October 07, 2013

எங்கே செல்லும் இந்த பாதை- பகுதி 1

நாம் போய்  கொண்டிருக்கும் பாதை நம்மை எங்கே கொண்டு போய்  நிறுத்தும் என தெரியாமல் நம் பயணம் தொடர்கிறது. அதன் விளைவுகளை அறியாமலோ அறிந்தும் அதை பற்றி கவலைப்படமலோ நம் பயணம் சென்று கொண்டுதான் இருக்கிறது . அந்த பாதையின் முடிவை பற்றிய ஒரு நிலைப்பாடு தான் இந்த பதிவு .


ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாக இருப்பது அதன் பொருளாதாரம் .உணவு தானிய உற்பத்தி மற்றும் விநியோகம் என்பது பொருளாதாரத்தின் ஒரு அங்கம் ஆகும். உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான வித்தியாசம் குறையும் போது அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதோடு பல இன்னல்களும் ஏற்படும்.ஆக வேளாண்மை என்ற பொக்கிசத்தை பேணி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் தலையாய கடமையாகும் .

 
 உலகின் மிக பெரிய விவசாய நாடான இந்தியாவில் வேளாண்மை தொழில் போய்  கொண்டிருக்கும் பாதை சற்றே அபாயகரமானது. பருவ மழையை மட்டுமே நம்பி பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. வள்ளுவன் கூறுவது போல் மழை சில சமயம் பெய்து கெடுக்கிறது சில சமயம் பெய்யாமல் கெடுக்கிறது  . ஆக இதில் எது நடந்தாலும் மகசூல் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் உரம் மற்றும் பல மூலப்பொருள்களின் விலை ஏற்றம் ,விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை (விவசாய தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்று விடுவதால் ) போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.


மேலும் செயற்கை உரங்களாலும் கழிவு நீர் தேக்கதாலும் மலட்டுத்தன்மை அதிகரித்து வரும் மண்ணில் பயிர் செய்ய வேண்டியுள்ளது. வானிலை மாற்றம்,விதையின் தரம் போன்றவை மகசூலை நேரடியாகவே பாதிக்கின்றன.இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஓரளவு இருந்தாலும் அரசு பெரிய அளவில் அதை ஊக்குவிக்கவில்லை. அதிக மகசூல் வேண்டி உருவாக்கப்படும் கலப்பின விதைகள் போதிய சத்துக்கள் இல்லாத நிலையில்  பல பக்க விளைவுகளையும்  கொண்டு வருகின்றன .ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் சில  குழுக்கள்  கலப்பின விதைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டுகின்றன.மண்வளம் சீர் கெடுவதால் இன்றைய நன்செய் நிலங்கள் கூட நாளை தரிசு நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது .அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உரிஞ்சபடுவதால் கடல்நீர் உட்புகுகிறது .இதனால் நிலத்தடி நீரின் தரம் குறைந்து தண்ணீர் அதிக உப்பாகவும் சில கனிமங்கள் அதிகமாகவும் இருக்கும் படி மாறுகிறது . சில இடங்களில் எவ்வளவு ஆழம் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் வருவதில்லை. சத்து குறைபாடு காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களில்  ஏற்படும் கணுக்கள் ,கரும்புள்ளிகள் போன்றவை விற்பனையை பாதிக்கின்றன. மண் வளம் வீழ்ச்சி அடைவதால் மண் புழுக்கள் இறப்பதாலும் ஒரே பயிரை திரும்ப திரும்ப பயிர் செய்வதால் சில குறிப்பிட்ட கனிமங்கள் தீர்வதாலும் உற்பத்தி என்பது குறைய தொடங்குகிறது . உற்பத்தியில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்க சந்தை படுத்துவதிலும் பல பிரச்சனைகள் உள்ளன. சரியான சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் அதிகப்படியான தானியங்கள்  நாள்தோறும் எலிகளாலும் கரையான்களாலும் வீணாகின்றன.


உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதாககும் உற்பத்தி நல்ல முறையில் இருப்பதாகவும் கூறும் அரசு ,விலை ஏற்றதுக்கான காரணங்களை களையவில்லை . ஒரு பொருளின் உற்பத்தி குறைந்து தேவை அதிகமானால் தான் விலை ஏற்றம் நிகழும் எனும் பொருளாதார கோட்பாட்டை அரசு ஏற்று கொள்ளவில்லை போலும் . வருடாவருடம் தாக்கல் செய்யப்படும் பொது நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் ) யில் ராணுவம் ,விண்வெளி ஆராய்ச்சி போன்ற பல துறைகளை பற்றி கவலைப்படும் அரசு வேளாண்மையை முற்றிலும் மறந்து விடுகிறது . ரயில்வேக்கு உள்ளது போல் வேளாண்மைக்கு என்று ஒரு தனி பட்ஜெட் போட வேண்டும் .


விவசாயத்தின் இன்றைய நிலைப்பாட்டின் படி தமிழகத்தில் பலவேறு விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும்  மாறி வரும் அவலம் நிலவுகிறது . இந்த நிலை கிராமங்கள் வரை பரவி இருப்பது மிக கொடுமை . தரிசு நிலங்கள் மட்டுமல்லாமல் நன்செய் நிலங்களையும் அரசுகள் தங்களுடைய கட்டுமானபணிகளுக்கும் தனியார் தொழிற்சாலைகள் அமைக்கவும் கையகபடுத்துகின்றன  . அந்த நிலத்துக்கு இழப்பீடு தொகை வழங்கும் அரசினால் அந்நிலத்தில்  செய்யப்படும் உற்பத்திக்கு இழப்பீடு வழங்கமுடியாது . இதெல்லாம் போதாது என்று எண்ணெய் குழாய்கள் எடுத்து செல்லப்படும் பொது ஏற்படும் கசிவினால் விளைநிலங்கள் பாதிக்க படுகின்றன.


என் சகோதரி ஒருவரின் தென்னை தோப்பில் தண்ணீர் இல்லாத நிலையில் முக்கால்வாசி மரங்கள் காய்ந்து விட்டன . தித்திக்கும் சுவை கொண்ட பொள்ளாச்சி இளநீர் கூட அதன் சுவையை இழந்து கொண்டிருக்கிறது . ஆற்று பாசனத்தில் ஏற்படும் மணல் திருட்டு ,மின்சார பற்றாக்குறை போன்ற பல காரணங்களும் வேளாண்மை தொழிலை வெகுவாக பாதிக்கின்றன . ஆக  இந்நிலை தொடர்ந்தால் இன்று பல நாடுகளுக்கு உணவு பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் உள்ள நாம் இறக்குமதி செய்தால் தான் உணவு என்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்  அபாயம் உள்ளது .


அரசு தன் சொந்த பொறுப்பில் வேளாண்மையை எடுத்து அதில் அரசாங்க ஊழியர்கள் போல் தொழிலாளர்களை நியமித்து நடத்தலாம் . இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்பதோடு விலையும் கட்டுக்குள் இருக்கும்.ஆனால் இருப்பவற்றை எல்லாம் தனியார்மயமாக்கும் அரசு இவற்றை கண்டிப்பாக பரிசீலிக்காது . அதே போல் மண் வளம் அறிந்து பயிர் செய்வது ,ஊடு பயிர்களை செய்து லாபம் பார்ப்பது , இயற்க்கை வழி வேளாண்மை குறித்த விளிப்புணர்வை விவசாயிகளுக்கு  ஏற்ப்படுத்த வேண்டும். இனியும் அரசு தொடர்ந்து மௌனம் சாதித்தால் இனி வரும் தலைமுறை மிக பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டி வரும் . அரசியல் லாபத்திற்காக பார்க்காமல் நதி நீர் இணைப்பின் சாத்தியகூறுகளையும் ஆராய வேண்டும் .



நம் வருங்கால சந்ததியின் நலனுக்காக இதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமையாகும்




அடுத்த பாதையில் சந்திப்போம் (தொடரும் )


பி.கு :

இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் எல்லாம் நான் நேரில் கண்ட கேட்ட அனுபவங்களை வைத்து எழுதப்பட்டது . வேளாண்மையை அரசுடமையாக்க வேண்டும் அல்லது அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்த வேண்டும். விவசாயத்தின் வளர்ச்சி என்பது சில புதிய இயந்திர கண்டுபிடிப்புகளோடு நின்றுவிட கூடாது என்பது மட்டும் என் நண்பர் ஒருவர் கூறியது . இந்த படைப்புக்கு வித்திட்ட அவருக்கு நன்றி . 

வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ்!!!

No comments:

Post a Comment