Showing posts with label சுய விமர்சனம். Show all posts
Showing posts with label சுய விமர்சனம். Show all posts

October 19, 2013

நான் நாத்திகனா - நீக்கப்பட்ட பாகங்களுடன் கூடியது (இரண்டாம் பாகம்)

மு.கு: இது தனிபதிவல்ல நான் நாத்திகனா என்பதன் வெட்டப்பட்ட (edited ) பாகங்களை ஒன்றிணைத்து கொண்டுவரப்பட்டது தான் இது.ஆகவே இதில் ஒரு தொடர்ச்சி இருக்காது . சபை நாகரிகம் கருதி சிலவற்றை மட்டுமே சொல்லி இருக்கிறேன்

மறவாமல் பின்குறிப்பையும் படித்து விடுங்கள்


மக்களிடம் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிரிவினைகளுக்கும் காரணமாய் விளங்குபவை சாதியையும் மதமும்.அதன் ஆணிவேர்தான் கடவுள்.வேரை தகர்த்தால் தான் சாதியம் எனும் மரம் வீழும் என்றார் ஐயா பெரியார் .மக்களிடம் ஏற்படும் உயர்வு-தாழ்வுகளுக்கு அறிவு ,கலை ,செல்வம் ,வீரம் போன்றவை காரணமாய் இருக்கலாம் .ஆனால் பிறப்பால் ஒருவனை உயர்வு -தாழ்வு என பிரிப்பது எப்படி அறிவுடமையாகும் எனும் கேள்வி எப்போதும் என்னுள்ளே இருக்கும் மனிதனுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை கடவுள் எழுப்பி விடுகிறார மத தீவிரவாதம் எனும் பெயரில்.

மத தீவிரவாதம் எனும் காலன் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து கொண்டுதான் இருக்கிறது.சாதுவான ஒரு மனிதனை கூட வெறியனாக மாற்றும் சக்தி இதற்க்கு உண்டு. ஆக பக்தி என்பது மனிதனின் பகுத்தறிவை ,சுயசிந்தனையை ,மனிதாபிமானத்தை கொன்று அவனை மனிதத்தன்மை அற்றவனாக மாற்றுகிறது.கடவுள் சார்ந்த பல மூடநம்பிக்கைகள் படித்த பண்புடைய மாந்தர்களால் இன்றும் கடைபிடிக்கப்பட்டு தானே வருகின்றன .இன்னொரு உயிரை வதைத்து காணிக்கை செலுத்துவது,பாவ மன்னிப்பு பெறுவது போன்றவை முற்போக்கான சிந்தனைகளா ???


இனி வரும் காலங்களில் காசு இருந்தால் கடவுளையே வாங்கிவிடலாம் என்ற நிலை வந்துவிடும்.இன்று தெருவுக்கு தெரு கட்டுவதை கோவில்கள்  என்றால் அன்று ராசராசனும் ராஜேந்திரனும் கட்டியவற்றிட்கு பெயரென்னவோ ??

கலையை கொன்று மனிதத்தை சிதைத்து இயற்கையை அழித்து யாருக்காக நீங்கள் கோவில் கட்டுகிறீர்கள் என தெரியவில்லை. கோவிலுனுள் தங்க பேழையில் உறையும் கடவுள் வெளியில் மக்களை பிச்சைகாரர்களாகவும் ஆதர்வற்றவர்கலாகவும் வைத்திருப்பது ஏனோ ??

கடவுள் எனும் பெயர் மனிதனின் வட்டத்தை சுருக்கி சுயநலவாதியாக தன்னை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாதவனாக மாற்றுகின்றது உலகில் வலம்வரும் பிற்போக்கான மூடநம்பிக்கைகளின் அஸ்திவாரம் கடவுள்.இதிகாசங்களிலும் புராணங்களிலும் உள்ள நீதிநெறிகளை மறந்து கடவுளை மட்டும் காணும் மடமைக்கு யார் காரணம் ?

