October 05, 2013

செம்மீன் -புத்தகம் பற்றிய பேச்சு

செம்மீன் -புத்தகம் பற்றிய பேச்சு 


புகழ் பெற்ற மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கரன்பிள்ளை அவர்கள் எழுதி சுந்தர ராமசாமி அவர்கள் மொழிபெயர்த்த செம்மீன் என்ற நாவல் படித்தேன். மீனவர் சமுதாயத்தில் இரு வெவ்வேறு மதங்களை சார்ந்த இரு உள்ளங்கள் காதலில் கசிந்துருகி சமுதாய கட்டுப்பாடுகளுக்கு இரையாகி வீழ்வது தான் கதை

செம்பன்குஞ்சு - சக்கி தம்பதிகளின் மூத்த மகளான கறுத்தம்மா ,தன் பிள்ளை பிராய நண்பனான பரீக்குட்டி என்ற முகம்மதிய வியாபாரியை விரும்புகிறாள். கறுத்தம்மாவின் பெற்றோர் அவளை கண்டிக்கிறார்கள். செம்பன்குஞ்சு தன் நெடுநாளைய ஆசையான சொந்த தோணி வாங்க வேண்டுமென்பதை நிறைவேற்ற பரீக்குட்டி பணம் தருகிறான்.செம்பன்குஞ்சு தோணி வாங்கி அரையனாகிறான். பணம் கொழிக்க அவன் போக்கு அடியோடு மாறிவிடுகிறது .மனிதர்களை விட பணம் முக்கியம் என என்னுமவன் பரீக்குட்டிக்கு பணத்தை திருப்பி தராததால் அவன் நஷ்டமடைகிறான். கறுத்தம்மா பற்றி அண்டை அயலார் தப்பாக பேச பக்கத்துக்கு துறையை சார்ந்த பழனிக்கு மனம் முடிக்க எண்ணுகிறான். திருமணத்தில் நடைபெறும் குழப்பத்தில் சக்கி மூர்ச்சையாக தன் தந்தை சொல் கேளாமல் தன் கணவனோடு புக்ககம் செல்கிறாள் கறுத்தம்மா. இதனால் அவளை அடியோடு வெறுக்கிறான் செம்பன்குஞ்சு.

தன் காதலை தியாகம் செய்து விட்டு கணவனுடன் புது இல்லறத்தை தொடங்குகிறாள். முதலில் அண்டை அயலாரின் பேச்சை கேட்காமல் தன்னை நம்பும் தன் கணவன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தேகப்பட கறுத்தம்மா துன்பக்கடலில் மூழ்குகிறாள்.

தன் காதலை கைவிடவும் முடியாமல் தன் தூய்மையை தன் கணவனுக்கு எப்படி நிரூபிப்பது என தெரியாமல் தள்ளாடும் அவளின் முடிவு  என்ன ? மனைவியின் மரணத்துக்கு பின் வீழ்ந்து கொண்டிருக்கும் செம்பன்குஞ்சுவின் நிலை என்ன ? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லி முடிகிறது செம்மீன் 


கடலாட செல்லும் மரக்கானின் (மீனவன் ) உயிர் கரையில் ஒழுக்கத்தோடு வாழும் மனைவியினால் தான் நிர்ணயிக்க படுகிறது எனும் நம்பிக்கை ஏற்படுத்தும் விளைவே கதையை நகர்த்துகிறது 


தன் காதலை தியாகம் செய்யும்போதும் தன் கணவனிடம் தன் நிலையை விளக்கும் போதும் கறுத்தம்மாவின் நிலை பரிதாப படவைக்கிறது. தன் காதலால் நஷ்டப்பட்டு கறுதம்மாவை மறக்க முடியாமல் நடை பிணமாக வாழும் மனிதனாக பரீக்குட்டி நம்மை நெகிழ வைக்கிறார் 


பணம் ஒரு மனிதனை எவ்வளவு பாடுபடுத்தும் என்பதை செம்பன்குஞ்சு மூலமாகவும் சந்தேகம் எனும் விஷம் ஏற்படுத்தும் விளைவை பழனி மூலமாகவும் சொல்லி இருக்கிறார் தகழி. ஆனால் ஊராரின் பேச்சை நம்பாமல் தன் மனைவியை தீர்க்கமாக நம்பும் பழனி (பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தேகிக்கிறார் ) வியக்க வைக்கும் பாத்திரம்.


திருமணத்துக்கு முன் அம்பலப்படுத்தப்படும் பெண்ணின் காதல் அந்தரங்கம் அவள் திருமண வாழ்வை எப்படி பாதிக்கும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள் .

மேலும் தனி நபர் வாழ்வில் சமுதாயம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் உணர முடிந்தது 

மீன்கள் அதிகம்  அகப்படும் காலங்களில் சேர்த்து வைக்காமல் வாழ்வதும் அகப்படாத காலங்களில் பட்டினி கிடப்பது என்ற மீனவர்களின் வாழ்க்கை வியக்க வைக்கிறது 


அவர்களின் பழக்கவழக்கங்கள் ,நம்பிக்கைகள் ,கடலில் சந்திக்கும்  பிரச்சனைகள் என கதைக்குள்ளேயே பயணப்பட்ட அனுபவத்தை எனக்கு இந்த நூல் வழங்கியது 


பி.கு :

சமுதாய கட்டுப்பாடுகளினால் நாட்டில் நடக்கும் இன்னல்களை சுட்டி காட்டி சிவசங்கரன் பிள்ளை எழுதியிருந்த இந்த நாவல் மிக பெரிய சர்ச்சையை சம்பாதித்திருக்கிறது . ஒரு படைப்பாளியாகவும் சமுதாய சீர்திருத்தவாதியாகவும் வாழ்த்திருக்கிறார் அவர்.கிராமங்களில் வாழ்ந்து கேட்ட குடும்பம் என்று சொல்வார்கள் . நம் கண்ணெதிரிலேயே நமக்கு வேண்டப்பட்ட நன்றாக வாழ்ந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவதை பார்க்கும் பொது ஏற்படும் வருத்தம் எனக்கு செம்பன்குஞ்சுவின் குடும்பம் மீது ஏற்பட்டது 



இந்த நாவல் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய நிலை அன்றைய கட்டுப்பாடுகளில் இருந்து பெரிய அளவில் முன்னேற்றம் அடைய வில்லை என்பது என் கருத்து. இன்னும் எவ்வளவு காலம்தான் இவற்றை எல்லாம் சகிக்க வேண்டுமோ?



மிக நன்றான ஒரு அனுபவம் ஏற்பட்டது நீங்களும் படித்து பாருங்கள் 



தற்போது சாண்டில்யனின் மன்னன் மகள் படித்து கொண்டிருக்கிறேன். விரைவில் அதை பற்றி பேசுவோம் 



செம்மீன் 
எழுதியவர் : தகழி சிவசங்கரன் பிள்ளை 
மொழிபெயர்ப்பு : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : சாகித்ய அகாடமி பதிப்பகம் 



நன்றி வணக்கம் 


வாழ்க தமிழ் !!!!!!!  வெல்க தமிழ் !!!!!!!!

   

1 comment: