August 27, 2018

ஒரு வீடும் சில ஞாபகங்களும்



வெகு காலத்துக்கு பிறகு போன வாரம் என்னோட அப்பிச்சி (அம்மாவின் தகப்பனார் ) வீட்டுக்கு போயிருந்தேன். அவரும் பெரியப்பாவும்  இறந்த பிறகு,  நான் எங்க வீட்டு செல்லும் போதெல்லாம் பெரியம்மா அங்கு  வந்துவிடுவதால் அந்த ஊருக்கு செல்வதற்கான அவசியம் இல்லாமல் போனது

ஓலப்பாளையம் என்ற ஊரில் இருந்து ஒரு காத தூரம் நடந்து செல்ல வேண்டும் அந்த ஊருக்கு . கண்ணபுரம் எனப்படும் அந்த கிராமத்தின் மாரியம்மன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும் , எப்பொழும் என்னை வரவேற்கும் ஈசுவரன் கோவில் தேரை இன்று காணவில்லை . ஆனால் கோவில் புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகம் முடித்து வரவேற்றது .
வீட்டுக்கு போனபிறகுதான்,  தேர் பாதுகாப்பாக இருக்க பெரிய ஷெட்டில் வைத்து பூட்டி வைத்து விடுவார்கள் இப்போதெல்லாம் என்பது தெரிந்தது . ஒருவேளை கோவில் சிலைகளை போல் அதையும் யாரேனும் திருடிவிடுவார்கள் என்ற பயமாக கூட இருக்கலாம் . ஆமா சத்தியுள்ள சாமி தேர் அல்லவா

வீட்டின் முன் வாசலில் இருந்து 


தேரோட்டம் பற்றிய இனிய நிகழ்வுகள் எண்ண அலைகளில் வந்து மிதக்க ஆரம்பித்தன . அலங்கரிப்பட்ட தேர், இரவில் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் . அதை வடம் பிடித்து நிலை சேர்க்க ஒரு பெரிய கும்பலே படாதபாடு பட்டு இழுக்கும் . ஓரிருவர் தேரின் ஓட்டத்தை கட்டுப்படுத்த மரக்கட்டையை தேர் சக்கரத்தின் அடியில் அவ்வப்போது வைத்து அதை கட்டுப்படுத்தி கொண்டே இருப்பார்



தேர்திருவிழா கடைகள் , மாவிளக்கு கொண்டு போறது , மாரியம்மன் கோயில் சாட்டு பொங்கல் , மாட்டு சந்தை எல்லாமே விரிந்தது . ஆனா எல்லாமே அங்கே சிறு சிறு மாற்றங்களோடு இன்னும் இருந்துகிட்டு தான் இருக்கு . நாம தான போறதில்லை. இதுல என்ன பீலிங்கு என மனசாட்சி மானாவாரியாக திட்ட மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்

அடுத்து காளை மாட்டு சாமி கோவில் . இறந்த கோவில் காளையின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை மட்டும்தான் இருக்கும்  வேறு கோயிலோ கோபுரமோ இல்லை . ஆனா நாங்க சொல்லுறது காளை மாட்டு சாமி கோவில் என்றே . தீவிர முருக பக்தரான எங்க அப்பிச்சி சொல்லிப்போன கதைகள் எல்லாம் நினைவுகளில் வந்துமோத பொடி நடை நடந்து ஊரு வந்து சேர்ந்தேன்


ஊரில் என்னை எப்போதுமே வரவேற்பது எங்க செல்வி பெரியம்மா வூடு . செல்வி பெரியம்மா இறந்து கிட்டத்தட்ட 15  ஆண்டுகள் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன் . அந்த கலையான மோகம் , அம்பு இப்பதான் வாரீங்களா  (அன்பரசு  என்பது எனது இன்னொரு பெயர் )
 என எங்களை அந்த ஊரில் எப்பொழுதும் வரவேற்கும் குரல் செல்வி பெரியம்மாவுடையது .அவர் தவறிய பிறகு வெகு காலம் நான் அந்த வழியை தவிர்த்து வந்தேன் . இன்று வந்த போது அங்கு ஒரு கணம் தெருவில் நின்று வீட்டை உத்து பார்த்தேன் .  அந்த வீடும் பலப்பல மாற்றங்களையம் மனிதர்களையும்  கண்டு விட்டது . இருந்தும் எனக்கு அது அதே செல்வி பெரியம்மா வீடுதான்.



எங்க அப்பிச்சி வீட்டை அடைவதற்குள்ளே ஊரில் பல மாற்றங்கள் . சிதைந்து போய் கிடந்த ஊரின் பெரிய மனிதர் அரண்மனை (அப்படிசொல்றதுதான் வழக்கம்) , இல்லாம போன பெரிய மதில் சுவர் என நினைவுகளின் பிம்பங்கள் எல்லாம் வெறும் எச்சங்களாக மட்டுமே விரவி கிடந்தன . அதுசரி இப்பெல்லாம் ஒரு சராசரி கிராமத்தின் அடையாளம் என்பதே குட்டிசுவர்கள்தான்னு ஆகிப்போச்சு . இது மட்டும் என்ன விதிவிலக்காவா இருக்கப்போவுதுன்னு நானே எனக்கு பதில் சொல்லிக்கிட்டேன்

அப்பிச்சி வீடு .முழு பரீட்சை லீவில் எங்கள் கோடைவாசஸ்தலம் .  ஊருக்கு ஆறழகுனு சொல்லுவாங்க அது மாதிரி ஊட்டுக்கு முக்கியம் அதன் அம்சமாம் . அம்சம் அமைப்புங்கிறது  இங்கே அதன் கட்டிடக்கலைய குறிக்கிறதுதான் நினைக்கேன் . எங்க பகுதிகளில் அந்த அமைப்புள்ள வீடுகளில் முக்கியமானது தொட்டி கட்டு வீடுன்னு  சொல்லப்படற  எங்க வூட்டை போன்ற வூடுகள்.  இரு அறைகள் இணையாக அதற்கு எதிராக இரு இணை அறைகள் நடுவில் பொது வாசல் . இரு வாயிற்கதவுகள் என இருக்கும் . நான்கு வூட்டு சனமும் ஒண்ணா உக்காந்து பேசி பழகிக்க வசதியா இந்த நாடு வாசல் இருக்கும் .

வீட்டின் பின்புறம் இருக்கும் வாழை மரம் 


எங்க வீட்ல மூன்று குடும்பங்கள் இருந்தாங்க .

ஒண்ணு எங்க அப்பிச்சி வீடு . அப்பிச்சி , பெரியப்பா , பெரியம்மா அங்க இருந்தாங்க . தாய் மாமா என்னோட சிறுவயதிலேயே தவறிடடார் . அதில்லாம ஒரு எருமை ரொம்ப காலம் எங்களோட இருந்துச்சு. வூட்டுக்கு அப்பாலே காடு . காடுன்னா சும்மா தரிசு நிலந்தான்  மழையை நம்பி பயிர் மட்டுமே போடுவோம் . வேற எதுவும் பெருசா விளைவிக்க முடியாது. அதுவும் சொந்த நிலம் அல்ல . கந்தாயத்துக்கு தான் ஓட்டிக்கிட்டு இருந்தோம் .
சொந்த நிலம் மொதல்ல இருந்துச்சு . இடையில் ஏற்பட்ட கடனுக்காக அதை வித்துட்டோம் . வாய்க்கா பாசனமுள்ள காடு அது ஓரு பெரிய எலுமிச்சை மரம் இருக்கும் . அவ்ளோதான் நினைப்புல இருக்கு . ரொம்ப வருஷம் ஆகிப்போச்சு

