November 25, 2014

இது யாருடைய வகுப்பறை

சில காலம் முன்பு ஆயிஷா .இரா.நடராசன் அவர்களின் இது யாருடைய வகுப்பறை புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.

அப்பொழுதே வாங்கியும் வந்து படிக்கவும் ஆரம்பித்து விட்டேன் ஆனால் அதை தொடர்ந்து படிக்க கூடிய சூழல் வரவில்லை.


இப்பொழுதுதான் படித்து முடித்தேன். அதை பற்றிய பேச்சுதான் இது.ஆசிரியரான ஆயிஷா.இரா .நடராசன் அவர்கள் கல்வி மற்றும் கற்றல் குறித்து ஆய்வு செய்து எழுதிய ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்நூல்1. ஆசிரியர்களே தேவைஇல்லை.... என்றார் ரூசோ !


ரூசோவின் இந்த கருத்துடன் ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரை மாணவப் பருவம் என்பதே தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புதான் என தொடர்கிறது.நம்முடைய பழமையான கல்வி முறைகளான குருகுலம் ,திண்ணைப்பள்ளி மற்றும் மதராசா பற்றி விரிவாக விளக்குகிறது . நமது பாரம்பரிய கல்வி முறைகளில் ஆசிரியர் -மாணவர் உறவு எப்படி இருந்தது என்பது பற்றியும் அலசுகிறது. மேற்கத்திய கல்வி சித்தாந்தங்கள் நம்மிடம் பரவியது பற்றியும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிகிறது .

மத அடிப்படியிலான கல்வி முறையின் வரையறைகளையும் ,அது உண்டாகிய விளைவுகளையும், கிரேக்க மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் கல்விமுறை தோன்றிய வரலாற்றையும் அடுத்தடுத்த பக்கங்கள் நிறைவு செய்கின்றன. மதம் சார்ந்த ஒரு கல்விமுறையில் மறுமலர்ச்சியை மார்டின் லூதர் கிங் மற்றும் பிரான்சிஸ் பெக்கான் ஆகியோர் கொண்டு வந்திருக்கின்றனர்

2.யாருடைய வகுப்பறை இது?

" பன்னிரண்டு வயது வரை ஒரு குழந்தை இயற்கையிலும் தன் வாழ் சூழலிலும் தனித்து விடப்பட வேண்டும் என்பதுதான் ரூசோவின் கல்விமுறை "
என ஆரம்பிக்கிறது இரண்டாவது கட்டுரை. கல்விக்கும் பள்ளிக்கும் இடையிலான வித்தியாசங்களை பேசுகிறது. கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்தும் சில கருத்துக்களை இந்த பக்கங்கள் முன் வைக்கின்றன

ஆங்கிலேயர் வருகையும் அதனால் நமது கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அறிய முடிகிறது. நமது இந்த கல்வி முறையை கொடுத்தவர் என அறியப்படும் மெக்காலே வருகையும் அவரது மெக்காலே குறிப்புகள் பற்றியும் மெக்காலேவின் கல்வி கொள்கைகள் எப்படி இருந்தன என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறார் இரா நடராசன்.

" இந்திய மொழிகள் அனைத்தையும் தூக்கியெறியும் மெக்காலே அத்தகைய மொழிகளில் புத்தகம் என்று ஒன்று அச்சாகுமானால் அது பைபிளாக இருக்கும் என பிடிவாதமாக இருந்தார் "


நமது கல்விமுறை ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டாலும் இன்று நமக்கும் இங்கிலாந்தின் கல்விமுறைக்கும் உள்ள வேறுபாட்டுக்கு காரணமாக இருப்பவர் சார்லஸ் வுட் ஆவார்

. " நமக்கு தேவை சிந்திக்க தெரிந்த மேதைகள் அல்ல .நம் அறிவை தாண்டாமல் அடி பணிந்து உழைக்கும் சேவகர்கள் "
என்ற 'உயரிய' நோக்கத்தோடு கல்வி சீர்திருத்தங்களை செய்தவர் வுட்.


இந்த பரீட்சையை, கண்டுபிடிச்சது யாரு என நம்மை பலமுறை புலம்ப வைத்த பெருமை பெற்ற ஹன்டர் கமிசனை பற்றி அறிய முடிந்தது . காந்தியடிகள் முன்வைத்த 'கல்விக்கான இந்திய வடிவம் ' எனும் கொள்கைகள் பற்றியும் அது புறந்தள்ளப்பட்டது பற்றியும் அறிய முடிகிறது.


