October 26, 2013

மன்னன் மகள்- புத்தகம் பற்றிய பேச்சு

மன்னன் மகள் புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய மன்னன் மகள் என்ற வரலாற்று புதினம் படித்தேன்.தன் பிறப்பின் மர்மத்தை தேடி புறப்படும் ஒரு வாலிபன் தன் புத்திசாலிதனத்தால் எப்படி பல பேரின் வாழ்கையை மாற்றுகிறான் என்பதே கதை.பொதுவாக ராஜதந்திரம் மிகுந்த அமைச்சர் பெருமக்களால் ஆட்டுவிக்கப்படும் கதாநாயகன் என்று இல்லாமல் இதில் கதாநாயகன் தன் சாதுர்யத்தால் எப்படி பல பேரை மாற்றுகிறான் என்பதை சுவையாக கூறி இருந்தார்  சாண்டில்யன்.


நாகை சூடாமணி புத்த விகாரத்தில் வளர்க்கப்பட்ட கரிகாலன் எனும் வாலிபன் தன் பிறப்பின் ரகசியத்தை அறிய தஞ்சை நோக்கி பயணமாகிறான். அங்கு அவன் துறவி வேடத்தில் உள்ள சேர ஒற்றனை  சந்திக்கிறான். அவன் சோழரிடம் இருந்து திருடிய செங்கதிர் மாலை சந்தர்ப்பத்தால்  கரிகாலனிடம் சிக்குகிறது. ஒற்றனின்  தவறான வழிகாட்டுதலால்அரையன் ராஜராஜன் பாசறைக்கு செல்ல வேண்டிய அவன்  வேங்கி  நாடு செல்ல அங்கு காவலர்கள் துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி வசந்த மண்டபத்தில் தஞ்சம் அடைய வேங்கி மன்னன் மகள் நிரஞ்சனா தேவியை சந்திக்கிறான். வேங்கி நாட்டில் சோழர் ஆதரவுடன் நரேந்திரனும் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் ஆதரவுடன் விஜயாதிதணும் போட்டியிட , ஜெயசிம்மன் நரேந்திரனை மன்னனாக்கி மக்கள் அவனை வெறுக்கும்படி செய்ய முயல்கிறான்.இதை முறியடிக்க நிரஞ்சனா தேவிக்கு உதவுவதாக வாக்களிக்கிறான் கரிகாலன். தன் சாதுர்யத்தால் சோழ தூதர் பிரம்ம மாராயர் மற்றும் ஜெயசிம்மன் ஆகியோரை நம்ப வைக்கிறான். மேலும் அரிஞ்சயன் எனும் புல்லுருவியையும்  அடியாளம் காண்கிறான் .
விஜயாதித்தனை சந்திக்க மேலை சாளுக்கிய நாடு செல்ல அங்கு அரையன் ராஜராஜன் மகள் செங்கமல செல்வியை சந்திக்கிறான். அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கரிகாலன் அரையன் ராஜராஜன் பாசறைக்கு செல்கிறான். அங்கு அவனை தன் மகன் போல பாவிக்கும் அரையன் ராஜராஜன் போர் பயிற்சிகளையும் வியுகங்களையும் கற்று தருகிறார். வில்வித்தை கற்று தரும் செங்கமல செல்வி கரிகாலனிடம் மையல் கொள்கிறாள். ராஜேந்திர சோழர் தன கங்கை படையெடுப்பை தொடங்க முதலில் சாளுக்கியருடன் போர் செய்ய வந்திய தேவரை அனுப்புகிறார். போர் மந்திராலோசனையில் போர் தேவையில்லை என கூறும் கரிகாலன் சோழ படை தடங்கல் இன்றி முன்னேற வேங்கி நாட்டை விஜயாதிதனுக்கு தாரை வார்க்க அவனை நிரஞ்சனா வெறுக்கிறாள். சோழ பெரும்படை மாசுணி தேசத்தை முற்றுகையிட அந்த மன்னன் கோட்டைக்குள் இருந்து வெளி வராமல் சமாளிக்கிறான் . உணவு பொருள் உள்ளே செல்லும் ரகசிய பாதையை அறியும் கரிகாலன் தன் சிறு படையுடன் உணவு கொண்டு வருபவன் போல் உள்ளே நுழைகிறான். அந்நாட்டின் தளபதி பிரதாபத்திரன் கரிகாலன் சோழ படை தலைவன் என்பதை அறிந்து கொண்டு உன் பிறப்பின் ரகசியம் வேண்டுமானால் சோழர்களின் போர் வியூகத்தை சொல்ல சொல்கிறான். தவறான வியுகத்தை சொல்ல சோழர் படை பிரதாபத்திரன் படையை நிர்மூலமாக்குகிறது. தான் இறக்கும் தருவாயில் கரிகாலனிடம் அவன் சமந்தப்பட்ட தனக்கு தெரிந்த உண்மையை சொல்லிவிட அரையன் ராஜராஜன் கலங்குகிறான். பின் கங்கை வரை பல தேசத்தை வெல்லும் சோழர் படையிலிருந்து சோழ நாட்டுக்கு கரிகாலன் விஜயம் செய்ய அவனை அரச மரியாதையுடன் வரவேற்கும் ராஜேந்திரன் அவன் தோற்றத்தை வைத்து அவன் அரச பரம்பரையை சேர்ந்தவன் என முடிவு செய்கிறான் . கரிகாலன் தாய் மணிமேகலையை கொண்டு கரிகாலன் பற்றிய மர்மத்தை அறிய முயலும் ராஜேந்திரனின் முயற்சிகள்  பலனளிக்காமல் போகிறது . கரிகாலனிடம் அவன் பிறப்பின் ரகசியத்தையும் அது உடைந்தால் சோழ மண்டலத்தில் ஏற்படும் பெருவிளைவுகளையும் கருத்தில் கொண்டு அதை அம்பலபடுத்தகூடாது என சத்தியம் வாங்குகிறார் அவன் தாய் .

