December 25, 2013

பிரபாகரன் வாழ்வும் மரணமும் -புத்தகம் பற்றிய பேச்சு

அண்மையில் ஈழம் தொடர்பாக ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் பரிந்துரை செய்யுமாறு நம் நண்பர்களிடம் கேட்டு இருந்தேன். அதற்க்கு முருகன் அவர்கள் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.


கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தம் மக்களின் நலனுக்காக போராடி வந்த பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை அவரிடம் நெருங்கிய மக்களுக்கு மட்டுமே தெரியும் .ஆனால் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை . எனவே இந்த நூல் ஈழம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் மற்றும் சில மூத்த போராளிகள் சொன்ன தகவல்களில் இருந்து எழுதப்பட்டுள்ளது என இதன் ஆசிரியர் ராகவன் முன்னுரையிலேயே சொல்லி விட்டார் .


பிரபாகரனின் இளம் பிராயத்திலிருந்து இந்நூல் தொடங்குகிறது. S/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை யாக இருந்த அவர் விடுதலை புலிகளின் தலைவராக மாறிய வரலாற்றை கால நிகழ்ச்சிகளின் ஓட்டத்தோடு சொல்லி இருக்கிறார் ராகவன்.

தமிழரசு கட்சியின் அறப்போராட்ட வழியில் நம்பிக்கை இழந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து இளம் வயதில் ஆல்பர்ட் துரையப்பாவை சுற்று கொன்றதில் ஆரம்பிக்கிறது இவரின் பயணம். பின் தமிழகத்துக்கு தப்பி வந்தது,புலிகள் அமைப்பை ஆரம்பித்தது ,ஆயுத தேடலுக்காக வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டது என அடுத்தடுத்த அத்தியாயங்கள் நிறைகின்றன.ஆளில்லா விமானத்தை வெடிக்க செய்து அதன் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க செய்தார்.

இலங்கையில் பல்வேறு போராட்ட குழுக்கள் இருந்தாலும் அவர்களுடன் பிரபாகரன் எவ்வாறு வேறு பட்டார் என்பதை உணர முடிந்தது. மற்ற குழுக்கள் தங்கள் விடுதலையில் இந்தியாவின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என நம்பிய காலத்தில் அவர் மட்டும் இந்தியாவின் உதவியை நம்பாமல் இருந்திருக்கிறார்.

எதிரிகளால் ஏற்பட்ட காயங்களை விட நம்பிக்கை துரோகம் செய்தவர்களால் ஏற்பட்ட காயம் அவரை எங்கனம் பாதித்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. தங்களின் உறைவிடத்தை தீர்மானித்தது ,ஆயுத கொள்முதல் முறை ,மற்ற நாட்டு போராட்ட முறையை பின்பற்றாமல் தனக்கு தெரிந்ததை தன் குழுவுக்கு போதித்து அவர்களை நடத்தி சென்றது போன்றவற்றில் இருந்து பிரபாகரனின் தெளிந்த அறிவும் கூறிய சிந்தனையும் புலப்படும் .

இதற்க்கு இடையில் திருப்போரூரில் நடைபெற்ற பிரபாகரன் - மதிவதனி திருமணம் ,அதனால் ஏற்பட்ட விளைவுகள் என தொடர்கிறது. ஆயுத கொள்முதல் மற்றும் வர்த்தகத்துக்காக கப்பல் கம்பெனி நிறுவியது முதல் தனி போர்விமானங்கள் பயன்படுத்தியது வரை ஒரு சாதாரண தீவிரவாத கும்பலால் என்னவே முடியாத பலவற்றை அவர் சாதித்து காட்டியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நிதி மற்றும் ஆயுத கொள்முதலுக்கு குமரன் பத்மநாபன் ,உளவு துறைக்கு பொட்டு  அம்மான்,அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் யோசனைகளுக்கு ஆண்டன் பாலசிங்கம் என பல போராளிகளை பற்றியும் அறிய முடிந்தது

மேலும் மாத்தையா ,கருணா ,உமா மகேஸ்வரன் போன்றவர்களின் துரோகங்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிந்தது.

இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு பற்றியும் அதனால் கண்ட விளைவுகள் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும் .இந்திரா காந்தி காலத்தில் இந்திய உளவு துறை இலங்கை போராளிகளுக்கு பயிற்சி அளித்தது ,பின் ராஜீவ் காந்தி அமைதி நடவடிக்கையாக போர் நிறுத்தம் கொண்டுவந்தது ,இந்திய அமைதி படையை அங்கு அனுப்பியது போன்ற அரசியல் நிகழ்வுகளை அறிய முடிந்தது .

இந்திய அமைதி படை அங்கு நடத்திய "அமைதி " நடவடிக்கைகள் ,போர்நிறுத்த காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட துரோக செயல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.


பின்பு இந்தியவின் தலையீடால் இலங்கையில் இருந்த மற்ற போராளி குழுக்கள் சிதறியது ,அவர்களை விடுதலை புலிகள் கொன்றது ,ராஜீவ் காந்தி படுகொலை என அடுத்த கருப்பு பக்கங்கள் வருகின்றன.


ஒரு தீவிரவாத(அவர்கள் பாசையில்) குழு ஒரு சுதந்திர நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுகள் மேலாக போராடிய வரலாறு இன்னொரு முறை அரங்கேறுவது கடினம். பல கிலோமீட்டர் நிலபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு சிறு எல்லைக்குள் வந்து ஒவ்வொரு விழுதாக வீழ்ந்து கடைசியில் ஆலமரமாய் பிரபாகரன் சரிந்த காரணங்களை விளக்க ராகவன் முற்பட்டுள்ளார்.

பிரபாகரன் மீது உலக சமுதாயம் கூறும் குற்ற சாட்டுகளையும் அதற்கான விளக்கங்களையும் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு.


இறுதியில் இனி என்ன செய்யலாம் என கூறி இருப்பது சிறப்பு

ஆனால் முக்கிய போராளியாக கருதப்பட்ட தமிழ்செல்வன் பற்றியோ நார்வே தூதுக்குழு பற்றியோ எதுவும் சொல்லாதது ஆச்சர்யம் .


ஒரு புத்தகம் அடுத்த புத்தகத்துக்கான தேடலை வழங்குகிறது .அந்த வரிசையில் இது  நிறைய தேடல்களை வழங்கிவிட்டது

December 21, 2013

எங்கே செல்லும் இந்த பாதை -பகுதி 5

குழந்தை வளர்ப்பு

முன் குறிப்பு : குழந்தை வளர்ப்பு பற்றி எழுதுவதற்கு தேவையான வயதோ அனுபவமோ என்னிடம் இல்லை.இருப்பினும் சமூகத்தில் வாழும் ஒரு சராசரி மனிதனாக பார்க்கும் விசயங்களை பகிர்வோம் என்ற நினைப்பில் எழுதப்பட்டது . அறியா சிறுவன் எழுதிய இந்த பதிவு சிறுபிள்ளைதனமாகவோ தவறாகவோ இருக்கலாம்.அப்படி இருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து போனால் போகட்டும் என நினைத்து விட்டுவிடுங்கள்.

குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு குழந்தை (சத்தியமா நான்தான் ) எழுதிய சிறு பதிவு . (அப்பாடா இனி யாரும் திட்ட மாட்டார்கள் )

குழந்தை வளர்ப்பு என்பதை உடல் ரீதியான மற்றும் மன ரீதியான வளர்ச்சி என்று பிரிக்கலாம். உடல் ரீதியான வளர்ச்சியை தாய்மார்கள் பார்த்து கொள்வார்கள். மனரீதியிலான வளர்ச்சியை மட்டும் பார்ப்போம்


குழந்தைகள் பள்ளி ,நண்பர்கள் சமுதாயம் என பலவற்றில் இருந்து கற்று கொண்டாலும் குழந்தைகளின் முதல் ஆசான் பெற்றோர் தான். பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் அணைத்து விசயங்களையும் கற்று கொள்கிறார்கள் .இதனால் குழந்தைகளிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது. பெற்றோரிடம் இருந்து கோபத்தில் பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தைகளிடம் பதிந்து விடுகிறது. தொலைக்காட்சி ,சமூகத்தில் அவர்கள் பார்க்கும் காட்சிகள் அவர்களுக்கு நல்லவற்றை மட்டுமல்லாமல் சில தீயவற்றையும் போதிக்கின்றன.


