Showing posts with label ஆய்வு தொடர். Show all posts
Showing posts with label ஆய்வு தொடர். Show all posts

January 29, 2017

ஜல்லிக்கட்டு

February 23, 2014

தமிழன் உலகின் முன்னோடி -பகுதி 2

இந்த உலகிற்கு தமிழர்கள் கற்று தந்த பல கலைகளுள் போர்க்கலையும் ஒன்று. ஈவு இரக்கமின்றி உயிர்களை துன்புறுத்தும் கொலைக்களம் எப்படி கலையாகும் என நீங்கள் நினைக்கலாம். அதைப்பற்றி விளக்குவதே இப்பதிவு

தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையினை அகம் புறம் என இருண்டு பிரிவுகளாக பிரித்தனர் .இதில் வீரம் புறவாழ்க்கையில் வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை போருக்கு காரணமாக விளங்குபவை மண்ணாசை,பெண்ணாசை , பொன்னாசை, இதைவிட மோசமான அதிகார ஆசை இவை நான்குமே

தமிழர்களின் போர்முறை மிகவும் நேர்மையானது . எதிரி நாட்டின் மீது படையெடுக்கும் மன்னன் ,போருக்கு முன் முறையாக பறைசாற்றி எதிரிக்கு அறிவித்து ,அவன் தயாரானவுடன்தான் போரை தொடங்குவான். எதிரி அயர்ந்த நேரத்தில் தாக்கி வீழ்த்தும் பழக்கம் நம் மக்களுக்கு கிடையாது. போர் என்பது இரு படைவீரர்களுக்கும் இடையில் தான் நடக்கும். அப்பாவி மக்களுக்கு தொந்தரவு தர கூடாதென போருக்கென்றே தனியாக பாலை நிலங்களை உருவாக்கி வைத்திருந்தனர் . இன்று போர் என்றாலே அப்பாவி மக்கள் மீது மனித உரிமை மீறல்களை நடத்துவது என சில அ"சிங்க" குணம் கொண்ட வீணர்கள் நினைக்கிறார்கள்.காலையில் ஆரம்பிக்கும் போர் மாலையில் முடித்துகொள்ளப்படும்.

தான் கைப்பற்றிய நாட்டை,நாட்டு மக்களை வெற்றி களிப்பில் சூறையாடி மகிழும் பண்பாட்டை கொண்ட அயலார்க்கு அவர்களை தம் குடிமக்களாக கொள்ளும் நம் பழக்கம் சற்று வியப்புதானே


நால்வகை படைகளை தமிழ் மன்னர்கள் கொண்டிருந்தார்கள் என் வரலாறு விளம்புகிறது.தேர்ப்படை ,குதிரைப்படை,யானைப்படை,காலாட்படை இவையே.
நம் போர்கள் நிகழும் முறையை இலக்கியங்கள் கூறுகின்றன.அவற்றை பார்ப்போம்

முதலில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் மன்னன் தன் படையை ஏவி எதிரி நாட்டு பசுக்களை கவர்ந்து வர வேண்டும் .அதற்க்கு கரந்தை என்று பெயர் . அந்த பசுக்களை மீட்க அவற்றின் உரியவர் வருவார் அது வெட்சி எனப்படும்

போரை தொடங்கும் மன்னன் பகை நாட்டை எதிர்த்து நின்று தாக்குதலை வஞ்சி என்றும் பகைவர் கோட்டையை முற்றுகை இடுவதும் முற்றுகை இடப்பட்ட மதிலை காத்தலும் உழிஞை என்றும் அழைக்கப்படும் .இரு மன்னர்கள் களத்தில் இறங்கி போர் புரிவது தும்பை என்றும் அதில் வெற்றி பெறுவது வாகை எனப்படும்

கடற்போரில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும் ,அவர்கள் கடாரம் மாநக்காவரம் .ஸ்ரீ விஜயம் போன்ற பகுதிகளை ஆட்சி செய்ததையும் வரலாறு நமக்கு சொல்கிறது. கடற்போர்களில் பயன்படுத்தப்படும் நாவாய்கள் (போர்கப்பல்) அமைத்தலில் கொண்டிருந்த பொறியியல் நுட்பம் அலாதியானது

போரில் விழுப்புண் பட்டு இறத்தலை பெருமையாகவும் புறமுதுகு காட்டி ஓடி தப்பித்தலை இழிவானதாகவும் கொண்டிருந்தனர் .

பொதுவாக ஆயுதங்களாக வில் ,வேல் ,வாள் போன்றவையே இருந்தது . இதில் அருகில் இருந்து போர் புரிய வாளும் தூரத்தே இருந்து போர் செய்ய வில் மற்றும் வேல் பயன்படுத்தப்பட்டன. இது தவிர கழல்,கண்ணி,தார் ,அடார்,அரம்,அரிவாள் ,ஆயுதக்காப்பு ,கணிச்சிப்படை ,கலப்பை ,கழிப்பிணி ,காழெக்கம்,கிளிகடிகருவி ,குந்தாலி,குறடு ,கேடகம் ,கோடாலி ,சேறுகுத்தி,நவியம் மற்றும் வளரி போன்ற ஆயுதங்களையும், பயன்படுத்தினர் .

