November 25, 2014

இது யாருடைய வகுப்பறை

சில காலம் முன்பு ஆயிஷா .இரா.நடராசன் அவர்களின் இது யாருடைய வகுப்பறை புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.

அப்பொழுதே வாங்கியும் வந்து படிக்கவும் ஆரம்பித்து விட்டேன் ஆனால் அதை தொடர்ந்து படிக்க கூடிய சூழல் வரவில்லை.


இப்பொழுதுதான் படித்து முடித்தேன். அதை பற்றிய பேச்சுதான் இது.



ஆசிரியரான ஆயிஷா.இரா .நடராசன் அவர்கள் கல்வி மற்றும் கற்றல் குறித்து ஆய்வு செய்து எழுதிய ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்நூல்



1. ஆசிரியர்களே தேவைஇல்லை.... என்றார் ரூசோ !


ரூசோவின் இந்த கருத்துடன் ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரை மாணவப் பருவம் என்பதே தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புதான் என தொடர்கிறது.நம்முடைய பழமையான கல்வி முறைகளான குருகுலம் ,திண்ணைப்பள்ளி மற்றும் மதராசா பற்றி விரிவாக விளக்குகிறது . நமது பாரம்பரிய கல்வி முறைகளில் ஆசிரியர் -மாணவர் உறவு எப்படி இருந்தது என்பது பற்றியும் அலசுகிறது. மேற்கத்திய கல்வி சித்தாந்தங்கள் நம்மிடம் பரவியது பற்றியும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிகிறது .

மத அடிப்படியிலான கல்வி முறையின் வரையறைகளையும் ,அது உண்டாகிய விளைவுகளையும், கிரேக்க மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் கல்விமுறை தோன்றிய வரலாற்றையும் அடுத்தடுத்த பக்கங்கள் நிறைவு செய்கின்றன. மதம் சார்ந்த ஒரு கல்விமுறையில் மறுமலர்ச்சியை மார்டின் லூதர் கிங் மற்றும் பிரான்சிஸ் பெக்கான் ஆகியோர் கொண்டு வந்திருக்கின்றனர்

2.யாருடைய வகுப்பறை இது?

" பன்னிரண்டு வயது வரை ஒரு குழந்தை இயற்கையிலும் தன் வாழ் சூழலிலும் தனித்து விடப்பட வேண்டும் என்பதுதான் ரூசோவின் கல்விமுறை "
என ஆரம்பிக்கிறது இரண்டாவது கட்டுரை. கல்விக்கும் பள்ளிக்கும் இடையிலான வித்தியாசங்களை பேசுகிறது. கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்தும் சில கருத்துக்களை இந்த பக்கங்கள் முன் வைக்கின்றன

ஆங்கிலேயர் வருகையும் அதனால் நமது கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அறிய முடிகிறது. நமது இந்த கல்வி முறையை கொடுத்தவர் என அறியப்படும் மெக்காலே வருகையும் அவரது மெக்காலே குறிப்புகள் பற்றியும் மெக்காலேவின் கல்வி கொள்கைகள் எப்படி இருந்தன என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறார் இரா நடராசன்.

" இந்திய மொழிகள் அனைத்தையும் தூக்கியெறியும் மெக்காலே அத்தகைய மொழிகளில் புத்தகம் என்று ஒன்று அச்சாகுமானால் அது பைபிளாக இருக்கும் என பிடிவாதமாக இருந்தார் "


நமது கல்விமுறை ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டாலும் இன்று நமக்கும் இங்கிலாந்தின் கல்விமுறைக்கும் உள்ள வேறுபாட்டுக்கு காரணமாக இருப்பவர் சார்லஸ் வுட் ஆவார்

. " நமக்கு தேவை சிந்திக்க தெரிந்த மேதைகள் அல்ல .நம் அறிவை தாண்டாமல் அடி பணிந்து உழைக்கும் சேவகர்கள் "
என்ற 'உயரிய' நோக்கத்தோடு கல்வி சீர்திருத்தங்களை செய்தவர் வுட்.


இந்த பரீட்சையை, கண்டுபிடிச்சது யாரு என நம்மை பலமுறை புலம்ப வைத்த பெருமை பெற்ற ஹன்டர் கமிசனை பற்றி அறிய முடிந்தது . காந்தியடிகள் முன்வைத்த 'கல்விக்கான இந்திய வடிவம் ' எனும் கொள்கைகள் பற்றியும் அது புறந்தள்ளப்பட்டது பற்றியும் அறிய முடிகிறது.


கோத்தாரி கமிசன் வகுப்பறைகளை தரம் பிரித்தது பற்றி அறிந்து கொள்ள முடிவதால் இந்த கமிசன் செயல்பாடுகள் ஏற்படுத்திய பின்னடைவுகள் எளிதாக நம்மால் உணர முடிகிறது



3.அறிவியல் தெரியும்...... ராமலிங்கத்தை தெரியுமா ? :
இந்த பகுதி கல்வி உளவியல் பற்றி பேசுகிறது ? மாணவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தகூடிய காரணிகள் பற்றி விரிவாக அலசுகிறது . சிக்மன் பிராய்டு முதலிய உளவியல் வல்லுனர்களின் கல்வி சார்ந்த உளவியல் கருதுகோள்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. குழந்தைப்பருவ ,பிள்ளைப்பருவ ,குமாரப்பருவதில் குழந்தைகள் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை உளவியல் ரீதியில் விளக்கியுள்ளார் ஆசிரியர் . மேலும் வகுப்பறை மற்றும் அதன் சூழல் பற்றிய கருத்துக்கள் இங்கு முன் வைக்கப்படுகின்றன


4.வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது.....
நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் கல்வி என்பது சலுகை அல்ல உரிமை என இந்த பகுதி ஆரம்பிக்கிறது . கற்றல் மற்றும் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் குறித்த செய்திகள் இங்கு நிறைகின்றன. கற்றலின் இரு கோட்பாடுகளான தூண்டல் (stimulus) துலங்கல் (response) மற்றும் அறிவுப் புலக் கோட்பாடு (Field theories) பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது .

நமது வகுப்பறையில் அடிப்படியாக விளங்கும் விதிகளையும் அந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்ட விதம் பற்றியும் இங்கு அறிகிறோம் அந்த விதிகளின் விளைவை இந்த கட்டுரையின் தலைப்பாக வைத்துவிட்டார் போலும்


5.உள்ளேன் டீச்சர்
தனது பிள்ளைகளின் கல்வி பற்றிய பெற்றோரின் அணுகுமறை எப்படி இருக்கிறது எனவும் இன்றைய நவீனமயமாதல், குழந்தைகளை பெற்றோர் எப்படி பார்கின்றனர் எனவும் பேசுகிறது இந்த கட்டுரை .

உலகளாவிய குழந்தைகள் உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அதே போல் நம் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்விச் சட்டம் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் இரா .நடராசன் அவர்கள் .


"நமது கட்டாய இலவச கல்விச் சட்டம் ஒரு குழந்தைக்கு ஆறு வயது முதல் பதினான்கு வயது வரை மட்டுமே பொருந்தும். இங்கு ஒருவர் 14 வயதிலேயே பெரியவர் ஆகிவிடுகிறார் "

தேசிய கலை திட்ட வடிவமைப்பு மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை பற்றியும் அடுத்தடுத்த பக்கங்கள் விளக்குகின்றன .


நமது கல்வி சீரமைப்பில் முதல் முறையாக யஷ்பால் குழு மட்டும்தான் கல்வியை குழந்தை பருவ அடிப்படைகளுக்கு ஏற்ற கல்வி என்ற பார்வையில் அணுகி இருந்திருக்கிறது (கல்விக்காக குழந்தைகள் என்றில்லாமல் குழந்தைகளுக்காக கல்வி என்ற ரீதியில் ) மேலும் இன்றைய செயல்வழி கற்றலை நமக்கு இந்த யஷ்பால் கமிட்டிதான் வழங்கியுள்ளதாம்




6.அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை :

ஆசிரியரின் செயல்திறனை எப்படி அளப்பது என்ற வினாவுடன் இப்பகுதி தொடங்குகிறது ஆசிரியர்களின் சிறப்பியல்புகள் பற்றியும் விளக்கம் தரப்பட்டுள்ளது . ஒரு பள்ளியின் செயல்திறன் மற்றும் அதனை தீர்மானிக்கும் காரணிகள் பற்றிய அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது

அடுத்த பகுதி மிக விறுவிறுப்பானது . உலக நாடுகளின் கல்வி முறை பற்றியது. அமெரிக்க கல்வி முறையில் இருந்த ஆரம்பிக்கும் இது அதன் குறைபாடுகள் குறித்து பேசுகிறது (இதை படித்தவுடன் நம்ம ஊரு பள்ளிக்கூடமே தேவலை போல இருந்தது ). உலகின் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு என அழைக்கப்படும் பின்லாந்து கல்வி முறை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது .

பிறகு தொழில் மற்றும் சேவை சார்ந்த கல்வியை கொண்ட கியூபா கல்வி முறை பற்றி அறிய முடிகிறது . ஆனால் கியூபாவிடம் இருந்து ஒரு நல்ல விசயத்தை கற்க நம்முடைய மேன்மை பொருந்திய சமூகம் இடம் தராதே ! பிறகு ஜப்பான் ,டென்மார்க் மற்றும் சிங்கப்பூரில் கல்வி முறை கண்ட மாற்றங்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

சர்வதேச மாணவர் தர ஆய்வு நிகழ்வில் பள்ளியின் செயல்திறன் சராசரி(Efficiency) கணக்கிடபடுகிறது. இதில் பின்லாந்து 0.86 to 0.98 பெற்று முதலிடத்தில் உள்ளது தமிழகத்தின் செயல்திறன் சராசரி 0.02 - 0.96 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது . சிறந்த கல்விமுறை கொண்ட நாடுகளின் தரவரிசையில் நாம் 96 வது இடத்திலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ள பள்ளி எனும் ஆய்வில் 116வது இடத்திலும் இருக்கிறோம்

7. வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெரிந்தவர்கள்......
இந்த பகுதி நமது கல்வி முறை விவசாயத்தை சொல்லி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறது. பள்ளிகளில் குழந்தைகளின் விதிமீறல்கள் ,அவற்றின் காரணங்கள் மற்றும் அதற்கான அணுகுமுறை பற்றி இந்த பகுதி விளக்குகிறது நடத்தையியல் சார்ந்த ஆட்லரின் பார்வை மற்றும் ஆன்னா பிராய்ட்டின் நடத்தை வேறுபாடுகள் குறித்த சித்தாந்தங்களை அறிய முடிகிறது.

ஆசிரியர்- மாணவர் உறவுமுறை குறித்த உலக கல்வியாளர்கள் பலரின் கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன . பிறகு ஒரு ஆசிரியரின் பணிகள் மற்றும் கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன




எனது பார்வை
:


என்னை பொருத்தமட்டில் எனது ஆசிரிய பெருமக்களை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்த மிக பெரிய பரிசு புத்தகமாக இதை கருதுகிறேன். (இதுவரை ஆசிரியப் பெருமக்களுக்கு என்ன நினைவு பரிசு வழங்க வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது )



நம்முடைய இன்றைய செயல்வழிகற்றல் ஆரோக்கியமான மாற்றங்களை செய்திருக்கிறது . இது கற்றல் செயல்பாட்டில் ஒரு விருப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இப்பொழுது இங்கு பாட திட்டங்களைவிட வகுப்பறைகள்தான் மாற்றம் பெற வேண்டும் . வகுப்பறைகள் மாற்றம் பெற வேண்டுமென்றால் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வரவேண்டும் என்பது அர்த்தமல்ல . வகுப்பறை சூழல்தான் மாற்றம் அடைய வேண்டும் . இந்த நூலில் வரும் ஜனநாயக வகுப்பறை மலர வேண்டும்.


இந்த நூலை நாம் ஏன் படிக்க வேண்டும் ? யார் யார் படிக்க வேண்டும் ?
நாம் இன்று படித்தவர்களாக இயங்கி கொண்டிருக்கிறோம் . நாம் கற்ற கல்வி உருவான விதம் மற்றும் அது கண்ட மாற்றங்கள் பற்றி நாம் அறிதல் அவசியம் . மேலும் உலக அரங்கில் உள்ள கல்விமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் ..

யாரெல்லாம் படிக்க வேண்டும்?

