Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

April 29, 2018

இன்னிசை மட்டும் இல்லையென்றால் - ஸ்வர்ணலதா பிறந்தநாள் பதிவு


முகப்புத்தகத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் அந்த பதிவு கண்ணில் பட்டது . ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் சிறப்பு பதிவாக ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார் . 

ஸ்வர்ணலதா குரலின் ஒரு அசுர ரசிகனாக கல்லூரி காலத்திலிருந்து இருந்து வந்த நமக்கு இது கூட தெரியவில்லையே என நினைத்துக்கொண்டு நினைவலைகளில் மூழ்கிய போது உதயமான பதிவு இது தனிமையான வேளைகளில் 


ஸ்வர்ணலதா - அது ஒரு மாயாஜால குரல் . 

காதில் ஹெட்போன் அணிந்துகொண்டு கண்களை மூடி இந்த பாடலை கேட்க ஆரம்பித்தவுடன் அப்படியே மனம் லேசாகி காற்று வெளியில் மிதக்க ஆரம்பித்து விடும் . 

அந்த இசையும் இசையை மேவும் குரலும் உங்களை உருகி உருகி ரசித்து கேட்க வைக்கிற ஆற்றல் கொண்டது. 

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
என்று முடியும் அந்த பாடல் அலைபாயுதே திரைப்படத்தில் வரும் எவனோ ஒருவன் வாசிக்கிறான் . 

மெல்லிய இழையோடு வரும் அந்த இசையைவிட அந்த பாடலின் உயிரோட்டம் ஸ்வர்ணலதாவின் குரல் .

தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடகர்களின் மத்தியில் முழுக்க முழுக்க தனித்தன்மை வாய்ந்த குரல் அது . நெடுந்தூரத்தில் ஒலிக்கும் பாடலில் அவரின் குரல் இருந்தால் காதில் விழுந்த அடுத்த கணமே மனம் கண்டறிந்து குதூகலிக்க தொடங்கிவிடும் 

மகிழ்ச்சி , காதல் , காமம் , ஆசை ,ஏக்கம் , சோகம் , பிரிவு , வலி என அனைத்து உணர்வுகளையும் அவரின் குரலில் கேட்டு ரசிப்பது அலாதியானது 

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை 

இந்த வரிகளுக்கு சொந்தமான பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச . இன்றும் பல பண்பலைகளில் மாலைப் பொழுதுகளில் நீங்கள் இந்த பாடலை கேட்கலாம் 

ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல் போறாளே பொன்னுத்தாயி. 

தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி

சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

ரகுமான் அந்த பாடலின் ஜீவன் இசை அல்ல வைரமுத்துவின் பாடல்வரிகளும் ஸ்வர்ணலதாவின் குரல்தான் என்பதை நன்கு உணர்ந்து மெல்லிசையாக அமைத்திருப்பார் 

ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு

என்னுள்ளே என்னுள்ளே என மருகும் இந்த பாடலில் இளையராஜாவின் இசையோடு அவரின் தேமதுர குரல் போட்டி போடுவதை நீங்கள் உணரலாம் 

தேம்பி நிற்கும் சோகத்தை கானத்தில் வடித்திருக்கும் மற்றுமொரு பாடல் நீ எங்கே என் அன்பே 

விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
 
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக 

கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை 

என பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலில் வரும் இரு வரிகளை அவர் குரலில் கேட்பது அந்த பாடலின் சுவையை முழுமையாக உணர வைக்க உதவும் 

சோகம் மட்டுமா ஏன் காதல் பாடல்கள் இல்லையா ?