போர்கருவிகள் ஊரு விளைவிக்கா வகையில் புலி தோலால் செய்யப்பட்ட உறைகளையும் கேடயங்களையும் பயன்படுத்தினர்

போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக நினைவிடங்களையும் படைவீடுகளையும் அமைத்து அவர்களை பெருமைப்படுத்தினார்கள்.


ஆயுதம் இன்றி உடல் பலத்தால் மட்டும் நடக்கும் மல்யுத்தம் ,விற்போர்,வளரி வீசுதல் மற்றும் சிலம்பம் போன்றவை வீர விளையாட்டுகளாக இருந்திருக்கின்றன.


நம்முடைய மரபில் இருந்த பெரிய பிரச்னை என்னவெனில் மக்களை கடவுளாக உயர்த்தி கூறுவதுதான். அதாவது மனிதர்களாக அவர்கள் செய்த வீரபிரதாபங்களை ,செயற்கரிய செயல்களை உயர்த்தி கூறுவதாக எண்ணி கடவுளரோடு ஒப்பிட்டு கூறுவதுதான். இதன் மூலம் வீர மரபுகள் புராதான மரபுகளாகி நம்ம முடியாத அளவிற்கு பொய் விடுகிறது

உதாரணமாக சிபி, முசுகுந்தன்,காந்தன் ,செம்பியன் மற்றும் மனு நீதி சோழன் போன்றோரின் வீர வரலாற்றை நம் இந்த புராதான மரபு கெடுத்து விட்டது (சிபி - புறாவை காக்க பருந்திடம் தன் தசையை கொடுத்தவன் ,முசுகுந்தன்-அரக்கர்கள் பலரை வென்று இந்திரனை காதவன் ,காந்தன் - குடகு மலையை பிளந்து காவிரி ஆற்றை வரவிட்டவன் ,செம்பியன் - அரக்கர்களின் பறக்கும் கோட்டையை அழித்தவன் ,மனுநீதிச்சோழன் - உங்களுக்கே தெரியும் )


அடுத்த பதிவில் சந்திப்போம்


பி.கு :
ஒரு முறை மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற போது ஒரு வேற்று மாநிலத்து நண்பர் மயிலுடன் நிற்கும் ஒரு மனிதரின் சிலையை காட்டி அவர் யார் என ஒரு தோழியிடம் வினவ ,உடனே தோழி அது முருகன் என பதிலுரைத்தார். மயிலோடு யாரை பார்த்தாலும் நம் மக்களுக்கு முருகர் நியாபகமே வருகிறது. உடனே குறுக்கிட்ட நான் அவர் பேகன் எனவும் அவர் மயிலுக்கு போர்வை தந்த வரலாற்றை சுருக்கமாக சொன்னேன் உடனே அந்த நண்பர் "அவர் தான் முட்டாள்தனமாக செய்திருக்கிறார் என்றால் அதை பெருமையாய் நினைத்து போற்றுகிறீர்களே ." என கேட்க உடனே நான் "அதை அவ்வாறு எடுத்துக்கொள்ள கூடாது .மக்களுக்கு ஒருவர் உதவி புரிவது இயற்கைதான் .ஆனால் மாக்களுக்கும் உதவி புரிந்த நல்லோர்கள் வாழ்ந்த பூமி எங்கள் பூமி " என கூறினேன் .என்ன நான் சொன்னது சரிதானே ????


 



மூலங்கள் :
>தென்னாட்டு போர்களங்கள் -கா.அப்பாதுரையார்
> பத்தாம் வகுப்பு (2006-2010) தமிழ் துணைப்பாட நூல்
>http://www.santhan.com/index...
>http://ta.wikipedia.org/விக்கி
>http://www.thinnai.com/index...

November 17, 2013

தூக்கு தண்டனை-ஒரு விவாதம்

திரு.எண்டமூரி விரேந்தர்நாத் அவர்கள் எழுதிய தூக்கு தண்டனை எனும் நாவல் படித்தேன்.ஒரு நாவலாக மட்டும் முடிந்து விடாமல் என்னுள் பல விவாதங்களை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவு, இருப்பினும் பல்வேறு திருப்பங்களுடன் மிக அருமையான பயணத்தை நல்கியது.


தூக்கு தண்டனையின் அவசியம் குறித்து என்னை யோசிக்க வைத்துவிட்டது. தூக்கு தண்டனையை ஒழிக்க போராடும் ஒருவன் ஒரு நாடகம் ஆடி உலகத்துக்கு தூக்கு தண்டனையின் கொடுமையை புரிய வைக்க முயல்கிறான்.ஆனால் துரதிஷ்டவசமாக அவனை பகடைக்காயாக பயன்படுத்தும் ஒருவர் தன் வஞ்சத்தை தீர்த்து கொள்கிறார்.கடைசியில் அவன் எப்படி மீள்கிறான் என்பதே கதை.


தூக்கு தண்டனை தேவையில்லை என எழுப்பப்படும் கூக்குரல்கள் அதிகரித்து வருகின்றன . ஒரு மனிதனின் உயிரை மற்றவர்கள் சட்டம் என்ற ஒன்றை கொண்டு எடுப்பது தவறு என சிலர் கூறுகிறார்கள் . தண்டனை என்பது ஒருவன் செய்த தவறுக்கு அளிக்கப்படும் பிராயசித்தம் ஆகும்.அப்படி இருக்க தூக்கு தண்டனை என்ற பெயரில் அவனை திருந்த முயற்சிக்காமல் கொலை செய்வது எப்படி சரியாகும் ?? ஒரு கொலைகாரனுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் போது எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்.

மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது.தன் முடிவு தெரிந்த ஒரு மனிதன் தினமும் செத்து செத்து உயிர் வாழும் ஒரு நடைபிணமாக மட்டுமே உயிர் வாழ முடியும். ஒவ்வொரு நாளும் தன் வாழ்நாளை எண்ணி கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது .ஒரு கதையின் முடிவு உங்களுக்கு முன்னரே தெரிந்து விட்டால் உங்களால் ஆர்வமாக படிக்க முடியாது அதே போல் தன் முடிவு தெரிந்த ஒருவனின் வாழ்நாள் நிச்சயம் வெறுமையாக எந்த பிடிப்பும் இல்லாமல் நகரும்.எவ்வளவு பெரிய தண்டனை ??

இதனாலேயே பல்வேறு மரண தண்டனை கைதிகள் மனதளவில் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.கிட்டத்தட்ட 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டனர். சில அரிதான குற்றங்களுக்கு சில நாடுகளில் மரண தண்டனை விதிக்கிறார்கள். அந்த நாடுகளில் எல்லாம் குற்றங்கள் அதிகரிக்கவில்லையே என்ற கேள்வியும் எழுகிறது.

பொதுவாக தண்டனைகள் குறித்த இரு கருத்துருக்கள் உள்ளன.முதல் கருத்து தண்டனைகள் அதிகமானால் தவறுகள் குறையும் என்பது .இதில் எனக்கு உடன்பாடில்லை.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான சட்டங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் வலிமையானதாக இருந்தும் (கற்பழிப்பு குறித்து அமெரிக்க மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள சட்டங்களை கேட்டால் ஆச்சர்ய படுவீர்கள் .) நம் நாட்டில் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன. சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை மிக கொடுமையானது .இருப்பினும் அந்த நாட்டிலும் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன(அவர்கள் சட்டம் தானே எட்டு மாத கர்ப்பிணியை கட்டாய கருக்கலைப்பு செய்து கொல்ல சொன்னது )

இரண்டாவது கருத்து ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் மிக சிறந்த தண்டனை அவனை மன்னிப்பது ஆகும் .அதாவது அவனை மன்னித்தால் அவன் மனசாட்சி அவனை உறுத்தி அவனை நல்ல படியாக வாழ வைக்கும் என்பதாகும் .இதிலும் எனக்கு உடன்பாடில்லை ஏனெனில் நாட்டில் வாழும் அனைவரும் மனசாட்சியுடன் தான் வாழ்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது .காரணம் மனிதன் மட்டும் இங்கு வாழ்வதில்லை மனிதன் என்னும் போர்வையில் ஈவு, இரக்கம் மற்றும் மனித்தன்மையற்ற மிருகங்களும் வாழ தானே செய்கின்றன.அவர்களை கொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.ஒருவன் செய்யும் தவறுக்கு தண்டனையே இல்லையெனில் அவன் மனம் குற்றம் செய்வதை நோக்கி சிந்திக்காதா ??

புத்தர் பிறந்த நாடு இது மனிதனை மன்னிக்கும் மனப்பான்மை மேலோங்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர் .சில குற்றங்களை மறக்கவே முடியாதபோது மன்னிப்பது எங்கனம் .(உதாரணம் நொய்டா நிதாரி படுகொலைகள் ).இன்றும் சிலவற்றை நினைக்கும் போது இதயம் கனக்கிறது . சட்டத்தினால் நிரபராதி என சொல்லப்படும் அனைவரும் அப்பழுக்கற்றவர்கள் என்று கூறிவிட முடியாது.சட்டத்தின் நெளிவு சுளிவுகளால் தப்பித்த அவர்களை ஒன்றும் செய்ய முடியாத சட்டம் சிலருக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்குவதும் எப்படி சரியாகும்.

நம் சுதந்திர போராட்ட தியாகிகள் சிறையில் அனுபவித்த தண்டனையை விட மரண தண்டனை கொடுமையானதா?. ஒரு திரைபடத்தில் சத்ய ராஜ் சொல்வார் மரணம் என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வு அது எப்படி தண்டனையாகும் என்று ? . அது போல் மரணத்தை தண்டனையாக வழங்குவது அந்த மாதிரி குற்றங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்து கொள்ளும் என சொல்ல முடியமா?? .


இல்லை இந்த உலகில் மனிதனாக வாழ தகுதியே இல்லாத ஒருவனை கொல்லாமல் பாதுகாத்து வருவது சரிதானா??

என்ன இது மாத்தி மாத்தி பேசறான்னு பாக்கறீங்களா

எனக்கு ஒண்ணுமே புரியவில்லை

இவ்வளவு விவாதங்கள் என்னுள் நடந்த போதும் என் சிற்றறிவுக்கு எதுவும் எட்ட வில்லை .