இன்றைய குழந்தைகளின் Observation மற்றும் Learning Ability மிக அதிகம்.நம் சிறு வயதில் நம்மால் யோசிக்க முடியாத பல விசயங்களை இன்று அவர்கள் நிகழ்த்தி காட்டுகிறார்கள். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பற்றி நாமே யோசிக்க வேண்டி வருகிறது. குழந்தைகளின் இந்த வளர்ச்சி பெற்றோரும் மனரீதியாக வளர அல்லது பக்குவம் மேம்பட வேண்டும் என்பதை புலப்படுத்துகின்றன.குடும்பத்தில் ஆரோக்கியமான சூழல் நிகழ்வது குழந்தைகளின் மன நிலையை பேண உதவும். பெற்றோரிடையே எழும் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை நேரடியாக பாதிக்கின்றன .

இன்றைய தலைமுறை குழந்தைகளின் பெரும்பாலான நேரத்தை கேம்ஸ்களும் கார்ட்டூன்களும் கவர்ந்து விடுகின்றன. இன்றைய அறிவியல் முன்னேற்றம் குழந்தைகளுக்கு நிறைய கற்று கொடுப்பதோடு அவர்களை கெடுக்கவும் செய்கிறது. இதனால் உறவுகளோடு உலாவி மகிழும் நேரம் குறைகிறது.இவ்வாறு நிஜ மனிதர்களோடு வாழும் நேரம் குறைந்து நிழல் கதாபாத்திரங்களோடு வாழ வேண்டிய சூழல் நிலவுகிறது.


அறிவு என்பது பள்ளியில் சொல்லி தரப்படும் பாட புத்தகங்களோடு நின்று விடாது. அதை தாண்டி அவர்களுக்கு வாழ்கையை கற்று தரவேண்டிய பெருமை பெற்றோரையே சாரும். ஒரு பெற்றோராக குழந்தையின் சிறு சிறு ஆசைகளையும் பூர்த்தி செய்து விடுகிறோம். இதனால் தோல்வி,ஏமாற்றம் போன்றவற்றை அறியாமல் வளரும் அவர்களால் வாழ்கையின் சுக துக்கங்களை தாங்கி கொள்ள முடியாமல் போகிறது. ஆக வாழ்கையை வாழ்வின் அர்த்தங்களை அதன் சுமைகளை கற்று தரவேண்டும்.

மேலும் குழந்தைகளிடம் சொல்லப்படும் நீதி கதைகளும் வரலாற்று உதாரணங்களும் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற உதவுகின்றன. இவை அவர்களை ஆரோக்கியமான பாதையில் பயணிக்க வைக்கின்றன. துரதிஸ்டவசமான இன்றைய குடும்ப சிதைவுகள் தனி குடும்பங்களாக பிரிந்து விட்டதால் பாட்டி-தாத்தாக்களின் வேலையை இன்று பெற்றோர் தான் செய்ய வேண்டும். மேலும் இன்றைய சூலில் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முடியாமல் போகிறது.

இதனால் எந்த எதிர்பார்ப்போ நெருக்கடியோ இல்லாத குழந்தைகளின் உலகத்தை நாம் இழக்கிறோம் .குழந்தைகளின் உலகம் வசீகரமானது எப்பொழுதும் இன்பம் மட்டுமே இருக்க கூடியது.அந்த உலகில் நீங்கள் அனைவரும் குழந்தைகளே.

குழந்தைகளின் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் சமுதாயத்தில் வாழ்ந்து வரும் நாம் நம் குழந்தைகள் நம்மிடம் எதையும் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் ஒரு நல்ல நண்பர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுதல் கட்டாயமாகிறது.


இந்த பரந்த உலகில் இருந்து நாள்தோறும் குழந்தைகள் புதுப்புது விசயங்களை கற்கிறார்கள். ஒரு பெற்றோராக அவர்கள் கற்று கொள்வதை அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நெறியாள்கை செய்து தீயதை விளக்கி அவர்களுக்கு புகட்ட வேண்டும். குழந்தைகள் முன் தீய வார்த்தைகள் பேசுவதையோ செய்கைகள் செய்வதையோ நிறுத்த வேண்டும். அர்த்தம் தெரியாமல் பாடும் ஆங்கில போயம்கள் மட்டும் போதாது. அவர்கள் பேசும் பேச்சுக்களின் பொருளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.நீதி கதைகள் சொல்வதன் மூலம் அவர்களை சிறந்த மனிதர்களாக்க முடியும் . அன்று நம் வளர்ந்த சூழ்நிலையில் நம் அறிவும் குறைவாக இருந்தது விஞ்ஞான முன்னேற்றமும் குறைவாக இருந்தது.ஆனால் இன்று குழந்தைகள் வாழும் சூழல் வேறு . திரும்ப திரும்ப இதை சொல்ல காரணம் ஒரு பெற்றோராக நாம் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்பதுதான் .ஏனெனில் பெருபாலான நம்மவர்கள் வாழ்வது பழைய Traditional வாழ்க்கையோ அதி நவீன (modern) வாழ்க்கையோ இல்லை .கிட்டத்தட்ட ரெண்டு கேட்டான் நிலை.