தமிழ் மன்னர்களின் வீரமரபுகளை கூட புராண மரபுகளோடு ஒப்புமைப்படுத்தி நம்ப முடியாமல் செய்தது பக்திமான்கள் என்று பறைசாற்றுவோரின் குற்றம் தானே.மூன்று வேளையும் அர்ச்சனையோடு  வாழும் கடவுளுக்கு ஒரு வேளை உணவின்றி மடியும் குழந்தைகளின் நிலைமை தெரியாமல் போனதா??.தன் உடமைகளை காக்க முடியாத கடவுள் மக்களை காப்பது எங்கனம். சுவரை இடித்து சித்திரம் வரைவது போல் மனிதத்தை கொன்று கடவுள் வளர்கிறோம்.

மதசார்பற்ற நாட்டை காவித்தீவிரவாதம் அரசாலும் நிலை கூட வரலாம்.இன்றைய கல்வி முறை பகுத்தறிவையோ முற்போக்கு சிந்தனைகளையோ போதிக்காமல் பழமைவாதிகளுக்கு தூபம் போடுகின்றது. நாத்திகன் என்று சொன்னாலே கேவலமாய் பார்க்க இதுதான் காரணம்.மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சாதிய போதையை ஏற்படுத்துகிறார்கள்.அந்த பிஞ்சு உள்ளத்தில் உயர்வு தாழ்வு என்ற வன்மத்தை ஏற்படுத்துகிறார்கள்.இந்த பிரிவினை பின்னாட்களில் மிக பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கடவுள் பெயரால் நடக்கும் அணைத்து அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் கடவுள் காரணம் இல்லை என்பது ஒரு சிலரின் வாதம். ஆனால் தன் பெயரில் நடக்கும் குற்றங்களை கலையாமல் அவர் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்.கடவுள் உணர்வுபூரவமானவர் எங்கும் உள்ளவர் என வேதாந்தம் பேசுபவர்கள் பிற மதத்தையும் அதன் நம்பிக்கைகளையும் ஏன் ஏற்றுகொள்வதில்லை .

[ திரவ்பதி என்ற ஒரு பெண்ணின் மானத்தை காக்க அவதரித்த கடவுள் சிங்கள தீவில் ஆயிரகணக்கான எம் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க பட்டபோது எங்கு போனார்
]

ஏழை மீண்டும் ஏழையாவதையும் பணக்காரன் மீண்டும் பணக்காரன் ஆவதையும் கடவுளால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது ஏனோ?.ஒரு மனிதனின் உடமையை மற்றவர் திருடுவதை கடவுள் ஏன் கண்டு கொள்ளவில்லை.தன்னால் உருவாக்கப்பட்ட கடவுளின் தன்னையே ஆட்கொள்வதை ஏன் இன்னும் மனிதன் உணரவில்லை என்பது அதிசயம்தான்.


பி.கு :

நான் இதற்க்கு மனிப்பு கோரமாட்டேன். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் பேச்சும் செயலும் என்னை புண்படுத்திய போது யாரும் அதைப்பற்றி கவலைபடவில்லையே .நான் மட்டும் ஏன் அவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் . மேலும் சுதந்திர நாட்டில் வாழும் நான் என் கருத்துக்களை கூற எனக்கு உரிமை உள்ளது . இந்தியாவில் உள்ள அனைவரும் மற்றவர் மனதை புண்படுத்தாமல் பேசுகிறார்களா ?? மனிப்பு கேட்டு என்னை நல்லவனாக காட்டி கொள்ள விரும்பவில்லை 

October 07, 2013

என் பள்ளி - நிறைவு பகுதி

என் பள்ளி -தொடர்ச்சி........


பசுமை படை என்னும் எங்கள் அமைப்பு தோல்வியை சந்தித்தது. பள்ளிகூடத்தில் படிக்காமல் வீடு வீடாக சென்று மரம் நடுவதை மக்கள் விரும்பவில்லை. மேலும் பசுமை படை அமைப்பை நிர்வகித்துவந்த ஆசிரியர் பணி இடமாற்றத்தினால் சென்று விட மற்ற ஆசிரியர்கள் இதை புறக்கணித்தும் ஒரு காரணம்.பல காலத்துக்கு பிறகு சொந்த ஊர் சென்ற போது நாங்கள் நட்ட பாதி மரங்கள் அழிந்தாலும் மீதி மரங்கள் காற்றோடு எங்கள் பெயரை உச்சரித்து கொண்டிருந்தன. அவற்றின் நிழலில் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோட மிகவும் இனிமையாக இருந்தது. குடியரசு தினவிழா ஒன்றில் நான் ஒரு தேச பக்தி பாடல் பாட , அதை கேட்ட என் ஆசிரியை இனி நீ பாடவே கூடாது என சத்தியம் வாங்கி கொண்டார் (என் தேமதுர குரலோசை அப்படி !!!). மேலும் நான் எழுதிய "குற்றம் செய்தது யாரோ" என்ற நாடகம் பெரும் பிரச்சனையாகி அதோடு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மகாபாரதத்தில் கண்ணன் தான் குற்றவாளி என்று கூறும் அந்த நாடகம் சிறப்பு விருந்தினர்களுக்கு பிடிக்காமல் போகவே நான் பலத்த கண்டனத்தை சந்திக்க நேர்ந்தது.


பத்தாம் வகுப்பு வந்தவுடன் பல பேரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை தலை விரித்து ஆடியது. மூன்று பாடங்களுக்கு (தமிழ் ,ஆங்கிலம் ,அறிவியல் )ஆசிரியர்  இல்லாத நிலை ஏற்பட்டது.ஆங்கிலத்தை அவ்வப்போது தலைமைஆசிரியர் வந்து போதிப்பார். மற்ற பாடங்களுக்கு சில சமயம் யாரவது வருவார்கள் சில சமயம் அதுவுமில்லை. ஆனால் எப்படியாவது பாஸ் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் பலமாக இருந்தது . மற்ற பள்ளி மாணவர்கள் விழுந்து விழுந்து படித்து கொண்டிருந்த சமயத்தில் நாங்கள் விழாமல் விளையாடி கொண்டிருந்தோம். கடைசி சில மாதங்களில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து முழுமூச்சாக படித்தோம். என்  பாடங்களை நானே  சுதந்திரமாக படிக்கும் வழக்கத்தை பள்ளியில் பெற்றேன். ஆனால் அதற்க்கு பிறகு என் கல்லூரிகளில் எனக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்காமல் போனது துரதிஷ்டம்தான் . தேர்வு தாள்களை திருத்த என் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு இருக்கும். என் தாளை மட்டும் நான் திருத்த மாட்டேன் .(அப்பவே நான் அவ்வளவு நல்லவன் !!) .ஆனால் என் தாளை முதலில் நான் எடுத்து எனக்கு தோன்றும் மதிப்பெண்ணை முதல் பக்கத்தில் பெரிதாக போட்டு கொடுத்து விட்டு திருத்த(!!!!) கொடுப்பேன் (நான் சத்தியமா நல்லவனுங்க !!!). ஆனால்  அறிவியல் பாடத்தில் சற்று அதிகம் திணறினோம். கடை இரண்டு மாதத்தில் வந்த புதிய ஆசிரியை முழுமூச்சாக பாடம் எடுத்து எங்களை தேற வைத்தார் . அவருக்கு நாங்கள் மிக அதிகம் கடமைப்பட்டுள்ளோம். பெற்றவர்களுக்கு நன்றி கடனை எவ்வாறு அடைக்க முடியாதோ அதே போல் தான் ஆசிரியர்களுக்கும்.

