July 02, 2017

வயநாடு - மழையோடு விளையாடிய ஒரு பயணம்

மலையாள தேசத்தின் மலையழகை காணும் ஆவலில்
ஆரம்பித்ததொரு இனிய பயணம்.

வயநாடு என்னும் வாழ்வளிக்கும்
பூமியின் வளங்கலே எங்களின் மனதில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.லிகிடி வியூஐராவத பேருந்தில் அம்பாரி செய்து
இந்தியாவின் மென்பொருள் நகரினை கடந்தோம் அந்த அதிகாலையில்.

குளு குளு பேருந்து நத்தையாய் நகர்ந்து சுல்தானின் கோட்டையாம் மைசூர் நகரினை தொட்டது.எல்லைகள் கடந்தாலும் எம் தேசிய உணவான இட்லியை தந்து இன்பத்தில் உலாவ விட்டது அடையாறு ஆனந்த பவன் .

சாலையின் இரு மருங்கிலும் பச்சை கம்பளம் விரித்து எங்களை வரவேற்றது வயநாடு.

மேக கூட்டங்களின் எழில்மிகு காட்சி 


மலையக மண்ணை எங்கள் பாதங்கள் முத்தமிடுமுன் எங்களின் மேல் முத்துக்கள் தூவி ஒரு வரவேற்பு மாலையை இயற்றிச் சென்றது வானம்.


மலைகளின் மத்தியில் தென்பட்ட மேகங்களின் கூடல் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த காட்சியை கண்டு நாணிக்கண் புதைத்திருந்தான் கதிதவன்.

(நாணுதல் எப்படி கதிரவனுக்கு பொருந்தும் என கேள்வி எழுப்பினால் , இந்த காட்சியை கண்டு மனமகிழ்ந்து தண்மை முகத்துடன் தன்னிலை மறந்திருந்தான் கதிரவன் எனக் கொள்க)

சரிவாக ஆதம்பித்து உள்ளே செல்ல செல்ல செங்குத்தாய் நீண்டிருந்தது எடக்கல் குகை.

எடக்கல் குகையை நோக்கி சென்ற பயணத்தில் 


பிரம்மாண்ட பாறைகள் கைசேர்த்து நிற்பது போன்றதொரு தோற்றத்தை வழங்கியது.

பணடைய மக்களின் சித்திரங்களை காட்டி அந்த இடத்தை காலச்சக்கரத்தில் பின்னோக்கி கொண்டு செல்ல பெருமுயற்சி செய்து கொண்டிருந்தது.

எடக்கல் குகையின் பிரம்மாண்டத்தில் சொக்கி நின்ற தருணங்கள் 


பிரம்மாண்டத்தையும் பிரமிப்பில் ஆழ்த்திவிடும் அளவுக்கு கண்முன் நின்றது பாணாஸுரா நீர்தேக்கம்.

பிரம்மாண்டத்திற்கு பிந்தைய அழகியல் 


அதன் படிகளை எங்கள் பாதங்கள் எண்ணிய போது என்ன எண்ணியதோ ஆகாயம், எண்ணிலடங்கா துளிகளை தந்தது.

மழைய கண்டவுடன் மழலையாய் மாறி இல்லை இல்லை மழயாகவே மாறி ஆட்டம் போட்டோம்..

மழையோடு விளையாடும் பறவைகள் 

மனதின் இருக்கங்களை மடை திறந்த நீர் போல ஓட விட்டு தன்னுடைய பெயர்க்காரணத்தை மறுநிர்ணயம் செய்தது

அருவியில் குளிக்கும் ஆவலில் சென்றவர்களுக்கு

அடிக்கொருதரம் அமுதாய் பொழிந்து கொண்டிருந்தது மழை

பானாசுரா அணை-


களைத்திருந்த இரவு பொழுதுகளில் கதைகளாய் பேசி களித்திருந்த்தோம்
 ஈகைப் பெருநாளாயினும் எம் பசிக்கு ஏதெனுமொரு ருசியை புசிக்க கொடுத்து கொண்டே இருந்தது அந்த பூமி.