உங்கள் கருத்தை சொல்லுங்கள் எனக்கு ஏதாவது தெளிவு ஏற்படுகிறதா என்று பார்ப்போம்




மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி வணக்கம்

இனி அந்த புத்தகம் பற்றிய தகவல்
தூக்கு தண்டனை
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு)
மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
விலை :170


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

 ஒரு சமூக வலைதளத்தின் இந்த பதிவின்  பின்னூட்டத்தில் இருந்து


October 26, 2013

எங்கே செல்லும் இந்த பாதை-பகுதி 4

மொழிப்பற்று


அமுதென்றும் அழகென்றும் உயிரென்றும் உணர்வென்றும் பாடப்பட்ட உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக கருதப்படும் தமிழ் மொழியின் இன்றைய போக்கு மற்றும் அதன் பிற்கால நிலை பற்றிய பதிவு இது. அமிழ்தினும் இனியதான இயல் ,இசை ,நாடகம் ஆகிய முத்தமிழை பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம். தனக்கே உரித்தான இலக்கிய வளங்களோடும் இலக்கண நெறிகளோடும் திகழ்ந்த தமிழின் இன்றைய நிலை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.


முதலில் மொழி என்பதன் வீச்சு தகவல் பரிமாற்றத்தோடு நின்று விடுவதில்லை.அதை தாண்டி நம் அடையாளமாகவும் வாழ்வியலின் பின்னிப்பிணைந்த அங்கமாகவும் விளங்குகின்றது.

"உடம்போடு மெய்வந்து புணர்ந்தால் உயிர்மெய் "

எனும் கூற்றுக்கேற்ப நம் உயிர் மெய் நிலைக்க வேண்டுமானால் தமிழென்னும் மெய் நம்மை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அகன்றுவிட்டால் நாம் உணர்வுகளற்ற யாக்கையுடன் வாழும் மக்கள் ஆவோம். நம் மகிழ்ச்சி ,சோகம் ,சினம்,இகழ்ச்சி ,அமைதி என் எல்லாவற்றிலும் மொழியின் தாக்கம் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இன்றைய நிலவரப்படி நூற்றுகணக்கான மொழிகள் அழிந்து விட்டன மற்றும் அழிந்து வருகின்றன. அந்த மொழியில் உன்னத இலக்கியங்கள் இருந்திருக்கலாம் மற்றும் மொழி ஆர்வலர்கள் இருந்திருப்பார்கள்.ஆயினும் அந்த மொழிகள் ஏன் அழிந்தன ?

ஒரு மொழியின் ஆளுமை அல்லது ஆயுள் பதிய படைப்புகளினாலோ இலக்கிய ஆர்வலர்களினாலோ தீர்மானிக்கபடுவதில்லை. பாமர மக்களால் பேசப்படும் போதுதான் அதன் ஜீவன் வாழும் நிலைக்கும். [ரசிகன் இல்லையெனில் கலைகள் இல்லை கலைஞனும் இல்லை அதேபோல் வாசகன் இல்லையெனில் இலக்கியங்கள் இல்லை எழுத்தாளனும் இல்லை என இருக்க மக்களால் பேசப்படவில்லை எனில் மொழி மட்டும் எங்கனம் நிலைக்கும் ]


இன்றைய இந்திய மொழிகள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை ஆங்கில கலப்பு . ஆங்கிலத்தின் ஆதிக்கம் இந்திய மொழிகளில் நேரடியாக பிரதிபலிக்கிறது. ஆனால் அது தவிர்க்க முடியாதது .இதனால் நம் மொழிகள் தங்கள் பாரம்பரியத்தை இழக்க நேரிடுகிறது. பல சொற்கள் வழக்கத்திலிருந்து மறைந்து மொழியின் எல்லையை குறைக்கின்றன.மக்களிடம் அதிகரிக்கும் ஆங்கில மோகம் தமிழ் படிப்பதை கவுரவ குறைவாக கருத வைக்கிறது. ரயில் பயணங்களின் போது செய்தித்தாள் வார இதழ்களை தாண்டி ஏதேனும் தமிழ் புத்தகம் படித்தால் நம் சக பயணிகள் விசித்தரமாக பார்க்கிறார்கள். பெற்றோர்கள் கூட தம் குழந்தைகளின் அம்மா எனும் அழைப்பைவிட ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பில் ஆனந்தம் கொள்கிறார்கள்.என் நண்பர்கள் சிலர் கூட English medium என்று பெருமையாக கூறும் போது எனக்கு சிரிப்பு தான் இருக்கும். இன்றைய நவீன யுகம் தமிழில் உயர்கல்வி பயில்பவர்களை விநோதமாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.


"தமிழினம் உள்ளவரை தமிழ் வாழும் " என நம் சான்றோர்கள் சிலர் கூறுகிறார்கள். தமிழன் எனும் அடையாளத்தை இழந்துவிட்டு மொழி தெரியாமல் நம் சந்ததிகள் வெளிநாட்டிலும் நம் நாட்டிலும் வாழும் போது மொழி எப்படி நிலைக்கும். இன்று வாழும் பல இனங்கள் தங்கள் மொழியை இழந்து நிற்கின்றன.ஆக தமிழினம் முழுதும் அழியும் வரை தமிழ் வாழும் என கூறும் அளவுக்கு நமக்கு மொழிப்பற்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

