June 12, 2020

தெய்வா - சிறுகதை

பீப்ப்ப்ப்ப்ப் பீபீ பீப்ப்ப்ப்ப்  , காதுக்குள்ள வந்து ஹாரன் அடித்து எழுப்பிவிட்டது அந்த கண்டெயினர் லாரி. கண்களை துடைத்தபடி கண்ணாடிக்கு வெளியே எட்டி பார்த்தேன்.  பஸ் டோல்கேட்டில் நின்று கொண்டு இருந்தது. பக்கத்து சீட்டில் இருந்தவர் காது கொள்ளாத வார்த்தைகளால் அந்த லாரிக்காரனை திட்டிக் கொண்டிருந்தார். 

நேரம் அதிகாலை 3 மணி என மொபைல் போன் காட்டியது.  இரவு 9 மணி வரை அன்றைய தினம் நன்றாகதான் இருந்தது.  அப்பா போன் செய்து அந்த விசயத்தை சொல்லாத வரை. விசயத்தை கேட்டவுடன் ,

"அப்பா... என்ன சொல்றீங்க ?. எப்புடி?. என்ன ஆச்சு ?. " 

கத்தியே விட்டேன். . 

என்னால் அவர் சொன்ன வார்த்தைகளை நம்பவோ , ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. ஆனால் அவர் தழுதழுத்த குரலில் சொன்னது  அதிர்ச்சியடைய வைத்து விட்டது. 

அடுத்த சில நிமிடங்களில் சென்னையில் இருந்து ஊருக்கு கிளம்பிவிட்டேன். ஆன்லைன்ல டிக்கெட் புக் செய்ய எல்லாம் நேரமில்லை. நேராக பெருங்களத்தூர் சென்று பஸ் ஏறிவிட்டேன். 

இருக்கையில் அமர்ந்த நொடி முதல் அப்பா உடைந்து போய் சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப எதிரொலித்தன 

" தெய்வா அத்தை , நம்மள எல்லாம் விட்டு போயிட்டா " .

தெய்வானை அத்தை. கருத்த தேகம் , எழும்பும் தோலுமா குள்ளமா இருக்குற உடம்பு. உழைச்சி உழைச்சி ஓடா வத்தி போய் கிடக்கிற உடம்பு. நாத்து நடுறதுல இருந்து ஆடு மேய்க்கிறது வரைக்கும் இத்தன வருசமா எல்லாத்தையும் பாத்தவ.

குடும்பத்துக்கு மூத்த புள்ள,  அடுத்து எங்க அப்பா . மூணாவதா ஒரு புள்ள பொறந்து வயசுக்கு வர்ற வயிசு வரை இருந்து செத்துப்போச்சாம்.


14 வயசுல முருகேசன் மாமாவுக்கு வாக்கப்பட்டு போனப்போ கொஞ்சூண்டு நிலம் மட்டுமே இருந்துச்சாம். இன்னிக்கு இங்க உருவாகி இருக்குற தோப்பு தொறவு  ,காடு மேடு எல்லாம் இந்த 50 வருசமா அவ பாடுபட்டு உருவாக்குனது.  

 அப்பத்தா அடிக்கடி சொல்லும். எம்மவ எவ்வளவு சாமர்த்தியசாலி தெரியுமானு . ஒரு பைசா விரயமா செலவு பண்ண மாட்டா. யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டா

இரண்டு பசங்க, ஒரு பொம்பள புள்ள. இன்னிக்கு தோப்பு, தேங்காய் களம் , பைனான்சினு பல தொழில் பண்ணி சிறப்பா இருக்குறாங்க பசங்க ரெண்டு பேரும்.  போன வருசந்தான் தோப்புக்குள்ள பெரிய வூடு கட்டி இருந்தாங்க. மருமகளுக, பேரன் பேத்தி வந்த பொறவும் எல்லா கணக்கு வழக்கும் அத்த தான் பாத்துட்டு இருந்தா. 

மனசுக்குள்ள இந்த நினைப்புகள் ஓடிக்கிட்டே இருக்க எப்ப தூங்கி போனேன்னு தெரியல. விடியக்காலை 6 மணிக்கு ஊரு வந்தப்பதான் முழிப்பு தட்டுச்சு. 