குழந்தைகள் சார்ந்த சட்டங்கள் மற்றும் பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ள மாணவர்கள் இதை படிக்க வேண்டும் . அது கொஞ்சம் கடினம் (வாக்கிய மற்றும் வார்த்தை அமைப்புகள் கொஞ்சம் கடினம் என்பதால் மாணவர்கள் படிப்பது கடினம் )

ஒரு பெற்றோராக குழந்தையின் படிப்பை எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். ஒரு குழந்தையின் குடும்ப மன நிலை அதன் கற்றல் செயல்பாடுகளில் தாக்கங்கள் ஏற்படுத்துவதால் பெற்றோர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்

இன்றைய சூழலில் ஒரு ஆசிரியரின் Role பல்வேறு நிலைகளை கொண்டுள்ளதால் ஆசிரியர்களும் படிக்க வேண்டும். ஆசிரியர் -மாணவர் உறவுமுறைகள் குறித்து பல தகவல்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்தரும்

சாதாரண குடிமக்களாக நாமும் நம்முடைய கல்வி முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தானே அதனால் நாம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்





பி.கு : அனைவரும் படித்து பாருங்கள்

October 19, 2014

ஓர் வரலாற்று சுற்றுப்பயணம்

அண்மையில் நான் சில நண்பர்களுடன் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்றிருந்தேன். ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டுவிழா மற்றும் பொன்னியின் செல்வன் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொன்னியின் செல்வன் கதையில் வரும் சில இடங்கள், சோழபுரம் மற்றும் தாராசுரம் போன்ற இடங்கள் எங்களது பயண பட்டியலில் இருந்தன


முதலில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றோம் . அதன் வரலாற்று சிறப்பு மற்றும் பெருமைகளை என் நண்பர் மண்ணின் மைந்தர் நரசிம்மன் அழகாக விவரித்தார்






அங்கு முடித்துவிட்டு வந்தியதேவன் அறிமுகமாகும் வீர நாராயணபுரம் ஏரிக்கு (தற்போது வீராணம் ஏரி) சென்றோம் .

குறுகியும் அகன்றும் கிட்டத்தட்ட 12 காத தூரத்துக்கு செல்லும் அதன் அழகிய வனப்பில் மிதந்து கொண்டே சென்றது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது


பிறகு காட்டுமன்னார் கோவிலில் காலை உணவை முடித்துவிட்டு அங்குள்ள புகழ்மிக்க அனத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். மிக பழமையான அந்த கோவிலில் பல சிற்பங்களை பார்த்தோம்




அதன் பிறகு மேல கடம்பூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட்டதற்கான கல்வெட்டுகள் அந்த கோவிலில் உள்ளன.

அங்கிருந்த கல்வெட்டில் அந்த வார்த்தைகளை வெகு நேரம் தேடினோம். கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை படிக்க ரொம்ப சிரமமாக இருந்தது . கடைசியில் நண்பர் ஒருவர் உதவியால் அந்த வார்த்தைகளை கண்டுபிடித்தோம்.அங்கு ஒரு வந்திருந்த ஒரு பெரியவர் பாடல் பெற்ற தலங்களை தரிசித்த தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்



ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான கல்வெட்டு


( இடம் : காட்டுமன்னார் கோவில் )
அகிலனின் வேங்கையின் மைந்தன் படித்ததில் இருந்தே நான் பார்க்க வேண்டும் என ஆவல்கொண்ட இடம் கங்கை கொண்ட சோழபுரம்.



அங்கு சென்று இறங்கி ஆலயத்தினுள் நுழைந்தவுடன் ஒரு மிக பெரிய பிரம்மாண்டம் ஏற்பட்டது. அந்த நந்தியின் உயரத்திலேயே நான் இறங்கி போனேன். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் ஆலயத்தை பற்றி சொல்ல சொல்ல நான் என்னை மறக்க ஆரம்பித்தேன்


ஆகம விதிப்படி இல்லாமல் வானியல் விதிப்படி உருவாக்கப்பட்ட நவக்கிரக சிலையினில் உள்ள விஞ்ஞானம் பிரமிக்க வைத்தது . அங்கிருந்த ஒவ்வொரு சிலைகளிலும் இருந்த அழகையும் ,விஞ்ஞானத்தையும் ,சிற்ப கலை நுட்பத்தையும் அறியும் பொது வியக்காமல் இருக்க முடியவில்லை .








தமிழர்களின் பொறியியல் மற்றும் நுட்பத்திறன் முறையாக ஏன் இந்த தலைமுறைக்கு கொண்டு வரப்பட வில்லை என நாங்கள் செய்த சிறு விவாதம் மிக ஆரோக்கியமாக பல அரிய செய்திகளை அறியும் வகையில் இருந்தது








முகலாய ,ஆங்கிலேய படையெடுப்புகளால் சிதிலமடைந்த பகுதிகளை பார்த்த போது மனதில் ஒரு கணம் ஏற்பட்டது

தஞ்சை பெரிய கோவிலை பிரம்மாண்டம் என்றும் கங்கை கொண்ட சோழபுரத்தை நளினம் என்றும் கூறுவார்கள் என நண்பர் விளக்கி கொண்டிருந்தார்


ஒரு பக்கம் யானையும் ஒரு பக்கம் காலையும் கொண்ட வினோத சிலை 



கோவிலின் கட்டிட அமைப்பு பற்றி சொன்ன அவர் ஐங்கோண அமைப்பில் அடிப்பாகம் ஆரம்பித்து வட்டமாக முடியும் எனவும் அதன் குறுக்கு வெட்டு தோற்றங்களின் மாதிரிகளையும் காண்பித்தார்
ஒரு வழியாக பிரியாத விடை பெற்று அங்கிருந்து மாளிகைமேடு கிளம்பினோம்




தற்கால அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட சோழர்களின் மாளிகை இருந்த இடம் என சொல்லப்படும் மாளிகைமேடு எங்களுடன் வந்திருந்த பெரியவர்களை ஈர்க்கவில்லை. எங்கள் மக்களிடமும் அதை சேதப்படுத்த வேண்டாம் என கூறிவிட்டுத்தான் அழைத்து சென்றோம்








அந்த காலகட்டத்தில் இருந்த செங்கற்கள் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் சற்று இறுக்கமாக இருந்திருக்கும் என ஒரு அவதானிப்பு அங்கு ஏற்பட்டது

