August 16, 2016

புதுக்கோட்டை சுற்றுப்பயணம்

வாழை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்காவது சுற்றுலா செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் பேச்சாகவே இருந்துவந்தது . ஒருவழியாக நண்பர் மணிவண்ணன் அதற்கு செயல் வடிவம் கொடுக்க முன் வந்தார் . தன் சொந்த  ஊரான புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களை சுற்றி பார்க்கலாம் என்ற யோசனையை அனைவரும் ஏற்றோம்

சுற்றுலா செல்ல ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளை முடிவு செய்திருந்தோம் . நீளமான வாரயிறுதி என்பதால் கடும் போக்குவரத்து நெரிசலை தாண்டி நார்த்தாமலை சென்று சேர்ந்தோம் . அதற்குள் பெங்களுருவில் இருந்து இதர நண்பர்கள் வந்து பயணத்தை தொடங்க காத்திருந்தனர்



சுற்றிலும் அழகிய பாறைகளும் சிறு சிறு நீராதாரங்களும் நிரம்பிய நார்த்தாமலை எங்களை வரவேற்று அணைத்து கொண்டது . பாசி படர்ந்த அழகிய குட்டைகளில்  அகமகிழ்ந்து
நீராடி ஓடோடி விளையாடினோம் . காலை சிற்றுண்டிக்கு பிறகு நார்த்தாமலை எற ஆரம்பித்தோம் . கண்ணுக்கெட்டிய தூரத்தில் புறப்பட்ட மலை நடக்க நடக்க தூரம் போய்க்கொண்டிருந்தது .


நார்த்தாமலையில் அமைந்திருந்த குடைவரை கோவில் எங்களை பெருமளவில் ஈர்த்தது . பல்லவர்கள் ,பாண்டியர்கள் , சோழர்கள் , முத்தரையர்கள் மற்றும் நாயக்கர்கள் ஆண்ட பகுதியென மண்ணின் மைந்தர் மணி எங்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டே வந்தார் .  சோழர் கால கல்வெட்டுகள் சிலவற்றையும் பார்க்க முடிந்தது . பதினெண்பூமி விண்ணகரம் மற்றும் திருமேற்கோவில் என அவ்விடம் அழைக்கப்படுவதாக அறிய முடிந்தது .




அடுத்ததாக நான் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருந்த சித்தன்னவாசல் நோக்கி புறப்பட்டோம் . அழகிய சித்தன்னவாசல் ஓவியங்கள் குறித்து எங்களுக்கு வழிகாட்டியாய் அங்கிருந்த தொல்பொருள் துறை ஊழியர் உதவினார் .

அழகிய வண்ண சித்திரங்களில் இதயத்தை தொலைத்துவிட்டு அவரின் நேர்த்தியான விவரிப்பை கேட்டு  மகிழ்ந்தோம் . அன்னப்பறவைகள் ,தர்மரை மலரின் பருவ நிலைகள் , அழகிய குளம் ஒன்றில் பூவினங்கள் புள்ளினங்கள் மாந்தர்கள் என பல்லுயிர் ஓம்பும் ஓவியம் என சிலாகித்து மகிழ்ந்தோம் .. இந்த ஓவியங்களில் குழந்தை பருவம் , இல்லறம் , துறவறம் மற்றும் சமாதி ஆகிய நிலைகள் மறை பொருளாக உணர்த்தப்படுவதாக ஐயா கூறினார் .

அங்கே ஒரு அறையில் எழுப்பப்பட்ட ஒலி கற்களால் கிரகித்து கொள்ளப்பட்டு மற்றும் எதிரொலிக்கப்படும் விந்தையை கண்டு சொல்லற்று நின்றோம் . 1.5 Km நீளமுள்ள பாறையில் அந்த இடத்தை மட்டும் கண்டுபிடித்து உருவாக்கிய நுட்பத்தை எண்ணி சிலாகித்தோம்.

அடுத்து சமணர் படுகைகள் உள்ள இடத்துக்கு கொஞ்சம் மலையேற வேண்டி இருந்தது நண்பகல் வெயிலில் . அங்கொன்றும் இங்கொன்றுமாக 17 படுகைகள் இருந்தன . சமணர்கள் அங்கு வாழ்ந்ததற்கு அவை ஆதாரம் . மக்கள் அங்கு சென்றுள்ளனர்  என்பதற்கு பல கிறுக்கல்களும் இதயத்தை துளைக்கும் அம்புகளும் ஆதாரங்களாக விளங்கின . பாறையின் நிழலில் படுகைகளை பக்கத்தில் கண்களை மூடி கிடந்த தருணங்கள் இனிமையானவை .


குடுமியான் மலை செல்லும் வழியில் சிறிய சாரல் மழை பொழிந்து எங்கள் பயணத்தை வளப்படுத்தியது . குடுமியான்மலையில்  நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அர்த்த மண்டபத்தில் பல்வேறு வகையான சிற்பங்களை பார்க்க முடிந்தது . அங்கு எங்களை கட்டி போட்டது இரண்டு விடயங்கள் தான் . முதலாவது தேனிசை கல்வெட்டு . தேனிசை என்றதும் ஆச்சர்யபட வேண்டாம் .அது இசை குறிப்புகள் அடங்கியுள்ள கல்வெட்டுதான் ஆனால் அதை எப்பொழுதும் பாதுகாப்பது தேனீக்கள் என்பதனால் அந்த பெயர் . மனிதன் பாதுகாத்திருந்தால் கூட சேதம் ஏற்பட்டிருக்கலாம் . இரண்டு முதல் ஏழு தேன்கூடுகள் அமைந்து எப்பொழுதும் ஒரு முரணாகவே அமைந்திருக்குமாம் .

அடுத்து  நடு மலைப்பகுதியில் காணப்பட்ட நாயன்மார்களின் சிற்பங்கள் தான் . இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா ? . மலையின் நடுப்பகுதி யாருமே செல்ல இயலாவண்ணம் செங்குத்தாக அமைந்திருந்தது அதில் எவ்வாறு இத்தகைய சிற்பங்களை அமைத்தார்கள் என தெரியவில்லை

இறுதியாக கொடும்பாளூர் சென்றோம் .பூதி விக்கிரமகேசரி கட்டிய ஒரு கற்றளியை கண்டோம் . அகழ்வாராய்ச்சியின் போது கண்டறியப்பட்ட அந்த இடத்தில ஒரு நிலைக்கிணறு இருந்தது . மேலும் மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகிய சேதம் அடைந்திருந்தன.

இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்த இனிய நாள் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதை நண்பர் மணி வீட்டுக்கு சென்றவுடன் உணர முடிந்தது . தங்கைகள் , தம்பிகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கூடி எங்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தது மறக்க முடியாத அனுபவம் . பிறகு மொட்டைமாடியில் அனைவரும் அமர்ந்து நிலாச்சோறு உண்டோம் . பெரிய வாழை இலையில் ஆடும் மீனும் விளையாட அதனோடு சேர்ந்து நாங்கள் உறவாடினோம் .


தெவிட்ட தெவிட்ட இன்பம் கொடுத்த முதல் நாள் இனிதே நிறைவு பெற்றது