July 02, 2017

வயநாடு - மழையோடு விளையாடிய ஒரு பயணம்

மலையாள தேசத்தின் மலையழகை காணும் ஆவலில்
ஆரம்பித்ததொரு இனிய பயணம்.

வயநாடு என்னும் வாழ்வளிக்கும்
பூமியின் வளங்கலே எங்களின் மனதில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.



லிகிடி வியூ



ஐராவத பேருந்தில் அம்பாரி செய்து
இந்தியாவின் மென்பொருள் நகரினை கடந்தோம் அந்த அதிகாலையில்.

குளு குளு பேருந்து நத்தையாய் நகர்ந்து சுல்தானின் கோட்டையாம் மைசூர் நகரினை தொட்டது.



எல்லைகள் கடந்தாலும் எம் தேசிய உணவான இட்லியை தந்து இன்பத்தில் உலாவ விட்டது அடையாறு ஆனந்த பவன் .

சாலையின் இரு மருங்கிலும் பச்சை கம்பளம் விரித்து எங்களை வரவேற்றது வயநாடு.

மேக கூட்டங்களின் எழில்மிகு காட்சி 


மலையக மண்ணை எங்கள் பாதங்கள் முத்தமிடுமுன் எங்களின் மேல் முத்துக்கள் தூவி ஒரு வரவேற்பு மாலையை இயற்றிச் சென்றது வானம்.


மலைகளின் மத்தியில் தென்பட்ட மேகங்களின் கூடல் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த காட்சியை கண்டு நாணிக்கண் புதைத்திருந்தான் கதிதவன்.

(நாணுதல் எப்படி கதிரவனுக்கு பொருந்தும் என கேள்வி எழுப்பினால் , இந்த காட்சியை கண்டு மனமகிழ்ந்து தண்மை முகத்துடன் தன்னிலை மறந்திருந்தான் கதிரவன் எனக் கொள்க)

சரிவாக ஆதம்பித்து உள்ளே செல்ல செல்ல செங்குத்தாய் நீண்டிருந்தது எடக்கல் குகை.

எடக்கல் குகையை நோக்கி சென்ற பயணத்தில் 


பிரம்மாண்ட பாறைகள் கைசேர்த்து நிற்பது போன்றதொரு தோற்றத்தை வழங்கியது.

பணடைய மக்களின் சித்திரங்களை காட்டி அந்த இடத்தை காலச்சக்கரத்தில் பின்னோக்கி கொண்டு செல்ல பெருமுயற்சி செய்து கொண்டிருந்தது.

எடக்கல் குகையின் பிரம்மாண்டத்தில் சொக்கி நின்ற தருணங்கள் 


பிரம்மாண்டத்தையும் பிரமிப்பில் ஆழ்த்திவிடும் அளவுக்கு கண்முன் நின்றது பாணாஸுரா நீர்தேக்கம்.

பிரம்மாண்டத்திற்கு பிந்தைய அழகியல் 


அதன் படிகளை எங்கள் பாதங்கள் எண்ணிய போது என்ன எண்ணியதோ ஆகாயம், எண்ணிலடங்கா துளிகளை தந்தது.

மழைய கண்டவுடன் மழலையாய் மாறி இல்லை இல்லை மழயாகவே மாறி ஆட்டம் போட்டோம்..

மழையோடு விளையாடும் பறவைகள் 

மனதின் இருக்கங்களை மடை திறந்த நீர் போல ஓட விட்டு தன்னுடைய பெயர்க்காரணத்தை மறுநிர்ணயம் செய்தது

அருவியில் குளிக்கும் ஆவலில் சென்றவர்களுக்கு

அடிக்கொருதரம் அமுதாய் பொழிந்து கொண்டிருந்தது மழை

பானாசுரா அணை-


களைத்திருந்த இரவு பொழுதுகளில் கதைகளாய் பேசி களித்திருந்த்தோம்
 ஈகைப் பெருநாளாயினும் எம் பசிக்கு ஏதெனுமொரு ருசியை புசிக்க கொடுத்து கொண்டே இருந்தது அந்த பூமி.

முத்தங்கா வனப்பகுதியின் சபாரி பயணம் 


வனவிலங்குகளின் வசிப்பிடமான முத்தங்கா சரணாலயம் சென்றோம் மறுநாள். அந்த காலை வேளையில் தூறலுடன் காட்டுக்குள் ஒரு பயணம். பாதையை தவிர எல்லா பக்கமும் பச்சை நிறம்.

வேழத்தின் கம்பீர வரவேற்பும்.

தாமரைகளின் பொது கூட்டமும் (தாமரை - தாவுகின்ற மரை - தாவுகின்ற மான் என பொருள் )



தோகை விரித்தாடும் மயில்களின் விளையாட்டும்

இந்த சபாரி என்னும் சவாரியை இன்பமாக்கின.

மூன்று தினங்களும் எங்களை நனைத்து உலர்த்தி நனைத்து மகிழ்ந்தது மழை.



இந்த பயணத்தை மறக்க முடியாததாக மழையே மாற்றிப்போனது.

பறப்பன , நடப்பன , நீந்துவன என புசித்த ஒவ்வொன்றும் நீங்காமல் நினைவுகளாய் இடம் பெறுகின்றன.


ஒவ்வொரு பயணங்களும் பல வித அனுபவங்களை தந்து கொண்டே இருக்கின்றன . இயற்கை காட்சிகளை ,வனப்புகளை தாண்டி சந்திக்கும் மனிதர்கள் , ருசிக்கும் உணவுகள் , மக்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் சந்திக்கும் அனுபவங்கள் என அனைத்தும் மனசில் அழியா படிவமாக பாதிக்கின்றன


மேலும் சில படங்கள்