எறங்கி அத்தை ஊருக்கு போற டவுன்பஸ்ல ஏறி அப்பாவுக்கு போன் அடிச்சிட்டு ஒக்காந்தேன். பஸ் போற வேகத்த விட என் மனசு அங்க பறந்து கிட்டு இருந்துச்சு.  பஸ் ஸ்டாப்புக்கு வண்டியோட வந்து அப்பா ரெடியா நின்னுட்டு இருந்தாரு.  மொகத்த பாத்தவுடன் நேத்து கேட்ட அதே கேள்வி " எப்படிப்பா திடீர்னு. நல்லாதானே இருந்தாங்க அத்த. என்ன ஆச்சு? "

"மொதல்ல ஒக்காரு வண்டில" என்று கூறிவிட்டு மௌனமாக வண்டியை ஸ்டார்ட் ஆக்கினார். போற வழியில் சொல்ல ஆரம்பிச்சார் "உனக்கு தான் தெரியுமேடா. இந்த தலைவலி அவளுக்கு அடிக்கடி வரும்னு. வந்தா சோறு தண்ணி இல்லாம கிடப்பா. ஆஸ்பத்திரி கூப்பிட்டா வேல கெட்டு போவும்னு வரமாட்டா . இந்த நாய்களும் அவள ஆஸ்பத்திரி கூட்டிட்டு போனா ஆடு மேய்க்கிறது யார்னு கூட்டிட்டு போவல. காசு காசுன்னு பீய திங்கிற நாய்க . " 

என பொறிஞ்சு தள்ளிக்கொண்டே வந்தார். அப்பாவுக்கும் மச்சானுகளுக்கும் எப்பவுமே ஒத்து வராது. 

தோட்டத்துக்குள் வண்டி நுழையும் போதே செல்வியின் கதறல் ரோட்டுக்கு கேட்டது

 " அம்மா , பாடு பட்டு பாடு பட்டு, இன்னுக்கு என்னைய இப்புடி  பாட வச்சிட்டு போயிட்டியே 

இனி எனக்குனு கவலைப்பட யாரு இருக்கா ?  " 

செல்வியில் ஒப்பாரி என் மன தைரியத்தை வீட்டுக்குள் நுழையும் முன்னரே அசைத்து விட்டது. 

"மெட்ராஸ்ல இருந்து மருமவன் வந்துட்டானப்பா "  ஊர் பிரசிடண்ட் சத்தமா சொன்னார். 

வீட்டுக்குள் கிழக்கு மூலையில் கிடத்தப்பட்டிருந்தாள் தெய்வா அத்தை. வா தங்கம் , வா சாமி என இந்த வீட்டு வாசலுக்கு வரும் போது எல்லாம் கூப்பிட இனி யாரும் இருக்க போவதில்லை. தலையில் இருந்து காலு வரை வாஞ்சையா நீவியுட்டு எளைச்சு போயிடுச்சு புள்ள, அங்க சோறு ஒத்து வரலையோனு கேக்க அந்த வீட்டில் இனி எனக்கு யாருமில்லை

என்னை பார்த்தவுடன் ஓய்ஞ்சு போயிருந்த செல்வி , " பாரு தியாகு... அத்தைய பாரு சாமி .நம்மள எல்லாரையும் விட்டு போயிட்டாளே "  என்று கட்டி புடிச்சிட்டு கதற ஆரம்பித்தாள். விடிய விடிய அழுது தொண்டை தண்ணி வத்தி போயி அவ குரல் வாயிலிருந்து வெளில கூட வரலை. ஆனா என் தோளில் அவ குலுங்கி குலுங்கி விட்ட கண்ணீர் என்னை முழுதும் அசைத்தது. ஆம்பள அழக்கூடாதுன்னு இருந்த இறுமாப்பு ஒடைஞ்சி அழ ஆரம்பிச்சேன்.  அம்மா வந்து என்னைய செல்விகிட்ட இருந்து பிரிச்சு அத்தை கிட்ட கூட்டிட்டு போனாள்..மூஞ்சி மட்டும்தான் தெரிஞ்சுது. வாயி ஆன்னு தொறந்த மேனிக்கு இருக்க கண்ணு மூடி இருந்துது. செத்த பொறகு இன்னும் ஒல்லியாக தெரிந்தாள் தெய்வா அத்தை. அப்பா கொண்டு வந்த மாலையை வாங்கி போட்டுவிட்டு கால் மட்டில் ஒக்காந்து அழ ஆரம்பிச்சேன். உடனே அம்மா வெளில் கூட்டிட்டு போய் மத்த ஆம்பிளைக கூட சேர்ல ஒக்கார வச்சாள்..