கோத்தாரி கமிசன் வகுப்பறைகளை தரம் பிரித்தது பற்றி அறிந்து கொள்ள முடிவதால் இந்த கமிசன் செயல்பாடுகள் ஏற்படுத்திய பின்னடைவுகள் எளிதாக நம்மால் உணர முடிகிறது3.அறிவியல் தெரியும்...... ராமலிங்கத்தை தெரியுமா ? :
இந்த பகுதி கல்வி உளவியல் பற்றி பேசுகிறது ? மாணவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தகூடிய காரணிகள் பற்றி விரிவாக அலசுகிறது . சிக்மன் பிராய்டு முதலிய உளவியல் வல்லுனர்களின் கல்வி சார்ந்த உளவியல் கருதுகோள்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. குழந்தைப்பருவ ,பிள்ளைப்பருவ ,குமாரப்பருவதில் குழந்தைகள் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை உளவியல் ரீதியில் விளக்கியுள்ளார் ஆசிரியர் . மேலும் வகுப்பறை மற்றும் அதன் சூழல் பற்றிய கருத்துக்கள் இங்கு முன் வைக்கப்படுகின்றன


4.வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது.....
நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் கல்வி என்பது சலுகை அல்ல உரிமை என இந்த பகுதி ஆரம்பிக்கிறது . கற்றல் மற்றும் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் குறித்த செய்திகள் இங்கு நிறைகின்றன. கற்றலின் இரு கோட்பாடுகளான தூண்டல் (stimulus) துலங்கல் (response) மற்றும் அறிவுப் புலக் கோட்பாடு (Field theories) பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது .

நமது வகுப்பறையில் அடிப்படியாக விளங்கும் விதிகளையும் அந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்ட விதம் பற்றியும் இங்கு அறிகிறோம் அந்த விதிகளின் விளைவை இந்த கட்டுரையின் தலைப்பாக வைத்துவிட்டார் போலும்


5.உள்ளேன் டீச்சர்
தனது பிள்ளைகளின் கல்வி பற்றிய பெற்றோரின் அணுகுமறை எப்படி இருக்கிறது எனவும் இன்றைய நவீனமயமாதல், குழந்தைகளை பெற்றோர் எப்படி பார்கின்றனர் எனவும் பேசுகிறது இந்த கட்டுரை .

உலகளாவிய குழந்தைகள் உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அதே போல் நம் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்விச் சட்டம் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் இரா .நடராசன் அவர்கள் .


"நமது கட்டாய இலவச கல்விச் சட்டம் ஒரு குழந்தைக்கு ஆறு வயது முதல் பதினான்கு வயது வரை மட்டுமே பொருந்தும். இங்கு ஒருவர் 14 வயதிலேயே பெரியவர் ஆகிவிடுகிறார் "

தேசிய கலை திட்ட வடிவமைப்பு மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை பற்றியும் அடுத்தடுத்த பக்கங்கள் விளக்குகின்றன .


நமது கல்வி சீரமைப்பில் முதல் முறையாக யஷ்பால் குழு மட்டும்தான் கல்வியை குழந்தை பருவ அடிப்படைகளுக்கு ஏற்ற கல்வி என்ற பார்வையில் அணுகி இருந்திருக்கிறது (கல்விக்காக குழந்தைகள் என்றில்லாமல் குழந்தைகளுக்காக கல்வி என்ற ரீதியில் ) மேலும் இன்றைய செயல்வழி கற்றலை நமக்கு இந்த யஷ்பால் கமிட்டிதான் வழங்கியுள்ளதாம்
6.அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை :

ஆசிரியரின் செயல்திறனை எப்படி அளப்பது என்ற வினாவுடன் இப்பகுதி தொடங்குகிறது ஆசிரியர்களின் சிறப்பியல்புகள் பற்றியும் விளக்கம் தரப்பட்டுள்ளது . ஒரு பள்ளியின் செயல்திறன் மற்றும் அதனை தீர்மானிக்கும் காரணிகள் பற்றிய அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது

அடுத்த பகுதி மிக விறுவிறுப்பானது . உலக நாடுகளின் கல்வி முறை பற்றியது. அமெரிக்க கல்வி முறையில் இருந்த ஆரம்பிக்கும் இது அதன் குறைபாடுகள் குறித்து பேசுகிறது (இதை படித்தவுடன் நம்ம ஊரு பள்ளிக்கூடமே தேவலை போல இருந்தது ). உலகின் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு என அழைக்கப்படும் பின்லாந்து கல்வி முறை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது .

பிறகு தொழில் மற்றும் சேவை சார்ந்த கல்வியை கொண்ட கியூபா கல்வி முறை பற்றி அறிய முடிகிறது . ஆனால் கியூபாவிடம் இருந்து ஒரு நல்ல விசயத்தை கற்க நம்முடைய மேன்மை பொருந்திய சமூகம் இடம் தராதே ! பிறகு ஜப்பான் ,டென்மார்க் மற்றும் சிங்கப்பூரில் கல்வி முறை கண்ட மாற்றங்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

சர்வதேச மாணவர் தர ஆய்வு நிகழ்வில் பள்ளியின் செயல்திறன் சராசரி(Efficiency) கணக்கிடபடுகிறது. இதில் பின்லாந்து 0.86 to 0.98 பெற்று முதலிடத்தில் உள்ளது தமிழகத்தின் செயல்திறன் சராசரி 0.02 - 0.96 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது . சிறந்த கல்விமுறை கொண்ட நாடுகளின் தரவரிசையில் நாம் 96 வது இடத்திலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ள பள்ளி எனும் ஆய்வில் 116வது இடத்திலும் இருக்கிறோம்

7. வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெரிந்தவர்கள்......
இந்த பகுதி நமது கல்வி முறை விவசாயத்தை சொல்லி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறது. பள்ளிகளில் குழந்தைகளின் விதிமீறல்கள் ,அவற்றின் காரணங்கள் மற்றும் அதற்கான அணுகுமுறை பற்றி இந்த பகுதி விளக்குகிறது நடத்தையியல் சார்ந்த ஆட்லரின் பார்வை மற்றும் ஆன்னா பிராய்ட்டின் நடத்தை வேறுபாடுகள் குறித்த சித்தாந்தங்களை அறிய முடிகிறது.

ஆசிரியர்- மாணவர் உறவுமுறை குறித்த உலக கல்வியாளர்கள் பலரின் கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன . பிறகு ஒரு ஆசிரியரின் பணிகள் மற்றும் கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன
எனது பார்வை
:


என்னை பொருத்தமட்டில் எனது ஆசிரிய பெருமக்களை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்த மிக பெரிய பரிசு புத்தகமாக இதை கருதுகிறேன். (இதுவரை ஆசிரியப் பெருமக்களுக்கு என்ன நினைவு பரிசு வழங்க வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது )நம்முடைய இன்றைய செயல்வழிகற்றல் ஆரோக்கியமான மாற்றங்களை செய்திருக்கிறது . இது கற்றல் செயல்பாட்டில் ஒரு விருப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இப்பொழுது இங்கு பாட திட்டங்களைவிட வகுப்பறைகள்தான் மாற்றம் பெற வேண்டும் . வகுப்பறைகள் மாற்றம் பெற வேண்டுமென்றால் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வரவேண்டும் என்பது அர்த்தமல்ல . வகுப்பறை சூழல்தான் மாற்றம் அடைய வேண்டும் . இந்த நூலில் வரும் ஜனநாயக வகுப்பறை மலர வேண்டும்.


இந்த நூலை நாம் ஏன் படிக்க வேண்டும் ? யார் யார் படிக்க வேண்டும் ?
நாம் இன்று படித்தவர்களாக இயங்கி கொண்டிருக்கிறோம் . நாம் கற்ற கல்வி உருவான விதம் மற்றும் அது கண்ட மாற்றங்கள் பற்றி நாம் அறிதல் அவசியம் . மேலும் உலக அரங்கில் உள்ள கல்விமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் ..

யாரெல்லாம் படிக்க வேண்டும்?

குழந்தைகள் சார்ந்த சட்டங்கள் மற்றும் பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ள மாணவர்கள் இதை படிக்க வேண்டும் . அது கொஞ்சம் கடினம் (வாக்கிய மற்றும் வார்த்தை அமைப்புகள் கொஞ்சம் கடினம் என்பதால் மாணவர்கள் படிப்பது கடினம் )

ஒரு பெற்றோராக குழந்தையின் படிப்பை எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். ஒரு குழந்தையின் குடும்ப மன நிலை அதன் கற்றல் செயல்பாடுகளில் தாக்கங்கள் ஏற்படுத்துவதால் பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்

இன்றைய சூழலில் ஒரு ஆசிரியரின் Role பல்வேறு நிலைகளை கொண்டுள்ளதால் ஆசிரியர்களும் படிக்க வேண்டும். ஆசிரியர் -மாணவர் உறவுமுறைகள் குறித்து பல தகவல்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்தரும்

சாதாரண குடிமக்களாக நாமும் நம்முடைய கல்வி முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தானே அதனால் நாம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்

பி.கு : அனைவரும் படித்து பாருங்கள்