அதி முக்கியமானது உறவுகளின் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். இது பின்னாளில் சமூகத்தோடு அவர்கள் சேர்ந்து இயங்கவும் உதவும் .பெரியோரை மதிக்கும் பண்பு ,நட்பு பாரட்டுதல் போன்றவற்றை சொல்லி தர வேண்டியது பெற்றோரின் கடமையாகும்

இவ்வாறு குழந்தைகளை நாளைய உழைக்கும் எந்திரங்களாக மட்டும் மாற்றாமல் நல்ல மனிதம் கொண்டவர்களாகவும் மாற்ற உதவும்


பி.கு :

அனைத்தையும் கற்று கொடுக்கிறோம் என்ற Spoon Feeding செய்வதாகவும் இத்தனை கற்று கொள்ளும் அவர்கள் இதையும் தானே கற்று கொள்வார்கள் என்பது சிலரின் வாதம். பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் எதையும் திணிக்காமல் குழந்தைகளாகவே அவர்களை வளர விடவேண்டும் பின் வளர்ந்து தாங்களே கற்று கொள்ளட்டும் என்பது அவர்கள் கருத்து. இதற்க்கு என் பதில் அறிவு என்பது வேறு அனுபவம் என்பது வேறு . தீ சுடும் என்று அறிவுக்கு முதலில் அனுபவமே காரணம். ஆக நல்லது எது கேட்டது எது என சீர்தூக்கி பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு அனுபவம் வரும் வரை இது தேவை .


என் பதில் அவர்களுக்கு திருப்திகரமாக இல்லை. என்னதான் இருந்தாலும் அனுபவமற்ற ஒரு அற்ப பதரின் பதிலில் பக்குவம் இல்லாமல் இருக்கலாம்

இது யாருடைய வகுப்பறை- புத்தக சந்திப்பு

திருவான்மியூர் அருகே உள்ள பனுவல் புத்தக நிலையத்தில் திரு.ஆயிஷா இரா .நடராசன் அவர்கள் எழுதிய இது யாருடைய வகுப்பறை எனும் நூல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது..சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியர் திரு .கல்யாணி மற்றும் திரு.வேணுகோபால் ஆகியோர் வந்திருந்தனர். நம் கல்விமுறையின் ஆரம்பம் அதன் போக்கு மற்றும் குறைபாடுகள் குறித்து மிக சிறப்பான ஒரு விவாதம் நடந்தது.

நிகழ்ச்சியை காவேரி அவர்கள் தொகுத்து வழங்கினார் .தன் முன்னுரையிலேயே ஆசிரியர்களின் பெருமை மற்றும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களின் மகத்தான பங்களிப்பு குறித்து பேசினார். அதற்க்கு பிறகு ஐயா திரு.கல்யாணி அவர்கள் பேச்சை தொடங்கினார்.

மிக நகைச்சுவையுடன் நம் கவனத்தை சிதற விடவே முடியாத அளவுக்கு தம் பேச்சால் கட்டி போட்டார். குழந்தைகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டிய விதம் மற்றும் அவர்கள் மனநிலை குறித்து பேசினார்.ஒரு ஆசிரியராக தம் அனுபவத்தை முன் நிறுத்தி பல கருத்துக்களை முன் வைத்தார். அவரது பேச்சில் ஆசிரியர் -மாணவர் உறவின் இடைவெளி குறித்த கருத்துக்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. மாணாக்கர்களுக்கான பள்ளி தான் வேண்டுமே ஒழிய மதிப்பெண்களுக்கான பள்ளி தேவையில்லை என்ற வாதத்தை அருமையாக அனைவரும் ரசிக்கும் படி முன் வைத்தார்.