ஊட்டுக்கு வெளில மரத்துல அத்தை எனக்காக கட்டுன ஊஞ்சல் அனாதையா கிடந்துச்சு.  எல்லா வருசமும் முழு பரீட்சை லீவு விட்டா போதும். ஒடனே அத்தை வீட்டுக்கு ஓடி வந்துடுவேன். மச்சானுக ரெண்டு பேரும் இருப்பாங்க. என்னை தங்கம்னு தான் எப்பவுமே கூப்பிடுவாள் அத்தை. எத்தனை பவுனுங்க அண்ணினு அம்மா கேலி செய்யும். நான் வந்துட்டாலே ஒரு கோழியின் ஆயிசு முடிஞ்சுடும். சாயங்கால காப்பிக்கு பொரி வறுத்து தருவாள். உளுந்து வடை , போண்டா சுட்டு தருவாள். இளநி , தெலுவு, பனங்கிழங்கு , நொங்கு என தினமும் திங்கறதுக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும். ஊருக்கு போகும் போது முறுக்கோ, கச்சாயமோ சுட்டு குடுப்பாள். 

அதுவும் எங்க மணி நாயி அந்த போண்டாவ தூக்கி போட்டா என்னமா கேட்ச் புடிக்கும் தெரியுமா.. தாண்டி ரோட்ஸ்னு செல்ல பேர் வச்சு இருந்தேன் 

அப்பதான் எங்க நாயி, பூனை எல்லாம் காணாமேனு தொண்டுபட்டி பக்கம் கண்ணு போச்சு. ஆனா அங்க கோழி மட்டும்தான் நின்னுட்டு இருந்துச்சு. 

எங்க அத்தையினால மட்டும்தான் நாய், பூனை , கோழி, ஆடு எல்லாத்தையும் ஒத்துமையா வளர்க்க குடியும். பூனைய கண்டு நாய் பயந்துக்கும்.கோழிக்குஞ்சு நாய், பூனை மேல ஏறி விளையாடும். ஆட்டுக்குட்டிக வூட்டுக்குள்ள வரை போயி வரும். ஆனாலும் வெள்ளை பூனை மாரிய தான் அத்தைக்கு ரொம்ப புடிக்கும். வாடி, போடி என கொஞ்சிக்கிட்டே இருப்பாள். கிளீஸ் கிளீஸ்னு சத்தம் போட்டால் போதும் , அடுத்த நிமிசம் அவ முன்னே வந்து நிக்கும் மாரி. 

அதிகாலை எழுத்ததில் இருந்து அவள் செய்யும் வேலைகள் மூன்று ஆளுக பளுவுடையது. பால் கறக்கிறது, ஆடு மேய்க்க ஓட்டிபோடுறது , காட்டு வேலைகன்னு ராத்திரி வரைக்கும் கால்ல சக்கரத்தை கட்டாத கொறையா ஓடிக்கிட்டே இருப்பா. 

எங்கத்தை வெயில்ல ஆடு மேய்ச்சுதான் கறுத்து போயிடுச்சுன்னு நினைவு தெரிஞ்ச நாள் வரை நான் சொல்லிக் கொண்டு இருந்ததுண்டு. 

இன்னிக்கு உருவாகி இருக்குற எல்லாமே அவ சாமர்த்தியம்தான். மாமன் வாயில்லா பூச்சி. சத்தமா அதிர்ந்து பேசிக்கூட நான் பாத்ததில்லை. கடுமையான உழைப்பும் , சேமிப்புமேதான் இத்தனைய உருவாக்கி வச்சு இருக்கு. 

செல்வியில் தேம்பல் இன்னும் நிக்க வில்லை.இரவு முழுக்க அழுது கண்ணீர் தீர்ந்து போயிருந்தாலும் கேவிக் கொண்டு இருந்தாள். 

செல்விய பிளஸ் டூ முடித்தவுடன் கட்டிக் கொடுத்துட்டாங்க. புகுந்த வீட்டுலயும் விவசாயந்தான். ஆனா அந்த மனுசன் மொட குடிகாரன். பையன் பொறந்து மூணு வருசம் ஆகுறதுக்குள்ளே சாரயாம் குடிச்சுட்டு வண்டி ஓட்டிட்டு போயி ஆக்சிடெண்ட்ல செத்து போனான். செல்விதான் எல்லா வேலையும் பாத்துட்டு இருக்கா. அவங்க மாமனார் , மாமியார் ரொம்ப நல்ல டைப். 