தற்போதைய நம் கல்விமுறை மொழியை மொழியாக நம்மை படிக்க விடுவதில்லை. ஒரு பாடமாக மட்டுமே பார்க்க படுகிறது . இவ்வாறு பாடமாக படிக்கப்படும் போது சுவை ,தனித்தன்மை ,சாராம்சம் போன்ற அடிப்படை தன்மைகள் எடுத்து கொள்ளப்படமாட்டா. இதனால் மொழியின் மீது ஒரு காதலோ பற்றோ ஏற்படாது. தமிழுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை .நவீன இலக்கியங்கள் செய்தலும் மாநாடுகள் சொற்பொழிவுகள் நடத்துவதும் இலக்கியவாதிகளை ஊக்கபடுதுவது மட்டும் போதாது .
குழந்தைகளிடம் தமிழின் மீதான ஆர்வத்தை ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் தமிழை மொழியாக கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி ஆய்வகம் (Language lab ) அமைத்து மொழித்திறனை ஊக்குவிக்கும் விதமாக கவிதை ,கதை கட்டுரை மற்றும் வார்த்தை விளையாட்டுகள் கற்பிக்க வேண்டும். தமிழை ஏட்டுசுரைக்காயாக உண்ணாமல் அதன் சுவையுனர்ந்து உன்ன வைக்க வேண்டும். மாணாக்கர்களிடம் நடத்தப்படும் இம்மாதிரியான போட்டிகள் மற்றும் தேர்வுகள் அவர்களில் ஆர்வத்தை அதிகரிப்பதோடு மொழியில் அவர்களின் சுயசிந்தனையை வளர்க்க உதவும். இதன்மூலம் மாணாக்கர்களிடம் தமிழின் மீது அதீத ஆர்வம் ஈடுபாடு போன்றவை ஏற்படும்.மேலும் தமிழ் பாட வேளைகளில் நல்ல தமிழ் உரையாடலை உறுதி செய்யலாம்.




இன்றைய நிலையில் தமிழ் முன்னேற்றம் என்பது பிற மொழி கலவாமல் செந்தமிழ் பேசுவது என்பது அல்ல.அது மிக கடினம் .( இன்றைய நவீன சூழல் மற்றும் நம் தமிழறிவு இவற்றை கொண்டு பார்க்கும் போது இது மிக மிக கடினம் ).செந்தமிழ் பேசினால் தான் மொழி நிலைக்கும் என்பதில்லை. இங்கு முன்னேற்றம் என்பது தமிழ்பற்றை ,ஈடுபாட்டை மட்டுமே குறிக்கும் . இவ்வாறு குழந்தைகளிடம் விதைக்கப்படும் தமிழார்வம் வளர்ந்து மரமாகி தமிழ் ஆண்டாண்டு காலங்கள் நிலைத்திருக்க உதவும்
பி.கு :
இந்த பதிவு இன்றைய நிலையை அப்படியே சொல்லவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே ஒழிய யாரையும் குற்றம் சாட்டவோ குறை கூறவோ எழுதப்படவில்லை .அவ்வாறு நீங்கள் எண்ணினால் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்

பாதை நீளும்

நம் பயணங்களும் தொடரும்

நன்றி வணக்கம்


அடுத்த பதிவில் சந்திப்போம்

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ் !!!

எங்கே செல்லும் இந்த பாதை - பகுதி 3

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் சினிமா பற்றிய ஒரு சிறு பதிவு. இந்த நூறு ஆண்டுகளில் தமிழ் சினிமா பல்வேறு தடைகற்களை கடந்து தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறது.பேசாத சித்திரமாக ஆரம்பித்து நாடகத்தை முதுகெலும்பாக கொண்டு வளர ஆரம்பித்தது.முத்தமிழ் மூன்றின் உதவியால் மக்கள் மனதில் ஆழமாக வேருன்றவும் செய்தது.பின் அதன் வளர்ச்சி திரைகதை ,படமாக்கும் விதம் ,ஒலி /ஒளி அமைப்பு என பலவற்றிலும் கண்டு இன்று உன்னத நிலையில் உள்ளது

ஆனால் இந்த பதிவு சினிமா வளர்ச்சியை பற்றியது அல்ல. சினிமாவின் சமூக பொறுப்புணர்ச்சியை பற்றியது.ஒரு சாதாரண பொழுதுபோக்கு அம்சம் என்பதை தாண்டி வாழ்வியலின் ஒரு அங்கமாக மக்களோடு ஒன்றி விட்டது சினிமா. அது கலையா ?? அல்லது வணிகமா ?? என தெரியவில்லை ஆனால் ஆயிரக்கணக்கானோரின் உணர்வுகளை கட்டி போட்ட மாபெரும் சக்தியாக உள்ளது. ஆனால் இந்த சக்தியால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா ??


இன்றைய சினிமாவின் போக்கு எனக்கு விசித்திரமாக உள்ளது. ஒரு ஆரோக்கியமான சினிமா நம்மை அதனுள் இழுத்து ஒரு உணர்வுபூர்வமான பயணத்தை நமக்கு அளிக்க வேண்டும். இந்த உலகத்தை புறந்தள்ளி வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கும் அனுபவத்தை நமக்கு அளிக்க வேண்டும். ஆனால் இன்றைய சினமா ஏதோ காமெடி ஷோ பார்ப்பது போல் உள்ளது ,நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் செய்யும் செய்கையை பார்த்துவிட்டு வெறுமென சிரித்துவிட்டு வரவேண்டி உள்ளது. சில படங்களின் தாக்கம் என் மனதில் பல நாட்கள் ஓடி கொண்டிருக்கும். இன்று அவ்வாறு எடுக்கப்படும் படங்கள் ஏதோ மாற்றுத்திரை அல்லது ஆவணப்படம் (documentry ) என்ற ரீதியில்தான் மக்களால் பார்க்க படுகின்றன. இதற்க்கு முக்கிய காரணம் மக்களின் ரசனை.