முத்தங்கா வனப்பகுதியின் சபாரி பயணம் 


வனவிலங்குகளின் வசிப்பிடமான முத்தங்கா சரணாலயம் சென்றோம் மறுநாள். அந்த காலை வேளையில் தூறலுடன் காட்டுக்குள் ஒரு பயணம். பாதையை தவிர எல்லா பக்கமும் பச்சை நிறம்.

வேழத்தின் கம்பீர வரவேற்பும்.

தாமரைகளின் பொது கூட்டமும் (தாமரை - தாவுகின்ற மரை - தாவுகின்ற மான் என பொருள் )தோகை விரித்தாடும் மயில்களின் விளையாட்டும்

இந்த சபாரி என்னும் சவாரியை இன்பமாக்கின.

மூன்று தினங்களும் எங்களை நனைத்து உலர்த்தி நனைத்து மகிழ்ந்தது மழை.இந்த பயணத்தை மறக்க முடியாததாக மழையே மாற்றிப்போனது.

பறப்பன , நடப்பன , நீந்துவன என புசித்த ஒவ்வொன்றும் நீங்காமல் நினைவுகளாய் இடம் பெறுகின்றன.


ஒவ்வொரு பயணங்களும் பல வித அனுபவங்களை தந்து கொண்டே இருக்கின்றன . இயற்கை காட்சிகளை ,வனப்புகளை தாண்டி சந்திக்கும் மனிதர்கள் , ருசிக்கும் உணவுகள் , மக்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் சந்திக்கும் அனுபவங்கள் என அனைத்தும் மனசில் அழியா படிவமாக பாதிக்கின்றன


மேலும் சில படங்கள்April 19, 2017

வாழை - கற்றதும் பெற்றதும்

ஒரு தன்னார்வலனாக வாழையில் இணைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன . இந்த காலகட்டங்களில் வாழை என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களையும் அனுபவங்களையும் அசை போட ஆரம்பித்ததன் விளைவே இந்த பதிவு .

கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பில் இணைத்து, அந்த குழந்தைகளுக்கு கற்பிக்க போகிறோம் என்ற எண்ணத்துடன் எனது முதல் பயிலரங்கிற்கு சென்று இருந்தேன் . அந்த இரு தினங்களும் சிறார்களிடம் கண்ட அன்புதான் இந்த இனிய பயணத்திற்கு வித்திட்டு இன்று இந்த பதிவை எழுத வைத்து இருக்கிறது .அன்றிலிருந்து இன்றுவரை கற்பித்ததை விட கற்றுக் கொண்டவைகள்தான் அதிகம். புத்தகங்களில் உள்ள அச்சிடப்பட்ட எழுத்துக்களை மட்டுமே வெவ்வேறு வழிமுறைகளில் நம்மால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியும் . அவர்களிடம் இருந்து கற்று கொண்ட விளையாட்டுகளும் வாழ்வியல் பாடங்களும் அநேகம் . மிக சாதாரணமாக விளையாட்டுகளினூடே அவர்கள் சொல்லிவிட்டு சென்று விடும் வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்துக்கள் ஆழமானவை 

கற்போம் கற்பிப்போம் என்று சொல்வதில் உள்ள உண்மைகள் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தன . ஒருமுறை விளையாட்டாக ஒரு சிறுமி என்னை பார்த்து "உங்களது வீட்டில் உள்ள மிக முக்கியமான சொத்து எது?", என வினவினாள் . நான் உடனே அதிமேதாவிதனமாக, "நான் சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களே மிகவும் அரிய சொத்து " என கூறினேன் . அதற்கு அந்த சிறுமி , " இல்லை அண்ணா , நம் வீட்டின் மிக பெரிய சொத்து நாம்தானே !!! " என்று கேட்டுவிட்டு போய்விட்டாள் . இதைவிடவா பெரிய கற்றல் இருந்துவிட போகிறது ?.

