாவின் தகப்பனார் ) வீட்டுக்கு போயிருந்தேன். அவரும் பெரியப்பாவும்  இறந்த பிறகு,  நான் எங்க வீட்டு செல்லும் போதெல்லாம் பெரியம்மா அங்கு  வந்துவிடுவதால் அந்த ஊருக்கு செல்வதற்கான அவசியம் இல்லாமல் போனது

ஓலப்பாளையம் என்ற ஊரில் இருந்து ஒரு காத தூரம் நடந்து செல்ல வேண்டும் அந்த ஊருக்கு . கண்ணபுரம் எனப்படும் அந்த கிராமத்தின் மாரியம்மன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும் , எப்பொழும் என்னை வரவேற்கும் ஈசுவரன் கோவில் தேரை இன்று காணவில்லை . ஆனால் கோவில் புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகம் முடித்து வரவேற்றது .
வீட்டுக்கு போனபிறகுதான்,  தேர் பாதுகாப்பாக இருக்க பெரிய ஷெட்டில் வைத்து பூட்டி வைத்து விடுவார்கள் இப்போதெல்லாம் என்பது தெரிந்தது . ஒருவேளை கோவில் சிலைகளை போல் அதையும் யாரேனும் திருடிவிடுவார்கள் என்ற பயமாக கூட இருக்கலாம் . ஆமா சத்தியுள்ள சாமி தேர் அல்லவா

வீட்டின் முன் வாசலில் இருந்து 


தேரோட்டம் பற்றிய இனிய நிகழ்வுகள் எண்ண அலைகளில் வந்து மிதக்க ஆரம்பித்தன . அலங்கரிப்பட்ட தேர், இரவில் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் . அதை வடம் பிடித்து நிலை சேர்க்க ஒரு பெரிய கும்பலே படாதபாடு பட்டு இழுக்கும் . ஓரிருவர் தேரின் ஓட்டத்தை கட்டுப்படுத்த மரக்கட்டையை தேர் சக்கரத்தின் அடியில் அவ்வப்போது வைத்து அதை கட்டுப்படுத்தி கொண்டே இருப்பார்தேர்திருவிழா கடைகள் , மாவிளக்கு கொண்டு போறது , மாரியம்மன் கோயில் சாட்டு பொங்கல் , மாட்டு சந்தை எல்லாமே விரிந்தது . ஆனா எல்லாமே அங்கே சிறு சிறு மாற்றங்களோடு இன்னும் இருந்துகிட்டு தான் இருக்கு . நாம தான போறதில்லை. இதுல என்ன பீலிங்கு என மனசாட்சி மானாவாரியாக திட்ட மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்

அடுத்து காளை மாட்டு சாமி கோவில் . இறந்த கோவில் காளையின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை மட்டும்தான் இருக்கும்  வேறு கோயிலோ கோபுரமோ இல்லை . ஆனா நாங்க சொல்லுறது காளை மாட்டு சாமி கோவில் என்றே . தீவிர முருக பக்தரான எங்க அப்பிச்சி சொல்லிப்போன கதைகள் எல்லாம் நினைவுகளில் வந்துமோத பொடி நடை நடந்து ஊரு வந்து சேர்ந்தேன்


ஊரில் என்னை எப்போதுமே வரவேற்பது எங்க செல்வி பெரியம்மா வூடு . செல்வி பெரியம்மா இறந்து கிட்டத்தட்ட 15  ஆண்டுகள் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன் . அந்த கலையான மோகம் , அம்பு இப்பதான் வாரீங்களா  (அன்பரசு  என்பது எனது இன்னொரு பெயர் )
 என எங்களை அந்த ஊரில் எப்பொழுதும் வரவேற்கும் குரல் செல்வி பெரியம்மாவுடையது .அவர் தவறிய பிறகு வெகு காலம் நான் அந்த வழியை தவிர்த்து வந்தேன் . இன்று வந்த போது அங்கு ஒரு கணம் தெருவில் நின்று வீட்டை உத்து பார்த்தேன் .  அந்த வீடும் பலப்பல மாற்றங்களையம் மனிதர்களையும்  கண்டு விட்டது . இருந்தும் எனக்கு அது அதே செல்வி பெரியம்மா வீடுதான்.எங்க அப்பிச்சி வீட்டை அடைவதற்குள்ளே ஊரில் பல மாற்றங்கள் . சிதைந்து போய் கிடந்த ஊரின் பெரிய மனிதர் அரண்மனை (அப்படிசொல்றதுதான் வழக்கம்) , இல்லாம போன பெரிய மதில் சுவர் என நினைவுகளின் பிம்பங்கள் எல்லாம் வெறும் எச்சங்களாக மட்டுமே விரவி கிடந்தன . அதுசரி இப்பெல்லாம் ஒரு சராசரி கிராமத்தின் அடையாளம் என்பதே குட்டிசுவர்கள்தான்னு ஆகிப்போச்சு . இது மட்டும் என்ன விதிவிலக்காவா இருக்கப்போவுதுன்னு நானே எனக்கு பதில் சொல்லிக்கிட்டேன்