பின் பேசிய திரு.வேணுகோபால் அவர்கள் இன்றைய கல்விமுறை சமூகத்தில் ஏற்ப்படுத்திய தாக்கம் குறித்து பேசினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தங்கள் விருப்பு வெறுப்புகளை திணிக்க கூடாது போன்ற கருத்துக்கள் அதிகம் இருந்தன. இன்றைய தனியார் கல்வியின் மோகம் மக்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அழகாக தற்போதைய நிகழ்வுகளின் வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் அவர் நகைச்சுவையாய் சொன்ன சில வரிகள்

{புத்தகத்தை 'எடு' 'படி' என்று சொல்லி சொல்லி நம்மை எடுபடியாக்கி விட்டார்கள் ↑

இன்றைய நம் கல்விமுறை பில்கேட்ஸ் களை உருவாக்க வில்லை
அவரது வேலையாட்களை உருவாக்கி கொண்டிருக்கிறது

இன்றைய கல்வி முறை வாஷிங் மெசின் போன்றது.பள்ளியில் அழுக்கு துணியாக சேர்க்கப்படும் மாணாக்கர்கள் பிறகு நல்ல வேலையில் சேர்ப்பித்து துவைத்து எடுக்கப்படுவது போல் கையாளப்படுகிறார்கள் }

இடையில் பார்வையாளர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.ஒரு தலைமையாசிரியை தான் மாணவர்களிடம் இருந்து பெற்ற சில நல்ல வித்தியாசனமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.இன்றைய கல்வி முறையின் அவலத்தை கடலூர் வாசிப்பாளர்கள் சார்பில் பங்கேற்ற BSNL நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றும் ஒரு அன்பர் சொன்னார். இன்றைய கல்வி முறையில் தனியார்மயமாதலின் பிரதிபலிப்பு மற்றும் அரசு பள்ளிகள் குறித்தும் சில நண்பர்கள் பேசினார்கள் ←

இறுதியாக தன் புத்தகம் பற்றி ஆயிஷா இரா.நடராசன் பேசினார். கல்வி முறை தோன்றிய வரலாற்றை அழகாக எடுத்துரைத்தார். நம் கல்வி முறை எவ்வாறு உண்டாக்கப்பட்டது மற்றும் அதற்க்கு வித்திட்டோர் குறித்தும் பேசினார். ஆசிரியர் -மாணவர் உறவு மற்றும் ஆசிரியர்கள் குறித்து பல மொழிகளில் எழுதப்பட்ட பல்வேறு நூல்கள் பற்றி விரிவாக பேசினார். நம் கல்வி முறையில் உள்ள பல்வேறு கோட்பாடுகள் எங்கிருந்து தருவிக்க பட்டன மற்றும் கல்வி முறை குறித்து பல்வேறு நாட்டு அறிஞர்கள் கொண்டுவந்த வரையறைகள் பற்றி பேசினார்.

அதில் என்னை பாதித்தது ஜப்பானிய எழுத்தாளர் யாமக்குச்சி (சத்தியமா அது தாங்க பேரு ) எழுதிய God save my children எனும் நாவல் தான். அதன் கதையை கேட்டவுடனே கண்ணீர் வந்து விட்டது. மிக உணர்வுபூர்வமாக பல விசயங்களை பற்றி பேசினார் நடராசன் அவர்கள்.அதில் கல்வி சீரமைப்பு குறித்த கோத்தாரி குழு சமர்ப்பித்த அறிக்கையின் குறைகள் மற்றும் யாஸ்பால் கமிசன் கொண்டுவந்த பல நல்ல விஷயங்கள் மற்றும் நம் கல்வி முறை மாற்றத்தில் UNICEF நிறுவனத்தின் பங்கு இன்னும் பல விஷயங்கள் பற்றி பேசினார்

அதற்குள் நேரமாகிவிட்டது .எனவே நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

பி.கு :

அவர்கள் சொன்ன சில விஷயங்கள் விடுபட்டிருக்கலாம் .அதற்க்கு வருத்தங்கள்.முழுமையாக சொன்னால் இது யாருடைய வகுப்பறை புத்தகம் பற்றியும் பேச வேண்டி வந்துவிடும்


அதை படித்து முடித்தவுடன் புத்தகம் பற்றிய பேச்சில் விரிவாக பேசுவோம்


நன்றி வணக்கம்

வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ்!!!