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத கதைகளங்கள் ஏராளம். தமிழ் சினிமா தனக்கென ஒரு வட்டத்தை எல்லையாக கொண்டு அதனுள்ளே பல பாதைகளை வகுத்துக்கொண்டு பயணித்து வருகிறது. இதனால் மக்களின் ரசனை விசாலமானதாக இல்லை. தலைப்பில் இருந்து விலகி செல்லவில்லை. இவற்றை சொல்லாமல் இருக்க முடியாது. இனி தலைப்புக்கு வருவோம். தமிழ் சினிமா தன் பொறுப்புகளை எவ்வாறெல்லாம் தட்டி கழிக்கிறது என்று பார்ப்போம்.தற்போது வரும் சில படங்களில் பள்ளி மாணவியான கதாநாயகியும் ,கதாநாயகனும் காதலிப்பதுபோலும் மணமுடிப்பதுபோலும் காட்சிகள் வருகின்றன. பள்ளியில் படிக்கும் (minor) பெண் காதல் காமம் காட்சிகளில் ஈடுபடுவது போல் காட்டுவது சமூகத்துக்கு கற்பிக்கும் தவறான பாடம் தானே ? காதலுக்கும் பருவ கிளர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் ஏன் சொல்லவில்லை ?. தற்போது காதல் என்ற பெயரில் காட்டப்படும் காட்சிகள் கூட முகம் சுழிக்க வைக்கின்றன.தமிழ்ப்பெண் பற்றி கூறும் அவர்கள் ஒரு சராசரி தமிழ்பெண்ணை காட்சிபடுத்தவில்லை என்பது என் எண்ணம்.மேலும் தற்போது வரும் சில படங்களில் ஆசிரியர்களை அதிகம் அவமதிப்பது போல் காட்டுவதும் வருந்ததக்கது. அன்றைய சினிமா நாடகத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. நாடகத்தில் ஒப்பனையுடன் கூடிய நடிப்பும் பாட்டும் இருந்தால் போதும். ஆனால் இன்றைய சினிமாவின் வரையறை வேறுமாதிரி உள்ளது. இன்றைய சில படங்கள் எதார்த்த உலகை காட்டுகின்றன.எதார்த்தமான மக்களோடு அவர்கள் வாழ்வியலை சொல்லும் படங்கள் எதிர்காலத்தில் எவ்வளவு பேரால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரியவில்லை. ஒரு படத்தின் வெற்றி அது வாங்கும் விருதுகளை மட்டும் பொறுத்ததல்ல ,அதன் வணிக ரீதியிலான வெற்றி ,அதிக மக்களை சென்று சேர்வது என்பதிலும் உள்ளது என்பது என் கருத்து. அதுவும் பெரிய நிறுவனங்கள் சினிமாவில் முதலீடு செய்ய ஆரம்பித்த பிறகு சிறு முதலீட்டு படங்களின் வெற்றி குதிரைகொம்பாக மாறிவிட்டது . பெண்களையும் குழந்தைகளையும் வைத்து அவர்கள் உணர்வுகளை மீட்டி எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் மிக குறைந்து வருவது துரதிஷ்டவசமானது. உலக தரத்திலான சினிமா என்பது ஹாலிவுட்டை மட்டும் கொண்டு சொல்லபடுகிறது. ஈரானிய படங்கள் போன்ற பிற நல்ல தரத்திலான படங்கள் புறக்கணிக்க படுகின்றன.

தற்போதைய படங்களின் நகைச்சுவை காட்சிகள் தரம் மெய்சிலிர்க்க வைக்கிறது (!!!!). இரட்டை அர்த்ததில் இல்லாமல் நேரடியாக அந்த அர்த்தத்திலேயே வசனங்கள் வருவது கொடுமை. தற்போதைய காலகட்டத்தில் எந்த படமும் மக்களின் எந்தவொரு அடிப்படை பிரச்சனைகளை பற்றியும் பேச வில்லை. கடந்த சில ஆண்டுகளில் எத்தனை படங்கள் மின் பற்றாக்குறை ,தமிழ் ஈழம் ,மீனவர் பிரச்சனை .அணு உலை போராட்டங்கள் குறித்து பேசின. வேறு காரணங்களுக்காக சென்சார் மற்றும் இதர பிரச்சனைகளை சமாளிப்பவர்கள் சமூக பிரச்சனைகளை சொல்வதன் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிக்க விரும்புவதில்லை. தற்போது கருத்துசுதந்திரம் இல்லையென சொல்லும் இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகளை பற்றி ஏன் பேசவில்லை.