அப்பிச்சி வீடு .முழு பரீட்சை லீவில் எங்கள் கோடைவாசஸ்தலம் .  ஊருக்கு ஆறழகுனு சொல்லுவாங்க அது மாதிரி ஊட்டுக்கு முக்கியம் அதன் அம்சமாம் . அம்சம் அமைப்புங்கிறது  இங்கே அதன் கட்டிடக்கலைய குறிக்கிறதுதான் நினைக்கேன் . எங்க பகுதிகளில் அந்த அமைப்புள்ள வீடுகளில் முக்கியமானது தொட்டி கட்டு வீடுன்னு  சொல்லப்படற  எங்க வூட்டை போன்ற வூடுகள்.  இரு அறைகள் இணையாக அதற்கு எதிராக இரு இணை அறைகள் நடுவில் பொது வாசல் . இரு வாயிற்கதவுகள் என இருக்கும் . நான்கு வூட்டு சனமும் ஒண்ணா உக்காந்து பேசி பழகிக்க வசதியா இந்த நாடு வாசல் இருக்கும் .

வீட்டின் பின்புறம் இருக்கும் வாழை மரம் 


எங்க வீட்ல மூன்று குடும்பங்கள் இருந்தாங்க .

ஒண்ணு எங்க அப்பிச்சி வீடு . அப்பிச்சி , பெரியப்பா , பெரியம்மா அங்க இருந்தாங்க . தாய் மாமா என்னோட சிறுவயதிலேயே தவறிடடார் . அதில்லாம ஒரு எருமை ரொம்ப காலம் எங்களோட இருந்துச்சு. வூட்டுக்கு அப்பாலே காடு . காடுன்னா சும்மா தரிசு நிலந்தான்  மழையை நம்பி பயிர் மட்டுமே போடுவோம் . வேற எதுவும் பெருசா விளைவிக்க முடியாது. அதுவும் சொந்த நிலம் அல்ல . கந்தாயத்துக்கு தான் ஓட்டிக்கிட்டு இருந்தோம் .
சொந்த நிலம் மொதல்ல இருந்துச்சு . இடையில் ஏற்பட்ட கடனுக்காக அதை வித்துட்டோம் . வாய்க்கா பாசனமுள்ள காடு அது ஓரு பெரிய எலுமிச்சை மரம் இருக்கும் . அவ்ளோதான் நினைப்புல இருக்கு . ரொம்ப வருஷம் ஆகிப்போச்சு

அடுத்து வீட்டில் தவில் தாத்தா குடும்பம்  ரொம்ப காலமாக அங்க வாடகைக்கு இருந்தாங்க  . அவர் தவில் வாசிக்கும் அந்த அழகும் லாவகமும் தனி . தேரோட்டத்தில் தேரின் மேல் அமர்ந்து அவர் தவில் வாசித்து கொண்டு பவனி வருவதை பாக்க ஆச்சர்யமா இருக்கும்

அடுத்த வீட்டில் டாக்டர் ஆத்தா வாடகைக்கு இருந்தார் . பேறுகால உதவியாளராக (அப்டித்தான் இந்த அறையின் பெயர் பலகையில் இருக்கும் ) அந்த கிராமத்தில் சேவையாற்றி ஓய்வுக்கு பிறகும் அந்த ஊரிலேயே பலகாலம் இருந்தாங்க . இப்போ கொஞ்ச வருஷம் முன்னாடித்தான் உடம்பு முடியாம அவங்க மக வூட்டுக்கு போய்ட்டாங்க

வீட்டின் பின்புறம் 


மூன்று குடும்பங்களையும் சேர்த்து கிட்ட்த்தட்ட 6 பேர் எப்பொழுதுமே அங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க

கோடை விடுமுறையில் அந்த வீடே விழாக்கோலம் பூண்டதுபோல் இருக்கும் . ஒரு மாதம் முழுக்க விளையாட்டுகளும் பேச்சுக்குரல்களும் தான் . நான் , தவில் தாத்தா - நாச்சம்மாள் ஆத்தா வீட்டு பெயரன் பெயர்த்திகள் , டாக்டர் பாட்டியின் மகள் , பெயர்த்தி மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகள் என அந்த வூடே முழுக்க முழுக்க  எங்களாலும் எங்கள் சந்தோஷங்களாலும் நிறைந்திருக்கும்

பெரிய அப்பிச்சி 


அந்த சமயங்களில் வரும் பொங்கல் தேரோட்டம் , அனைவரும் ஒன்றாக சேர்ந்து சென்ற துள்ளாத மனமும் துள்ளும் , பூவே உனக்காக போன்ற மறக்க முடியாத திரைப்படங்கள் , எந்நேரமும் விளையாடி மகிழ்ந்த தாயக்கரம் , சிறு சிறு சண்டைகள் , கோபங்கள் , ஏமாற்றங்கள் , அழுகைகள் என எல்லாமே எவ்வளவு இனிமையான வசந்த காலங்கள்  . அதுவும் பக்கத்துக்கு ஊர்களில் உள்ள பெரியம்மா , சித்திகள் , மாமன்கள் என அனைவரும் வந்துவிட்டால் போதும். கேட்கவே வேண்டாம்

ஒரு மாதம் முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்கு போனபிறகு ஒருவாரம் ஊடே வெறிச்சோடி கெடக்கும் என என் பெரியம்மா அடிக்கடி அங்கலாய்த்து கொள்வதுண்டு

தூறி ஆடி மகிழும் புளியமரத்தின் அடியில் தற்போது இருப்பது பக்கத்துக்கு வீட்டு மாடு 


இன்று நான் போனபோது  நான்கில் இரண்டு வூடுகள் பாதி விழுந்து விட்டிருந்தன . தவில்தாத்தா இறந்த பிறகு நாச்சம்மை பாட்டி பக்கத்தில் வேறு வாடகை வீட்டுக்கு மாறிவிட்டார் . ஒரே ஒரு அறையில் இப்பொழுது என் பெரியம்மா மட்டுமே தனியாக வசித்து வந்தார் . அப்பிச்சியியும் பெரியப்பாவும் தவறி சில ஆண்டுகளாகிவிட்டது

எப்பொழுதுமே அஞ்சாறு பேர் இருந்துக்கிட்டே இருந்த வீடு . எங்க பெரியம்மா முதல்கொண்டு எல்லோருமே அதிகமா பேசிக்கிட்டே இருக்க கூடிய ஜனங்க . அதுலயும் இவிங்களுக்கு எல்லாம் மைக் செட் தேவையே இல்ல . வீட்டுக்குள்ளே பேசினா  தெருமுனைக்கே கேக்கும்.  ஆனா அந்த மக்கள் நடமாட்டம் இப்போ சுத்தமா இல்லை . அங்க இடைவிடாம கேட்டுகிட்டே இருந்த பேச்சுக்கள் இப்போ எதுவுமே இல்ல . திண்ணை ஓரத்துல எப்பவுமே சத்தம் போட்டுக்கிட்டே இருக்குற ராட்டை இல்லை . அந்த வூட்ல தனியா இருக்கறது நிச்சயமா ரொம்ப பெரிய நரகம்னு எனக்கு தோணுச்சு  .

பெரியம்மா எப்படித்தான் இருக்காங்களோனு யோசிக்க ஆரம்பிச்சபோது தான் பக்கத்துக்கு வீட்டுல இருந்து அம்மணி ஆத்தா பெரியா எல்லாம் என்னை பாக்க வர ஆரம்பிச்சாங்க. அப்போதான் விளங்குச்சு சுற்றத்தாரோட அருமை . இதுல சுத்தி இருக்கிறவங்க எல்லாமே ஒரே சாதி கெடையாது . ஆனா அந்த நேசம் எப்படியோ அவங்களுக்குள்ள ரொம்ப இறுக்கமா பிணைக்கப்பட்டிருந்துச்சு. வந்தவுடனே எம்மொகத்த நீவி ரெண்டு சொட்டு கண்ணீர் வடிக்கமா அம்மணி ஆத்தா எங்கிட்ட பேசுனதில்லை

ரொம்ப காலம் கழிச்சு போனதுல நிறைய மாற்றங்கள் இருந்துச்சு . இங்க இருந்த பாம்பு புத்தை எங்க ? . அந்த வேலி என்னாச்சு ? . இங்க இருந்த வேப்பமரத்தை எப்போ வெட்டுனீங்க ? பெரிய வூட்டு கிணறு என்ன ஆச்சு என என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வதே என் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கு வேலையாகிப்போனது
ஆடி மாசம் தூறி ஆடுற புளிய மரத்தடிக்கு போய் கொஞ்ச நேரம் உக்காந்து இதை எல்லாம் அசைபோட ஆரம்பிச்சேன் .

அந்த ஊரு கொஞ்சம் சூடான நிலப்பரப்பு அதுலயும் ஆறு இல்லாத ஊரு  . சிறுவயதிலே எனக்கு அங்கே வந்தாலே சூடு புடிச்சுக்கும் . மூத்திரம் பெய்யும் போது ரொம்ப எரியும் . சிரமப்பட்டிருக்கேன் . இப்போ என்னோட உடம்புக்கு தாங்குற சக்தி வந்துருச்சு போல . அதுசரி சென்னை சூட்டையே பார்த்துட்டோம் . மத்ததெல்லாம் இனி ஜுஜுபி தானே


குட்டிமா கோவில் , ஆஞ்சநேயர் கோயில்னு ஊரோட இப்போதைய மக்கள் தொகையைவிட கோயில்கள் அதிகமா இருக்கோமோ தோன ஆரம்பிச்சுது  .