உடன்பிறந்தவர்கள் யாருமில்லையே என்ற வருத்தம் சிறுவயதில் இருந்தே எனக்கு இருந்தது. ஒருமுறை எதேச்சையாக சிறார்களிடம் சொன்னபோது நாங்கதான் இருக்கிறோமே என்று அவர்கள் மொழிந்த வார்த்தைகள் இப்பொழுது நினைத்தாலும் இனிக்கின்றன. . அவர்களுடன் விளையாடிய விடுகதை புதிர்களும் அதை விடுவிக்க முடியாமல் திண்டாடிய தருணங்களும் சுவாரசியமானவை . ஒவ்வொரு சிறாரிடமும் உரையாடும்போதும் விளையாட்டுபோதும் ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாமே பாடங்கள்தான் . அவற்றை பற்றி சொல்லி கொண்டே இருக்கலாம் .

பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் . எண்ணங்களில் , செயல்களில் ,முகபாவங்களில் ,சிரிப்புகளில் என ஒவ்வொன்றிலும் தனித்தன்மை மிக்கவர்கள் சிறார்கள் . கவிதை ,கதை , ஓவியம் , நடனம் , நடிப்பு , விளையாட்டுகள் என ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமைகள் அபிரிவிதமானவை. அவற்றை கண்டறிந்து மெருகு ஏற்றுவதுடன் அவற்றை பறை சாற்றும் விதமான வாய்ப்புகளை ஏற்படுத்தியும் கண்டறிந்தும் தர வேண்டியது அவசியம் என நம்புகிறோம் . 

ஒவ்வொரு பயிலரங்கிலும் புதுப்புது அனுபவங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன . ஐந்து நாள் அலுவலக வேலையை முடித்து களைத்து ஓய்ந்து போன முகத்துடன் வெள்ளிகிழைமை இரவு எங்கள் பயணங்கள் ஆரம்பிக்கின்றன . சனிக்கிழமை காலை குழந்தைகளின் வருகையின் போது கிடைக்கும் அந்த புத்துணர்வும் /ஆற்றலும் இரு தினங்களும் சிறார்களுடன் சிறார்களாக மாற்றி நம்மை விளையாட வைத்துவிடும் . திரும்ப திங்கள் அலுவலகம் செல்லும் போது மனதளவில் ஒரு சிறப்பான மலர்ச்சியும் புத்துணர்வும் இருக்கும் .

ஒரு வழிகாட்டியாக எனது அனுபவங்களை பதிவுசெய்வதும் முக்கியமானது . ஆரம்ப காலகட்டத்தில் அலைபேசி வாயிலாக எனது தம்பியுடன் பேசுவது மிகவும் கடினமானதாக இருந்தது . பயிலரங்கில் நன்றாக உரையாடும் அவன் போனில் அந்த அளவுக்கு பேசுவதில்லை . நான் கேட்கும் சில கேள்விகளுக்கு ஆம் , இல்லை என்ற ஓரிரு வார்த்தை பதில்களையே தருவான் . பிறகுதான் என்னால் உணர முடிந்தது அலைபேசியில் நான் எப்பொழுதும் கேள்விகளையே கேட்கிறேன், அவனுடன் உரையாட முனைவதில்லை என்று . அதன் பிறகு என் அலுவலகத்தில் நட்பு வட்டாரத்தில் நிகழ்ந்தவற்றை நான் பகிர அவனும் பள்ளியிலும் விளையாடும் பொழுதும் நடந்தவற்றை பகிர்வான் . இப்படியாக எங்களது உரையாடல்கள் நீண்டு கொண்டே இருக்கும் . 