சில ஆண்டுகளுக்கு முன்பு கூகிள் தேடலில் UNESCO வேர்ல்ட் ஹேரிடேஜ் பார்த்து கொண்டிருந்த போது தமிழ் நாட்டின் தாராசுரம் என்ற இடம் இருந்தது. பின் அதை பற்றி அறிந்த போது ஒரு தமிழனாக அதை அறியாமல் கூட இருந்திருப்பது கண்டு நான் வெட்கப்பட்டேன்

எப்படியாவது தாராசுரம் போய் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அப்போதே துளிர்விட்டு விட்டது






தாராசுரத்தை அடையும் போது நேரம் மாலை 4 மணியாகி விட்டிருந்தது. வானத்தில் மேக மூட்டங்கள் பல்வேறு ஓவியங்களை உருவாக்கியும் கலைத்தும் விளையாடி கொண்டிருந்தன

தூரத்தில் இருந்து பார்த்த போதே ரம்மியமான புல்வெளியின் மத்தியில் கோவில் அழகாக தெரிந்தது. அங்கு நாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த வழிகாட்டி எங்களை அழைத்து கொண்டு போனார்





முதலில் இங்கு காணப்படும் சிலைகள் கலிங்க நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு கற்களால் கட்டப்பட்டவை என்று ஆரம்பித்தார்


ஆட்டுகிடா சண்டை 

கண்ணப்ப நாயனார் உள்ளிட்ட பல்வேறு அடியவர்களின் வாழ்க்கை வரலாறு சுவற்றில் சிற்பங்களாக தீட்டப்பட்டிருந்தது.


ஒரு பெண் ஆணை அடிப்பது போன்ற சிற்பம்


ஒவ்வொரு சிற்பத்துக்குமான கதையை அவர் அழகாக கூறி கொண்டே வந்தார். கடவுளுடன் மக்களின் வாழ்வியல் ,இதிகாசங்கள் என பலவற்றை ஓவியங்களாக அழகாக செய்திருந்தனர்



முழுமையாக பார்ப்பதற்குள் வருண பகவான் தலையிட்டார் .எனவே பாதியில் முடித்து விட்டு கோவிலினுள் சென்றோம். அங்கு நாங்கள் கண்ட காட்சி எங்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது 







எனது இரு விரல் நீல உயரத்தில் தூணில் செதிக்கி இருந்த சிற்பத்தில் சிவபெருமான் பார்வதியுடன் காட்சி தந்தார் . சிவனின் தலையில் பாம்பை பார்க்க முடிந்தது . ஒரு சாண் உயரம் கொண்ட சிவபெருமான் சிலையின் கால் விரல் நகத்தை பார்க்க முடிந்தது . இவ்வாறு அணைத்து தூண்களிலும் எண்ணற்ற நுண்கலை சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைத்தது. இன்று மிக நுண்ணிய ஊசி மற்றும் நுண்ணோக்கிகள் கொண்டு செய்யப்படும் இந்த நுண்கலையை அன்று நம் முன்னோர்கள் எப்படி செய்திருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது

 நடனம் 

அங்கு புகைப்படம் துக்க முடியவில்லை. ஒரு நாள் முழுக்க இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துக்கு திரும்ப ஒரு நாள் வரலாம் என பதில் கூறிக்கொண்டே அங்கிருந்து விடைபெற்று பட்டீஸ்வரம் சென்றோம்


வாலிவதம் 

பட்டீஸ்வரம் துர்க்கை கோவிலில் சில நேரம் இருந்தோம். சில தோழிகள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தனர்

பின் அங்கிருந்து பஞ்சவன் மாதேவி கோவில் சென்றோம். ராஜேந்திரர் தன் சிற்றன்னை பஞ்சவன் மாதேவிக்கு கட்டிய அந்த கோவில் கேட்பாரில்லாமல் மிக சிதிலமடைந்து இருந்தது

எங்கள் நண்பர் ராஜ் அதை பராமரிக்க முயற்சித்து வருகிறார். அங்கிருந்து குடந்தை சென்று இரவு உணவை முடித்து விட்டு மக்கள் சென்னை திரும்ப நான் மட்டும் அங்கிருந்து பஸ் பிடித்து எனது வீட்டுக்கு சென்றேன் .




பி.கு :

என்னது சசி கோவிலுக்கு போறானா ? என்று பலர் ஆச்சர்யத்தில் கேட்டவண்ணம் இருந்தனர்

அவர்களுக்கு என் பதில் என்னை பொறுத்த மட்டில் இது வரலாற்று சுற்றுபயணம் . கடவுளை தேடும் விஞ்ஞானம் அல்ல கலையை தேடிய மெய்ஞானம்.

வீட்டுக்கு சென்றவுடன் கோவில் பிரசாதம் கேட்டனர். நான் கோவிலின் உள்ளே சென்று தரிசிக்கவே இல்லை என சொன்னவுடன் " நாய் வாலை நிமிர்த்த முடியுமா " என்பது போல ஒரு முகபாவம் காண்பித்துவிட்டு சென்றுவிட்டனர்

என்னை பொறுத்த மட்டில் கோவில் கடவுள் வாழும் இடம் என்பதை விட கலையும் நாகரிகமும் குடி கொண்ட இல்லம் .



இலக்கிய சந்திப்பு

இராஜேந்திர சோழர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டுவிழா மற்றும் பொன்னியின் செல்வன் அரங்கேறிய அறுபதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக Cholan Heritage Preservator & Historical research Foundation சார்பில் இலக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





நண்பர்கள் வர சிறிது நேரம் ஆனதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் மழலைகளாய் மாறி மணலில் எங்கள் கலைத்திறனை காண்பித்தோம்

அணைத்து நண்பர்களும் வந்தவுடன் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்தி கொண்டோம். கடைசியாக படித்த புத்தகங்கள் பற்றி சிறிது நேரம் பேசினோம்

நண்பர் வெங்கட், திரு சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் எனும் நாவலை பற்றி பேசினார். அவருடைய பேச்சை கேட்டவுடன் அதை படிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உருவாகி விட்டது



நண்பர் ஹரி சில ஆங்கில நாவல்கள் பற்றி பேசினார். உளவியலின் தந்தை என போற்றப்படும் சிக்மண்ட் பிரைடு எழுதிய Interpretation of Dreams என்ற புத்தகத்தை விரைவில் படிக்கபோவதாக சொன்னார்