Books prescribed by Thiru. Aayesha Natarajan on Education:
1) To Sir with love - E. R. Braithwaite
2) Black Skin, White Masks - Frantz Fanon
3) Painted house - john grisham
4) The Little Village school - Gervase Phinn
5) God Save my Children (Double A-Bomb Victim: My Life beneath the Atomic Clouds - Tsutomu Yamaguchi)
6) The Petals of Blood - Ngũgĩ wa Thiong'o
7) Pedagogy of Freedom - Paulo Freire
8 ) Encyclopedia of Creativity, Two-Volume Set - Steven R. Pritzker
9) To Kill a Mockingbird - Harper Lee

இந்திய விளையாட்டுகள் - பகுதி 2

இந்திய விளையாட்டுகள் - பகுதி 2
கிரிக்கெட்டினால் வந்த விளைவு

நம் நாட்டில் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன.அவற்றில் கிரிக்கெட் மட்டுமே முதலாய் பார்க்க படுகிறது .கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதை தாண்டி மக்களின் உணர்வாகவே மாறி விட்டது வருந்ததக்கது. (பாகிஸ்தான் உடன் தோற்றால் அது அவமானமாகி விடுகிறது. பாகிஸ்தான் நம்மை நெஞ்சுக்கு நெஞ்சாக சந்திக்கும் எதிரி ஆனால் சில முதுகில் குத்தும் துரோகிகளுடன் நாம் சந்தோசமாக விளையாடிக்கொண்டுதானே இருக்கிறோம் )

கிரிக்கெட்டின் விளையாட்டின் வளர்ச்சி மற்ற விளையாட்டுகளை அதிக அளவில் பாதித்திருக்கிறது. மற்ற விளையாட்டுகளை மக்களும் அரசும் புறக்கணிக்க கிரிக்கெட் காரணமாகிறது. அதிக லாபம் தரும் கிரிக்கெட் அரசுக்கு முக்கியமாகிவிட்டது. இத்தனைக்கும் பிசிசிஐ இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதில்லை .எனவே அது ஒரு தனியார் அமைப்பு .ஒரு தனியார் அமைப்பு நாட்டின் பெயரையும் தேசிய கொடியையும் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். மேலும் ஒரு இந்தியனாக இந்திய கிரிக்கெட் அணியையோ அல்லது அதன் வீரர்களையோ நான் support செய்ய வேண்டியதில்லை.
நமது தேசிய விளையாட்டை பற்றி நாம் அறியாதிருப்பது மிகவும் வருந்ததக்கது. ஒரு காலத்தில் நம் அணியின் வெற்றிகள் வார்த்தையால் விவரிக்க இயலாதது.உலகின் அணைத்து அணிகளையும் பந்தாடியுள்ளோம்.மேஜர்.சர் .தயான் சந்த் அவர்களின் தலைமையில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் ஆக நாம் வலம் வந்த காலம் மறக்க முடியாதது.இன்று நாம் வலு குறைந்து இருக்கலாம்.அதற்கு ஆட்ட வீரர்களின் திறன் காரணம் இல்லை. களத்துக்கு பதிலாக நவீன புல்தரையில் ஹாக்கி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஆசிய அணிகளின் ஆதிக்கம் குறைந்து விட்டது. அரசு கிரிக்கெட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை தன் இஷ்டப்படி பிசிசிஐ ஆட்டிவைக்கிறது. அணைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட பலவற்றை பிசிசிஐ எதிர்க்கிறது.ஆனால் ஹாக்கிஇல நம் உரிமைகளை தாரைவார்த்ததொடு வளர்ச்சி பணிகளிலும் மெத்தனம் காட்டுகின்றது. மைதானங்களின் தரம் கேள்விக்குரியதாய் உள்ளது அதே போல் அதிக அளவில் உள்நாட்டு போட்டிகள் நடத்தப்படுவதில்லை.