அடுத்து வீட்டில் தவில் தாத்தா குடும்பம்  ரொம்ப காலமாக அங்க வாடகைக்கு இருந்தாங்க  . அவர் தவில் வாசிக்கும் அந்த அழகும் லாவகமும் தனி . தேரோட்டத்தில் தேரின் மேல் அமர்ந்து அவர் தவில் வாசித்து கொண்டு பவனி வருவதை பாக்க ஆச்சர்யமா இருக்கும்

அடுத்த வீட்டில் டாக்டர் ஆத்தா வாடகைக்கு இருந்தார் . பேறுகால உதவியாளராக (அப்டித்தான் இந்த அறையின் பெயர் பலகையில் இருக்கும் ) அந்த கிராமத்தில் சேவையாற்றி ஓய்வுக்கு பிறகும் அந்த ஊரிலேயே பலகாலம் இருந்தாங்க . இப்போ கொஞ்ச வருஷம் முன்னாடித்தான் உடம்பு முடியாம அவங்க மக வூட்டுக்கு போய்ட்டாங்க

வீட்டின் பின்புறம் 


மூன்று குடும்பங்களையும் சேர்த்து கிட்ட்த்தட்ட 6 பேர் எப்பொழுதுமே அங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க

கோடை விடுமுறையில் அந்த வீடே விழாக்கோலம் பூண்டதுபோல் இருக்கும் . ஒரு மாதம் முழுக்க விளையாட்டுகளும் பேச்சுக்குரல்களும் தான் . நான் , தவில் தாத்தா - நாச்சம்மாள் ஆத்தா வீட்டு பெயரன் பெயர்த்திகள் , டாக்டர் பாட்டியின் மகள் , பெயர்த்தி மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகள் என அந்த வூடே முழுக்க முழுக்க  எங்களாலும் எங்கள் சந்தோஷங்களாலும் நிறைந்திருக்கும்

பெரிய அப்பிச்சி 


அந்த சமயங்களில் வரும் பொங்கல் தேரோட்டம் , அனைவரும் ஒன்றாக சேர்ந்து சென்ற துள்ளாத மனமும் துள்ளும் , பூவே உனக்காக போன்ற மறக்க முடியாத திரைப்படங்கள் , எந்நேரமும் விளையாடி மகிழ்ந்த தாயக்கரம் , சிறு சிறு சண்டைகள் , கோபங்கள் , ஏமாற்றங்கள் , அழுகைகள் என எல்லாமே எவ்வளவு இனிமையான வசந்த காலங்கள்  . அதுவும் பக்கத்துக்கு ஊர்களில் உள்ள பெரியம்மா , சித்திகள் , மாமன்கள் என அனைவரும் வந்துவிட்டால் போதும். கேட்கவே வேண்டாம்

ஒரு மாதம் முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்கு போனபிறகு ஒருவாரம் ஊடே வெறிச்சோடி கெடக்கும் என என் பெரியம்மா அடிக்கடி அங்கலாய்த்து கொள்வதுண்டு

தூறி ஆடி மகிழும் புளியமரத்தின் அடியில் தற்போது இருப்பது பக்கத்துக்கு வீட்டு மாடு 


இன்று நான் போனபோது  நான்கில் இரண்டு வூடுகள் பாதி விழுந்து விட்டிருந்தன . தவில்தாத்தா இறந்த பிறகு நாச்சம்மை பாட்டி பக்கத்தில் வேறு வாடகை வீட்டுக்கு மாறிவிட்டார் . ஒரே ஒரு அறையில் இப்பொழுது என் பெரியம்மா மட்டுமே தனியாக வசித்து வந்தார் . அப்பிச்சியியும் பெரியப்பாவும் தவறி சில ஆண்டுகளாகிவிட்டது