தேர்வுக்கு முன் அனைவரும் பயப்பட தினமும் காலை தேர்வு மையம் வந்து எங்களுக்கு தைரியம் சொல்லி செல்வார் . எங்கள் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வம் அளப்பரியது. கடைசியில் 96 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு கிடைத்தது . கடைசி தினத்தன்று வார்த்தைகளுக்கு பதிலாக கண்களில் இருந்து  தண்ணீர்  தான் வந்தது. ஏன் அழுகிறோம் என்று தெரியாமலே வெகு நேரம் அழுதோம் . பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் என்னை பற்றி பெருமையாக பேசுவதாக நினைத்து மறைத்து வைத்த பல உண்மைகளை சில பேர் உளற எனக்கு ஒரு மணிநேரம் அர்ச்சனை கிடைத்தது தலைமையாசிரியரிடம்.

காலம் எனும் சக்கரம் வேகமாய் சுழல சிலர் வேலைக்கு சிலர் மேற்படிப்பு என பிரிந்தோம் . சொந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு குடிபெயர நேரிட்டதால் நண்பர்களை பார்க்கவே முடியவில்லை . பல பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சில பேருடன் மட்டும் அவ்வப்போது பேசி மகிழ்வேன். பள்ளியில் எடுத்த group photo வில் அவர்கள் முகங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவதோடு சரி.அண்மையில் சொந்த ஊருக்கு சென்ற பொது பள்ளிக்கு சென்றேன் . என்னாலேயே நம்ப முடியாதபடி பள்ளி புதுக்கோலம் தரித்து நின்றது. எல்லைகளில் கம்பி வேலி ,புது கம்ப்யூட்டர் லேப் ,லைப்ரரி மற்றும் கூடைபந்து விளையாட்டு வசதிகள் என பல புதுமைகள் இருந்தன .பல ஆசிரியர்கள் சென்றுவிட எனக்கு தெரிந்த மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்தார்கள் . ஊர் மக்களுக்கு அடையாளம் தெரியாத என்னை ஆசிரியர்கள் பார்த்த உடன் தெரிந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது



இன்று பல வசதிகள் உள்ளது கண்டு வியந்தேன் . ஆனால் ஒவ்வொரு வகுப்பிலும் மாணாக்கர் எண்ணிக்கை 20,25 என்ற அளவில் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ந்தேன் . அன்று எந்த வசதியும் இல்லாவிட்டாலும் மாணாக்கர்கள் இருந்தார்கள் . இன்று அணைத்து வசதிகளும் உள்ளன ஆனால் படிக்க ஆள் இல்லை . இன்றும் அந்த மைதானம் மாடு மேய்க்க மட்டுமே பயன்பட்டு வருகிறது. மேலும் பக்கத்துக்கு ஊரில் உள்ள இரு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த பட இருப்பதாக கூறினார் . அவ்வாறு நேர்ந்தால் மேலும் மாணாக்கர் எண்ணிக்கை குறைய என் பள்ளி நடுநிலை பள்ளியாகவோ தொடக்க பள்ளியாகவோ தரம் தாலும் அபாயம் உள்ளது


என் தகப்பனார் படித்த, நான் படித்த பள்ளியின் எதிர்காலம் என்ன ஆகுமென்று எனக்கு தெரியவில்லை. முன்னால் மாணவர்களை ஒருங்கிணைக்க நான் எடுத்த முயற்சிகள் அணைத்தும் தோல்வி அடைய என் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்து வருகிறேன்


முற்றும் 

என் பள்ளி

இரண்டாம் கருவறை என்று அழைக்கப்படும் பள்ளி ஒவ்வொருவர் வாழ்விலும் இனிய நினைவுகளையும் மறக்க முடியாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பள்ளி தனி மனித ஒழுக்கத்தையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்று ஒரு மனிதனை செப்பனிடுகிறது. அந்த நினைவுகளை இப்பொழுது நினைத்தாலும் எண்ணிலடங்காத உவகையும் ஒரு சிலிர்ப்பும் ஏற்படும்.