பிறகு சந்திப்பின் முதல் தலைப்பான

பொன்னியின் செல்வன் உங்கள் பார்வையில்

பிரமாண்டம்
பிரமாதம்
பிரமிப்பு

நண்பர்கள் பேச தொடங்கினோம். பொன்னியின் செல்வன் படித்து முடித்திருந்த அனைவரும் பொன்னியின் செல்வன் பற்றிய தங்கள் பார்வையை முன்வைத்தனர் . நண்பர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றியும் பிடிப்பதற்கான காரணங்கள் பற்றியும் சொல்லியது மிக சிறப்பாக அமைந்தது




பயணங்களில் ஆர்வம் கொண்ட நண்பர் ராஜ் பன்னீர்செல்வம் கல்கி ஒவ்வொரு இடங்களையும் வர்ணித்து நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதை பற்றி பேசினார் . பொன்னியின் செல்வன் குறித்து நண்பர்கள் பேசிய விதம் அவர்கள் மனதில் எந்த அளவு ஒரு தாக்கத்தை கல்கி ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.இது அங்கு வந்திருந்த வாசிக்காத நண்பர்களிடம் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

எழுத்து சித்தர் பாலகுமாரன் படைப்புகள் பற்றி ஒரு நண்பர் பேசியது சிறப்பாக அமைந்தது
காற்று வாங்க கடற்கரைக்கு வந்திருந்த நண்பர் ரயென் மேக்ஸ்வின் எங்களது பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு எங்களோடு கலந்து கொண்டார். தமிழர்களின் கடலாதிக்கம் குறித்து அறிய வேண்டும் என்று புது தேடலையும் என்னுள்ளே ஏற்படுத்திவிட்டார்.மேக்ஸ்வின் தொ.பரமசிவன் எழுத்துக்களை பற்றி அதிகம் பேசினார்
எங்களுக்கு இடைவேளை வேண்டும் என்பதை ஒரு காளை மாடு துரத்தி உணர்த்தியது.
என்னுடன் வந்திருந்த நண்பர் நரசிம்மனும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்

இது ஒரு நல்ல தொடக்கமாக நிச்சயம் இருக்கும். பின்னால் பெரு விருட்சமாக வளர இருக்கும் இதற்கான விதை இனிதே போடப்பட்டுவிட்டது

February 23, 2014

சென்னை புத்தக திருவிழா-2014

தமிழகத்தின் மிக பெரிய புத்தக கண்காட்சியான சென்னை புத்தக திருவிழா நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த 10.01.2014 வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 37 வது ஆண்டான இந்த ஆண்டு கிட்டத்தட்ட 700 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நான் 11.01.2014 சனிக்கிழமையன்று சென்றிருந்தேன். வழக்கமாக புத்தகம் வாங்க செல்லும்முன் ஒரு பெரிய பட்டியல் தயாரிப்பது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எதுவும் செய்யாமல் வெற்று மனதுடன் சென்றிருந்தேன். உள்ளே நுழைந்து புத்தகங்களை தேட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 4 மணிநேரம் சுற்றியும் அணைத்து பதிப்பக(தமிழ் ) அரங்குகளுக்கும் செல்ல முடியவில்லை.கூட்டமும் குறைவாகவே தென்பட்டதால் அதிகபட்சமான அரங்குகளை சுற்றி பார்த்தேன்.

ஒவ்வொரு புத்தக விழாவிலும் எப்போதும் முதலிடம் பெரும் நூல் பொன்னியின் செல்வன் மட்டுமே. கல்கியை தொடர்ந்து சாண்டில்யன் அதிக அரங்குகளில் இடம்பெற்றிருந்தார். இதில் எனக்கு ஆச்சர்யம் என்னவெனில் இம்முறை ஜெயகாந்தனின் புத்தகங்களை அதிகமாக காண முடியவில்லை. மாறாக பாலகுமாரன் புத்தகங்களை ஏறக்குறைய எல்லா அரங்கிலும் பார்க்க முடிந்தது.

பூம்புகார் பதிப்பகம் கோவி.மணிசேகரன் நூல்களை நல்ல தரமான முறையில் அச்சிட்டிருந்தார்கள். மேலும் எல்லா அரங்கிலும் பிடெல் காஸ்ட்ரோ ,சேகுவேர,லெனின் முதலானவர்களை பற்றிய புத்தகங்கள் அதிகம் தென்பட்டன. வேளாண்மை சார்ந்த புத்தகங்களுக்கு தனி அரங்கே இருந்தது வரலாற்று நாவல்களில் நா.பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன் ,சாண்டில்யன் போன்றோரின் நிறைய அரிய புத்தகங்களை பார்க்க முடிந்தது.


விழாவில் விகடன் மற்றும் காலச்சுவடு இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன. காலச்சுவடு பதிப்பகம் அசோகமித்திரன் ,சுந்தர ராமசாமி போன்றோரின் நாவல்களை அதிகம் வைத்திருந்தது. மேலும் திரு.அசோகமித்திரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தது . காலச்சுவடில் அதிக நூல்கள் இடம்பெற்றிருந்தன. விகடன் பதிப்பகம் கிட்டத்தட்ட 4 அரங்குகளை வைத்திருந்தது .நிறைய புதிய மற்றும் அரிய படைப்புகள் காணப்பட்டன.உதாரணமாக ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா மற்றும் மறைக்கப்பட்ட இந்திய வரலாறு ஆகியவை.

கடைசியாக நூற்றாண்டு விழா கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் சென்று விட்டு திரும்பி விட்டேன் .அங்கு நான் பல மாதங்களாக தேடி கொண்டிருந்த துப்பறியும் சாம்பு கிடைத்தது.


