October 19, 2014

ஓர் வரலாற்று சுற்றுப்பயணம்

அண்மையில் நான் சில நண்பர்களுடன் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்றிருந்தேன். ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டுவிழா மற்றும் பொன்னியின் செல்வன் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொன்னியின் செல்வன் கதையில் வரும் சில இடங்கள், சோழபுரம் மற்றும் தாராசுரம் போன்ற இடங்கள் எங்களது பயண பட்டியலில் இருந்தன


முதலில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றோம் . அதன் வரலாற்று சிறப்பு மற்றும் பெருமைகளை என் நண்பர் மண்ணின் மைந்தர் நரசிம்மன் அழகாக விவரித்தார்






அங்கு முடித்துவிட்டு வந்தியதேவன் அறிமுகமாகும் வீர நாராயணபுரம் ஏரிக்கு (தற்போது வீராணம் ஏரி) சென்றோம் .

குறுகியும் அகன்றும் கிட்டத்தட்ட 12 காத தூரத்துக்கு செல்லும் அதன் அழகிய வனப்பில் மிதந்து கொண்டே சென்றது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது


பிறகு காட்டுமன்னார் கோவிலில் காலை உணவை முடித்துவிட்டு அங்குள்ள புகழ்மிக்க அனத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். மிக பழமையான அந்த கோவிலில் பல சிற்பங்களை பார்த்தோம்




அதன் பிறகு மேல கடம்பூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட்டதற்கான கல்வெட்டுகள் அந்த கோவிலில் உள்ளன.

அங்கிருந்த கல்வெட்டில் அந்த வார்த்தைகளை வெகு நேரம் தேடினோம். கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை படிக்க ரொம்ப சிரமமாக இருந்தது . கடைசியில் நண்பர் ஒருவர் உதவியால் அந்த வார்த்தைகளை கண்டுபிடித்தோம்.அங்கு ஒரு வந்திருந்த ஒரு பெரியவர் பாடல் பெற்ற தலங்களை தரிசித்த தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்



ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான கல்வெட்டு


( இடம் : காட்டுமன்னார் கோவில் )
அகிலனின் வேங்கையின் மைந்தன் படித்ததில் இருந்தே நான் பார்க்க வேண்டும் என ஆவல்கொண்ட இடம் கங்கை கொண்ட சோழபுரம்.



அங்கு சென்று இறங்கி ஆலயத்தினுள் நுழைந்தவுடன் ஒரு மிக பெரிய பிரம்மாண்டம் ஏற்பட்டது. அந்த நந்தியின் உயரத்திலேயே நான் இறங்கி போனேன். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் ஆலயத்தை பற்றி சொல்ல சொல்ல நான் என்னை மறக்க ஆரம்பித்தேன்


ஆகம விதிப்படி இல்லாமல் வானியல் விதிப்படி உருவாக்கப்பட்ட நவக்கிரக சிலையினில் உள்ள விஞ்ஞானம் பிரமிக்க வைத்தது . அங்கிருந்த ஒவ்வொரு சிலைகளிலும் இருந்த அழகையும் ,விஞ்ஞானத்தையும் ,சிற்ப கலை நுட்பத்தையும் அறியும் பொது வியக்காமல் இருக்க முடியவில்லை .








தமிழர்களின் பொறியியல் மற்றும் நுட்பத்திறன் முறையாக ஏன் இந்த தலைமுறைக்கு கொண்டு வரப்பட வில்லை என நாங்கள் செய்த சிறு விவாதம் மிக ஆரோக்கியமாக பல அரிய செய்திகளை அறியும் வகையில் இருந்தது








முகலாய ,ஆங்கிலேய படையெடுப்புகளால் சிதிலமடைந்த பகுதிகளை பார்த்த போது மனதில் ஒரு கணம் ஏற்பட்டது

தஞ்சை பெரிய கோவிலை பிரம்மாண்டம் என்றும் கங்கை கொண்ட சோழபுரத்தை நளினம் என்றும் கூறுவார்கள் என நண்பர் விளக்கி கொண்டிருந்தார்


ஒரு பக்கம் யானையும் ஒரு பக்கம் காலையும் கொண்ட வினோத சிலை 



கோவிலின் கட்டிட அமைப்பு பற்றி சொன்ன அவர் ஐங்கோண அமைப்பில் அடிப்பாகம் ஆரம்பித்து வட்டமாக முடியும் எனவும் அதன் குறுக்கு வெட்டு தோற்றங்களின் மாதிரிகளையும் காண்பித்தார்
ஒரு வழியாக பிரியாத விடை பெற்று அங்கிருந்து மாளிகைமேடு கிளம்பினோம்




தற்கால அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட சோழர்களின் மாளிகை இருந்த இடம் என சொல்லப்படும் மாளிகைமேடு எங்களுடன் வந்திருந்த பெரியவர்களை ஈர்க்கவில்லை. எங்கள் மக்களிடமும் அதை சேதப்படுத்த வேண்டாம் என கூறிவிட்டுத்தான் அழைத்து சென்றோம்








அந்த காலகட்டத்தில் இருந்த செங்கற்கள் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் சற்று இறுக்கமாக இருந்திருக்கும் என ஒரு அவதானிப்பு அங்கு ஏற்பட்டது

சில ஆண்டுகளுக்கு முன்பு கூகிள் தேடலில் UNESCO வேர்ல்ட் ஹேரிடேஜ் பார்த்து கொண்டிருந்த போது தமிழ் நாட்டின் தாராசுரம் என்ற இடம் இருந்தது. பின் அதை பற்றி அறிந்த போது ஒரு தமிழனாக அதை அறியாமல் கூட இருந்திருப்பது கண்டு நான் வெட்கப்பட்டேன்

எப்படியாவது தாராசுரம் போய் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அப்போதே துளிர்விட்டு விட்டது






தாராசுரத்தை அடையும் போது நேரம் மாலை 4 மணியாகி விட்டிருந்தது. வானத்தில் மேக மூட்டங்கள் பல்வேறு ஓவியங்களை உருவாக்கியும் கலைத்தும் விளையாடி கொண்டிருந்தன

தூரத்தில் இருந்து பார்த்த போதே ரம்மியமான புல்வெளியின் மத்தியில் கோவில் அழகாக தெரிந்தது. அங்கு நாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த வழிகாட்டி எங்களை அழைத்து கொண்டு போனார்





முதலில் இங்கு காணப்படும் சிலைகள் கலிங்க நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு கற்களால் கட்டப்பட்டவை என்று ஆரம்பித்தார்


ஆட்டுகிடா சண்டை 

கண்ணப்ப நாயனார் உள்ளிட்ட பல்வேறு அடியவர்களின் வாழ்க்கை வரலாறு சுவற்றில் சிற்பங்களாக தீட்டப்பட்டிருந்தது.


ஒரு பெண் ஆணை அடிப்பது போன்ற சிற்பம்


ஒவ்வொரு சிற்பத்துக்குமான கதையை அவர் அழகாக கூறி கொண்டே வந்தார். கடவுளுடன் மக்களின் வாழ்வியல் ,இதிகாசங்கள் என பலவற்றை ஓவியங்களாக அழகாக செய்திருந்தனர்



முழுமையாக பார்ப்பதற்குள் வருண பகவான் தலையிட்டார் .எனவே பாதியில் முடித்து விட்டு கோவிலினுள் சென்றோம். அங்கு நாங்கள் கண்ட காட்சி எங்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது 







எனது இரு விரல் நீல உயரத்தில் தூணில் செதிக்கி இருந்த சிற்பத்தில் சிவபெருமான் பார்வதியுடன் காட்சி தந்தார் . சிவனின் தலையில் பாம்பை பார்க்க முடிந்தது . ஒரு சாண் உயரம் கொண்ட சிவபெருமான் சிலையின் கால் விரல் நகத்தை பார்க்க முடிந்தது . இவ்வாறு அணைத்து தூண்களிலும் எண்ணற்ற நுண்கலை சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைத்தது. இன்று மிக நுண்ணிய ஊசி மற்றும் நுண்ணோக்கிகள் கொண்டு செய்யப்படும் இந்த நுண்கலையை அன்று நம் முன்னோர்கள் எப்படி செய்திருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது

 நடனம் 

அங்கு புகைப்படம் துக்க முடியவில்லை. ஒரு நாள் முழுக்க இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துக்கு திரும்ப ஒரு நாள் வரலாம் என பதில் கூறிக்கொண்டே அங்கிருந்து விடைபெற்று பட்டீஸ்வரம் சென்றோம்


வாலிவதம் 

பட்டீஸ்வரம் துர்க்கை கோவிலில் சில நேரம் இருந்தோம். சில தோழிகள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தனர்

பின் அங்கிருந்து பஞ்சவன் மாதேவி கோவில் சென்றோம். ராஜேந்திரர் தன் சிற்றன்னை பஞ்சவன் மாதேவிக்கு கட்டிய அந்த கோவில் கேட்பாரில்லாமல் மிக சிதிலமடைந்து இருந்தது

எங்கள் நண்பர் ராஜ் அதை பராமரிக்க முயற்சித்து வருகிறார். அங்கிருந்து குடந்தை சென்று இரவு உணவை முடித்து விட்டு மக்கள் சென்னை திரும்ப நான் மட்டும் அங்கிருந்து பஸ் பிடித்து எனது வீட்டுக்கு சென்றேன் .




பி.கு :

என்னது சசி கோவிலுக்கு போறானா ? என்று பலர் ஆச்சர்யத்தில் கேட்டவண்ணம் இருந்தனர்

அவர்களுக்கு என் பதில் என்னை பொறுத்த மட்டில் இது வரலாற்று சுற்றுபயணம் . கடவுளை தேடும் விஞ்ஞானம் அல்ல கலையை தேடிய மெய்ஞானம்.

வீட்டுக்கு சென்றவுடன் கோவில் பிரசாதம் கேட்டனர். நான் கோவிலின் உள்ளே சென்று தரிசிக்கவே இல்லை என சொன்னவுடன் " நாய் வாலை நிமிர்த்த முடியுமா " என்பது போல ஒரு முகபாவம் காண்பித்துவிட்டு சென்றுவிட்டனர்

என்னை பொறுத்த மட்டில் கோவில் கடவுள் வாழும் இடம் என்பதை விட கலையும் நாகரிகமும் குடி கொண்ட இல்லம் .



இலக்கிய சந்திப்பு

இராஜேந்திர சோழர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டுவிழா மற்றும் பொன்னியின் செல்வன் அரங்கேறிய அறுபதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக Cholan Heritage Preservator & Historical research Foundation சார்பில் இலக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





நண்பர்கள் வர சிறிது நேரம் ஆனதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் மழலைகளாய் மாறி மணலில் எங்கள் கலைத்திறனை காண்பித்தோம்

அணைத்து நண்பர்களும் வந்தவுடன் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்தி கொண்டோம். கடைசியாக படித்த புத்தகங்கள் பற்றி சிறிது நேரம் பேசினோம்

நண்பர் வெங்கட், திரு சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் எனும் நாவலை பற்றி பேசினார். அவருடைய பேச்சை கேட்டவுடன் அதை படிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உருவாகி விட்டது



நண்பர் ஹரி சில ஆங்கில நாவல்கள் பற்றி பேசினார். உளவியலின் தந்தை என போற்றப்படும் சிக்மண்ட் பிரைடு எழுதிய Interpretation of Dreams என்ற புத்தகத்தை விரைவில் படிக்கபோவதாக சொன்னார்

பிறகு சந்திப்பின் முதல் தலைப்பான

பொன்னியின் செல்வன் உங்கள் பார்வையில்

பிரமாண்டம்
பிரமாதம்
பிரமிப்பு

நண்பர்கள் பேச தொடங்கினோம். பொன்னியின் செல்வன் படித்து முடித்திருந்த அனைவரும் பொன்னியின் செல்வன் பற்றிய தங்கள் பார்வையை முன்வைத்தனர் . நண்பர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றியும் பிடிப்பதற்கான காரணங்கள் பற்றியும் சொல்லியது மிக சிறப்பாக அமைந்தது




பயணங்களில் ஆர்வம் கொண்ட நண்பர் ராஜ் பன்னீர்செல்வம் கல்கி ஒவ்வொரு இடங்களையும் வர்ணித்து நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதை பற்றி பேசினார் . பொன்னியின் செல்வன் குறித்து நண்பர்கள் பேசிய விதம் அவர்கள் மனதில் எந்த அளவு ஒரு தாக்கத்தை கல்கி ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.இது அங்கு வந்திருந்த வாசிக்காத நண்பர்களிடம் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

எழுத்து சித்தர் பாலகுமாரன் படைப்புகள் பற்றி ஒரு நண்பர் பேசியது சிறப்பாக அமைந்தது
காற்று வாங்க கடற்கரைக்கு வந்திருந்த நண்பர் ரயென் மேக்ஸ்வின் எங்களது பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு எங்களோடு கலந்து கொண்டார். தமிழர்களின் கடலாதிக்கம் குறித்து அறிய வேண்டும் என்று புது தேடலையும் என்னுள்ளே ஏற்படுத்திவிட்டார்.மேக்ஸ்வின் தொ.பரமசிவன் எழுத்துக்களை பற்றி அதிகம் பேசினார்
எங்களுக்கு இடைவேளை வேண்டும் என்பதை ஒரு காளை மாடு துரத்தி உணர்த்தியது.
என்னுடன் வந்திருந்த நண்பர் நரசிம்மனும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்

இது ஒரு நல்ல தொடக்கமாக நிச்சயம் இருக்கும். பின்னால் பெரு விருட்சமாக வளர இருக்கும் இதற்கான விதை இனிதே போடப்பட்டுவிட்டது