இருக்கின்றதே ஏராளம் 


வெக்கப் படத்தில் கவளிக் கத்த
வளைவுப் பக்கம் கருடன் சுத்த
தெருவோரம் நிறைக்குடம் பார்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

உளுந்து விதைக்கியிலே என ஆரமிக்கும் பாடலும்

 இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ 

என நாநெகிழி போல் வரும் காதலென்னும் தேர்வெழுதி பாடலாகட்டும் 

அந்தியில வானம் என ஆரம்பிக்கும் அந்த பாடலும்  

கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து
காணாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்

 கொட்டுகிற அருவியும்  மெட்டுக்கட்டும் குருவியும்
அடடடா அதிசயம்
ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
நடந்திடும் நதியிலே

எனும் போவோமா ஊர்கோலமா பாடலாகட்டும் 

பா.விஜய் வரிகளில் வரும் துளி துளியாய் பாடல் 

மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட

என பல பாடல்களை சொல்லலாம் 

மேலும் சில பாடல்கள் 

சொல்லாயோ சோலைக்கிளி
குளிருது குளிருது - தாஜ்மஹால்
என்னை தொட்டு அள்ளிக்கொண்டு
நான் ஏரிக்கரை மேல இருந்து 
காதலை தாண்டி காமத்தை தூண்டும் பாடல்களில் முக்கியயமானது இரு பாடல்கள் 

மாசி மாசம் ஆளான பொண்ணு 

ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க

மற்றும் ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு பாடல் 

இவைதான் நினைவுக்கு உடனே வந்த பாடல்கள் . 

நெடுந்தூர பேருந்து பயணங்கள், உறக்கமில்லா நள்ளிரவுகள் , தனித்திருக்கும் பொழுதுகள் ,வெறுமையை உணரும் தருணங்கள் என பல சமயங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறது அவரது குரல் 

புற உலக சுக துக்கங்கள் அனைத்தையும் மறந்து யாருமில்லா ஒரு தனி வெளியில் நெடுநேரம் சஞ்சரிக்க வைப்பவை ஸ்வர்ணலதாவின் பாடல்கள். 

மிக சில காலமே வாழ்ந்து இருந்தாலும் அவருடைய பங்களிப்பு இசைக்கும் தமிழ் சினிமாவுக்கும்  முக்கியமானது . 

அவரின் தமிழார்வமும் உச்சரிப்பும் மிகவும் சிறப்பானது . சில பேட்டிகளில் அவரின் எளிமையான தமிழ் நடை என்னை சிலாகிக்க வைத்துள்ளது 

இறுதியில் இந்த பதிவை இந்த வரிகளை கொண்டு நிறைவு செய்வது சால பொருந்தும் என நினைக்கிறேன் 


கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்




July 02, 2017

வயநாடு - மழையோடு விளையாடிய ஒரு பயணம்

மலையாள தேசத்தின் மலையழகை காணும் ஆவலில்
ஆரம்பித்ததொரு இனிய பயணம்.

வயநாடு என்னும் வாழ்வளிக்கும்
பூமியின் வளங்கலே எங்களின் மனதில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.



லிகிடி வியூ



ஐராவத பேருந்தில் அம்பாரி செய்து
இந்தியாவின் மென்பொருள் நகரினை கடந்தோம் அந்த அதிகாலையில்.

குளு குளு பேருந்து நத்தையாய் நகர்ந்து சுல்தானின் கோட்டையாம் மைசூர் நகரினை தொட்டது.



எல்லைகள் கடந்தாலும் எம் தேசிய உணவான இட்லியை தந்து இன்பத்தில் உலாவ விட்டது அடையாறு ஆனந்த பவன் .

சாலையின் இரு மருங்கிலும் பச்சை கம்பளம் விரித்து எங்களை வரவேற்றது வயநாடு.

மேக கூட்டங்களின் எழில்மிகு காட்சி 


மலையக மண்ணை எங்கள் பாதங்கள் முத்தமிடுமுன் எங்களின் மேல் முத்துக்கள் தூவி ஒரு வரவேற்பு மாலையை இயற்றிச் சென்றது வானம்.


மலைகளின் மத்தியில் தென்பட்ட மேகங்களின் கூடல் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த காட்சியை கண்டு நாணிக்கண் புதைத்திருந்தான் கதிதவன்.

(நாணுதல் எப்படி கதிரவனுக்கு பொருந்தும் என கேள்வி எழுப்பினால் , இந்த காட்சியை கண்டு மனமகிழ்ந்து தண்மை முகத்துடன் தன்னிலை மறந்திருந்தான் கதிரவன் எனக் கொள்க)

சரிவாக ஆதம்பித்து உள்ளே செல்ல செல்ல செங்குத்தாய் நீண்டிருந்தது எடக்கல் குகை.

எடக்கல் குகையை நோக்கி சென்ற பயணத்தில் 


பிரம்மாண்ட பாறைகள் கைசேர்த்து நிற்பது போன்றதொரு தோற்றத்தை வழங்கியது.

பணடைய மக்களின் சித்திரங்களை காட்டி அந்த இடத்தை காலச்சக்கரத்தில் பின்னோக்கி கொண்டு செல்ல பெருமுயற்சி செய்து கொண்டிருந்தது.

எடக்கல் குகையின் பிரம்மாண்டத்தில் சொக்கி நின்ற தருணங்கள் 


பிரம்மாண்டத்தையும் பிரமிப்பில் ஆழ்த்திவிடும் அளவுக்கு கண்முன் நின்றது பாணாஸுரா நீர்தேக்கம்.

பிரம்மாண்டத்திற்கு பிந்தைய அழகியல் 


அதன் படிகளை எங்கள் பாதங்கள் எண்ணிய போது என்ன எண்ணியதோ ஆகாயம், எண்ணிலடங்கா துளிகளை தந்தது.

மழைய கண்டவுடன் மழலையாய் மாறி இல்லை இல்லை மழயாகவே மாறி ஆட்டம் போட்டோம்..

மழையோடு விளையாடும் பறவைகள் 

மனதின் இருக்கங்களை மடை திறந்த நீர் போல ஓட விட்டு தன்னுடைய பெயர்க்காரணத்தை மறுநிர்ணயம் செய்தது

அருவியில் குளிக்கும் ஆவலில் சென்றவர்களுக்கு

அடிக்கொருதரம் அமுதாய் பொழிந்து கொண்டிருந்தது மழை

பானாசுரா அணை-


களைத்திருந்த இரவு பொழுதுகளில் கதைகளாய் பேசி களித்திருந்த்தோம்
 ஈகைப் பெருநாளாயினும் எம் பசிக்கு ஏதெனுமொரு ருசியை புசிக்க கொடுத்து கொண்டே இருந்தது அந்த பூமி.

முத்தங்கா வனப்பகுதியின் சபாரி பயணம் 


வனவிலங்குகளின் வசிப்பிடமான முத்தங்கா சரணாலயம் சென்றோம் மறுநாள். அந்த காலை வேளையில் தூறலுடன் காட்டுக்குள் ஒரு பயணம். பாதையை தவிர எல்லா பக்கமும் பச்சை நிறம்.

வேழத்தின் கம்பீர வரவேற்பும்.

தாமரைகளின் பொது கூட்டமும் (தாமரை - தாவுகின்ற மரை - தாவுகின்ற மான் என பொருள் )



தோகை விரித்தாடும் மயில்களின் விளையாட்டும்

இந்த சபாரி என்னும் சவாரியை இன்பமாக்கின.

மூன்று தினங்களும் எங்களை நனைத்து உலர்த்தி நனைத்து மகிழ்ந்தது மழை.



இந்த பயணத்தை மறக்க முடியாததாக மழையே மாற்றிப்போனது.

பறப்பன , நடப்பன , நீந்துவன என புசித்த ஒவ்வொன்றும் நீங்காமல் நினைவுகளாய் இடம் பெறுகின்றன.