பள்ளி பருவத்தில் இருக்கும் போது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நிறைய கடிதங்கள் எழுதி உள்ளேன் . பிறகு நவீன தொலைத்தொடர்பு வசதிகள் வந்த பிறகு கடிதப் போக்குவரத்துக்கு என்பதே அற்றுப் போய்விட்டது . இந்நிலையில் வாழை தம்பிகளிடம் இருந்து வரும் கடிதங்கள் மகிழ்ச்சியை தருவதோடு பால்ய கால நினைவலைகளையும் மீட்டுகின்றன .

இந்த மூன்று ஆண்டுகளில் வாழை எனக்குள் ஏற்படுத்திய மாற்றமும் , ஒரு பண்பட்ட முதிர்வும் சிறப்பானவை . என் குணங்கள் ,பொறுப்புணர்வு மற்றும் நடத்தையில் ஏற்பட்டுள்ள இந்த நல்ல மாற்றங்கள் என் குடும்பத்தாரையும் சுற்றத்தாரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. 
நமது கற்றல் செயல்பாடு குழந்தைகளுடன் நின்றுவிடுவது இல்லை. அதை தாண்டி சக தன்னார்வலர் நண்பர்களிடம் இருந்து கற்றுக்கொள்பவை அதிகம் . அவை அனுபவ பாடங்களாகவும் வாழ்க்கை பாடங்களாகவும் விரிகின்றன . ஒவ்வொரு அமர்விலும் சக தன்னார்வலர்களுடன் உரையாடும் போதும் கற்று கொள்ளும் செய்திகளும் விஷயங்களும் பல புத்தகங்களை வாசிப்பதற்கும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து பேசுவதற்கும் ஒப்பானவை . ஒரே மாதிரியான/ வேறு மாதிரியான எண்ணங்கள் , ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நண்பர்களை வாழை உருவாக்கி கொடுத்து இருக்கிறது .இதன் மூலம் பலதரப்பட்ட தளங்களில் பயணப்படவும் அனுபவப்படவும் முடிகிறது . இன்னும் நிறைய புதிய நண்பர்களை சந்திக்கும் ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது . 
ஒவ்வொரு பயிலரங்கிற்கு செல்லும் போதும் பேருந்து வரும்வரை காத்திருக்கும் நேரங்கள் அழகானவை . நமது நண்பர்களை சந்திக்க போகிறோம் என்ற அந்த ஆர்வமே அதற்கு காரணம் . பயிலரங்கிற்கு முன்னர் நடக்கும் தயாரிப்பு பணிகளில் இருந்து கற்று கொள்வது நிறைய . பலதரப்பட்ட எண்ணங்கள் கொண்ட மக்களிடம் அலைபேசியின் வாயிலாக பேசி கருத்து ஒற்றுமையுடன் சிறார்களுக்கு என்ன சொல்லி தர போகிறோம் என்ற முடிவு எடுக்கப்படுகிறது . அதற்கு ஒவ்வொரு தன்னார்வலரும் தரும் பங்களிப்புகள் மிக சிறப்பானவை . 

பொதுவாக வாழை என்பதை எனது சமூக கடமையை நிறைவேற்றும் ஒரு களமாகவே நான் கருதுகிறேன் . இந்த சமுதாயம் எனக்கு கற்று கொடுத்த அறிவையும் , ஒழுக்கத்தையும் மற்ற நல்ல விஷயங்களையும் திரும்ப இந்த சமூகத்துக்கு தருவது எனது கடமைதானே ! அதை செய்யும் ஒரு வாய்ப்பை வாழை எனக்கு நல்கி இருக்கிறது 
வாழைக்கு ஒரு தன்னார்வலனாக கொடுத்த பங்களிப்புகளை விட அங்கிருந்து கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் மிக அதிகம் . 