இதோ என் பள்ளியை பற்றி .................

எனது சொந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நான் படித்தேன். வண்ணமில்லாத வகுப்பறை சுவர்கள் ,எப்பொழுதும் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம் எனும் காடு ,மரத்தடியில் இயங்கும் மனித உணவு கூடம், புத்தக பையோடு சுற்றி திரியும் மாணாக்கர் கூட்டம் என ஒரு கிராமப்புற பள்ளிக்குரிய அணைத்து இலக்கணங்களையும் ஒருங்கே அமைய பெற்ற பள்ளி அது. எப்பொழுதே இருப்பது ஆசிரியர் பற்றாக்குறையும் மாணவர்களின் சத்தமும் தான். எந்த எதிர்பார்ப்புகளோ வாழ்கையை பற்றிய அச்சங்களோ இல்லமால் ஓடியாடிய பருவமது.

பத்தாம் வகுப்பு வரை bench கூட கிடையாது. தரையில் அமர்ந்து தான் படிக்க வேண்டும்.கற்களும் முற்களும் நிறைந்த மைதானத்தில் புற்களுக்கு எங்கள் நிழலில் இடம் கொடுத்தோம் விளையாட்டு பாடவேலைகளில். மதிய சத்துணவு இடைவேளை தின்பண்டங்கள் என தின்று தீர்த்தோம்.எட்டாம் வகுப்பு வரை இருந்த அரை டவுசர் ,பேன்ட் ஆக பதவி உயர்வு பெற்றது. ஆனால் பெண்கள் தாவணி அணிய வேண்டும் எனும் விதிமுறை இருந்தது. இதனால் புத்தகம் தூக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தாவணியை சரி செய்து கொள்வதே அவர்களுக்கு வேலையாய் போனது. தமிழ் பாடவேளையில் ஆங்கிலம் கலவாமல் தமிழ் பேச தமிழாசிரியை கட்டாயபடுத்துவார். ஆனால் ஆங்கில பாடவேளையில் அந்த ஆசிரயர் கூட ஆங்கிலம் பேச மாட்டார்.

அறிவியல் practical சமயத்தில் தவளையை ஆபரேஷன் செய்ய தவளை வேட்டை நடத்திய காலங்கள் மறக்க முடியாதவை. பாம்பு கூட அவ்வளவு தவளையை பிடித்திருக்காது. டீச்சர் தலையில் ராக்கெட் விட்டது ,tube light உடைத்து போன்ற சாகசங்களை என் தலைமையில் நடத்தி காட்டினோம் (அப்போ நான் தான் கிளாஸ் லீடர் ஆனால் சம்பவம் நடந்த பிறகு தான் எனக்கே சொல்வார்கள் பிரச்னையை சமாளிக்க).வகுப்பறையில் தூங்கியது ,tiffin box திருடி தின்பது கிரிக்கெட் பார்க்க வெளியை தாண்டுவது போன்ற செயற்கரிய காரியங்களை செய்தோம். கிராமப்புற பள்ளி என்பதால் மாணவிகளிடம் பேச கூடாது எனும் விதியை பெயரளவில் கடைபிடித்தோம்.

சுதந்திர ,குடியரசு தினத்தன்று நிகழும் கலை நிகழ்சிகளை தவிர வேறு எதுவும் இருக்காது. ரெட்டை வரி நான்கு வரி நோட்டுகள் எழுதாமல் சென்று கை விரல்களிலே அடி வாங்குவது வழக்கம்.பள்ளிக்கு அருகில் வீடு என்பதால் சில நன்மைகளும் இருந்தன பல தீமைகளும் இருந்தன. கட் அடித்தால் ஆசிரியர் நேராக வீட்டுக்கு வந்து தூக்கி சென்று விடுவார். வகுப்பை பெருக்குவது , மரம் செடிகளுக்கு தண்ணீர் விடுவது போன்ற வேலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள் கால அட்டவணைப்படி செய்து முடிப்பார்கள்.