சில முக்கிய அரங்குகள்:
1.காலச்சுவடு
2.பாரதி புத்தகாலயம்
3. மணிமேகலை பிரசுரம்
4.நர்மதா பிரசுரம்
5. பூம்புகார் பதிப்பகம்
6.அல்லயன்ஸ்
7. தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
8. விகடன் பதிப்பகம்
9. குமுதம் பதிப்பகம்
10. புலம் பதிப்பகம்
11. தமிழ் செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
12. தமிழ் இலக்கிய கழகம்
13. பெரியார் புத்தக நிலையம்
14. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்
15. வானதி பதிப்பகம்
16.கிழக்கு பதிப்பகம்
17. கண்ணதாசன் பதிப்பகம்
18.நக்கீரன்
19.பனுவல்

மற்றும் பல

தொழில்நுட்ப புத்தகங்களுக்கு
1.Chand and Chand Company
2. Techno
3. Prentice Hall of India
4. British library council
5. Cambridge university


மற்றும் பல

ஏற்கனவே வாங்கிய படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே இம்முறை குறைவாகவே வாங்கினேன்


நான் வாங்கிய புத்தகங்களின் விபரம்

1.விலை ராணி மற்றும் இந்திரா குமாரி
ஆசிரியர் : சாண்டில்யன்
வகை :வரலாற்று நாவல்கள்
பதிப்பகம் : வானதி

2. காஞ்சி கதிரவன்
ஆசிரியர் : கோவி.மணிசேகரன்
வகை : வரலாற்று நாவல்
பதிப்பகம்: பூம்புகார்

3. அணையா பெரு விளக்கு சே குவேரா
ஆசிரியர் : ஆதனூர் சோழன்
வகை: சே குவேர வரலாறு
பதிப்பகம் : நக்கீரன்

4. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு
ஆசிரியர் :தியோடார் பாஸ்கரன்
வகை : சுற்றுச்சூழியல் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த கட்டுரைகள்
பதிப்பகம் : உயிர்மை

5. கணிதத்தின் கதை
ஆசிரியர்: ஆயிஷா. இரா. நடராசன்
தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்
வகை : கணிதம் தோன்றிய வரலாற்று பதிவு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

6. பெரியார் கல்வி சிந்தனைகள்
வகை : கல்வி குறித்த பெரியாரின் கருத்துக்களின் தொகுப்பு
தொகுப்பு : மார்க்ஸ்

7. சேகுவேராவிம் கடிதங்கள்
வகை : சேகுவேர எழுதிய கடிதங்களின் தொகுப்பு
தொக்குப்பின் தமிழாக்கம் : உமர்
பதிப்பகம் : புலம்

8. திமிங்கல வேட்டை
ஆங்கில நாவலான இது உலகின் தலை சிறந்த பத்து நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது
ஆசிரியர் : ஹெர்மன் மெல்விஸ்
தமிழாக்கம் : மோகன ரூபன்
பதிப்பகம் : புலம்

துப்பறியும் சாம்பு 1&2
வகை : நகைச்சுவை நாவல்
ஆசிரியர் : தேவன்
பதிப்பகம் : அல்லயன்ஸ்


அவ்வளவு தான்

மேலும் சினிமா மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான சில புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.திரு அசோக மித்திரன் ,தியோடார் பாஸ்கரன் மற்றும் பல இளம் எழுத்தாளர்கள் கலந்து

தமிழன் உலகின் முன்னோடி -பகுதி 2

இந்த உலகிற்கு தமிழர்கள் கற்று தந்த பல கலைகளுள் போர்க்கலையும் ஒன்று. ஈவு இரக்கமின்றி உயிர்களை துன்புறுத்தும் கொலைக்களம் எப்படி கலையாகும் என நீங்கள் நினைக்கலாம். அதைப்பற்றி விளக்குவதே இப்பதிவு

தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையினை அகம் புறம் என இருண்டு பிரிவுகளாக பிரித்தனர் .இதில் வீரம் புறவாழ்க்கையில் வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை போருக்கு காரணமாக விளங்குபவை மண்ணாசை,பெண்ணாசை , பொன்னாசை, இதைவிட மோசமான அதிகார ஆசை இவை நான்குமே

தமிழர்களின் போர்முறை மிகவும் நேர்மையானது . எதிரி நாட்டின் மீது படையெடுக்கும் மன்னன் ,போருக்கு முன் முறையாக பறைசாற்றி எதிரிக்கு அறிவித்து ,அவன் தயாரானவுடன்தான் போரை தொடங்குவான். எதிரி அயர்ந்த நேரத்தில் தாக்கி வீழ்த்தும் பழக்கம் நம் மக்களுக்கு கிடையாது. போர் என்பது இரு படைவீரர்களுக்கும் இடையில் தான் நடக்கும். அப்பாவி மக்களுக்கு தொந்தரவு தர கூடாதென போருக்கென்றே தனியாக பாலை நிலங்களை உருவாக்கி வைத்திருந்தனர் . இன்று போர் என்றாலே அப்பாவி மக்கள் மீது மனித உரிமை மீறல்களை நடத்துவது என சில அ"சிங்க" குணம் கொண்ட வீணர்கள் நினைக்கிறார்கள்.காலையில் ஆரம்பிக்கும் போர் மாலையில் முடித்துகொள்ளப்படும்.

தான் கைப்பற்றிய நாட்டை,நாட்டு மக்களை வெற்றி களிப்பில் சூறையாடி மகிழும் பண்பாட்டை கொண்ட அயலார்க்கு அவர்களை தம் குடிமக்களாக கொள்ளும் நம் பழக்கம் சற்று வியப்புதானே


நால்வகை படைகளை தமிழ் மன்னர்கள் கொண்டிருந்தார்கள் என் வரலாறு விளம்புகிறது.தேர்ப்படை ,குதிரைப்படை,யானைப்படை,காலாட்படை இவையே.
நம் போர்கள் நிகழும் முறையை இலக்கியங்கள் கூறுகின்றன.அவற்றை பார்ப்போம்

முதலில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் மன்னன் தன் படையை ஏவி எதிரி நாட்டு பசுக்களை கவர்ந்து வர வேண்டும் .அதற்க்கு கரந்தை என்று பெயர் . அந்த பசுக்களை மீட்க அவற்றின் உரியவர் வருவார் அது வெட்சி எனப்படும்

போரை தொடங்கும் மன்னன் பகை நாட்டை எதிர்த்து நின்று தாக்குதலை வஞ்சி என்றும் பகைவர் கோட்டையை முற்றுகை இடுவதும் முற்றுகை இடப்பட்ட மதிலை காத்தலும் உழிஞை என்றும் அழைக்கப்படும் .இரு மன்னர்கள் களத்தில் இறங்கி போர் புரிவது தும்பை என்றும் அதில் வெற்றி பெறுவது வாகை எனப்படும்

கடற்போரில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும் ,அவர்கள் கடாரம் மாநக்காவரம் .ஸ்ரீ விஜயம் போன்ற பகுதிகளை ஆட்சி செய்ததையும் வரலாறு நமக்கு சொல்கிறது. கடற்போர்களில் பயன்படுத்தப்படும் நாவாய்கள் (போர்கப்பல்) அமைத்தலில் கொண்டிருந்த பொறியியல் நுட்பம் அலாதியானது

போரில் விழுப்புண் பட்டு இறத்தலை பெருமையாகவும் புறமுதுகு காட்டி ஓடி தப்பித்தலை இழிவானதாகவும் கொண்டிருந்தனர் .