இந்த நெடிய பயணத்தில் ஒரு பயணியாக தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது 

March 27, 2017

நீங்களும் ஆகலாம் தேசபக்தர்

தற்காலத்தில் தேசபக்தராக உங்களை இந்த உலகம் ஒப்புக்கொள்ள வேண்டுமெனில் கீழ்கண்ட பத்து கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்


1. பாகிஸ்தான் என்ற பெயரை கேட்டவுடன் நாடி, நரம்பு எல்லாம் புடைத்து ரத்தம் சூடேறி தேசபக்தி பொங்கி வர வேண்டும். இலங்கைகாரன் மீனவர்களை சுடுறான் , சீனா ஆக்கிரமிப்பு செய்யிறான் என்பதை பற்றி எல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை.

2. கோட்ஸே கடவுளாகவும் , ஆர்.எஸ்.எஸ் புனித அமைப்பாகவும் கருதும் பக்குவம் வேண்டும் . அவர்கள் துப்பும் எச்சில் கூட உங்களுக்கு புனிதமாக முற்போக்கு சிந்தனையுள்ளதாக தெரிய வேண்டும். அப்பப்போ காந்தி , அம்பேத்கார் படங்களுக்கு மாலை மட்டும் போட்டால் போதும்

3. பசு என்பதை கடவுளாக கருத வேண்டும். மாட்டு கோமயத்தில் இருந்து தங்கம் தயாரிக்கலாம் போன்ற அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்துதல் மிக்க நலம் .  மாட்டுக்கறி வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கணும்னு கூவ வேண்டும் . நாம மூணு நேரமும் பால் குடிக்கலாம் , மாட்டு தோலால் செய்யப்பட உபகரணங்களை பயன்படுத்தலாம் . மாட்ட கொன்னு அதன் இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் . அதுல எல்லாம் பிரச்னை இல்லை

4. இந்திய தேசம் என்பது இந்துயா தேசம் என்று உங்கள் காதுகளில் ஒலிக்க வேண்டும் . அயோத்தி புனித பூமி முதல் ராமர் பாலம் வரை முற்றிலும் நம்ப வேண்டும் . அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில கோவில் கட்டவேண்டும் என்பதை உங்களின் வாழ்நாள் இலட்சியமாக கொள்ள வேண்டும் . அனைவரும் இந்துக்களாக ஒன்றினைவோம்னு பேசணும் . இந்துக்கள் அப்படிங்கிற வரையறைக்குள்ள எல்லா ஜாதிகளையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை . ஆதாயம் இல்லாத அடித்தட்டு மக்களின் சாதிகளை கண்டு கொள்ள தேவையில்லை

5. நாத்திகம் , மத நல்லிணக்கம் , பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை போன்ற கெட்ட வார்த்தைகளை புறந்தள்ளி ஆசிரமத்துக்கு போய் தியானம் யோகா போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றின் மூலம் நீங்கள் ஆன்மீக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு முக்தி நிலையை அடையலாம்

6. அப்பப்போ பிரியாணி அண்டா திருடறது, தலைக்கு விலை வெக்கறது , காதல் , பெண்களின் ஆடைகள் போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தவேண்டும் . பெண்களை சக மனிதர்களாக பாலின சமத்துவத்தோடு பார்ப்பது இறைவனின் படைப்பை அவமதிப்பது போன்ற பெரிய குற்றமாக கருதவேண்டும் .

7. கீதையில சொன்னதோ போதையில சொன்னதோ புனித நூல் சொன்னதை கரெக்ட்டா கேக்கணும் . அதுல நல்ல விஷயங்களே இருந்தாலும் அதை எல்லாம் ஓத்துக்கிட்டு அன்னம் போல் நமக்கு தேவையான மத போதனைகளை மட்டும் எடுக்க வேண்டும் . கடவுள் முன்னர் மூடர்களே மூடநம்பிக்கை பற்றி  பேசுவார்கள் என்ற கருத்தில் உறுதியாக இருக்கவேண்டும் .நாம் படித்த அறிவியலுக்குள் ஆன்மீகத்தை புகுத்தி அதன் வழி தேடி மோட்சம் அடைய வேண்டும்

8.எல்லாவற்றுக்கும் ராணுவ வீரர்களை போற்ற வேண்டும் . அங்கே அவர்கள் சோறு தண்ணியில்லாம செத்தாலும் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களின் தியாகங்களை சொல்லி நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.

