October 26, 2013

தமிழ் அறிவோம் பகுதி -6 பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்

பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்
ஆண் குழந்தையாய் இருந்தால்:

1. காப்பு: எப்பவும் முதலில் ‘காப்பு’ சொல்லிட்டுதான் தொடங்கணும்.

2. செங்கீரை : செங்கீரை என்பது ஒரு வகைக் கீரை. பிறந்த ஐந்து மாதத்தில் குழுந்தைக்குக் கழுத்து நிற்கும். மெல்ல, கீரையைப் போலத் தலையை எடுத்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைக்கும்; பார்க்கும். அப்படிப் பார்ப்பதை வருணித்துப் பாடுவார்கள்.

3. தால் : தால் என்றால் நாக்கு. தாலை ஆட்டி ஒள ஒள ஒள ஒள ஒள ஒள ஆயி என்றெல்லாம் சப்தம் எழுப்பிப் பாடுவது தாலாட்டு. குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது.

4. சப்பாணி : சப்பாணி என்றால் ‘கைகளைக் கொட்டுவது’ என்று பொருள். கொஞ்சம் வளர்ந்து எழுந்து உட்காரும் குழந்தை, கைகளைக் கொட்டும். அந்தப் பருவத்தைப் பாடுவது சப்பாணிப் பருவம்.

5. முத்தம்: குழந்தையை முத்தம் தரச் சொல்லிக் கேட்பது.

6. வாரானை: எழுந்து நடக்கத் தொடங்குகிறது குழந்தை. ‘வாவாவா வாவாவாவா,’ என்று ஒவ்வொரு அம்மாவும் தன்னை நோக்கி வரும்படியாகத் தன் குழந்தையைக் கை நீட்டிக் கூப்பிடுவாள் இல்லையா, அந்தப் பருவம் இது.

7. அம்புலி: நிலாவைக் காட்டிச் சோறூட்டுதல்.

8. சிறுபறை: கையில் சின்னதாக ஒரு மேளத்தையும், இன்னொரு கைக்கு ஒரு குச்சியையும் (குணில் என்று சொல்வார்கள்) கொடுத்துவிட்டால், அதுபாட்டுக்கு கொட்டிக்கொண்டு விளையாடும்.சப்பாணி கொட்டுவது, சிறுபறை கொட்டுவது எல்லாமே, சின்னக் கைகளுக்குத் தரப்படும் பயிற்சிகள்தாம்.

9. சிற்றில்: கொஞ்சம் வளர்ந்த குழந்தை மணலால் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்வது.

10. சிறுதேர்: எந்தக் குழந்தைக்கும் வண்டி உருட்டப் பிடிக்கும். சின்னதாக ஒரு தேர் பண்ணிக் கொடுத்துவிட்டால் அதை இங்கேயும், அங்கேயும் இழுத்துக் கொண்டு நடை பழகும். அந்தப் பருவம் இது.

பெண் குழந்தைகள் என்றால் கடைசி மூன்றுக்குப் பதிலாக

8. கழங்கு ஆடுதல்,

9. அம்மானை ஆடுதல்,

10. ஊஞ்சல் ஆடுதல்

என்று வரும்.

No comments:

Post a Comment