வேங்கி  நாட்டுக்கு படையெடுத்து செல்லும் கரிகாலன் அங்கு நரேந்திரனை அரியணையில் அமர வைக்கிறான் . மேலும் தன் நிலையை எடுத்து கூறி நிரஞ்சனாவின் காதலை புறக்கணிக்க முயல ,அவள் கரிகாலனுக்காக தன் நாட்டையே விட்டுவிட்டு வருகிறாள் . இறுதியில் ரகசியத்தை காக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் ??? செங்கமல செல்வியின் நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே இதன் முடிவு


தான் யாரென்று அறியாமல் வரும் இளைஞன் கரிகாலன் தன் அறிவு கூர்மையால் சூழ்நிலைகளை சமாளிப்பதும் மற்றவர்களை நம்ப வைப்பது என பிரம்மிக்க வைக்கிறார். கடைசியில் தான் யார் என்பது தெரிந்தும் நாட்டின் பிற்கால வாழ்வை முன்னிட்டு தியாக உணர்வோடு எடுக்கும் முடிவு நயம். கரிகாலனிடம் காதல் கொண்டு அவனை நம்பி அவன் செயல்களால் அதிர்ந்து வெறுக்கவும் முடியாமல் விரும்பவும் முடியாமல் தவித்து கடைசியில் கரம் பிடிக்கிறார். காலனும் கண்டு அஞ்சும் காவலன் எனும் பெயர்பெற்ற சோழ சேனாதிபதி அரையர் ராஜராஜன் , கரிகாலனிடம் ரகசியத்தை சொல்ல முடியாமல் தவிப்பது அருமை. வீரம் மிகுந்த பெண்ணாக செங்கமல செல்வி ,கடைசி வரை கரிகாலனை வெறுக்கும் பிரம்ம மாராயன்  என பல கதாபாத்திரங்கள் கதைக்கு மெருகூட்டுகின்றன.

சேரன் போரில் தோற்று  பறிகொடுத்த செங்கதிர் மாலையை பறிகொடுக்கும் சேர ஒற்றன் கடைசி வரை கரிகாலனை தொடர்கிறார் .


புத்திசாலித்தனம் அரசியல் மற்றும் போர்களில் எத்தகைய பங்கை ஆற்ற முடியும் என்பதற்கு இந்நூல் மிக சிறந்த உதாரன்ம்

சாண்டில்யனின் இரண்டு நாயகிகள் என்ற யுக்தி இந்த நாவலிலும் தொடர்ந்துள்ளது
பி .கு :

தவிர்க்க முடியாத காரணங்களால் பதிவு காலதாமதமாகிவிட்டது. மன்னன் மகள்  ஒரு நல்ல பயணத்தை கொடுத்தது. வெகு விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!!

No comments:

Post a Comment