June 07, 2015

மூங்கில் காடுகளினூடே ஒரு பயணம்



வாழை மெகா வொர்க்சாப்பை எங்கு நடத்துவது என்ற பேச்சு ஆரம்பித்த பொழுது இந்த முறை சற்று வித்தியாசமாக வானகம் அல்லது மூங்கில் கோம்பையில் நடத்தலாம் என்ற கருத்துகள் வெளிப்பட்டன . ஏற்கனவே வானகம் சென்று வந்ததால் மூங்கில் கோம்பை இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது




ஒரு வழியாக மூங்கில் கோம்பை (Coop Forest)  என முடிவு செய்தவுடன் மனம் ஒவ்வொரு கணமும் எதிர்பார்ப்பில் காத்திருக்க ஆரம்பித்தது . நண்பனின் கல்யாணத்துக்கு செல்ல வேண்டி வாங்கிய விடுமுறையை பயிலரங்கிற்கு உபயோகப்படுத்தி கொள்ள முடிவு செய்து வியாழக்கிழமை இரவே இங்கிருந்து சக நண்பர்களுடன் கிளம்பி விட்டேன்




தர்மபுரியில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் அமர்ந்திருந்தது மூங்கில் காடுகள் . மனுஷ் பியுஷ் அவர்களால் கடந்த 15 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கானகம் அது . சீரற்ற பாதையில் எங்கள் வாகனம் நுழைந்தவுடன் , இளங்காற்று வந்து எங்களை தழுவி கொண்டது .


காலை துயில் எழுந்தவுடன் எங்கள் முன்னே விரிந்த காட்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை .பல் துலக்க எடுத்த வேப்பங்குச்சியின்  அளவு குறைய குறைய நடந்து  எங்கள் குடிலை அடைந்து விட்டோம்



முதல் வேலையாக வாய்க்காலில் தம்பிகளுடன் குளித்து விட்டு திணை பொங்கலை ருசித்தேன் . கிட்டத்தட்ட 80 சிறார்களுடன் தன்னார்வலர்கள்  முப்பது பேரும் இருந்தனர் . காலையில் திரு.கண்ணன் அவர்கள் தலைமை பண்புகள் குறித்து திருக்குறள் சொல்லும் கருத்துகளை அழகாக எடுத்துரைத்தார் . ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய தலைமை பண்புகள் பற்றி திருக்குறள் சொல்லும் நெறிகளை எளிமையாக விளக்கினார்.

அங்கு வந்த பியுஷ் இடம் சிறார்கள் மீண்டும் குளிக்க வேண்டும் என கேட்க அவரும் அனுமதியளித்து விட்டார் . நீச்சல் தெரியும் என பொய் சொல்லி சற்று ஆழமான குட்டைக்கு தம்பிகள் செல்ல முயல , அவர்களை சமாளிப்பதே எங்களுக்கு வேலையாக போய்விட்டது



குழந்தைகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் என்ற எங்களது எண்ணம் பொய்த்துவிட்டது . நான்கு சுவர்களை தாண்டிய வெளியில் அவர்கள் புள்ளினங்களாக மாறி போனார்கள் . அவர்களுடன் சேர்ந்து ஓடலாம் என பார்த்தால் தொப்பை தடுக்கவே செய்தது


மதியம் சாப்பிட்ட சிறுதானிய புளி சாதம் மற்றும் தயிர் சாதத்தை இப்பொழுது நினைத்தாலும் நாவு ஊற ஆரம்பிக்கிறது. மாலை வேளையில் பியுஷ், தான் புதிதாக ஆரபிக்க போகும் ஐயப்ப வனம் திட்டம் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவர் விவரித்த விதம்  எங்களது கண்முன்னே ஐயப்ப வனத்தை கொண்டுவந்து நிறுத்தியது

முதல் நாள் இவ்வாறாக களித்து கழித்தோம் . விருந்தினராக வந்திருந்த திரு . கொளத்தூர் மணி அவர்களுடன் தோழர்கள் இரவு உரையாட செல்ல , அசதி காரணமாக நான் தம்பிகளுடன் குடிலில் உறங்கி போனேன்


அடுத்த நாள் தீபக் உள்பட மேலும் சில நண்பர்கள் வந்து எங்களுடன் கலந்து கொண்டனர்,  காலை பொழுதில் மரம் நடுவதற்கு சென்றோம் . மனுஷ பியுஷ்  அவர்கள் யோசனை படி மேடான பகுதியில் மூங்கில் மரங்களை நட்டால் அவை நன்றாக செழித்து வளர்ந்து ஒன்றோடொன்று பின்னி செழிப்பாக வளரும் என்பதால் அவ்வாறே நட்டோம் .


முந்தைய நாள் வெல்லம் குறைவாக சேர்த்ததால் தம்பிகளுக்கு ஆவாரம் பூ தேனீர் பிடிக்காமல் போக , அன்று அதிகமாக சேர்த்து அருமையாக தயாரித்திருந்தனர் .