ஒவ்வொரு பயணங்களும் பல வித அனுபவங்களை தந்து கொண்டே இருக்கின்றன . இயற்கை காட்சிகளை ,வனப்புகளை தாண்டி சந்திக்கும் மனிதர்கள் , ருசிக்கும் உணவுகள் , மக்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் சந்திக்கும் அனுபவங்கள் என அனைத்தும் மனசில் அழியா படிவமாக பாதிக்கின்றன


மேலும் சில படங்கள்



March 24, 2017

காஞ்சி பயணமும் காணாமல் போன கட்டப்பாவும்



தலைப்புக்கும் பதிவுக்கும் எப்பவுமே ஏதாவதொரு சம்மந்தம் இருக்க வேண்டுமா என்ன என்ற அரிய சிந்தனையின் அவுட்புட்டே இந்த பதிவு . இந்த பதிவை என்னன்னு டேக் செய்யறதுன்னு சாத்தியமா தெரியல . பயணம்னு போட்டா அந்த மீன் முள்ளுகூட மன்னிக்காது . சரி ,வழக்கம்போல எப்படியாவது ஆரம்பிப்போம் .

நண்பர்களுடன் ஒவ்வொரு நண்பரின் வீட்டுக்கும் சென்று வரவேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாகவே எங்களுக்கு இருந்து வந்தது. அதன் இனிய துவக்கமாக சென்னைக்கு மிக அருகில் உள்ள கோவில்களின் நகரமான காஞ்சிக்கு செல்லலாம், அப்படியே நண்பர்கள் மூவர் வீட்டுக்கும் சென்று தங்கி விழாவை சிறப்பிக்கலாம் என்ற யோசனையில் ஆரம்பமானது இந்த இனிய பயணம்



ஒரு அதிகாலை நேரத்தின் அமைதியான மின்தொடர்வண்டி பயணமது . காலையில் சாப்பிட்ட உளுந்து வடையின் ருசி நாக்குலேயே நின்னாலும் காஞ்சியில் இறங்கியவுடன் பசி மெல்லமாக வெளியில் எட்டி பார்த்தது . தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்று சிறப்பாக சிற்றுண்டியை முடித்தோம் . பயண திட்டப்படி மாமண்டூர் குகைக்கோயில் செல்வதாக இருந்தது .ஆனால்  சமயலறையில் இருந்து வந்த பறப்பது , ஓடுறது மற்றும் நீந்தறது என பலதரப்பட்ட ஜீவராசிகளின் மணமும் , வெளியில் நிலவிய வெய்யிலின் ரணமும் எங்கள் மனதை மாற்றிவிட்டது .



மதியம் சாப்பிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சிறு நடைபயணம் செய்து அதிலும் பனிக்கூழ் (ஐஸ் என்பதை இப்படித்தான் சொல்லணுமாம்) , நீர்பூசணி என நிரப்பிவிட்டு வந்தோம்

மதிய உணவை பற்றி சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை . அதிலும் குறிப்பாக இந்த பிரானை சின்ன சின்னதாக நறுக்கி வெள்ளை பூண்டு எல்லாம் சேர்த்து செய்திருந்தது ரொம்ப சிறப்பாக இருந்தது . சாப்பிடவே தெரியாவிட்டாலும் உணவு போராளி என்ற பெயரை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் சாப்பிட்ட நண்டும் அருமையாக இருந்தது . பொதுவாக ஒரு நகைச்சுவை கதை உண்டு . அதிகம் சாப்பிட்டுவிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த ஒருத்தன்கிட்ட ஒருத்தர் சொன்னாராம் . கைய தொண்டைக்குள்ள விட்டு வாந்தியை எடுத்துடு கொஞ்சம் ப்ரியா இருக்கும்னு . அதுக்கு அவன் சொன்னானாம் அந்த அளவுக்கு எடமிருந்தா இன்னொரு ரவுண்ட் சாப்பிட்டு இருப்பேனே என்று . கிட்டத்தட்ட அந்த நிலை



ஊரை சுத்தி பாக்கவந்துட்டு இப்படி கொட்டிக்கிட்டே இருக்கிறோமே என்று யாரும் சொல்லிட கூடாதுன்னு அன்னிக்கு சாயந்தரம் கைலாசநாதர் நாதர் கோவிலுக்கு போனோம் . சென்ற முறை வந்தப்போ நிறைய வரலாற்று கருத்துக்களை தோழி ஒருவர் சொல்லி இருந்தார் . ஆனால் எனக்கு நினைவில் இருந்தது அந்த கோவில் ராஜசிம்மனால் கட்டப்பட்டது என்பது மட்டுமே . அங்க தாயின் கருவறை போன்ற ஒரு அமைப்பு இருப்பதாகவும் அதில் நுழைந்து வெளிவருவது நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு



சென்ற முறை நுழைந்து வரும் போது எழ முடியாமல் சிரமப்பட்ட நியாபகங்கள் கண்முன் வர நான் வரவில்லையென தனியே புல்தரைக்கு சென்றுவிட்டேன். சில நண்பர்கள் சென்றபோது அங்கிருந்த அர்ச்சகர் திருநீறு வைக்காமல் உள்ளே போககூடாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பி எங்களின் கோபத்தை மூட்டிவிட்டார் . இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் ஒரு கோவிலில் இவ்வாறு சொல்லி இருந்தால் பேசாமல் சென்று இருப்போம். கைலாசநாதர் கோவில் இந்திய தொல்லியல் துறையின்கீழ் வரும் ஒரு கோவில் . அது கோவில் என்பதை தாண்டி ஒரு வரலாற்று சுவடு . அங்கு வருபவர்கள் எல்லாம் கடவுளை மட்டுமே நாடி வரும் பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை . தங்களின் வரலாற்று தடங்களை பற்றி அறியும் ஆர்வம் கொண்ட யாவரும் வருவார்கள் . இத கூட தெரியாம இருக்குது இந்திய தொல்லையியல் துறை . இனிமேலாவது அபிஷேகம் மட்டும் பண்ணுங்கய்யா அட்வைஸ் பண்ணாதீங்க


இன்னொரு நண்பரின் வீட்டு சுவையான காஞ்சிபுரம் இட்லியுடன் அந்த நாள் முடிந்தது . காலை ஆரம்பித்ததில் இருந்தே புத்தகங்களையும் திரைப்படங்களையுமே அதிகம் பேசி இருந்தோம் . இரவு சிறிது உரையாடலுடன் இனிதே நிறைவடைந்தது

இரண்டாம் நாள் காலை அருகில் இருந்த மற்றொரு கோவிலுக்கு சென்றுவிட்டு  அங்குமொரு வெறுப்பேற்றும் அனுபவத்துடன் திரும்பினோம். மற்றொரு  நண்பரின் இல்லத்தில் சிற்றுண்டியை முடித்துவிட்டு மாமண்டூர் குகை கோவில் நோக்கி கிளம்பும் போது மணி பதினொன்றை தொட்டுவிட்டது. வெயிலின் உக்கிரத்தில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் சில மறக்க முடியாத நிழற்படங்களை எடுத்துவிட்டு கிளம்பினோம் . அதற்க்கு முன்னர் வழியில் ஒரு சமண கோவில் சென்று இருந்தோம் . புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளவே அங்கிருந்த சிலைகள் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகளை கொஞ்சம் கவனித்துவிட்டு திரும்பினோம் .



மாமண்டூர் முடித்துவிட்டு வந்தவுடன் முந்தைய மதியம் உண்டது போலவே ஈவு இரக்கமில்லாமல் அணைத்து ஜீவன்களையும் புசி புசியென புசித்துவிட்டு கொஞ்சம் ஒய்வு எடுத்தோம் .