கொஞ்ச நேரம் கழிச்சு புதுசா அரசாங்க திட்டத்துல கட்டிக்கிட்டு இருக்குற வூட்டை பாக்க போனோம் . மத்தியான சாப்பிடும்போது கூட எப்பவும் உக்காந்து சாப்புடும் இந்த வாசப்படி ஓர திண்ணையில் உக்காந்த போதும் அதே பழைய நினைவுகள் தான்நினைவுகளினூடே நீந்தி நீந்தி மகிழ்ந்து முடிந்தது அந்த இனிய பயணம்

May 07, 2018

அந்தமான் காதலி

அது ஒரு அதிகாலை நேரத்தின் இன்பமயமான வேளை. ஆயிரமாயிரம் எதிர்ப்பார்ப்புகளுடனும் ஆனந்(தத்)துடனும் ஆரம்பமானதொரு குதூகலப் பயணம்.

சென்னை வானூர்தி நிலையத்தின் மேற்கூரை நம்மை மேவிவிடுமோ என்ற அச்சத்துடன் கடந்து சென்று பயணிக்க தயாரானோம். காற்று வெளியினில் எங்களை கைப்பிடித்து முகில்களினூடே மூழ்கி சென்றது கோ-ஏர் பறவை

செங்கதிரோன் முகமன் கூற ஆரத்தழுவி வரவேற்றது சாவர்கர் விமான நிலையம்.

அந்தமான் செல்லுலார் ஜெயில் 


சுதந்திர பறவைகளான நாங்கள் பார்க்க வேண்டிய முதல் இடமாக அமைந்து போனது அந்தமான் செல்லுலார் சிறை. ஒவ்வொரு செல்லும் பேசிய ஓராயிரம் வரலாறுகளையும் கதைகளையும் கேட்டுக் கொண்டே நடந்தோம் புரிந்தும் புரியாமலும்

மரினா பூங்காவில் உள்ள ராஜீவ் காந்தி சிலை 


சாவார்கர் துதியையும் புகழையும் கேட்டுக்கொண்டே இருந்த காதுகளுக்கு கொஞ்சம் விடுதலை அளித்தது மரினா அரங்கம்

ஆம் அந்த மாலை வேளையில் அன்ன நடை போட்டோம் மரினா பூங்காவிற்கு . பரந்து விரிந்த சமுத்திரத்தை பின்புலமாக கொண்டு கண்டு களித்தோம் சாயும் அந்தியை.மீண்டும் சிறைப் பறவையாய் மாறி செல்லுக்குள் சென்று சிறை வரலாற்றை ஒளியும் ஒலியும் சேர்ந்ததொரு கலவையில் கண்டோம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நிறைவடைந்தது முதல் நாள். .

இரண்டாம் நாளின் காலை வேளை மரினா அரங்கில் சுவையான இட்லியுடன் தொடங்கியது.

பிரிட்டிஷ் தலைமையகமாக விளங்கிய ரோஸ் தீவு எங்களை புள்ளினங்களோடு வரவேற்றது.

ரோஸ் தீவின் சின்னங்களை பதிவு செய்கிறார் எங்கள் ஒளிஓவியர் மணி 

ரோஸ் தீவு 

மருண்டு ஓடும் மானும்
மயங்கி ஆடும் மயிலும்
அழைத்து ஆர்ப்பரிக்கும் அலையும்
துதிபாடி வரவேற்றன.

ரோஸ் தீவின் நான்கு முக்கியமான சிலைகள் 


ஆங்கில /சப்பானிய கால நினைவுச் சின்னங்களோடு பாழடைந்த கட்டிடங்களுமாக காட்சி அளித்த தீவின் எழில்மிகு கடற்கரைகளில் எங்கள் கால் தடங்கள் பரவின.அடுத்ததாக நார்த் பே தீவுக்கு எங்களை கொண்டு சென்றது அந்த சிறு கடலூர்தி.

அழகிய நார்த் பே தீவு 


விளையாடி மகிழ அழகிய கடற்கரையும் கண்டு களிப்பெய்த கலங்கரை விளக்கமும் காட்சி அளிக்க ஆழ்கடல் நடையை நோக்கி மீண்டும் கடலுக்கே சென்றோம்.

தலைக்கவசம் அணிந்து ஆழ் கடலின் தரையில் அழகிய நடை பயின்றோம். அந்த மானை தேடி வந்து இங்கு மீன்களோடு நாங்களும் நீரினுள் விளையாட ஆரம்வித்தோம்.

