April 29, 2018

இன்னிசை மட்டும் இல்லையென்றால் - ஸ்வர்ணலதா பிறந்தநாள் பதிவு


முகப்புத்தகத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் அந்த பதிவு கண்ணில் பட்டது . ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் சிறப்பு பதிவாக ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார் . 

ஸ்வர்ணலதா குரலின் ஒரு அசுர ரசிகனாக கல்லூரி காலத்திலிருந்து இருந்து வந்த நமக்கு இது கூட தெரியவில்லையே என நினைத்துக்கொண்டு நினைவலைகளில் மூழ்கிய போது உதயமான பதிவு இது தனிமையான வேளைகளில் 


ஸ்வர்ணலதா - அது ஒரு மாயாஜால குரல் . 

காதில் ஹெட்போன் அணிந்துகொண்டு கண்களை மூடி இந்த பாடலை கேட்க ஆரம்பித்தவுடன் அப்படியே மனம் லேசாகி காற்று வெளியில் மிதக்க ஆரம்பித்து விடும் . 

அந்த இசையும் இசையை மேவும் குரலும் உங்களை உருகி உருகி ரசித்து கேட்க வைக்கிற ஆற்றல் கொண்டது. 

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
என்று முடியும் அந்த பாடல் அலைபாயுதே திரைப்படத்தில் வரும் எவனோ ஒருவன் வாசிக்கிறான் . 

மெல்லிய இழையோடு வரும் அந்த இசையைவிட அந்த பாடலின் உயிரோட்டம் ஸ்வர்ணலதாவின் குரல் .

தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடகர்களின் மத்தியில் முழுக்க முழுக்க தனித்தன்மை வாய்ந்த குரல் அது . நெடுந்தூரத்தில் ஒலிக்கும் பாடலில் அவரின் குரல் இருந்தால் காதில் விழுந்த அடுத்த கணமே மனம் கண்டறிந்து குதூகலிக்க தொடங்கிவிடும் 

மகிழ்ச்சி , காதல் , காமம் , ஆசை ,ஏக்கம் , சோகம் , பிரிவு , வலி என அனைத்து உணர்வுகளையும் அவரின் குரலில் கேட்டு ரசிப்பது அலாதியானது 

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை 

இந்த வரிகளுக்கு சொந்தமான பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச . இன்றும் பல பண்பலைகளில் மாலைப் பொழுதுகளில் நீங்கள் இந்த பாடலை கேட்கலாம் 

ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல் போறாளே பொன்னுத்தாயி. 

தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி

சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

ரகுமான் அந்த பாடலின் ஜீவன் இசை அல்ல வைரமுத்துவின் பாடல்வரிகளும் ஸ்வர்ணலதாவின் குரல்தான் என்பதை நன்கு உணர்ந்து மெல்லிசையாக அமைத்திருப்பார் 

ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு

என்னுள்ளே என்னுள்ளே என மருகும் இந்த பாடலில் இளையராஜாவின் இசையோடு அவரின் தேமதுர குரல் போட்டி போடுவதை நீங்கள் உணரலாம் 

தேம்பி நிற்கும் சோகத்தை கானத்தில் வடித்திருக்கும் மற்றுமொரு பாடல் நீ எங்கே என் அன்பே 

விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
 
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக 

கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை 

என பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலில் வரும் இரு வரிகளை அவர் குரலில் கேட்பது அந்த பாடலின் சுவையை முழுமையாக உணர வைக்க உதவும் 

சோகம் மட்டுமா ஏன் காதல் பாடல்கள் இல்லையா ?

இருக்கின்றதே ஏராளம் 


வெக்கப் படத்தில் கவளிக் கத்த
வளைவுப் பக்கம் கருடன் சுத்த
தெருவோரம் நிறைக்குடம் பார்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

உளுந்து விதைக்கியிலே என ஆரமிக்கும் பாடலும்

 இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ 

என நாநெகிழி போல் வரும் காதலென்னும் தேர்வெழுதி பாடலாகட்டும் 

அந்தியில வானம் என ஆரம்பிக்கும் அந்த பாடலும்  

கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து
காணாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்

 கொட்டுகிற அருவியும்  மெட்டுக்கட்டும் குருவியும்
அடடடா அதிசயம்
ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
நடந்திடும் நதியிலே

எனும் போவோமா ஊர்கோலமா பாடலாகட்டும் 

பா.விஜய் வரிகளில் வரும் துளி துளியாய் பாடல் 

மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட

என பல பாடல்களை சொல்லலாம் 

மேலும் சில பாடல்கள் 

சொல்லாயோ சோலைக்கிளி
குளிருது குளிருது - தாஜ்மஹால்
என்னை தொட்டு அள்ளிக்கொண்டு
நான் ஏரிக்கரை மேல இருந்து 
காதலை தாண்டி காமத்தை தூண்டும் பாடல்களில் முக்கியயமானது இரு பாடல்கள் 

மாசி மாசம் ஆளான பொண்ணு 

ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க

மற்றும் ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு பாடல் 

இவைதான் நினைவுக்கு உடனே வந்த பாடல்கள் . 

நெடுந்தூர பேருந்து பயணங்கள், உறக்கமில்லா நள்ளிரவுகள் , தனித்திருக்கும் பொழுதுகள் ,வெறுமையை உணரும் தருணங்கள் என பல சமயங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறது அவரது குரல் 

புற உலக சுக துக்கங்கள் அனைத்தையும் மறந்து யாருமில்லா ஒரு தனி வெளியில் நெடுநேரம் சஞ்சரிக்க வைப்பவை ஸ்வர்ணலதாவின் பாடல்கள். 

மிக சில காலமே வாழ்ந்து இருந்தாலும் அவருடைய பங்களிப்பு இசைக்கும் தமிழ் சினிமாவுக்கும்  முக்கியமானது . 

அவரின் தமிழார்வமும் உச்சரிப்பும் மிகவும் சிறப்பானது . சில பேட்டிகளில் அவரின் எளிமையான தமிழ் நடை என்னை சிலாகிக்க வைத்துள்ளது 

இறுதியில் இந்த பதிவை இந்த வரிகளை கொண்டு நிறைவு செய்வது சால பொருந்தும் என நினைக்கிறேன் 


கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்