காலை உணவான சத்துமாவு கஞ்சியையும் பலா பழத்தையும் உண்டுவிட்டு அன்றைய தின நிகழ்வுகளுக்கு தயாரானோம் . இந்த கானகம் அமைக்கப்பட்ட விதம் மற்றும் இயற்கை சார்ந்த சுய வாழ்வியல் பற்றி பியுஷ் பேசினார் . அவரது பேச்சு மற்றும் அனுபவங்கள் தம்பிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது . இயற்கை சார்ந்த தொழில்கள் பற்றிய அவரது பேச்சு எங்களுக்கும் பல கேள்விகளை எழுப்பியது . மூங்கிலினால் செய்யப்பட்ட கட்டில்கள் மற்றும் நாற்காலிகள் , பாக்கு மட்டையால் செய்யப்பட்ட கதவுகள் என இயற்க்கை சார்ந்த 30க்கும் மேற்பட்ட தொழில்கள் இருப்பதாக சொல்லி எங்களை பிரமிக்க வைத்தார்


பிறகு மனுஷ பியுஷ் , தன்னார்வலர்களுடன்  சேர்ந்து சுத்தம் செய்த  மூக்கனேரி, அம்மாபேட்டை எரி மற்றும் இஸ்மாயில் கான் எரி போன்றவற்றை சுத்தப்படுத்திய விதம் பற்றி பேச ஆரம்பித்தார்

குப்பைகூளங்கள் நிறைந்து மிக மோசமாக இருந்த  மூக்கனேரியை தூய்மைபடுத்தி இன்று சேலத்தின் ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றியமைத்த நிகழ்வை கேட்ட பொழுது மலைத்து போய் நின்று விட்டோம்

ஏரியை தூய்மைப்படுத்தி மணல் திண்டல்கள் அமைத்து அதில் மரங்களை நட்டு சிறு தீவுகளாக மாற்றி பறவைகள் சரணாலயமாகவும்  மக்கள் கூடும் பூங்காவாகவும் மாற்றியிருந்த அமைப்பை புகைப்படங்கள் மூலம் விவரித்ததை எண்ணியபோது எங்கள் கண்களுக்கு பியுஷ் உயர்ந்து கொண்டே சென்றார்

பிறகு Brick roof மூலம் உருவாக்கப்படும் பசுமை வீடுகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது . வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நண்பர் ராம் எங்களுக்காக ஒரு சிறு வீட்டை கட்டி காண்பித்தார் . மேலும் இளந்தளிர் அமைப்பை  சேர்ந்த நண்பர் பாலா  , அடுத்த நாள் (ஞாயிற்று கிழமை ) இலக்கியம்பட்டி ஏரியை சுத்தம் செய்யும் பணிக்காக எங்களை அழைக்க வந்திருந்தார்

பிறகு தன்னார்வலர்களை அழைத்து கொண்டு பியுஷ் டிரக்கிங் செல்ல நாங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தோம் . அதிலும் நாயும் எலும்புத்துண்டும் கேம் மிக அருமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது

இரவு தம்பி தங்கைகள் தாங்கள் இரு தினங்களில் கற்று கொண்ட செய்திகளை பகிர்ந்து கொண்ட பொழுதுதான் தெரிந்தது . அவர்கள்  விளையாடி கொண்டும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் இருந்தாலும் எல்லாவற்றையும் நன்கு கவனித்து உள்வாங்கி இருக்கிறார்கள் என்பது . இதை அறிந்தவுடன் எங்களைவிட பியுஷ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்


இரவு இட்லி மற்றும் பணியாரத்தை ருசித்துவிட்டு கண் அயர்ந்தோம் . அடுத்தநாள்  சிறுவர்கள் சிலரும் நமது தன்னார்வலர்கள் சிலரும் இலக்கியம்பட்டி ஏரியை சுத்தம் செய்ய கிளம்பினார்கள் . ஒருவாறாக முடித்துவிட்டு குழந்தைகளை எல்லாம் புறப்பட வைக்க மணி   12 ஆகிவிட்டது . பிறகு பியுஷ் இடம் சில நேரம் பேசிவிட்டு விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்


பி கு :

விடுபட்ட சில துணுக்குகள்

மனுஷ் பியுஷ் தன் கையால் ராகி தோசை சுட்டு எங்களுக்கு பரிமாறி அசத்தினார் மேலும் தன் குழந்தைகளை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார்

மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக இருக்கும் நண்பர் ஒருவர் வந்து சிறிது நேரம் பேசினார்

வீடு கட்ட செம்மண் மிதித்து  பின் அதை உடலில் பூசி ,குளித்து சிறுவர்கள் ஆனந்தம் கண்டனர்

அணைத்து உணவு பொருட்களும் மிக சிறப்பாக இருந்தது . அதிலும் இரு தினங்களும் பலா பழத்தை இரு அண்ணன்கள் எங்களுக்கு உரித்து கொடுத்து கொண்டே இருந்தனர்

வரையறை செய்யப்படாத நிகழ்வுகள் , குழந்தைகளுக்கு பிடிக்காத உணவுகள் , சிறுவர்கள் விளையாட தேவையான வசதி இன்மை என சில இடர்பாடுகளை தாண்டி அனைவரும் மகிழ்ச்சியாக இரண்டரை தினங்கள் களித்தோம்

எங்களில் ஒருவராக நெருங்கிய நண்பராக பியுஷ் இந்த இருதினங்களில் மாறி போனார்



நிச்சயம் பலவேறு புதிய தகவல்களையும் இயற்கை சார்ந்த விழிப்புணர்வும் அனைவரும் பெற முடிந்தது நிச்சயம் வெற்றியே


அலைபேசியின் அலைக்கற்றைகளுக்கு எட்டாத தொலைவில் மூன்று தினங்கள் இயந்திரத்தின் பிடியில் இருந்து விடுபட்டு சொர்க்கத்தில் வாழ்ந்துவிட்டு வந்தோம்