ஒரு அந்திமாலை பொழுதில் 


எங்களை சுற்றிய மீன் கூட்டங்களினூடே தொட்டு விளையாடிக் கொண்டிருக்க ஆக்ஸிஜன் நிரம்பிய தலைக்கவசம் உதவியது. மீன்களை சாப்பாட்டு தட்டிலேயே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு தண்ணீரின் உள்ளேயே சென்று பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது.


மாலை வேளை மாலையிட்டு வரவேற்க போட் பிளேரின் கார்பின் கவ் கடற்கரை கைநீட்டி அரவணைத்தது.

காய்ந்த சருகு போல சகாக்கள் கடலினில் தூக்கி எறிய கரையை எட்டாத இலையாய் அலையில் மிதக்க ஆரம்பித்தேன்.

உற்சாகமான குளியலுடன் அந்த தினத்துக்கான முடிவுரை அமைந்தது.அடுத்த நாளின் அதிகாலை துரித கதியில் விடிந்தது. அந்த நவீன கப்பலின் சொகுசு அறையில் அமர்ந்து அறுவர் பயணமானோம் ஹேவ்லாக் தீவுக்கு. அந்த அற்புத தீவில் மூங்கில் கம்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த  விடுதியில் பயண களைப்பை கலைந்தோம் .

எழில் கொஞ்சும் ராதாநகர் பீச் 


பிற்பகலில் எழில்மிகு ராதாநகர் கடற்கரையில் மையம் கொண்டோம் . சுண்ணாம்புக்கட்டிகளை பொடிசெய்து கொட்டியது போல் இருந்தது அந்த கடற்கரையின் பால் வெண்மணல் . பச்சை மையை சிந்தியது போன்ற வனப்பரப்புக்கும் நீலப்போர்வை போத்தியிருந்த நீர்பரப்புக்கும் இடையிலான இந்த பெருமணல்வெளி கண்ணுக்கெட்டிய துயரம் வரை நீண்டு காட்சியளித்தது.

ராதாநகர் பீச் 


அந்த நீரின் தெளிவை எப்படி விவரிப்பது ? இப்படி சொல்லலாம் . மார்பளவு நீரில் நின்று ஒரு ரூபாய் நாணயத்தை தண்ணீரில் போட்டால் அது தெளிவாக உங்களின் கண்களுக்கு புலப்படும் . அப்படி ஒரு தெளிந்த கடற்பரப்புஅந்தி சாய்ந்துவிட பிரியா மனமின்றி விடைபெற்றோம் அந்த பூலோக சொர்க்கத்தில் இருந்து

அடுத்த தினம் சில தோழர்கள் ஆழ்கடல் நீச்சல் (ஸ்கூபா டைவிங்கிற்கு இதைவிட பொருத்தமான கலைச்சொல் உருவாக்கி இருக்கலாம் ) சென்று அகமகிழ்ந்து வந்தனர்

நீல் தீவு 


மதிய நேரம் அந்த தீவில் இருந்து பயணமானோம் நீல் கடற்கரை நோக்கி .  அந்தமானின் மற்றுமொரு அழகிய சொர்க்கம் நீல். சிறு கடல் விளையாட்டுகள் , சூரிய அஸ்தமனம் பார்க்க சென்று மேகங்களிடம் ஏமாந்தது என அழகாக ஆரம்பித்தது . நாங்கள் தங்கியிருந்த அந்த விடுதி கடற்கரைக்கு மிக அருகில் அமைந்திருந்தது.

நீல் தீவின் லக்ஷ்மான்பூர் கடற்கரை


இரவு உணவு முடித்துவிட்டு கடற்கரை மணலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். அழகிய நிலவொளியும் மென்மையாக தீண்டி செல்லும் கடற்காற்றும் எங்களை மெய் மறக்க செய்ய, கொஞ்ச நேரம் அந்த உன்னத நிலையில் இருந்து மீளும் போது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது கடல் . சில மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி இருந்தது கடல் . திட்டு திட்டாய் பாறைகள் தெரிய எண்ணிலடங்கா சிறு உயிரினங்களை அந்த பரப்பில் காணமுடிந்தது . கடல் உள்வாங்குவது அந்த கடலில் வழக்கமாக நடக்க கூடியது என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டோம்அடுத்தநாள் அதிகாலை பரத்பூர் கடற்கரையில் சூர்யோதயத்துடன் இனிதாக ஆரம்பித்தது. சுவையான காலை சிற்றுண்டிக்கு பிறகு நீல் தீவின் பல்லுயிர் கழகமான நேச்சர் பிரிட்ஜ்க்கு சென்றோம் .

நேச்சர் பிரிட்ஜ் 


மடிந்த மற்றும் உயிருள்ள பல வகையான பவளப்பாறைகளை காண்பித்து எங்களுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தார் எங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட அந்த சகோதரர் . எலக்ட்ரிக் ஈல் , ஆக்டொபஸ் , நட்சத்திர மீன் , வெள்ளரி மீன் என பலவகை கடல் ஜீவராசிகளை அவர் எங்களுக்கு காண்பித்தார் .
நீல் தந்த இந்த அற்புத அனுபவத்துடன் போர்ட் பிளேர் கிளம்பினோம்

அடுத்த நாள் எங்களுக்கு நள்ளிரவிலேயே விடிந்து விட்டது . சுண்ணாம்புக்கல் குகையை நோக்கி பயணமானோம். ரோட்டோர கடையின் காலை சிற்றுண்டியுடன் வனப்பகுதிக்குள் பயணமானோம் . ஜராவா பழங்குடிமக்கள் குறித்தும் வனப்பகுதியில்  நமது வாகனம் பயணிக்கும் போது செய்ய கூடாதவை குறித்தும் நண்பர் நிறைய சொல்லி இருந்தார். பாராட்டங் சென்று அங்கிருந்து மூன்று குழுக்களாக பிரிந்து பயணமானோம் அந்த அழகிய சதுப்பு நில காடுகளினூடே. ஒரு 20 மணித்துளி பயணம் ஆனாலும் அது அவ்வளவு ரம்மியமானதாக இருந்தது .அங்கிருந்து சிறிது நடைக்கு பிறகு சுண்ணாம்புக்கல் குகையை அடைந்தோம். அதன் சிறப்பு மற்றும் உருவான விதம் குறித்து எங்களுடன் வந்திருந்த வழிகாட்டி எங்களுக்கு எடுத்துரைத்தார் . நிச்சயமாக இந்த சுற்றுலாவின் மிக முக்கியமான இடமாக எனக்கு இந்த வளரும் குகை தோன்றியது.    மேய்ச்சல் நிலம் மற்றும் நிறைய கால்நடைகளை காண முடிந்தது . அங்கு இருந்த மக்களின் கூரை வீடுகள் மிக நேர்த்தியாக இருந்தன

மீண்டும் பாராட்டங் சென்று அங்கிருந்து ஜீப் மூலம் மட் வல்கனோக்கள் பார்க்க சென்றோம். மணல் குழம்புகளை தரையில் இருந்து பீறிட்டு வருவது போல இருந்தது .மத்திய உணவை முடித்துவிட்டு போர்ட் பிளேர் திரும்பும் போது வனப்பகுதியில் சில ஜராவா பழங்குடிமக்களை பார்க்க முடிந்தது.

அடுத்தினம் சித்தியா தோப்பு பூங்கா சென்றோம். முதலைகளின் வருகை இருப்பதால் அந்த பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருருந்தது. சில புகைப்படங்களுடன் திருப்திப்பட்டு கொண்டு அங்கிருந்து கிளம்பி சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு அறைக்கு திரும்பினோம்

அடுத்தினம் பல நண்பர்கள் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிவிட , விமானத்தில் இடம் கிடைக்காததால் நாங்கள் ஐவர்மட்டும் தனித்து விடப்பட்டோம் .

20 ரூபாய் தாளில் தெரியும் நோர்த் பே தீவின் கலங்கரை விளக்க புகைப்படம் , மவுண்ட் ஹெரியாத் தீவில் இருந்து 


அடுத்தினம் எங்களுக்கு மிக சிறப்பாகவே விடிந்தது . காலையில் அந்தமானில் மானுடவியல் அருங்காட்சியகம் (Zonal Anthropological  Museum ) சென்றோம் . அந்தமானின் முக முக்கியமான பொக்கிஷம் இந்த மியூசியம். இங்குதான் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்கள் , அதன் புவியியல் கூறுகள் , மக்கள் தொகை மற்றும் அதன் பல்வேறு பழங்குடிமக்கள் குறித்தும் அவர்களின் வாழ்வியல் குறித்தும் அறிய முடிந்தது அதை முடித்துவிட்டு அங்கிருந்து அக்குவேரியம் சென்றோம் . பலதரப்பட்ட கடல்வாழ் உயிரிகளின் மாதிரிகள் அங்கு பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன . மேலும் பல்வேறு வகையான மீன்கள் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . எனக்கு அங்கிருந்த லாப்ஸ்ட்டர் என்ற உயிரினம் மிக பிடித்துப்போனது . அதன் கொடூர உருவ அமைப்பையே காரணமாக சொல்லலாம்

பின் சத்தம் பகுதிக்கு சென்று அங்கிருந்து மவுண்ட் ஹெரியட் சென்றோம் .அந்த பகுதியில் சில வியூ பாயிண்ட்களில் புகைப்படங்கள் எடுத்துவிட்டு ஒரு சிறு நடையையும் முடித்தோம் . பழங்குடி மக்களின் குடிசைகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன அந்த பூங்காவில்.