முந்தைய நாள் பேசி தீர்மானித்திருந்தது போல் மாநகரம் திரைப்படம் செல்ல ஆயத்தமானோம் . ஆனால் ஷோ டைம் நாங்கள் சென்ற நேரத்துக்கு இல்லாமல் போனது . உடனே திரும்பி இருக்கலாம் அல்லது வேறு ஆங்கில படத்திற்கு சென்று இருக்கலாம் ஆனால் விதி யாரை விட்டது . மீன் , வித்தியாசமான பெயர் இதை எல்லாம் நம்பி கட்டப்பாவை காணோம் என்ற திரை காவியத்துக்கு போனோம் .

இதுவரை சிறப்பாக சென்ற பயணத்தின் (அல்லது விருந்தின் ) ஒரு திருஷ்டி போட்டு போல அமைந்து விட்டது . டைரக்ட்டர் பெயர்  சேயோன் , அதனாலயோ என்னவோ எங்களை வச்சி செஞ்சுட்டார்


இந்த பயணம் நண்பர்களின் வீட்டுக்கு  செல்வதுடன் அவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் அவர்களின் குடும்பத்தினருடன் பேசி மகிழவும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது . நண்பர்களின் சின்ன வயது புகைப்படங்கள் , செல்ல பெயர்கள் , சின்ன சின்ன குறும்புகள் எல்லாவற்றையும் பெற்றோர் மூலம் கேட்பது மிகவும் சிறப்பான அனுபவம் . ஆனா இந்த பதிவுல அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லாம முழுக்க முழுக்க சாப்பாடு மட்டும் வந்ததுன்னா அதுக்கு காரணம் அம்மாக்களோட கைப்பக்குவம் .

இப்படியே எல்லா வீட்டு கைப்பக்குவதையும் ரசிச்சு ருசிக்க இன்னும் நிறைய பயணப்படவேண்டியுள்ளது .

ஒரு நெடிய பயணத்தின் ஆரம்பமாக இதை சொல்லலாம்

ஒரு வழிய ட்ரிப் முடிஞ்சு போச்சு

பி.கு :

ரொம்ப நாளாச்சு ஒரு பதிவு எழுதி , அதுவும் புது லேப்டப் வாங்கின நேரம் ஒரு போஸ்ட் கூட எழுத முடியல . அடுத்த பதிவா பயணங்களில் சந்திச்ச சில மறக்க முடியாத மனிதர்களை பற்றிய ஒரு பதிவு "சில பயணங்களில் சில மனிதர்கள் "

December 01, 2016

வானொலி



"வானொலி கேட்கும் நேரம்
நம் வாழ்வின் உன்னத நேரம் "

அண்மையில் ஹலோ எப்.எம்ல டைரினு ஒரு நிகழ்ச்சி கேட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ரேடியோ கேட்டதுல அந்த நிகழ்ச்சி ரொம்ப புடிச்சு இருந்துச்சு . மேலும் பால்ய காலத்தில் வானொலி கேட்ட அனுபவங்களை அசை போட தூண்டிவிட்டது. அதன் விளைவே இந்த பதிவு

துல்லியமாக எந்த வயதில் இருந்து வானொலி கேட்க ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. அப்பொழுது அதிகம் கேட்கும் அலைவரிசைகள் சென்னை , திருச்சிராப்பள்ளி மற்றும் சிலோன் போன்றவை தான். செய்திகள் , திரை இசைப் பாடல்கள் , சிறார் பல்சுவை நிகழ்ச்சிகள் , நாடகங்கள் மற்றும் ஒலிச்சித்திரங்கள் என பல நிகழ்ச்சிகள் கேட்டு மகிழ்ந்த நினைவு.

மதிய உணவு வீட்டில் 1.45 மணி செய்திகளுடன் முடிய இரவு உணவு 7.15 மணி செய்திகளுடன் ஆரம்பிக்கும். ஆல் இந்தியா ரேடியோ , ஆகாஸவாணி என இரு வேறு செய்திப் பிரிவுகள் இருந்தன.

வாரயிறுதி நாட்களில் ஒலிபரப்பாகும் ஒலிச் சித்திரங்கள் ( திரைப்படம்) மிகவும் பிடித்தமானவை. சிவகாமியின் சபதம் முழு நாவலை வாராவாரம் ஒலிச் சித்திரமாக கேட்டு முடித்தேன்.