இசை என்பது மனதை வருடி சாந்தபடுத்திய காலம் போய் இன்று மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவதாக உள்ளது . பாடல் வரிகள் பற்றி சொன்னால் இக்கட்டுரை முடிவிலி ஆகிவிடும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் " என பாரதி பாடிய தமிழ் மொழியின் இன்றைய பாடல்களின் கொலைவெறியை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பெரிய நடிகர் ஒருவரின் அறிமுக பாடலொன்றில் வரும் வரி இது "தாய்ப்பால் உனக்கு கொக்கோ கோல (coca cola )" .ஈடு இணையற்ற அமிர்தமான தாய்ப்பாலை ஒரு ரசாயன கலவையோடு ஒப்புமைப்படுத்துவது சரியா ?.இப்படி வரிகளை மேற்கோள் காட்டினால் நிறைய சொல்லலாம். இங்கு யார் சமூக பொறுப்புணர்ச்சியை விட்டது.

இனி வரும் சினிமாவில் நம் அடையாளங்கள் .பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை மறைந்து விடும் அபாயம் உள்ளது. முற்போக்கான சிந்தனைகளோ ,சமூக விழிப்புணர்ச்சியோ இல்லாமல் சிரித்து மகிழும் ஒலி /ஒளி சித்திரமாக மட்டுமே சினிமா இருக்கும்.

என் கவலை சமுதாய முன்னேற்றத்துக்கு உதவாவிட்டாலும் சமூக சீர்கேடுகளுக்கும் ,பிற்போக்கான சிந்தனை வாதங்களுக்கும் ,மக்களின் வேற்றுமைகளுக்கும் காரணமாகி விடுமோ என்பதுதான். அதற்க்கு தீர்வு வணிக ரீதியில் மட்டும் சிந்திக்காமல் ரசிகனின் முன்னேற்றம் சமுதாய நிலைமை பற்றியும் நெறியாளர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்

பதிவின் நீளம் அதிகமானதுக்கு மன்னிக்கவும்

பி.கு :

இப்பதிவின் பயணம் இடையில் திசை மாறுவது போல் தோன்றலாம் . என் மனதில் நெடு நாளாக இருந்தவற்றை கொட்டிவிட்டேன் . (வழக்கம்போல் ) யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதியுள்ளேன் .அப்படி காயப்படுத்தினால் நான் மன்னிப்பு கோருகிறேன். இதுவரை சினிமா பற்றி நான் எந்த பதிவும் எழுதியதில்லை. இந்த பதிவுக்கு வித்திட்ட இனிய நண்பர் Seenivasan Balakrishnan அவர்களுக்கு நன்றிகள் பல


அடுத்த பதிவில் சந்திப்போம்

நன்றி வணக்கம்

October 07, 2013

எங்கே செல்லும் இந்த பாதை -பகுதி 2

உலகம் உண்டான காலத்தில் இருந்தே மண்ணாசை ,பெண்ணாசை ,பொன்னாசை என பல பெயர்களை சொல்லி சண்டைகள் ஆரம்பித்தன. மனிதர்கள் தங்களை காத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் அவர்களையே அழித்துகொள்ள பயன்படுத்தப்பட்டன.மனிதனின் பரிணாமம் வளர்ந்து பக்குவப்பட்டாலும் அந்த போர் உணர்ச்சி மட்டும் மாறவே இல்லை அன்று அதிகாரத்தில் இருந்தவர்களின் அதிகாரபோதை எனும் மாயை பல உயிர்களை தின்றது .இன்றும் தின்று கொண்டுதான் இருக்கிறது .அன்றைய போர்கள் மனிதனை மட்டுமே அழித்தன .இன்றைய போர்கள் மனிதனோடு சேர்த்து இந்த உலகையே அழிக்கின்றன. அறிவியல் முன்னேற்றம் மனிதனை அமைதியை நோக்கி சிந்திக்க விடாமல் நவீன ஆயுதங்களை நோக்கி சிந்திக்க வைத்தது விசித்திரமானது .கத்தியும் வாட்களும் போய் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பேசி கொண்டன.இன்றைய நவீன ஆயுதங்கள் உலகை புல் பூண்டு கூட இல்லாமல் அழிக்கும் அளவுக்கும் வந்து விட்டன.


வளர்ந்த நாடுகள் ஆண்டுதோறும் ராணுவம் மற்றும் ஆயுதங்களுக்கு மிக பெரிய அளவில் செலவுகள் செய்கின்றன. அந்த செலவினங்களில் 2% மட்டும் தந்தால் ஏழ்மை நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் பஞ்சம் பட்டினி முதலியவை நீங்கும்.ஆனால் அவ்வாறு செய்ய அவர்கள் தயாராக இல்லை. தங்கள் படை பலத்தை பெருக்கி உலகுக்கு காட்டி பெருமையடித்து கொள்ளும் அவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு ,மனித வளம் போன்றவற்றில் பொறுப்புணர்ச்சிகளை தட்டி கழிக்கின்றன. உலக வெப்பமயமாதலை தடுக்க சில மின்னணு சாதனங்களின் உபயோகத்தை கட்டுப்படுத்த அவர்கள் விரும்பாமல் தங்கள் கழிவுகளை பிற நாடுகள் மீது திணிக்கின்றன.வளர்ந்த நாடுகளின் இந்த செய்கையால் மற்ற நாடுகளும் தங்கள் அடிப்படை பிரச்சனைகளின் தீர்க்க மறந்து ராணுவத்தை பலபடுத்த விரும்புகின்றது துரதிஷ்டவசமானது.


சில சமயங்களில் இந்த ஆயுதங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களுக்கு எதிராக பிரயோகிக்க படுகின்றன .அதிகார போதை இந்த அரசுகளின் கண்ணை கட்டி தம் சொந்த மக்கள் மீதே அடக்குமுறையை ஏவி விடுகின்றன . உலக போர்களின் போது வெற்றிக்காக மக்கள் மற்றும் சுற்றுசூழலை பற்றி சிந்திக்காமல் சில நாடுகள் இரசாயன ஆயுதங்கள் உபயோகப்படுத்தின .நேரடியாக ஆயுதத்தால் கொல்லாமல் நோய்களை பரப்பி மக்களின் உயிர்களை வருத்தி அவர்களை கொன்றுகுவித்தனர். டைனமைட் மற்றும் அணுகுண்டுகள் போர்களை அடுத்த கட்டதுக்கு எடுத்து சென்றன.



மற்ற ஆயுதங்களை மிஞ்சி எமனிடம் மொத்த குத்தகைக்கு மனித உயிர்களை எடுத்த ஏஜெண்டுகள் போல் அணு ஆயுதங்கள் திகழ்கின்றன .[அணு ஆயுதத்தை கண்டறிந்த விஞ்ஞானி அதன் விளைவுகளால் வருந்தி மன நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ]. அனுகுண்டின் கோரத்தை ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் நமக்கு காட்டுகின்றன .

வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என கூறினாலும் நாளை அவை பயன்படுத்தப்படுமாயின் பெரிய சேதம் விளையும். சிரியா மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் உலக சமுதாயத்துக்கு விரோதமாக யுரேனியத்தை செறிவூட்டி ஆயுதங்கள் தயாரித்து வருவது கவலைக்குரியது. அவர்கள் இதை தற்காப்பு என அவர்கள் கூறிகொண்டாலும் அவை பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது .ஒருவேளை இந்த ஆயுதங்கள் தீவிரவாத குழுக்களிடம் கிடைத்தால் மனித சமுதாயம் பல்வேறு தாக்குதல்களை எதிர் கொள்ளவேண்டி வரும். மின்சாரம் முதலிய தேவைகளுக்காக நாம் நாடும் அணு உலைகள் ஒரு பெரிய விபரீதத்தை தமக்குள் வைத்திருகின்றன. இயற்கை சீற்றங்கள் ,தாக்குதல்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றின் காரணமாக எழும் கதிர்வீச்சுகள் கணப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்து விடும் (செர்நோபில் அணு உலை சீற்றத்தின் விளைவுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது அல்லவா )



ஆயுதம் என்பது physical object ஆக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை .மக்களிடம் தூண்டி விடப்படும் வன்மம் எனும் ஆயுதம் பலபேரை அழித்துவிட கூடியது .மத தீவிரவாதம் எனும் ஆயுதம் தினந்தோறும் பல உயிர்களை குடித்து கொண்டுதான் இருக்கிறது. உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் ஒன்றான மனிதன் தன்னை அழித்து கொள்வதோடு தன்னை படைத்த இயற்கையையும் அழித்தது தர்மமாகுமா ??.


ஒருவரையொருவர் வீழ்த்தி வாழும் வாழ்க்கை நிச்சயம் திருப்தியை தராது. சமாதானத்துக்காக உலகில் அனுதினமும் பலர் பாடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் . மக்களிடம் சாதி ,மத இனத்தை அப்பாற்பட்ட ஒரு ஒற்றுமை வேண்டும். சாதி ,மத பெயர்களை சொல்லி கொண்டு அழிக்காமல் இறைவன் ஒருவனே (நாத்திகர்கள் இறைவன் என்பதை இயற்கை என கொள்க ) என்ற பக்குவம் அடைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

ஒவ்வொரு நாடுகளும் புதுப்புது ஆயுதங்கள் தயாரிப்பதையும் இராணுவத்தை பெருக்குவதையும் தடுக்கும் பொருட்டு உத்வேகத்துடன் செயல்பட கூடிய ஒரு சமாதான அமைப்பு தேவை. வளர்ந்த நாடுகள் மட்டும் ஆதிக்கம் செலுத்தாமல் அதன் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் .அணு ஆயுதம், இரசாயன ஆயுதம் போன்றவற்றை அந்த அமைப்பின் மேற்பார்வையில் ஒழிக்க வேண்டும். இதனால் புதிய ஆயுதங்கள் உருவாவதையும் ஏவுகணை சோதனைகளையும் தடுக்கலாம்.

மேலும் சமாதான அமைப்பு மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் சர்வாதிகார நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் . உள் நாட்டில் நடக்கும் கலகங்கள் ,இன அழிப்பு முதலிய வன்செயல்களை இந்த அமைப்பு தடுக்கும்



இதன் மூலம் உலகம் என்பது ஒரே குடியின் கீழ் ஒன்று படும்.மத வேறுபாடு அழிந்தால் நிச்சயம் ஒற்றுமை ஏற்படும் .மக்களின் அன்பு,அறன் ,சகோதரத்துவம் மேலோங்க மக்கள் அமைதியாக வாழ்வார்கள். நடக்குமா என தெரியாது நடந்தால் நன்றாக இருக்கும்

(பாதை நீளும் )

பி.கு :

இந்த பதிvu எந்த நாட்டையும் மக்களையும் உயர்வாகவோ தாழ்வாகவோ சித்தரிக்க எழுதப்படவில்லை


நன்றி வணக்கம்

அடுத்த பதிவில் சந்திப்போம்