கிரிக்கெட் பார்க்க வேண்டுமென்பதற்காக வேலியை தாண்டி ஒரு கும்பலே எங்கள் வீட்டில் இருக்கும். ஆனால் கதவு வெளியில் பூட்டியிருக்கும் (எப்புடி ). இந்திய-பாகிஸ்தான் மேட்ச் வந்தால் மற்றும் எனக்கு காய்ச்சல் வந்து விடும்! எனவே பள்ளிக்கு லீவ் போட்டுவிடுவேன்.பள்ளிக்கூட சுவர்களில் எங்கள் காம்பஸ் விளையாட்டு நன்றாக தெரியும். எந்த தவறு செய்தாலும் எவ்வளவு கேவலமாக திட்டு வாங்கினாலும் ஒருவரை ஒருவர் காட்டி கொடுக்காத தன்மை எங்களின் பலம். தலைமைஆசிரியர் வாரத்தில் இருமுறையாவது என்னை "சோத்த தான திங்கற! இல்ல வேற எதையாவது திங்கறையா " என சந்தேகம் கேட்பார். ஆசிரயர்களுக்குள் மூளும் சண்டைகளை வைத்து குளிர் காய்ந்தோம்.

நாங்கள் விளையாட்டாய் பசுமை படை எனும் அமைப்பை ஆரம்பித்தோம். பள்ளி மற்றும் ஒவ்வொரு வீடாக சென்று மரங்கள் நட்டோம். எங்கள் ஊரில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை தேர்ந்தெடுத்து மரங்கள் நட்டோம் அதற்க்கு வேலியும் அமைத்தோம். இது நல்ல அனுபவமாக இருந்தது. ஆனால் .பசுமை படைக்கு எதிர்ப்பு எல்லா பக்கமிருந்தும் வந்ததால் அது ஒரே ஆண்டில் கலைக்கப்பட்டது .


 பதிவின் நீளம் அதிகமாக இருப்பதால் இரண்டாவது பாகமாக என் பள்ளியை தொடர்கிறேன்


தொடரும்

October 06, 2013

நான் நாத்திகனா? பாகம் 1

நான் நாத்திகனா நீங்களாவது சொல்லுங்களேன்


நான் என்னை நாத்திகன் என்றோ ஆத்திகன் என்றோ அடையாள படுத்திக் கொண்டதில்லை .
ஆனால் என் சுற்றத்தாரின் பார்வையில் அவ்வாறு தெரிவதற்கான காரணமும் புலப்படவில்லை

நான் கடவுளை மறுக்கவோ வெறுக்கவோ இல்லை. ஆனால் கோவில்களிலும் ஆலயங்களிலும்
உள்ளவற்றை கடவுள் என்று ஒப்ப மனம் மறுக்கிறது . பரந்து விரிந்த
உலகத்தில் எங்கும் கடவுளை பார்கிறேன் இயற்கையை , வானத்தை , சூரியனை ,
உயிர்களை கடவுளாக கொள்ள நான் தயார். சிரிக்கும் பிஞ்சு குழந்தையில் ,
நனைக்கும் மழையில் , வயது முதிர்ந்த கிழவியின் தீண்டலில் ஏன் ? OMR இல்
நிராதரவாக விடப்பட்ட மாடுகளில் என பல வழிகளில் நான் கடவுளை உணர்கிறேன்
.உயிர்களை வருத்தும் இறை நம்பிக்கையில் எனக்கு உடன்பாடு கிடையாது. நானும்
கோவிலுக்கு செல்கிறேன் .அங்குள்ள சிற்பங்களில் கலை என்னும் கடவுளை
பார்கிறேன் .


