October 07, 2013

என் பள்ளி - நிறைவு பகுதி

என் பள்ளி -தொடர்ச்சி........


பசுமை படை என்னும் எங்கள் அமைப்பு தோல்வியை சந்தித்தது. பள்ளிகூடத்தில் படிக்காமல் வீடு வீடாக சென்று மரம் நடுவதை மக்கள் விரும்பவில்லை. மேலும் பசுமை படை அமைப்பை நிர்வகித்துவந்த ஆசிரியர் பணி இடமாற்றத்தினால் சென்று விட மற்ற ஆசிரியர்கள் இதை புறக்கணித்தும் ஒரு காரணம்.பல காலத்துக்கு பிறகு சொந்த ஊர் சென்ற போது நாங்கள் நட்ட பாதி மரங்கள் அழிந்தாலும் மீதி மரங்கள் காற்றோடு எங்கள் பெயரை உச்சரித்து கொண்டிருந்தன. அவற்றின் நிழலில் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோட மிகவும் இனிமையாக இருந்தது. குடியரசு தினவிழா ஒன்றில் நான் ஒரு தேச பக்தி பாடல் பாட , அதை கேட்ட என் ஆசிரியை இனி நீ பாடவே கூடாது என சத்தியம் வாங்கி கொண்டார் (என் தேமதுர குரலோசை அப்படி !!!). மேலும் நான் எழுதிய "குற்றம் செய்தது யாரோ" என்ற நாடகம் பெரும் பிரச்சனையாகி அதோடு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மகாபாரதத்தில் கண்ணன் தான் குற்றவாளி என்று கூறும் அந்த நாடகம் சிறப்பு விருந்தினர்களுக்கு பிடிக்காமல் போகவே நான் பலத்த கண்டனத்தை சந்திக்க நேர்ந்தது.


பத்தாம் வகுப்பு வந்தவுடன் பல பேரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை தலை விரித்து ஆடியது. மூன்று பாடங்களுக்கு (தமிழ் ,ஆங்கிலம் ,அறிவியல் )ஆசிரியர்  இல்லாத நிலை ஏற்பட்டது.ஆங்கிலத்தை அவ்வப்போது தலைமைஆசிரியர் வந்து போதிப்பார். மற்ற பாடங்களுக்கு சில சமயம் யாரவது வருவார்கள் சில சமயம் அதுவுமில்லை. ஆனால் எப்படியாவது பாஸ் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் பலமாக இருந்தது . மற்ற பள்ளி மாணவர்கள் விழுந்து விழுந்து படித்து கொண்டிருந்த சமயத்தில் நாங்கள் விழாமல் விளையாடி கொண்டிருந்தோம். கடைசி சில மாதங்களில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து முழுமூச்சாக படித்தோம். என்  பாடங்களை நானே  சுதந்திரமாக படிக்கும் வழக்கத்தை பள்ளியில் பெற்றேன். ஆனால் அதற்க்கு பிறகு என் கல்லூரிகளில் எனக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்காமல் போனது துரதிஷ்டம்தான் . தேர்வு தாள்களை திருத்த என் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு இருக்கும். என் தாளை மட்டும் நான் திருத்த மாட்டேன் .(அப்பவே நான் அவ்வளவு நல்லவன் !!) .ஆனால் என் தாளை முதலில் நான் எடுத்து எனக்கு தோன்றும் மதிப்பெண்ணை முதல் பக்கத்தில் பெரிதாக போட்டு கொடுத்து விட்டு திருத்த(!!!!) கொடுப்பேன் (நான் சத்தியமா நல்லவனுங்க !!!). ஆனால்  அறிவியல் பாடத்தில் சற்று அதிகம் திணறினோம். கடை இரண்டு மாதத்தில் வந்த புதிய ஆசிரியை முழுமூச்சாக பாடம் எடுத்து எங்களை தேற வைத்தார் . அவருக்கு நாங்கள் மிக அதிகம் கடமைப்பட்டுள்ளோம். பெற்றவர்களுக்கு நன்றி கடனை எவ்வாறு அடைக்க முடியாதோ அதே போல் தான் ஆசிரியர்களுக்கும்.

தேர்வுக்கு முன் அனைவரும் பயப்பட தினமும் காலை தேர்வு மையம் வந்து எங்களுக்கு தைரியம் சொல்லி செல்வார் . எங்கள் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வம் அளப்பரியது. கடைசியில் 96 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு கிடைத்தது . கடைசி தினத்தன்று வார்த்தைகளுக்கு பதிலாக கண்களில் இருந்து  தண்ணீர்  தான் வந்தது. ஏன் அழுகிறோம் என்று தெரியாமலே வெகு நேரம் அழுதோம் . பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் என்னை பற்றி பெருமையாக பேசுவதாக நினைத்து மறைத்து வைத்த பல உண்மைகளை சில பேர் உளற எனக்கு ஒரு மணிநேரம் அர்ச்சனை கிடைத்தது தலைமையாசிரியரிடம்.

காலம் எனும் சக்கரம் வேகமாய் சுழல சிலர் வேலைக்கு சிலர் மேற்படிப்பு என பிரிந்தோம் . சொந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு குடிபெயர நேரிட்டதால் நண்பர்களை பார்க்கவே முடியவில்லை . பல பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சில பேருடன் மட்டும் அவ்வப்போது பேசி மகிழ்வேன். பள்ளியில் எடுத்த group photo வில் அவர்கள் முகங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவதோடு சரி.அண்மையில் சொந்த ஊருக்கு சென்ற பொது பள்ளிக்கு சென்றேன் . என்னாலேயே நம்ப முடியாதபடி பள்ளி புதுக்கோலம் தரித்து நின்றது. எல்லைகளில் கம்பி வேலி ,புது கம்ப்யூட்டர் லேப் ,லைப்ரரி மற்றும் கூடைபந்து விளையாட்டு வசதிகள் என பல புதுமைகள் இருந்தன .பல ஆசிரியர்கள் சென்றுவிட எனக்கு தெரிந்த மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்தார்கள் . ஊர் மக்களுக்கு அடையாளம் தெரியாத என்னை ஆசிரியர்கள் பார்த்த உடன் தெரிந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததுஇன்று பல வசதிகள் உள்ளது கண்டு வியந்தேன் . ஆனால் ஒவ்வொரு வகுப்பிலும் மாணாக்கர் எண்ணிக்கை 20,25 என்ற அளவில் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ந்தேன் . அன்று எந்த வசதியும் இல்லாவிட்டாலும் மாணாக்கர்கள் இருந்தார்கள் . இன்று அணைத்து வசதிகளும் உள்ளன ஆனால் படிக்க ஆள் இல்லை . இன்றும் அந்த மைதானம் மாடு மேய்க்க மட்டுமே பயன்பட்டு வருகிறது. மேலும் பக்கத்துக்கு ஊரில் உள்ள இரு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த பட இருப்பதாக கூறினார் . அவ்வாறு நேர்ந்தால் மேலும் மாணாக்கர் எண்ணிக்கை குறைய என் பள்ளி நடுநிலை பள்ளியாகவோ தொடக்க பள்ளியாகவோ தரம் தாலும் அபாயம் உள்ளது


என் தகப்பனார் படித்த, நான் படித்த பள்ளியின் எதிர்காலம் என்ன ஆகுமென்று எனக்கு தெரியவில்லை. முன்னால் மாணவர்களை ஒருங்கிணைக்க நான் எடுத்த முயற்சிகள் அணைத்தும் தோல்வி அடைய என் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்து வருகிறேன்


முற்றும் 

No comments:

Post a Comment