ஆயிரம் வசதிகள் இருந்தாலும் அத்தை ஆதங்கப்படுறது செல்விய நினைச்சுத்தான். இவ வாழ்க்கை இப்புடி ஒண்ணுமில்லாம ஆகிப்போச்சே.இன்னிக்கு எல்லாரும் நல்லா இருக்கும் போது எம் மவ மட்டும் இப்டி கஷ்டப்படுறாளேங்கிற பொலம்பல் இருந்துக்கிட்டே இருக்கும். செல்வி மவன் இப்போ டிப்ளமோ படிச்சுட்டு இருக்கான். 

செல்வி,  அத்தையோட ஜெராக்ஸ் காப்பி. அதே கருப்பு ஆனா மாமா மாதிரி கொஞ்சம் வளர்த்தி.  உளுந்து மாவு தோசை கலர் நானு , ராகி மாவு தோசை கலர் நீயின்னு நான் அவள கிண்டல் செய்றதுண்டு . 

சொல்லப்போனா இன்னிக்கு தாயப்போல தான் புள்ளயும் இருந்தா. காஞ்சு காஞ்சு கருவாடா போயி. அவ கைய புடிக்கும் போது கருப்பா காப்பு காச்சு இறுகி கிடக்கும்... இரும்பு மனுஷி அவ. அத்தைய போல எம்மேல பிரியமா இருக்குற ஆள். 

"நேராயிட்டு இருக்கு செந்திலு, எடுத்தரலாம். நல்லா வாழ்ந்தவ , கடைசி பயணத்தையும்.நல்லபடியா செஞ்சு வைக்கனும்ல  " 

வாய் திறந்தார் பிரசிடெண்ட்..

பெரிய மச்சான் தலையசைக்க,  தேர்கட்டி தெருவெல்லாம் பூப்போட ஆரம்பித்தது அவளது இறுதி யாத்திரை. அந்த மீளா நித்திரை 

சுடுகாட்டுல இருந்து திரும்பி வந்த பொறகும் எல்லாரையும் போல என்னால சகஜமா பேச முடில. மாமன் மேல விட்டத்தை பாத்துக்கிட்டே ஒக்காந்துட்டார். இடிஞ்சு போயிட்டார் மனுசன்  .
ஐம்பது வருச வாழ்க்கைல தலைப்பிரசவத்துக்கு தான் எங்க வீட்டுக்கு வந்து கொஞ்ச மாசம் இருந்து இருக்கா. சின்ன மச்சானும் செல்வியும் பொறந்தப்ப் , பொறந்த வூட்டுக்கு கூட வரலையாம்..

மாரியாத்தா கோயில் திருவிழால இருந்து எப்போ எங்க வூட்டுக்கு வந்தாலும் ரவைக்கு தங்குறதுல்ல. அய்யோ நான் இல்லாட்டி என்னாகுறது ? யார் பால் கறக்கறது ? ஆட்டுக்குட்டிக்கு யார் பால் கொடுக்கறது ? கோழிகள யார் புடிச்சு அடைக்கிறது ? . நான் போயே ஆகனும்னு போயிடுவா. 

வேற எந்த ஊருக்கோ , ஒறம்பறைக்கோ எங்கும் போனது இல்ல. வீடு, வீட்ட வுட்டா காடு ,தோட்டம், இப்போ நிரந்தரமா காடு.
இதுதான் அவ வாழ்க்கை. 

அழுகை சத்தம் கொறைஞ்சு சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பிச்சது வூடு. மத்தியானம் ஆன போதும் பல்லுல பச்சத்தண்ணிகூட படாம செல்வி அனத்திக்கிட்டே கிடந்தா. 

அப்பா முகத்தில் ஆத்திரம் வெளிப்பட்டது. மச்சானுகள் அத்தைய கூட்டிட்டு போய் அந்த தலைவலிக்கு சரியான வைத்தியம் பாக்கலன்னு அவருக்கு அந்த கோபம். இப்ப சம்பாதிச்சு எல்லாத்தையும் ஆக்கி வச்சுட்டு இப்டி இல்லாம போயிட்டாளேன்னு ஆதங்கப்பட்டுக்கிட்டே இருந்தாரு..

மூணாம் நாள் காரியம் , காடு ஆத்துறது , கூரை மேல சோறு போடுறதுன்னு எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு 

கிளம்பினேன்.  மூன்று நாள் லீவுக்கு பிறகு அலுவலகம் வருவதால் அதிக வேலை இருந்தது. வேலைப்பளுவில் அத்தை குறித்த நியாபகங்கள் கரைந்து போயின. 