ஹாக்கிஇல் ஒரு குறிப்பட்ட மாநிலத்தவரின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது .அதை தவிர்த்து அணைத்து பகுதிகளின் சிறந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக விளையாட்டு வீரனுக்கு மக்கள் மத்தியில் கிடைக்க பெரும் பாராட்டுதான் அவனுக்கு ஊக்கம் அளிக்கும்.எனவே அணைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் தர வேண்டும்.இந்த தொடக்கம் முதலில் ஊடகங்களில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக சமூகம் முழுக்க பரவ வேண்டும்


ஹாக்கி மட்டும் இல்லை மற்ற விளையாட்டுகளுக்கும் இதே நிலை தான். கபடியில் காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் பெரு வெற்றிகள் பெற்ற அணியினரை நாம் கண்டு கொள்ளவே இல்லை. வில்வித்தையில் அண்மையில் நடந்த உலக சுற்று போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் physiotherapist இல்லாமல் கடும் உடல் நல குறைவுடன் ஆடி வெள்ளி பதக்கம் பெற்றனர். அவர்களை பற்றி யாரும் கவலைப்பட வில்லை.குத்துசண்டை போட்டியில் தலைகவசம் இன்றி சண்டையிடும் புதிய விதிக்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் அதன் சம்மேளன தலை பதவி ஆசையில் அடித்து கொண்டிருந்தோம்.பாட்மிட்டன் விளையாட்டில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய ஆடை 'குறைப்பை' பற்றியும் நாம் பேச வில்லை.


இவ்வாறாக மற்ற விளையாட்டுகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் நம்மை பாதிப்பதை பற்றி நாம் கவலைப்பட வில்லை .மாறாக IPL போட்டிகளில் பணத்தை வாரி இறைத்து /குவித்து கொண்டிருந்தோம்.
வாள்சண்டை போன்ற விளையாட்டுகளில் நாம் பின் தங்கியிருக்க காரணம் திறமையின்மை அல்ல ,போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததுதான். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளே கொண்டு வரும்போது நாமும் கபடியை கொண்டு வரலாம்.


கிரிக்கெட் வேண்டாம் என நான் கூறவில்லை. கிரிக்கெட்டின் பலத்தை குறைக்கலாம் என்பதே என் கருத்து. இந்திய வீரர்களின் சம்பளம் மற்ற அணி வீரர்களை காட்டிலும் மிகவும் அதிகம்.எனவே அவற்றை குறைத்து முறைப்படுத்தலாம்.பிசிசிஐ தன்னிச்சையாக செயல்படாமல் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட வேண்டும்.இதன் மூலம் அணைத்து விளயாட்டுகளையும் சமமாக பாவிக்கும் அரசின் மனப்பான்மை மக்களையும் மாற்றும். மற்ற விளையாட்டுகளில் கொண்டு வரப்படும் புதிய விதிகளை அவற்றின் சாதக பாதகங்களை கணக்கில் கொண்டு ஆராய்ந்து ஆதரிக்க அல்லது எதிர்க்க வேண்டும்.புதிய கிரிக்கெட் மைதானங்கள் உண்டாக்குவதற்கு பதிலாக கால்பந்து ,ஹாக்கி போன்ற இதர விளையாட்டு மைதானங்களையும் ஏற்ப்படுத்த வேண்டும்.


இதன் மூலம் இதர விளையாட்டுகள் புத்துயிர் பெரும்.வில்வித்தை ,துப்பாக்கி சுடுதல் ,மல்யுத்தம் ,குத்துசண்டை போன்ற விளையாட்டுகளில் நாம் தனி பெரும் சக்தியாக திகழும் காலம் வெகு தொலைவில் இல்லை.அணைத்து விளையாட்டுகளிலும் நம் வீரர்கள் முத்திரை பதிக்க காத்து கொண்டிருக்கின்றனர் .அவர்களுக்கு வேண்டியது முறையான வழிகாட்டுதலும் உங்கள் கைதட்டல்களும் தான்
பி.கு :

இந்தியாவின் C நிலை வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தென் ஆப்பிரிக்காவின் முதல் நிலை வீரர்களுக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதில்லாமல் IPL மற்றும் விளம்பரங்களில் அவர்கள் ஈட்டும் ஊதியம் மிக அதிகம். எனவே மற்ற அணியினரை போல் அவர்களுக்கும் ஊதியம் வழங்கலாம்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். IPL இல் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட கூடாது என இரண்டாவது தொடரில் தீர்மானிக்கப்பட்டது .ஆனால் இன்று வரை இலங்கை வீரர்கள் ஆடிக்கொண்டு தானே இருக்கிறார்கள்.இந்த தொடரில் மட்டுமே சிலர் பிரச்சனயை கிளப்பினார்கள். சென்ற தொடர் வரை சென்னை அணியிலேயே குலசேகரா,ரண்டிவ் போன்ற வீரர்கள் ஆடியதை யாரும் கண்டு கொள்ளவில்லையே . ஏன் ?? ஒருவேளை நியாயம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுமோ ????