பிறகு பண்பலை வானொலிகள் வர ஆரம்பித்தவுடன் வானொலி என்பது எல்லா நேரத்திலும் கேட்க கூடிய ஒன்றானது. நெசவு உள்ளிட்ட தொழில் செய்பவர்களுடன் பன்பலைகள் முழு நேர அங்கமாகின.

எங்க ஊர் சைடுல கொடைக்கானல் எப்.எம் மட்டும்தான் தெளிவா எடுக்கும் . சூரியன் எப்.எம்க்கு அவ்வளவு தெளிவா சமிக்ஞைகள் கிடைக்காது.

இன்னிக்கு வரை எத்தனையோ பண்பலைகள் கேட்டாலும் எனக்கு எப்பவுமே கோடை எப்.எம் மட்டும்தான் பேவரெட். அப்போ காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒலிபரப்பை கொடுத்து வந்தது.

வானவில் , சந்தோஷ சாரல் , சிந்தனை கட்டங்கள் , Knock out damaka , செப்புக செந்தமிழ், குறிஞ்சித் தென்றல், தொட்டு தொட்டு என நிகழ்ச்சிகள் ஏராளம். நேயர்கள் கடிதங்களுக்காகவே இரண்டு மணி நேரம் ஒதுக்கும் அளவுக்கு 22 மாவட்டங்களில் தன் இன்னிசை ஆதிக்கத்தை பரவி இருந்தது .

நேயர்களின் எண்ணங்களுடன் வண்ணம் பெறும் வானவில் நிகழ்ச்சி முக்கியமானது. அப்போது நிலைய இயக்குனராக இருந்த மகாசோமாஸ் கந்தமூர்த்தி ஐயா அவர்கள் ஒருங்கிணைக்கும் வானவில் மிகவும் ரம்மியமானது.

சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் வழங்கிய மீனாட்சி விலாசம் குடுப்பத் தொடரை விடாமல் கேட்டதுண்டு. பாகவதர், பழமொழி பாக்கியத்தம்மாள் என அனைத்து கதாப்பாத்திரங்களும் இன்றும் மனசில் நிற்கின்றன.

ஆங்கில கலப்பு இல்லாமல் சில விதிமுறைகளுடன் வலம் வரும் செப்புக செந்தமிழ், உண்டு களைத்தவுடன் 2 மணிக்கு துள்ளல் இசைப் பாடல்களுடன் வரும் நாக்அவுட் டமாக்கா, விளம்பரதாரர் நிகழ்ச்சியாக நவசதீஷ்குமார் வழங்கும் டாப் 5 சாங்ஸ் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் பசுமையாக இனிய நினைவுகளுடன் பதிந்துள்ளன.

வானொலி வரலாற்றில் குறுக்கெழுத்துப் புதிரை ஒலிபரப்பிய பெருமை கோடைப் பண்பலைக்கு மட்டுமே உண்டு. சிந்தனைக் கட்டங்கள் என்ற பெயரில் ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சிதான் பிற்காலத்தில் நான் சில தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்கள் உருவாக்க உத்வேகமாக இருந்தது.

Tone Tunes என்ற பெயரில் வலம் வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் முக்கியமானது.

பின்னர் இரவு பத்து மணி வரை ஒலிபரப்பை நீட்டித்து தற்போது 24 மணி நேரமும் ஒலிபரப்பாகி வருகிறதென நினைக்கிறேன்.

ஜான் டீ பிரிட்டோ , சித்ரா.எஸ்.ரவி என சில தொகுப்பாளர்களின் பெயர்தான் நினைவில் உள்ளது.

பாட்டு போடுற ஒரு சாதாரண எப்.எம் என கோடைப் பண்பலையை என்னால் நினைக்க முடியவில்லை. அதை தாண்டிய ஒரு பிணைப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

#Kodai_FM #100.5