இறைவனை அடைய இயற்கை அழிப்பதும் உயிர்களை கொள்வதும் தர்மம் எனில் நான்
நாத்திகனே. கோவில் மனிதனுக்கு மனநிம்மதியையும் அமைதியையும் தருவது என
வரையறை செய்து கொண்டால் இவை இரண்டையும் எனக்கு நல்கும் நூலகமே எனக்கு
கோவில். அங்கு சமய பேதமைகள் இல்லை. என்னை எனக்கே உணர வைக்கும் இடம் அது .

என் சொந்த ஊரில் என் உயிர் தோழனுடன் தோளில் கைவைத்தபடி செல்ல இயலா
இழிநிலைக்கு காரணம் உங்கள் சாதியையும் கடவுளும் தான் . இதையெல்லாம்
பார்க்கும் போது எனக்கு பாரதியின் இந்த வரிகளே நினைவுக்கு வருகின்றன.

தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்

என்னை பொறுத்த மட்டில் மனிதன் கண்டு பிடித்த மிக பெரிய விஷயம் கடவுள்.
கடவுள் என்பவர் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்ற என் கற்பனை
மனிதன் தோன்றிய காலகட்டத்தில் சிறு சிறு குழுக்களாக வாழ ஆரம்பித்தான்
அந்த சமயம் தன குழுவை கட்டுபடுத்தவும் பிற குழுக்களிடையிருந்து தன்னை
காக்கவும் உருவாகிய வேலியே கடவுளாக இருக்கலாம். ஆக மனிதனால்
உருவாக்கப்பட்டு மனிதனையே மிஞ்சிய பொருள் கடவுள்.

மனிதனால் வரையறை செய்யப்பட்ட சடங்குகள் மற்றும் சம்ப்ரதாயங்கள்
காலத்திற்கேட்ப மாறி வந்துள்ளன. மனிதன் தன விருப்பதுகிணங்க கடவுளையியும்
மாற்றி கொள்கிறான். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க கூடாது என்ற பழமொழி
மனிதன் தன விருப்பம் போல் கடவுளையும் கோவில்களையும் சிருஷ்டிகிறான்
என்பதை பறைசாற்றுகிறது. பாவங்கள் செய்தால் கடவுள் மன்னிப்பார் என்ற
வரையறை மததீவிரவாதத்தை உயிரூட்டுகின்றது.

சாதி மத காரணிகளை கொண்டு நான் மலிவு விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பவில்லை
. ஆகவே என் உடலில் எந்த மத அடையாளங்களையும் அணிவதில்லை ஒருவேளை மத
அடையாளங்களுக்குள் நான் ஆட்பட்டுகொண்டால் அது என் மக்களை இழக்க வைத்து
விடுமோ என நான் பயப்படுகின்றேன்

தனக்கு துன்பம் வந்தால் மட்டுமே கடவுள் பலர் கண்களுக்கு தெரிகிறார்.
வரும் காலத்தில் மனிதன் மரணத்தை வென்று விட்டால் (விஞ்ஞானம் உதவியால் )
அவன் கடவுளை நம்பமாட்டான் மாறாக அவனே கடவுளாகிவிடுவான்.

நான் கடவுளாக கருதும் புத்தகங்களுடன் என் வாழ்க்கை பொய் கொண்டிருகிறது
அவை நான் விருப்பு எல்லா செல்வங்களையு எனக்கு அள்ளி வழங்குகின்றன.
இவையோடு என் வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது.

சில சமயங்கள் நான் என் கண்ணுக்கு கடவுளை மறுக்கும் நாத்திகனாக
தெரிகிறேன் சில சமயம் கடவுள் உள்ளார் அது இயற்கை மரம் செடிகள் கொடிகள்
உயிர்கள் என்பதை ஒப்பு கொள்வதால் பக்தி மானாக தெரிகிறேன்.

ஆனால் யாராவது நாத்திகன் என கூறினால் கோபத்துடன் அதை பெருமையாக ஒப்பு கொள்கிறேன்


நீங்களாவது சொல்லுங்கள் நான் யாரென்று
*