9. முக்கியமா வெள்ளையாக இருக்கிறவ பொய் சொல்லமாட்டேன் என்பதுபோல் காவி கட்டியவன் நல்லது மட்டுந்தான் செய்யும் புனிதமானவன்னு நம்பனும். முருகன்னா யார்னு கேக்கணும் விநாயகர் சதுர்த்தினா ஊருபூரா சிலைவச்சு தண்ணியில கறைக்கணும்


10. இதுல உள்ளதைவிட முக்கியமானது எங்கயும் எதிர்த்து ஏன்? எதுக்குன்னு கேள்வி கேக்க கூடாது . நம்பனும் ,அனுபவிக்கனும் ஆராயக்கூடாது . அது கடவுளா இருந்தாலும் கங்கையா இருந்தாலும் காவியா இருந்தாலும் என்ன கருமமா இருந்தாலும்

இதெல்லாம் படிச்சிட்டு,  இல்ல நான் உண்மையான தேசபக்தன் . இந்தியா எனது நாடு . நான் இங்குள்ள மக்கள் அனைவரையும் பெரிதும் நேசிக்கிறேன் . இந்நாட்டின் இறையாண்மையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பேன்னு டயலாக் பேசினா நீங்க இருக்க வேண்டிய இடம் மனநல மருத்துவமனை மட்டுமே

இந்த திறன்களை வளர்த்து கொண்டால் நீங்களும் ஆகலாம் தேசபக்தர்


-சசிகுமார் முத்துலட்சுமி

March 24, 2017

காஞ்சி பயணமும் காணாமல் போன கட்டப்பாவும்தலைப்புக்கும் பதிவுக்கும் எப்பவுமே ஏதாவதொரு சம்மந்தம் இருக்க வேண்டுமா என்ன என்ற அரிய சிந்தனையின் அவுட்புட்டே இந்த பதிவு . இந்த பதிவை என்னன்னு டேக் செய்யறதுன்னு சாத்தியமா தெரியல . பயணம்னு போட்டா அந்த மீன் முள்ளுகூட மன்னிக்காது . சரி ,வழக்கம்போல எப்படியாவது ஆரம்பிப்போம் .

நண்பர்களுடன் ஒவ்வொரு நண்பரின் வீட்டுக்கும் சென்று வரவேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாகவே எங்களுக்கு இருந்து வந்தது. அதன் இனிய துவக்கமாக சென்னைக்கு மிக அருகில் உள்ள கோவில்களின் நகரமான காஞ்சிக்கு செல்லலாம், அப்படியே நண்பர்கள் மூவர் வீட்டுக்கும் சென்று தங்கி விழாவை சிறப்பிக்கலாம் என்ற யோசனையில் ஆரம்பமானது இந்த இனிய பயணம்ஒரு அதிகாலை நேரத்தின் அமைதியான மின்தொடர்வண்டி பயணமது . காலையில் சாப்பிட்ட உளுந்து வடையின் ருசி நாக்குலேயே நின்னாலும் காஞ்சியில் இறங்கியவுடன் பசி மெல்லமாக வெளியில் எட்டி பார்த்தது . தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்று சிறப்பாக சிற்றுண்டியை முடித்தோம் . பயண திட்டப்படி மாமண்டூர் குகைக்கோயில் செல்வதாக இருந்தது .ஆனால்  சமயலறையில் இருந்து வந்த பறப்பது , ஓடுறது மற்றும் நீந்தறது என பலதரப்பட்ட ஜீவராசிகளின் மணமும் , வெளியில் நிலவிய வெய்யிலின் ரணமும் எங்கள் மனதை மாற்றிவிட்டது .மதியம் சாப்பிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சிறு நடைபயணம் செய்து அதிலும் பனிக்கூழ் (ஐஸ் என்பதை இப்படித்தான் சொல்லணுமாம்) , நீர்பூசணி என நிரப்பிவிட்டு வந்தோம்