பொதுவாக ஆயுதங்களாக வில் ,வேல் ,வாள் போன்றவையே இருந்தது . இதில் அருகில் இருந்து போர் புரிய வாளும் தூரத்தே இருந்து போர் செய்ய வில் மற்றும் வேல் பயன்படுத்தப்பட்டன. இது தவிர கழல்,கண்ணி,தார் ,அடார்,அரம்,அரிவாள் ,ஆயுதக்காப்பு ,கணிச்சிப்படை ,கலப்பை ,கழிப்பிணி ,காழெக்கம்,கிளிகடிகருவி ,குந்தாலி,குறடு ,கேடகம் ,கோடாலி ,சேறுகுத்தி,நவியம் மற்றும் வளரி போன்ற ஆயுதங்களையும், பயன்படுத்தினர் .

போர்கருவிகள் ஊரு விளைவிக்கா வகையில் புலி தோலால் செய்யப்பட்ட உறைகளையும் கேடயங்களையும் பயன்படுத்தினர்

போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக நினைவிடங்களையும் படைவீடுகளையும் அமைத்து அவர்களை பெருமைப்படுத்தினார்கள்.


ஆயுதம் இன்றி உடல் பலத்தால் மட்டும் நடக்கும் மல்யுத்தம் ,விற்போர்,வளரி வீசுதல் மற்றும் சிலம்பம் போன்றவை வீர விளையாட்டுகளாக இருந்திருக்கின்றன.


நம்முடைய மரபில் இருந்த பெரிய பிரச்னை என்னவெனில் மக்களை கடவுளாக உயர்த்தி கூறுவதுதான். அதாவது மனிதர்களாக அவர்கள் செய்த வீரபிரதாபங்களை ,செயற்கரிய செயல்களை உயர்த்தி கூறுவதாக எண்ணி கடவுளரோடு ஒப்பிட்டு கூறுவதுதான். இதன் மூலம் வீர மரபுகள் புராதான மரபுகளாகி நம்ம முடியாத அளவிற்கு பொய் விடுகிறது

உதாரணமாக சிபி, முசுகுந்தன்,காந்தன் ,செம்பியன் மற்றும் மனு நீதி சோழன் போன்றோரின் வீர வரலாற்றை நம் இந்த புராதான மரபு கெடுத்து விட்டது (சிபி - புறாவை காக்க பருந்திடம் தன் தசையை கொடுத்தவன் ,முசுகுந்தன்-அரக்கர்கள் பலரை வென்று இந்திரனை காதவன் ,காந்தன் - குடகு மலையை பிளந்து காவிரி ஆற்றை வரவிட்டவன் ,செம்பியன் - அரக்கர்களின் பறக்கும் கோட்டையை அழித்தவன் ,மனுநீதிச்சோழன் - உங்களுக்கே தெரியும் )


அடுத்த பதிவில் சந்திப்போம்


பி.கு :
ஒரு முறை மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற போது ஒரு வேற்று மாநிலத்து நண்பர் மயிலுடன் நிற்கும் ஒரு மனிதரின் சிலையை காட்டி அவர் யார் என ஒரு தோழியிடம் வினவ ,உடனே தோழி அது முருகன் என பதிலுரைத்தார். மயிலோடு யாரை பார்த்தாலும் நம் மக்களுக்கு முருகர் நியாபகமே வருகிறது. உடனே குறுக்கிட்ட நான் அவர் பேகன் எனவும் அவர் மயிலுக்கு போர்வை தந்த வரலாற்றை சுருக்கமாக சொன்னேன் உடனே அந்த நண்பர் "அவர் தான் முட்டாள்தனமாக செய்திருக்கிறார் என்றால் அதை பெருமையாய் நினைத்து போற்றுகிறீர்களே ." என கேட்க உடனே நான் "அதை அவ்வாறு எடுத்துக்கொள்ள கூடாது .மக்களுக்கு ஒருவர் உதவி புரிவது இயற்கைதான் .ஆனால் மாக்களுக்கும் உதவி புரிந்த நல்லோர்கள் வாழ்ந்த பூமி எங்கள் பூமி " என கூறினேன் .என்ன நான் சொன்னது சரிதானே ????


 



மூலங்கள் :
>தென்னாட்டு போர்களங்கள் -கா.அப்பாதுரையார்
> பத்தாம் வகுப்பு (2006-2010) தமிழ் துணைப்பாட நூல்
>http://www.santhan.com/index...
>http://ta.wikipedia.org/விக்கி
>http://www.thinnai.com/index...

January 18, 2014

இந்திய நாடு என் வீடு



சமீப காலங்களில் நான் ஒரு விதமான பேச்சுக்களை கேட்க முடிகிறது. அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் ,ஆளும் வர்க்கத்தின் போக்கு மற்றும் சமூக பிரச்சனைகள் போன்ற காரணங்களினால் அவர்களின் கோபம் நாட்டின் மீது திரும்புகிறது.சிலர் இன்றைய சூழலால் வெறுப்படைந்து சுதந்திரத்தையும் அதை பெற்றுத் தந்த தலைவர்களையும் ஏசும் போது கோபம் தான் வருகிறது அவர்களுக்கு என்னால் இயன்ற பதிலை தருவது தான் இந்த பதிவின் நோக்கம்



இந்தியா புவியியல் அமைப்பிலும் மக்களின் வாழ்க்கை முறையிலும்  மிக பெரிய வித்தியாசம் கொண்ட நாடு. பல்வேறு சாதி,மத மற்றும் இன வித்தியாசம் கொண்ட பல்வேறு விதமான மக்கள் வாழ்கிறார்கள்.பருவ மற்றும் சீதோசன நிலைகளும் இடத்திற்கு  இடம் மாறுபடுகிறது .எனவே இந்தியா துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.பல்வேறு பழக்கவழக்கங்கள் ,கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழ்வதால் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு எனவும் அழைக்கிறோம் (இவையெல்லாம் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் படித்திருப்பீர்கள் )

இந்தியாவில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்கிறார்கள் என நான் சொல்ல வில்லை .ஆனால் தேச பாதுகாப்பு ,பேரிடர் மற்றும் விபத்துக்களின் போது ஒரு ஒற்றுமை ஏற்படவே செய்கிறது. ஆக மக்களுக்கும் ஒற்றுமை இல்லை என சொன்னாலும் வெறுப்புணர்ச்சி இல்லை என்பது உண்மைதானே .



உலகில் மனிதம் என்ற நிலை கடந்து மத வாத சக்திகளே ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் இந்த வேளையில் உலகில் உள்ள ஒரே மதச்சார்பற்ற நாடு நம்நாடு என்பது நமக்கு பெருமைதானே. இன்று மிக வளர்ந்த நாடுகளும் மத நம்பிக்கைகள் எனும் மடமையினால் மனித வன்முறை செய்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் பகுத்தறிவை  போதித்த மாமனிதர்கள் பலர் வாழ்ந்த நாடு இது


அண்மையில் நடந்த சில விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் மக்கள் பலரை நாட்டின் மீது அதிருப்தி அடைய செய்திருக்கலாம். அதற்க்கு ஏற்றாப்போல் XXXXXXX நாட்டின் பிரபல இதழான  XXXXXX   வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தியாவை பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் சேர்த்திருந்தது. கண்டிப்பாக சில கோர சம்பவங்களை யாராலும் நியாயப்படுத்த முடியாது.ஆனால் குற்ற எண்ணிக்கையை மட்டுமே வைத்து ஒரு நாட்டை குறை கூற முடியாது. பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாக தானே இருக்கும். மக்கள் தொகைக்கும் குற்ற எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதாசாரத்தை பார்த்தால் உண்மை நிலை புலப்படும்.

என்னை பொறுத்தமட்டிலும் நாடு என்பதை நான் அதன் வளங்கள் ,கலாச்சாரம் ,மக்களின் வாழ்வியல் ஆகியவற்றுடன் பார்க்கிறேன் .மாறாக அரசுகள்,அரசாங்கம் ,கேளிக்கைகள் என பார்ப்பதில்லை . உலகின் தொன்மையான நாகரிகங்களான எகிப்திய ,கிரேக்க அரேபிய போன்றவை முழுமையாக அழிந்து விட்டநிலையில் ஏறக்குறைய எஞ்சியிருப்பது நமது மட்டுமே. உலகிற்கு மிளகு முதல் சந்திரசேகர் எல்லை வரை தந்தவர்கள் நாம் மட்டுமே. மற்ற எந்த நாட்டின் மீதும் போர் அறிவித்து அதன் பகுதிகளை ஆக்கரமிப்பு செய்யாத ஒரே நாடு நமது நாடுதான் (பிந்தைய வரலாறு மட்டும் ).மேலும் போர் என மற்றவர் வரும்போது எதிர்த்து நின்று தக்க பதிலடியும் கொடுத்துள்ளோம்.

வானுயர வளர்ந்து  நிற்கும் கோபுரங்கள்,நகரமயமாதலால் பாதிக்க பட்டாலும் தன் பெருமையை இழக்காமல் நிற்கும் கிராமங்கள் திகழும் நாடு. உலகின் பல நாடுகள் விடுதலைக்கு ஆயுதம்தான் ஒரே வழி என்ற நிலையில் இருந்த போது அகிம்சை எனும் போர் முறையை போதித்த நாடு.போர் என்றாலே ரத்தமும் மரண ஒலமுமான வெறித்தனமான கொலைகள் என்றறியப்பட்ட கால கட்டத்தில் போரிலும் தர்மம் பார்த்த புண்ணியவான்கள் வாழ்ந்த நாடு. மருத்துவம் ,பொறியியல் ,இலக்கியம் போன்றவற்றில் பல்வேறு சாதனைகள் செய்தாலும் அதை அடுத்தவர் மீது திணிக்காமல் விட்டதால் இன்று எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் தியாகத்தின் சொருபமாக விளங்குகிறோம்.நாட்டின் பெருமைகளை பற்றி பேசினால் இந்த பதிவு பல பாகமாகிவிடும். இவற்றையெல்லாம் மறந்து விட்டு தற்கால நிலைமையை மட்டுமே எண்ணி நாட்டை தூற்றுவது நியாயமாகுமா ?


இன்னொரு விதமான பேச்சையும் நான் கேட்பதுண்டு. வெள்ளையரிடம் அடிமை பட்டு கிடந்த இந்தியாவில் ஊழல் , லஞ்சம் போன்றவை இல்லை எனவும் வெள்ளையரே இந்தியாவை ஆண்டிருந்தால் இன்னுமும் அதிக முன்னேற்றம் கண்டிருப்போம் என சில அறிவு ஜீவன்கள் செப்பி திரிவதை பார்க்க முடிகிறது. இன்று இவர்கள் இப்படி பேசி திரிய காரணம் அன்று பலர் ரத்தம் சிந்தி வாங்கி கொடுத்த சுதந்திரம்தானே. வெள்ளையர்கள் இரும்புபாதை அமைத்து கொள்ளையடித்தவற்றை எளிதாக கொண்டு செல்லவே ஒழிய நம் மக்கள் சொகுசாக பயணம் செய்ய அல்ல என்பது அந்த மேதைகளுக்கு தெரியவில்லை போலும்.வருடத்தில் இரு தினம் மட்டுமே சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை நினைவு கொள்ள முயலும் நமக்கு சுதந்திரத்தின் அருமை புரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. தனி மனித வசதி வாய்ப்புகளை காரணம் காட்டி விடுதலையின் புனிதத்தை இழிவு செய்வது தகுமோ?காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் நாம் வேலைமுடிந்து வீடு திரும்புவோம் என்ற  நம்பிக்கைக்கு காரணமே சுதந்திரம்தானே. 


பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்



நன்றி வணக்கம்