எப்பொழுதுமே அஞ்சாறு பேர் இருந்துக்கிட்டே இருந்த வீடு . எங்க பெரியம்மா முதல்கொண்டு எல்லோருமே அதிகமா பேசிக்கிட்டே இருக்க கூடிய ஜனங்க . அதுலயும் இவிங்களுக்கு எல்லாம் மைக் செட் தேவையே இல்ல . வீட்டுக்குள்ளே பேசினா  தெருமுனைக்கே கேக்கும்.  ஆனா அந்த மக்கள் நடமாட்டம் இப்போ சுத்தமா இல்லை . அங்க இடைவிடாம கேட்டுகிட்டே இருந்த பேச்சுக்கள் இப்போ எதுவுமே இல்ல . திண்ணை ஓரத்துல எப்பவுமே சத்தம் போட்டுக்கிட்டே இருக்குற ராட்டை இல்லை . அந்த வூட்ல தனியா இருக்கறது நிச்சயமா ரொம்ப பெரிய நரகம்னு எனக்கு தோணுச்சு  .

பெரியம்மா எப்படித்தான் இருக்காங்களோனு யோசிக்க ஆரம்பிச்சபோது தான் பக்கத்துக்கு வீட்டுல இருந்து அம்மணி ஆத்தா பெரியா எல்லாம் என்னை பாக்க வர ஆரம்பிச்சாங்க. அப்போதான் விளங்குச்சு சுற்றத்தாரோட அருமை . இதுல சுத்தி இருக்கிறவங்க எல்லாமே ஒரே சாதி கெடையாது . ஆனா அந்த நேசம் எப்படியோ அவங்களுக்குள்ள ரொம்ப இறுக்கமா பிணைக்கப்பட்டிருந்துச்சு. வந்தவுடனே எம்மொகத்த நீவி ரெண்டு சொட்டு கண்ணீர் வடிக்கமா அம்மணி ஆத்தா எங்கிட்ட பேசுனதில்லை

ரொம்ப காலம் கழிச்சு போனதுல நிறைய மாற்றங்கள் இருந்துச்சு . இங்க இருந்த பாம்பு புத்தை எங்க ? . அந்த வேலி என்னாச்சு ? . இங்க இருந்த வேப்பமரத்தை எப்போ வெட்டுனீங்க ? பெரிய வூட்டு கிணறு என்ன ஆச்சு என என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வதே என் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கு வேலையாகிப்போனது
ஆடி மாசம் தூறி ஆடுற புளிய மரத்தடிக்கு போய் கொஞ்ச நேரம் உக்காந்து இதை எல்லாம் அசைபோட ஆரம்பிச்சேன் .

அந்த ஊரு கொஞ்சம் சூடான நிலப்பரப்பு அதுலயும் ஆறு இல்லாத ஊரு  . சிறுவயதிலே எனக்கு அங்கே வந்தாலே சூடு புடிச்சுக்கும் . மூத்திரம் பெய்யும் போது ரொம்ப எரியும் . சிரமப்பட்டிருக்கேன் . இப்போ என்னோட உடம்புக்கு தாங்குற சக்தி வந்துருச்சு போல . அதுசரி சென்னை சூட்டையே பார்த்துட்டோம் . மத்ததெல்லாம் இனி ஜுஜுபி தானே


குட்டிமா கோவில் , ஆஞ்சநேயர் கோயில்னு ஊரோட இப்போதைய மக்கள் தொகையைவிட கோயில்கள் அதிகமா இருக்கோமோ தோன ஆரம்பிச்சுது  .

கொஞ்ச நேரம் கழிச்சு புதுசா அரசாங்க திட்டத்துல கட்டிக்கிட்டு இருக்குற வூட்டை பாக்க போனோம் . மத்தியான சாப்பிடும்போது கூட எப்பவும் உக்காந்து சாப்புடும் இந்த வாசப்படி ஓர திண்ணையில் உக்காந்த போதும் அதே பழைய நினைவுகள் தான்



நினைவுகளினூடே நீந்தி நீந்தி மகிழ்ந்து முடிந்தது அந்த இனிய பயணம்