மதிய உணவை பற்றி சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை . அதிலும் குறிப்பாக இந்த பிரானை சின்ன சின்னதாக நறுக்கி வெள்ளை பூண்டு எல்லாம் சேர்த்து செய்திருந்தது ரொம்ப சிறப்பாக இருந்தது . சாப்பிடவே தெரியாவிட்டாலும் உணவு போராளி என்ற பெயரை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் சாப்பிட்ட நண்டும் அருமையாக இருந்தது . பொதுவாக ஒரு நகைச்சுவை கதை உண்டு . அதிகம் சாப்பிட்டுவிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த ஒருத்தன்கிட்ட ஒருத்தர் சொன்னாராம் . கைய தொண்டைக்குள்ள விட்டு வாந்தியை எடுத்துடு கொஞ்சம் ப்ரியா இருக்கும்னு . அதுக்கு அவன் சொன்னானாம் அந்த அளவுக்கு எடமிருந்தா இன்னொரு ரவுண்ட் சாப்பிட்டு இருப்பேனே என்று . கிட்டத்தட்ட அந்த நிலைஊரை சுத்தி பாக்கவந்துட்டு இப்படி கொட்டிக்கிட்டே இருக்கிறோமே என்று யாரும் சொல்லிட கூடாதுன்னு அன்னிக்கு சாயந்தரம் கைலாசநாதர் நாதர் கோவிலுக்கு போனோம் . சென்ற முறை வந்தப்போ நிறைய வரலாற்று கருத்துக்களை தோழி ஒருவர் சொல்லி இருந்தார் . ஆனால் எனக்கு நினைவில் இருந்தது அந்த கோவில் ராஜசிம்மனால் கட்டப்பட்டது என்பது மட்டுமே . அங்க தாயின் கருவறை போன்ற ஒரு அமைப்பு இருப்பதாகவும் அதில் நுழைந்து வெளிவருவது நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டுசென்ற முறை நுழைந்து வரும் போது எழ முடியாமல் சிரமப்பட்ட நியாபகங்கள் கண்முன் வர நான் வரவில்லையென தனியே புல்தரைக்கு சென்றுவிட்டேன். சில நண்பர்கள் சென்றபோது அங்கிருந்த அர்ச்சகர் திருநீறு வைக்காமல் உள்ளே போககூடாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பி எங்களின் கோபத்தை மூட்டிவிட்டார் . இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் ஒரு கோவிலில் இவ்வாறு சொல்லி இருந்தால் பேசாமல் சென்று இருப்போம். கைலாசநாதர் கோவில் இந்திய தொல்லியல் துறையின்கீழ் வரும் ஒரு கோவில் . அது கோவில் என்பதை தாண்டி ஒரு வரலாற்று சுவடு . அங்கு வருபவர்கள் எல்லாம் கடவுளை மட்டுமே நாடி வரும் பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை . தங்களின் வரலாற்று தடங்களை பற்றி அறியும் ஆர்வம் கொண்ட யாவரும் வருவார்கள் . இத கூட தெரியாம இருக்குது இந்திய தொல்லையியல் துறை . இனிமேலாவது அபிஷேகம் மட்டும் பண்ணுங்கய்யா அட்வைஸ் பண்ணாதீங்க


இன்னொரு நண்பரின் வீட்டு சுவையான காஞ்சிபுரம் இட்லியுடன் அந்த நாள் முடிந்தது . காலை ஆரம்பித்ததில் இருந்தே புத்தகங்களையும் திரைப்படங்களையுமே அதிகம் பேசி இருந்தோம் . இரவு சிறிது உரையாடலுடன் இனிதே நிறைவடைந்தது

இரண்டாம் நாள் காலை அருகில் இருந்த மற்றொரு கோவிலுக்கு சென்றுவிட்டு  அங்குமொரு வெறுப்பேற்றும் அனுபவத்துடன் திரும்பினோம். மற்றொரு  நண்பரின் இல்லத்தில் சிற்றுண்டியை முடித்துவிட்டு மாமண்டூர் குகை கோவில் நோக்கி கிளம்பும் போது மணி பதினொன்றை தொட்டுவிட்டது. வெயிலின் உக்கிரத்தில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் சில மறக்க முடியாத நிழற்படங்களை எடுத்துவிட்டு கிளம்பினோம் . அதற்க்கு முன்னர் வழியில் ஒரு சமண கோவில் சென்று இருந்தோம் . புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளவே அங்கிருந்த சிலைகள் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகளை கொஞ்சம் கவனித்துவிட்டு திரும்பினோம் .மாமண்டூர் முடித்துவிட்டு வந்தவுடன் முந்தைய மதியம் உண்டது போலவே ஈவு இரக்கமில்லாமல் அணைத்து ஜீவன்களையும் புசி புசியென புசித்துவிட்டு கொஞ்சம் ஒய்வு எடுத்தோம் .

முந்தைய நாள் பேசி தீர்மானித்திருந்தது போல் மாநகரம் திரைப்படம் செல்ல ஆயத்தமானோம் . ஆனால் ஷோ டைம் நாங்கள் சென்ற நேரத்துக்கு இல்லாமல் போனது . உடனே திரும்பி இருக்கலாம் அல்லது வேறு ஆங்கில படத்திற்கு சென்று இருக்கலாம் ஆனால் விதி யாரை விட்டது . மீன் , வித்தியாசமான பெயர் இதை எல்லாம் நம்பி கட்டப்பாவை காணோம் என்ற திரை காவியத்துக்கு போனோம் .

இதுவரை சிறப்பாக சென்ற பயணத்தின் (அல்லது விருந்தின் ) ஒரு திருஷ்டி போட்டு போல அமைந்து விட்டது . டைரக்ட்டர் பெயர்  சேயோன் , அதனாலயோ என்னவோ எங்களை வச்சி செஞ்சுட்டார்


இந்த பயணம் நண்பர்களின் வீட்டுக்கு  செல்வதுடன் அவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் அவர்களின் குடும்பத்தினருடன் பேசி மகிழவும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது . நண்பர்களின் சின்ன வயது புகைப்படங்கள் , செல்ல பெயர்கள் , சின்ன சின்ன குறும்புகள் எல்லாவற்றையும் பெற்றோர் மூலம் கேட்பது மிகவும் சிறப்பான அனுபவம் . ஆனா இந்த பதிவுல அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லாம முழுக்க முழுக்க சாப்பாடு மட்டும் வந்ததுன்னா அதுக்கு காரணம் அம்மாக்களோட கைப்பக்குவம் .

இப்படியே எல்லா வீட்டு கைப்பக்குவதையும் ரசிச்சு ருசிக்க இன்னும் நிறைய பயணப்படவேண்டியுள்ளது .

ஒரு நெடிய பயணத்தின் ஆரம்பமாக இதை சொல்லலாம்

ஒரு வழிய ட்ரிப் முடிஞ்சு போச்சு

பி.கு :

ரொம்ப நாளாச்சு ஒரு பதிவு எழுதி , அதுவும் புது லேப்டப் வாங்கின நேரம் ஒரு போஸ்ட் கூட எழுத முடியல . அடுத்த பதிவா பயணங்களில் சந்திச்ச சில மறக்க முடியாத மனிதர்களை பற்றிய ஒரு பதிவு "சில பயணங்களில் சில மனிதர்கள் "

January 29, 2017

ஜல்லிக்கட்டு