விளையாட்டு என்பது வேறு அரசியல் என்பது வேறு என கூறும் இவர்கள் அதை அணைத்து பிரச்சனைகளிலும் கடைபிடிக்க வேண்டுமல்லவா??
எனக்கு அரசியல் எல்லாம் தெரியாதுங்க .நீங்களாவது சொல்லுங்க


report abuse செய்ய கூடாது என்பதற்காக இதற்க்கு வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் எனும் காலன் எனும் தலைப்பை மாற்ற வேண்டி வந்தது.நன்றி வணக்கம்

மூங்கில் கோட்டை-புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய மூங்கில் கோட்டை எனும் வரலாற்று புதினம் படித்தேன். தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சேர மன்னரை சிறை வைக்க உருவாக்கிய கோட்டையை பற்றிய புதினம் இது. தலையாலங்கானத்து பெரும் போரில் பத்தொன்பது பிராயமே நிரம்பிய நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்த சேர,சோழ மற்றும் ஐந்து வேளிர்களையும் தோற்கடித்தான் என வரலாறு கூறுகிறது. இதில் சரணடைந்த சேர மன்னன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை நெடுஞ்செழியன் யாராலும் சிறை மீட்க முடியாத அளவுக்கு ஒரு கடினமான கோட்டைக்குள் சிறை வைக்கிறான்

இனி கதைக்கு வருவோம்

சேர மன்னனின் மேல் மதிப்பு கொண்ட புலவர் குறுங்கோழியூர்கிழார் அவரை சிறையில் இருந்து தப்புவிக்க எண்ணுகிறார்.அவருக்கு நெடுஞ்செழியனின் சகோதரி இமயவல்லி உதவுகிறாள்.மன்னரை தப்பு விக்க சேர நாட்டில் இருந்து இளமாறன் எனும் இளைஞனை மதுரைக்கு வரவழைக்கிறார் புலவர். வந்த அன்றே அவன் மன்னரோடு மோத வேண்டி வருகிறது. மூங்கில் கோட்டைக்கு போகும் வழியில் பாண்டியனின் ஆசிரியரான சித்தர் தடுத்து நிறுத்துகிறார் .அவர் அவர்களை கைது செய்யாமல் போக அனுமதிக்க இளமாறன் மூங்கில் கோட்டைக்கு செல்கிறான் .மூங்கில் கோட்டையில் இருந்து எங்கனம் அவன் மன்னரை விடுவிக்கிறான் ? மன்னரின் சகோதரி மேல் இளமாறன் கொண்ட காதல் நிறைவேறுகிறதா ? சித்தர் -இளமாறன் இடையே உள்ள உறவு என்ன ? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே இந்நூலின் முடிவு.


மிக இளம் வயதில் அரியணை ஏறி பல போர்களில் வெற்றி பெற்று இறவாப் புகழை எய்திய நெடுஞ்செழியனின் பராக்கிரமங்கள் அருமை .

புலவர் குறுங்கோழியூர் கிழார் மன்னரை தப்பு விக்க பல முயற்சிகள் எடுக்கிறார். சேர அரசிக்கு பிறந்த இளவரசி இமயவல்லி -இளமாறன் காதல் காட்சிகள் சில கணங்களே வந்தாலும் அருமை .


மூங்கில் கோட்டையின் அமைப்பு மிக பயங்கரம். சேனாதிபதி ,மருத்துவர் ,ஆசிரியர் என பல அவதாரம் புரியும் சித்தர் யார் என அவிழும் முடிச்சு நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

கடைசியில் மன்னர் நெடுஞ்செழியன் வழங்கும் தீர்ப்பில் புலப்படும் நீதி அவரின் உயர்வை புலப்படுத்துகிறது .


மிக அருமையான ஒரு அனுபவத்தை நல்கியது


நன்றி வணக்கம்

வாழ்த்துக்கள்


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!