பின் அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு சிறு மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம் . ஒரு ராட்சத முதலை , மலைப்பாம்பு , சிறு ஆமைகள் மற்றும் ராஜநாகம் எல்லாம் கண்டு களித்துவிட்டு அறைக்கு திருப்பிமினோம்

மவுண்ட் ஹெரியத் டிரெக்கிங்அடுத்தநாள் காலை அந்தமானில் இருந்து விடைபெற்றுக்கொண்டு திரும்பிவிட்டோம் . ஆரம்பிக்கும்போது எட்டு தினங்களா என விளித்து யோசித்தது போய் அதற்கும் பயணம் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்துடன் பயணம் முடிந்துவிட்டது


பிகு

சில துளிகள் :

கடைசிதின நள்ளிரவில் ஒரு தெலுங்கு படம் பார்க்க தியேட்டர் சென்று நம்முடைய இனிமையான தருணங்களில் சினிமாவின் பங்களிப்பை உறுதி செய்தோம் . அரைமணி நேரம் மட்டுமே படம் பார்த்துவிட்டு நான்  மீதி நேரம் தூங்கி விழுந்தது  வேறு கதை

முருகப்பெருமான் கோவிலின் கும்மியாட்டம் , சத்தம் , முத்துமாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா என தமிழ் மக்களின் வாழ்வியல் துளிகூட மாறாமல் அதே கலை , கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளில் பிரதிபலித்தது

அநேக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் உணவகங்கள் எல்லா இடங்களிலும் இருந்தன . நம் முகத்தையும் தப்பு தப்பா நாங்க பேசுனா ஹிந்தியையம் பார்த்தவுடன் எங்களை கண்டு கொண்டு தமிழில் கதைக்க ஆரம்பித்துவிட்டனர் மக்கள்

பெர்ரியின் கேப்டன் அறைக்கு சென்று அந்த கப்பல் இயங்கும் விதம் மற்றும் அதன் தொழிநுட்பம் குறித்து தெரிந்து கொண்டோம் மற்ற நண்பர்களுக்கு தெரியாமல்போர்ட் பிளேயரில் ஒரு தமிழ் அக்கா கடையில் மீன் குழப்பு சாப்பிட்டோம். அதன் ருசி இப்பொழுது நினைத்தாலும் தொண்டைக்குழிக்குள் ருசிக்கிறது

பால் பவுடர் டீ குடித்து வெறுத்துப்போன மனங்களுக்கு ஆறுதல் அளித்தது பாராட்டங் பகுதியில் கிடைத்த பால் டீ.

ராதா நகர் , நீல் தீவுக்கடற்கரைகளில் போட்ட உற்சாக குவியல்கள் , மணல்வீடு கட்டி விளையாடிய விளையாட்டுகள் , சுண்ணாம்புக்கல் குகை அருகில் குடித்த லெமன் சோடா போர்ட் பிளேர் மற்றும் இதர பகுதிகளில் சாப்பிடட பலவகை உணவுகள் என நினைவுகள் ஏராளம்

இன்னும் இன்னும் ஏராளாமான நினைவுகள் .

அனைத்தையும் எழுத்தில் வடிக்கும் அளவுக்கு கைதேர்ந்த சிற்பி அல்லவே நான்

April 29, 2018

இன்னிசை மட்டும் இல்லையென்றால் - ஸ்வர்ணலதா பிறந்தநாள் பதிவு


முகப்புத்தகத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் அந்த பதிவு கண்ணில் பட்டது . ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் சிறப்பு பதிவாக ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார் . 

ஸ்வர்ணலதா குரலின் ஒரு அசுர ரசிகனாக கல்லூரி காலத்திலிருந்து இருந்து வந்த நமக்கு இது கூட தெரியவில்லையே என நினைத்துக்கொண்டு நினைவலைகளில் மூழ்கிய போது உதயமான பதிவு இது தனிமையான வேளைகளில் 


ஸ்வர்ணலதா - அது ஒரு மாயாஜால குரல் . 

காதில் ஹெட்போன் அணிந்துகொண்டு கண்களை மூடி இந்த பாடலை கேட்க ஆரம்பித்தவுடன் அப்படியே மனம் லேசாகி காற்று வெளியில் மிதக்க ஆரம்பித்து விடும் . 

அந்த இசையும் இசையை மேவும் குரலும் உங்களை உருகி உருகி ரசித்து கேட்க வைக்கிற ஆற்றல் கொண்டது. 

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
என்று முடியும் அந்த பாடல் அலைபாயுதே திரைப்படத்தில் வரும் எவனோ ஒருவன் வாசிக்கிறான் . 

மெல்லிய இழையோடு வரும் அந்த இசையைவிட அந்த பாடலின் உயிரோட்டம் ஸ்வர்ணலதாவின் குரல் .

தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடகர்களின் மத்தியில் முழுக்க முழுக்க தனித்தன்மை வாய்ந்த குரல் அது . நெடுந்தூரத்தில் ஒலிக்கும் பாடலில் அவரின் குரல் இருந்தால் காதில் விழுந்த அடுத்த கணமே மனம் கண்டறிந்து குதூகலிக்க தொடங்கிவிடும் 

மகிழ்ச்சி , காதல் , காமம் , ஆசை ,ஏக்கம் , சோகம் , பிரிவு , வலி என அனைத்து உணர்வுகளையும் அவரின் குரலில் கேட்டு ரசிப்பது அலாதியானது 

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை 

இந்த வரிகளுக்கு சொந்தமான பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச . இன்றும் பல பண்பலைகளில் மாலைப் பொழுதுகளில் நீங்கள் இந்த பாடலை கேட்கலாம் 

ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல் போறாளே பொன்னுத்தாயி. 

தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி

சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

ரகுமான் அந்த பாடலின் ஜீவன் இசை அல்ல வைரமுத்துவின் பாடல்வரிகளும் ஸ்வர்ணலதாவின் குரல்தான் என்பதை நன்கு உணர்ந்து மெல்லிசையாக அமைத்திருப்பார் 

ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு

என்னுள்ளே என்னுள்ளே என மருகும் இந்த பாடலில் இளையராஜாவின் இசையோடு அவரின் தேமதுர குரல் போட்டி போடுவதை நீங்கள் உணரலாம் 

தேம்பி நிற்கும் சோகத்தை கானத்தில் வடித்திருக்கும் மற்றுமொரு பாடல் நீ எங்கே என் அன்பே 

விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
 
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக 

கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை 

என பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலில் வரும் இரு வரிகளை அவர் குரலில் கேட்பது அந்த பாடலின் சுவையை முழுமையாக உணர வைக்க உதவும் 

சோகம் மட்டுமா ஏன் காதல் பாடல்கள் இல்லையா ?

இருக்கின்றதே ஏராளம் 


வெக்கப் படத்தில் கவளிக் கத்த
வளைவுப் பக்கம் கருடன் சுத்த
தெருவோரம் நிறைக்குடம் பார்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

உளுந்து விதைக்கியிலே என ஆரமிக்கும் பாடலும்

 இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ 

என நாநெகிழி போல் வரும் காதலென்னும் தேர்வெழுதி பாடலாகட்டும் 

அந்தியில வானம் என ஆரம்பிக்கும் அந்த பாடலும்  

கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து
காணாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்

 கொட்டுகிற அருவியும்  மெட்டுக்கட்டும் குருவியும்
அடடடா அதிசயம்
ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
நடந்திடும் நதியிலே

எனும் போவோமா ஊர்கோலமா பாடலாகட்டும் 

பா.விஜய் வரிகளில் வரும் துளி துளியாய் பாடல் 

மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட

என பல பாடல்களை சொல்லலாம் 

மேலும் சில பாடல்கள் 

சொல்லாயோ சோலைக்கிளி
குளிருது குளிருது - தாஜ்மஹால்
என்னை தொட்டு அள்ளிக்கொண்டு
நான் ஏரிக்கரை மேல இருந்து 
காதலை தாண்டி காமத்தை தூண்டும் பாடல்களில் முக்கியயமானது இரு பாடல்கள் 

மாசி மாசம் ஆளான பொண்ணு 

ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க

மற்றும் ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு பாடல் 

இவைதான் நினைவுக்கு உடனே வந்த பாடல்கள் . 

நெடுந்தூர பேருந்து பயணங்கள், உறக்கமில்லா நள்ளிரவுகள் , தனித்திருக்கும் பொழுதுகள் ,வெறுமையை உணரும் தருணங்கள் என பல சமயங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறது அவரது குரல் 

புற உலக சுக துக்கங்கள் அனைத்தையும் மறந்து யாருமில்லா ஒரு தனி வெளியில் நெடுநேரம் சஞ்சரிக்க வைப்பவை ஸ்வர்ணலதாவின் பாடல்கள். 

மிக சில காலமே வாழ்ந்து இருந்தாலும் அவருடைய பங்களிப்பு இசைக்கும் தமிழ் சினிமாவுக்கும்  முக்கியமானது . 

அவரின் தமிழார்வமும் உச்சரிப்பும் மிகவும் சிறப்பானது . சில பேட்டிகளில் அவரின் எளிமையான தமிழ் நடை என்னை சிலாகிக்க வைத்துள்ளது 

இறுதியில் இந்த பதிவை இந்த வரிகளை கொண்டு நிறைவு செய்வது சால பொருந்தும் என நினைக்கிறேன் 


கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்