அப்பா பதினாறாம் நாளுக்கு வர அழைத்து போது திரும்பவும் போயிருந்தேன். பொலிவிழந்து காணப்பட்டது புது வீடு. வாப்பா என்பதை தாண்டி மாமன் எதுவும் பேசவில்லை. அத்தை இருந்த போதே அவர் வார்த்தைகளை எண்ணி எண்ணி தான் பேசுவார்.  இனி அதுவும் இருக்க போவதில்லை. 

செல்வி என்னை பார்த்தவுடன் கேவ ஆரம்பித்தாள். அண்ணிமார்களின் அதட்டலால் அமைதியானாள். எல்லாமே இங்க மாறிடுச்சுங்கிறது தெளிவா தெரிஞ்சுது. 

ஆடு ,மாடு மேய்க்க ஆள் போட்டு இருப்பதாக பெரிய மச்சான் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தார். மச்சானின் பசங்க ஓடி விளையாடிக்கிட்டு இருந்தாங்க. 

அமைதியா வெளில வந்து வாசல்ல போட்டு இருந்த சேர்ல ஒக்காந்துட்டு இருந்தேன். மணி மெல்லமா வந்து என் பக்கத்துல நின்னு ஊட்டுக்குள்ள பாத்துக்கிட்டே இருந்துச்சு. 

பசிக்கும் போலன்னு நினைச்சு பெரியக்கா கிட்ட சோறு போட சொன்னேன்.  அக்கா வந்து அதனோட தட்டுல சோறு வச்சாங்க.  அக்கா மூஞ்சிய பாத்துட்டு அப்டியே படுத்துடுச்சு .

 " சனியன் . அவிய வந்து போட்டாதான் திம்பீகளோ. தின்னா தின்னு. இல்லாட்டி சாவு. நான் என்ன செய்யறது" திட்டிவிட்டு உள்ளே போய் விட்டாள் 

அதனோட மொகத்த பாக்க பாவமா இருந்துச்சு. பதினைஞ்சு நாளா , தெய்வானை வந்து சோறுபோடுவாள்னு காத்து கிடக்கு அந்த நாயி. 

"தினமும் வந்து ஊட்டுக்குள்ள பாத்துக்கிட்டே நிக்குது. நாங்கெல்லாம் போட்டா திங்க மாட்டேங்குது"  மழை வரும் அதிசயமாய் வாய் திறந்தார் மாமா. 

ஏய் நாயே... செத்து பொயிட்டா தெய்வா. அவ வரமாட்டா. வரவே மாட்டா. இந்நேரம் அவள மண்ணு தின்னு இருக்கும். இத உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது.  இப்டியே திங்காம கிடந்தா நீ செத்துடுவே. 

ஆனா பாரேன். ஆடுகளுக்கு காவல் காக்கிற வேலை பார்க்கிறதுனால தான் உன்னைய நினைக்குறாங்க. சோறு போடுறாங்க . உன்னைய பத்தி பேசுறாங்க. அந்த மாரி என்ன ஆச்சுன்னு யோசிக்க கூட யாரும் இல்ல.

நினைத்துக்கொண்டு சிரித்து கொண்டு இருந்தேன். தன்  வாலால் தடவிக்கொண்டே படுத்துக் கொண்டது மணி 




13 comments:

  1. வாழ்த்துக்கள் சசி.. இந்த துறையிலும் சிறக்க வாழ்த்துக்கள்.. இந்த கதை கிராமத்து வாழ்க்கை வாழும் மக்கள் பார்த்த / அனுபவித்த சில அனுபவங்களை நினைவூட்டும்.. நானும் அதில் ஒருவன்..

    ReplyDelete
  2. நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள் 👍

    ReplyDelete
  3. அருமை சசி... வாழ்த்துக்கள் 💐💐

    ReplyDelete
  4. Nallarukku Sasi ♥️♥️

    ReplyDelete
  5. ஒரு கிராமத்து உழைப்பாளியை கண்முன் காணமுடிந்தது.
    சில வரிகள் மனதிற்கு கனமாக இருந்தன.

    வி. நாராயணசாமி

    ReplyDelete
  6. அருமையான கதை சசி. படிக்கும்பொழுது அந்த கதைக்களதிற்கே சென்ற ஓர் அனுபவம்.

    ReplyDelete
  7. அருமையான கதை. காட்சிகளை நேரில் பார்ப்பது போலவே இருந்தது. எழுத்துப் பணி மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete