October 27, 2013

இவங்க எழுதுனா எப்படி இருக்கும்

முன் குறிப்பு : எதையாவது வெரைட்டியா யோசிப்போம்னு தோனுச்சு அதன் விளைவே இது. யார் மனதையும் புண்படுத்த அல்ல.
பாட்டி வடைசுட்ட கதையை வேறு சில எழுத்தாளர்கள் எழுதி இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை


முதலில் கதை தெரியாதவர்கள் இருந்தால் (பொறந்த கொழந்தைக்கு கூட தெரியுமே  னு சொல்ல கூடாது )

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார், அந்த நேரம் அங்கு வந்த காகம் பாட்டி அசந்த நேரம் பார்த்து வடையை திருடி செல்கிறது. திருடிய வடையுடன் ஒரு மரத்தில் அமர,அங்கு வந்த நரி காகத்திடம் இருந்து வடையை அபகரிக்க திட்டமிடுகிறது.காகத்தை பாட சொல்ல காகம் பாட வாயை திறக்கிறது.வடை கீழே விழுந்து விட நரி அதை அபகரிக்கிறது.(சாமி சத்தியமா இதுல என்ன நீதி இருக்குனு எனக்கு தெரில )






இதை சாண்டில்யன் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும்னு பார்ப்போம்


அது ஒரு அந்தி சாயும் மாலை பொழுது. வான மகள் செந்நிற சேலை கட்டி மஞ்சள் நிற போட்டு வைத்து புதுக்கோலம் பூண்டிருந்தாள். அங்கு வந்த தென்றல் காற்றில் கொன்றை மலரின் வாசம் மண்ணில் சொர்க்கத்தை சிருஷ்டித்து கொண்டிருந்தது. பட்சிகளும் பறவைகளும் தங்கள் இனத்தினரோடு உரையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன.அந்த சத்தங்களின் வாயிலாக எழுந்த ஒலி யாரோ இன்னிசை பாடுவது போல் இருந்தது (சாண்டில்யன் ஸ்டைல்ன நாலு பக்க வர்ணனைக்கு பிறகுதான் கதை ஆரம்பிக்கும். எனக்கு அவ்வளவு வர்ணனை எழுத தெரில அதனால் இத்தோடு நிப்பாட்டிக்குவோம் ).ஒரு முதுமை பருவமெய்திய கிழவியொருத்தி வடை வடை சுட்டு கொண்டிருந்தாள்.கிழவியின் முகத்தில் இருந்த சுருக்கங்களும் கைகளில் தென்பட்ட நடுக்கமும் அவளுக்கு ஒரு என்பது பிராயம் இருக்கும் என்பதை காட்டின. அவள் உடையும் முகமும் ஏழ்மையை புலப்படுத்தின .அந்த நேரம் பார்த்து ஒரு காகம் வந்து அமர்ந்தது. வானத்தின் கரிய மேகத்தை அச்சில் வார்த்தது போல் ஒரு கரிய உருவம் கொண்ட அந்த காகத்தின் கால்கள் அல்லி தண்டை ஒத்திருந்தன. அதன் மோகனம் மிகுந்த விழிகளிரண்டும் அலைபாய்ந்து கடைசியில் வடையில் நிலைத்தது.******************************************
****************************************************
பொழுது சாயும் அந்த நேரத்தில் அந்த ஒற்றையடி  பாதையில் ஒரு நரி வந்து கொண்டிருந்தது.அதன் செந்நிறமும் கூர்மையான விழிகளும் ஒரு பயங்கரத்தை அங்கே அரங்கேற்றின .அதன் நடையில் ஒரு தந்திரம் குடி கொண்டிருந்தது.************************************************************
*****************************************************************************




இக்கதையை ராஜேஸ்குமார் சொல்லி இருந்தால் ...


அது ஒரு சாயங்கால நேரம். கதிரவன் காணாமல் போக இன்னும் சில நேரம் இருந்தது. அந்த ஊரின் ஒதுக்குபுராமாக இருந்த அந்த வீட்டின் வெளியில் ஒரு பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார். பாட்டியின் முகத்தில் ஒரு எதார்த்தம் குடி கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு காகம் வந்து அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தது.அதன் கண்ணில் ஒரு வித கள்ள பார்வை காணப்பட்டது.பாட்டி திருபிய அந்த கண நேரத்தின் துல்லியமான வினாடியில் தான் அந்த சம்பவம் நடந்தது


அது ஒரு ஒற்றையடி பாதை. இருபக்கமும் புதர்கள் நிறைந்து காணப்பட்ட அது தவறுகள் நடப்பதற்கு ஏற்ற இடம் என்பதை சுட்டி காட்டிகொண்டிருந்தன . திடீரென சருகுகள் அசைந்து யாரோ வருவதற்கான அடையாளத்தை கொடுத்தன. அந்த சூழ்நிலையில் கண்ணில் ஒரு வித விசமப்புன்னகையோடு வாயில் ரத்தம் வழிய ஒரு நரி வந்து கொண்டிருந்தது. ********************************************************
**************************************************************
(இப்படி கதை இரண்டு பிரிவாக வந்து கடைசியில் சஸ்பென்ஸ் உடைந்து இணையும்.நரி அபகரித்த வடையை பிரான்சிக் ஆட்களுடன் வந்து விவேக் கண்டுபிடிக்கிறார் .நரியின் அக்கிரமங்களை ஊருக்கு உணர்த்தி கடைசியில் கைது செய்கிறார் .எப்புடி ???)



இனி கார்டூனிஸ்ட் மதன்


ஒரு கிராமம் ,நகரமயமாதலால் தன் பொலிவினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. அதன் புதிய பரிமாணம் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள எதிர் விளைவுகளை அப்பட்டமாக காட்டி கொண்டிருந்தது (புரியலைன கேள்வி எல்லாம் கேட்க கூடாது ). அங்கு ஒரு வயது முதிர்ந்த பாட்டி வடை சுட்டு கொண்டிருந்தார். அது பருப்பு வடை,பல்வேறு பயிர்கள் கலந்து ஒரு புதிய சுவையை கொடுத்து கொண்டிருந்தது . அங்கு ஒரு காகம் வந்தது.அது மரத்தின் மேல் அமர்ந்திருந்த கோணம் அதன் பேரினம் @@@@@@ என்ற பறவையில் இருந்து வந்ததையும் அதன் முன்னோர்கள் பாலூட்டிகளாக கடலில் வாழ்ந்ததையும் புலப்படுத்தின.
************************************************************************
***********************************************************************

அந்த மலையடிவாரப் பாதை ஆதி காலத்தில் இருந்த இயற்கையின் வனப்பையும் அதன் மேலாண்மையையும் புலப்படுத்தின. அங்கு தன் வாயில் ரத்தம் வழிய வழிய ஒரு நரி வந்து கொண்டிருந்தது.இது tasmaniya வில் வாழ்ந்த பழங்குடி மக்களை ஆங்கிலேயர்கள் வேட்டையாடி கொன்றதை நினைவு படுத்தியது.( இந்த பயணத்தில் வரும் பயங்கரங்கள்  மற்றும்   சம்பவங்கள் உங்கள் மனதை கலவரப்படுத்தலாம் .இளகிய மனம் படைத்தவர்கள்,குழந்தைகள் ,இதயநோய் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்  அப்படிங்கறத add பண்ணிக்கோங்க )
***********************************************************
***********************************************************


தபூ சங்கரின் "வடையை கேட்டால் என்ன தருவாய் "

கதிரவன் இன்னும் உள்ளதால்
வெட்கப்பட்டு நாணிக்கண்புதைத்திருந்தாள் நிலாமகள்
அங்கே ஒரு பாட்டி கதிவரனின் வடிவத்தை
வடைசட்டியில் வார்த்து கொண்டிருந்தார்
நிலவின் மதுரத்தை ரசிக்க
அவர் கண்கள் ஏங்கி கொண்டிருந்தன
அங்கு ஆல மரத்தடியில்
ஒரு அழகிய காகம் வந்து அமர்ந்தது.
அதன் உன்னத முகத்தில்
கண்கள் மட்டும் ஒரு களங்கத்தை விளைவித்தன.
இமை மூடித்திறக்கும் நேரத்தினுள்
காகம் வடையை களவு செய்தது
 இரையை புசித்துவிட்டு அடங்கா பசியுடன்
வளைய வந்தது ஒரு குள்ளநரி
 அதன் கண்கள் ஒரு குரூரத்தை வழங்கின.
******************************************

********************************************
பாட்டை கேட்டு வடையை பெற்றது நரி  


போதுங்க இதுக்கு மேல எழுதினா தமிழ் எழுத்தாளர்களின் அபிமானிகள் என்னை கொலை செய்து விடுவார்கள்




பி.கு :

இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. எந்த எழுத்தாளர்களையும் கிண்டல் செய்ய வில்லை.அவர்கள் பாணியை கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது அவ்வளவு தான். அவர்கள் மேல் நான் பெருமதிப்பு  கொண்டிருக்கிறேன்


பிழை இருந்தால் மன்னித்து பொருத்தருளவும்

  நன்றி வணக்கம்

வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் !!!!

October 26, 2013

தமிழ் rhyme



டிங் டாங் கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டி குட்டி சுண்டெலி
எட்டி எட்டி பார்த்ததாம்
பணியார வாசத்தால்
கிட்ட அருகில் வந்ததாம்
டிங் டாங் கடிகாரம்
தாவி ஓடுதாம் சுண்டெலி

எங்கே செல்லும் இந்த பாதை-பகுதி 4

மொழிப்பற்று


அமுதென்றும் அழகென்றும் உயிரென்றும் உணர்வென்றும் பாடப்பட்ட உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக கருதப்படும் தமிழ் மொழியின் இன்றைய போக்கு மற்றும் அதன் பிற்கால நிலை பற்றிய பதிவு இது. அமிழ்தினும் இனியதான இயல் ,இசை ,நாடகம் ஆகிய முத்தமிழை பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம். தனக்கே உரித்தான இலக்கிய வளங்களோடும் இலக்கண நெறிகளோடும் திகழ்ந்த தமிழின் இன்றைய நிலை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.


முதலில் மொழி என்பதன் வீச்சு தகவல் பரிமாற்றத்தோடு நின்று விடுவதில்லை.அதை தாண்டி நம் அடையாளமாகவும் வாழ்வியலின் பின்னிப்பிணைந்த அங்கமாகவும் விளங்குகின்றது.

"உடம்போடு மெய்வந்து புணர்ந்தால் உயிர்மெய் "

எனும் கூற்றுக்கேற்ப நம் உயிர் மெய் நிலைக்க வேண்டுமானால் தமிழென்னும் மெய் நம்மை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அகன்றுவிட்டால் நாம் உணர்வுகளற்ற யாக்கையுடன் வாழும் மக்கள் ஆவோம். நம் மகிழ்ச்சி ,சோகம் ,சினம்,இகழ்ச்சி ,அமைதி என் எல்லாவற்றிலும் மொழியின் தாக்கம் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இன்றைய நிலவரப்படி நூற்றுகணக்கான மொழிகள் அழிந்து விட்டன மற்றும் அழிந்து வருகின்றன. அந்த மொழியில் உன்னத இலக்கியங்கள் இருந்திருக்கலாம் மற்றும் மொழி ஆர்வலர்கள் இருந்திருப்பார்கள்.ஆயினும் அந்த மொழிகள் ஏன் அழிந்தன ?

ஒரு மொழியின் ஆளுமை அல்லது ஆயுள் பதிய படைப்புகளினாலோ இலக்கிய ஆர்வலர்களினாலோ தீர்மானிக்கபடுவதில்லை. பாமர மக்களால் பேசப்படும் போதுதான் அதன் ஜீவன் வாழும் நிலைக்கும். [ரசிகன் இல்லையெனில் கலைகள் இல்லை கலைஞனும் இல்லை அதேபோல் வாசகன் இல்லையெனில் இலக்கியங்கள் இல்லை எழுத்தாளனும் இல்லை என இருக்க மக்களால் பேசப்படவில்லை எனில் மொழி மட்டும் எங்கனம் நிலைக்கும் ]


இன்றைய இந்திய மொழிகள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை ஆங்கில கலப்பு . ஆங்கிலத்தின் ஆதிக்கம் இந்திய மொழிகளில் நேரடியாக பிரதிபலிக்கிறது. ஆனால் அது தவிர்க்க முடியாதது .இதனால் நம் மொழிகள் தங்கள் பாரம்பரியத்தை இழக்க நேரிடுகிறது. பல சொற்கள் வழக்கத்திலிருந்து மறைந்து மொழியின் எல்லையை குறைக்கின்றன.மக்களிடம் அதிகரிக்கும் ஆங்கில மோகம் தமிழ் படிப்பதை கவுரவ குறைவாக கருத வைக்கிறது. ரயில் பயணங்களின் போது செய்தித்தாள் வார இதழ்களை தாண்டி ஏதேனும் தமிழ் புத்தகம் படித்தால் நம் சக பயணிகள் விசித்தரமாக பார்க்கிறார்கள். பெற்றோர்கள் கூட தம் குழந்தைகளின் அம்மா எனும் அழைப்பைவிட ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பில் ஆனந்தம் கொள்கிறார்கள்.என் நண்பர்கள் சிலர் கூட English medium என்று பெருமையாக கூறும் போது எனக்கு சிரிப்பு தான் இருக்கும். இன்றைய நவீன யுகம் தமிழில் உயர்கல்வி பயில்பவர்களை விநோதமாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.


"தமிழினம் உள்ளவரை தமிழ் வாழும் " என நம் சான்றோர்கள் சிலர் கூறுகிறார்கள். தமிழன் எனும் அடையாளத்தை இழந்துவிட்டு மொழி தெரியாமல் நம் சந்ததிகள் வெளிநாட்டிலும் நம் நாட்டிலும் வாழும் போது மொழி எப்படி நிலைக்கும். இன்று வாழும் பல இனங்கள் தங்கள் மொழியை இழந்து நிற்கின்றன.ஆக தமிழினம் முழுதும் அழியும் வரை தமிழ் வாழும் என கூறும் அளவுக்கு நமக்கு மொழிப்பற்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

தற்போதைய நம் கல்விமுறை மொழியை மொழியாக நம்மை படிக்க விடுவதில்லை. ஒரு பாடமாக மட்டுமே பார்க்க படுகிறது . இவ்வாறு பாடமாக படிக்கப்படும் போது சுவை ,தனித்தன்மை ,சாராம்சம் போன்ற அடிப்படை தன்மைகள் எடுத்து கொள்ளப்படமாட்டா. இதனால் மொழியின் மீது ஒரு காதலோ பற்றோ ஏற்படாது. தமிழுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை .நவீன இலக்கியங்கள் செய்தலும் மாநாடுகள் சொற்பொழிவுகள் நடத்துவதும் இலக்கியவாதிகளை ஊக்கபடுதுவது மட்டும் போதாது .
குழந்தைகளிடம் தமிழின் மீதான ஆர்வத்தை ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் தமிழை மொழியாக கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி ஆய்வகம் (Language lab ) அமைத்து மொழித்திறனை ஊக்குவிக்கும் விதமாக கவிதை ,கதை கட்டுரை மற்றும் வார்த்தை விளையாட்டுகள் கற்பிக்க வேண்டும். தமிழை ஏட்டுசுரைக்காயாக உண்ணாமல் அதன் சுவையுனர்ந்து உன்ன வைக்க வேண்டும். மாணாக்கர்களிடம் நடத்தப்படும் இம்மாதிரியான போட்டிகள் மற்றும் தேர்வுகள் அவர்களில் ஆர்வத்தை அதிகரிப்பதோடு மொழியில் அவர்களின் சுயசிந்தனையை வளர்க்க உதவும். இதன்மூலம் மாணாக்கர்களிடம் தமிழின் மீது அதீத ஆர்வம் ஈடுபாடு போன்றவை ஏற்படும்.மேலும் தமிழ் பாட வேளைகளில் நல்ல தமிழ் உரையாடலை உறுதி செய்யலாம்.




இன்றைய நிலையில் தமிழ் முன்னேற்றம் என்பது பிற மொழி கலவாமல் செந்தமிழ் பேசுவது என்பது அல்ல.அது மிக கடினம் .( இன்றைய நவீன சூழல் மற்றும் நம் தமிழறிவு இவற்றை கொண்டு பார்க்கும் போது இது மிக மிக கடினம் ).செந்தமிழ் பேசினால் தான் மொழி நிலைக்கும் என்பதில்லை. இங்கு முன்னேற்றம் என்பது தமிழ்பற்றை ,ஈடுபாட்டை மட்டுமே குறிக்கும் . இவ்வாறு குழந்தைகளிடம் விதைக்கப்படும் தமிழார்வம் வளர்ந்து மரமாகி தமிழ் ஆண்டாண்டு காலங்கள் நிலைத்திருக்க உதவும்
பி.கு :
இந்த பதிவு இன்றைய நிலையை அப்படியே சொல்லவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே ஒழிய யாரையும் குற்றம் சாட்டவோ குறை கூறவோ எழுதப்படவில்லை .அவ்வாறு நீங்கள் எண்ணினால் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்

பாதை நீளும்

நம் பயணங்களும் தொடரும்

நன்றி வணக்கம்


அடுத்த பதிவில் சந்திப்போம்

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ் !!!

எங்கே செல்லும் இந்த பாதை - பகுதி 3

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் சினிமா பற்றிய ஒரு சிறு பதிவு. இந்த நூறு ஆண்டுகளில் தமிழ் சினிமா பல்வேறு தடைகற்களை கடந்து தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறது.பேசாத சித்திரமாக ஆரம்பித்து நாடகத்தை முதுகெலும்பாக கொண்டு வளர ஆரம்பித்தது.முத்தமிழ் மூன்றின் உதவியால் மக்கள் மனதில் ஆழமாக வேருன்றவும் செய்தது.பின் அதன் வளர்ச்சி திரைகதை ,படமாக்கும் விதம் ,ஒலி /ஒளி அமைப்பு என பலவற்றிலும் கண்டு இன்று உன்னத நிலையில் உள்ளது

ஆனால் இந்த பதிவு சினிமா வளர்ச்சியை பற்றியது அல்ல. சினிமாவின் சமூக பொறுப்புணர்ச்சியை பற்றியது.ஒரு சாதாரண பொழுதுபோக்கு அம்சம் என்பதை தாண்டி வாழ்வியலின் ஒரு அங்கமாக மக்களோடு ஒன்றி விட்டது சினிமா. அது கலையா ?? அல்லது வணிகமா ?? என தெரியவில்லை ஆனால் ஆயிரக்கணக்கானோரின் உணர்வுகளை கட்டி போட்ட மாபெரும் சக்தியாக உள்ளது. ஆனால் இந்த சக்தியால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா ??


இன்றைய சினிமாவின் போக்கு எனக்கு விசித்திரமாக உள்ளது. ஒரு ஆரோக்கியமான சினிமா நம்மை அதனுள் இழுத்து ஒரு உணர்வுபூர்வமான பயணத்தை நமக்கு அளிக்க வேண்டும். இந்த உலகத்தை புறந்தள்ளி வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கும் அனுபவத்தை நமக்கு அளிக்க வேண்டும். ஆனால் இன்றைய சினமா ஏதோ காமெடி ஷோ பார்ப்பது போல் உள்ளது ,நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் செய்யும் செய்கையை பார்த்துவிட்டு வெறுமென சிரித்துவிட்டு வரவேண்டி உள்ளது. சில படங்களின் தாக்கம் என் மனதில் பல நாட்கள் ஓடி கொண்டிருக்கும். இன்று அவ்வாறு எடுக்கப்படும் படங்கள் ஏதோ மாற்றுத்திரை அல்லது ஆவணப்படம் (documentry ) என்ற ரீதியில்தான் மக்களால் பார்க்க படுகின்றன. இதற்க்கு முக்கிய காரணம் மக்களின் ரசனை.

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத கதைகளங்கள் ஏராளம். தமிழ் சினிமா தனக்கென ஒரு வட்டத்தை எல்லையாக கொண்டு அதனுள்ளே பல பாதைகளை வகுத்துக்கொண்டு பயணித்து வருகிறது. இதனால் மக்களின் ரசனை விசாலமானதாக இல்லை. தலைப்பில் இருந்து விலகி செல்லவில்லை. இவற்றை சொல்லாமல் இருக்க முடியாது. இனி தலைப்புக்கு வருவோம். தமிழ் சினிமா தன் பொறுப்புகளை எவ்வாறெல்லாம் தட்டி கழிக்கிறது என்று பார்ப்போம்.தற்போது வரும் சில படங்களில் பள்ளி மாணவியான கதாநாயகியும் ,கதாநாயகனும் காதலிப்பதுபோலும் மணமுடிப்பதுபோலும் காட்சிகள் வருகின்றன. பள்ளியில் படிக்கும் (minor) பெண் காதல் காமம் காட்சிகளில் ஈடுபடுவது போல் காட்டுவது சமூகத்துக்கு கற்பிக்கும் தவறான பாடம் தானே ? காதலுக்கும் பருவ கிளர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் ஏன் சொல்லவில்லை ?. தற்போது காதல் என்ற பெயரில் காட்டப்படும் காட்சிகள் கூட முகம் சுழிக்க வைக்கின்றன.தமிழ்ப்பெண் பற்றி கூறும் அவர்கள் ஒரு சராசரி தமிழ்பெண்ணை காட்சிபடுத்தவில்லை என்பது என் எண்ணம்.மேலும் தற்போது வரும் சில படங்களில் ஆசிரியர்களை அதிகம் அவமதிப்பது போல் காட்டுவதும் வருந்ததக்கது. அன்றைய சினிமா நாடகத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. நாடகத்தில் ஒப்பனையுடன் கூடிய நடிப்பும் பாட்டும் இருந்தால் போதும். ஆனால் இன்றைய சினிமாவின் வரையறை வேறுமாதிரி உள்ளது. இன்றைய சில படங்கள் எதார்த்த உலகை காட்டுகின்றன.எதார்த்தமான மக்களோடு அவர்கள் வாழ்வியலை சொல்லும் படங்கள் எதிர்காலத்தில் எவ்வளவு பேரால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரியவில்லை. ஒரு படத்தின் வெற்றி அது வாங்கும் விருதுகளை மட்டும் பொறுத்ததல்ல ,அதன் வணிக ரீதியிலான வெற்றி ,அதிக மக்களை சென்று சேர்வது என்பதிலும் உள்ளது என்பது என் கருத்து. அதுவும் பெரிய நிறுவனங்கள் சினிமாவில் முதலீடு செய்ய ஆரம்பித்த பிறகு சிறு முதலீட்டு படங்களின் வெற்றி குதிரைகொம்பாக மாறிவிட்டது . பெண்களையும் குழந்தைகளையும் வைத்து அவர்கள் உணர்வுகளை மீட்டி எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் மிக குறைந்து வருவது துரதிஷ்டவசமானது. உலக தரத்திலான சினிமா என்பது ஹாலிவுட்டை மட்டும் கொண்டு சொல்லபடுகிறது. ஈரானிய படங்கள் போன்ற பிற நல்ல தரத்திலான படங்கள் புறக்கணிக்க படுகின்றன.

தற்போதைய படங்களின் நகைச்சுவை காட்சிகள் தரம் மெய்சிலிர்க்க வைக்கிறது (!!!!). இரட்டை அர்த்ததில் இல்லாமல் நேரடியாக அந்த அர்த்தத்திலேயே வசனங்கள் வருவது கொடுமை. தற்போதைய காலகட்டத்தில் எந்த படமும் மக்களின் எந்தவொரு அடிப்படை பிரச்சனைகளை பற்றியும் பேச வில்லை. கடந்த சில ஆண்டுகளில் எத்தனை படங்கள் மின் பற்றாக்குறை ,தமிழ் ஈழம் ,மீனவர் பிரச்சனை .அணு உலை போராட்டங்கள் குறித்து பேசின. வேறு காரணங்களுக்காக சென்சார் மற்றும் இதர பிரச்சனைகளை சமாளிப்பவர்கள் சமூக பிரச்சனைகளை சொல்வதன் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிக்க விரும்புவதில்லை. தற்போது கருத்துசுதந்திரம் இல்லையென சொல்லும் இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகளை பற்றி ஏன் பேசவில்லை.

இசை என்பது மனதை வருடி சாந்தபடுத்திய காலம் போய் இன்று மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவதாக உள்ளது . பாடல் வரிகள் பற்றி சொன்னால் இக்கட்டுரை முடிவிலி ஆகிவிடும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் " என பாரதி பாடிய தமிழ் மொழியின் இன்றைய பாடல்களின் கொலைவெறியை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பெரிய நடிகர் ஒருவரின் அறிமுக பாடலொன்றில் வரும் வரி இது "தாய்ப்பால் உனக்கு கொக்கோ கோல (coca cola )" .ஈடு இணையற்ற அமிர்தமான தாய்ப்பாலை ஒரு ரசாயன கலவையோடு ஒப்புமைப்படுத்துவது சரியா ?.இப்படி வரிகளை மேற்கோள் காட்டினால் நிறைய சொல்லலாம். இங்கு யார் சமூக பொறுப்புணர்ச்சியை விட்டது.

இனி வரும் சினிமாவில் நம் அடையாளங்கள் .பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை மறைந்து விடும் அபாயம் உள்ளது. முற்போக்கான சிந்தனைகளோ ,சமூக விழிப்புணர்ச்சியோ இல்லாமல் சிரித்து மகிழும் ஒலி /ஒளி சித்திரமாக மட்டுமே சினிமா இருக்கும்.

என் கவலை சமுதாய முன்னேற்றத்துக்கு உதவாவிட்டாலும் சமூக சீர்கேடுகளுக்கும் ,பிற்போக்கான சிந்தனை வாதங்களுக்கும் ,மக்களின் வேற்றுமைகளுக்கும் காரணமாகி விடுமோ என்பதுதான். அதற்க்கு தீர்வு வணிக ரீதியில் மட்டும் சிந்திக்காமல் ரசிகனின் முன்னேற்றம் சமுதாய நிலைமை பற்றியும் நெறியாளர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்

பதிவின் நீளம் அதிகமானதுக்கு மன்னிக்கவும்

பி.கு :

இப்பதிவின் பயணம் இடையில் திசை மாறுவது போல் தோன்றலாம் . என் மனதில் நெடு நாளாக இருந்தவற்றை கொட்டிவிட்டேன் . (வழக்கம்போல் ) யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதியுள்ளேன் .அப்படி காயப்படுத்தினால் நான் மன்னிப்பு கோருகிறேன். இதுவரை சினிமா பற்றி நான் எந்த பதிவும் எழுதியதில்லை. இந்த பதிவுக்கு வித்திட்ட இனிய நண்பர் Seenivasan Balakrishnan அவர்களுக்கு நன்றிகள் பல


அடுத்த பதிவில் சந்திப்போம்

நன்றி வணக்கம்

தமிழ் அறிவோம் பகுதி -6 பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்

பிள்ளைத்தமிழின் பத்து பருவங்கள்
ஆண் குழந்தையாய் இருந்தால்:

1. காப்பு: எப்பவும் முதலில் ‘காப்பு’ சொல்லிட்டுதான் தொடங்கணும்.

2. செங்கீரை : செங்கீரை என்பது ஒரு வகைக் கீரை. பிறந்த ஐந்து மாதத்தில் குழுந்தைக்குக் கழுத்து நிற்கும். மெல்ல, கீரையைப் போலத் தலையை எடுத்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைக்கும்; பார்க்கும். அப்படிப் பார்ப்பதை வருணித்துப் பாடுவார்கள்.

3. தால் : தால் என்றால் நாக்கு. தாலை ஆட்டி ஒள ஒள ஒள ஒள ஒள ஒள ஆயி என்றெல்லாம் சப்தம் எழுப்பிப் பாடுவது தாலாட்டு. குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது.

4. சப்பாணி : சப்பாணி என்றால் ‘கைகளைக் கொட்டுவது’ என்று பொருள். கொஞ்சம் வளர்ந்து எழுந்து உட்காரும் குழந்தை, கைகளைக் கொட்டும். அந்தப் பருவத்தைப் பாடுவது சப்பாணிப் பருவம்.

5. முத்தம்: குழந்தையை முத்தம் தரச் சொல்லிக் கேட்பது.

6. வாரானை: எழுந்து நடக்கத் தொடங்குகிறது குழந்தை. ‘வாவாவா வாவாவாவா,’ என்று ஒவ்வொரு அம்மாவும் தன்னை நோக்கி வரும்படியாகத் தன் குழந்தையைக் கை நீட்டிக் கூப்பிடுவாள் இல்லையா, அந்தப் பருவம் இது.

7. அம்புலி: நிலாவைக் காட்டிச் சோறூட்டுதல்.

8. சிறுபறை: கையில் சின்னதாக ஒரு மேளத்தையும், இன்னொரு கைக்கு ஒரு குச்சியையும் (குணில் என்று சொல்வார்கள்) கொடுத்துவிட்டால், அதுபாட்டுக்கு கொட்டிக்கொண்டு விளையாடும்.சப்பாணி கொட்டுவது, சிறுபறை கொட்டுவது எல்லாமே, சின்னக் கைகளுக்குத் தரப்படும் பயிற்சிகள்தாம்.

9. சிற்றில்: கொஞ்சம் வளர்ந்த குழந்தை மணலால் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்வது.

10. சிறுதேர்: எந்தக் குழந்தைக்கும் வண்டி உருட்டப் பிடிக்கும். சின்னதாக ஒரு தேர் பண்ணிக் கொடுத்துவிட்டால் அதை இங்கேயும், அங்கேயும் இழுத்துக் கொண்டு நடை பழகும். அந்தப் பருவம் இது.

பெண் குழந்தைகள் என்றால் கடைசி மூன்றுக்குப் பதிலாக

8. கழங்கு ஆடுதல்,

9. அம்மானை ஆடுதல்,

10. ஊஞ்சல் ஆடுதல்

என்று வரும்.

மன்னன் மகள்- புத்தகம் பற்றிய பேச்சு

மன்னன் மகள் புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய மன்னன் மகள் என்ற வரலாற்று புதினம் படித்தேன்.தன் பிறப்பின் மர்மத்தை தேடி புறப்படும் ஒரு வாலிபன் தன் புத்திசாலிதனத்தால் எப்படி பல பேரின் வாழ்கையை மாற்றுகிறான் என்பதே கதை.பொதுவாக ராஜதந்திரம் மிகுந்த அமைச்சர் பெருமக்களால் ஆட்டுவிக்கப்படும் கதாநாயகன் என்று இல்லாமல் இதில் கதாநாயகன் தன் சாதுர்யத்தால் எப்படி பல பேரை மாற்றுகிறான் என்பதை சுவையாக கூறி இருந்தார்  சாண்டில்யன்.


நாகை சூடாமணி புத்த விகாரத்தில் வளர்க்கப்பட்ட கரிகாலன் எனும் வாலிபன் தன் பிறப்பின் ரகசியத்தை அறிய தஞ்சை நோக்கி பயணமாகிறான். அங்கு அவன் துறவி வேடத்தில் உள்ள சேர ஒற்றனை  சந்திக்கிறான். அவன் சோழரிடம் இருந்து திருடிய செங்கதிர் மாலை சந்தர்ப்பத்தால்  கரிகாலனிடம் சிக்குகிறது. ஒற்றனின்  தவறான வழிகாட்டுதலால்அரையன் ராஜராஜன் பாசறைக்கு செல்ல வேண்டிய அவன்  வேங்கி  நாடு செல்ல அங்கு காவலர்கள் துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி வசந்த மண்டபத்தில் தஞ்சம் அடைய வேங்கி மன்னன் மகள் நிரஞ்சனா தேவியை சந்திக்கிறான். வேங்கி நாட்டில் சோழர் ஆதரவுடன் நரேந்திரனும் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் ஆதரவுடன் விஜயாதிதணும் போட்டியிட , ஜெயசிம்மன் நரேந்திரனை மன்னனாக்கி மக்கள் அவனை வெறுக்கும்படி செய்ய முயல்கிறான்.இதை முறியடிக்க நிரஞ்சனா தேவிக்கு உதவுவதாக வாக்களிக்கிறான் கரிகாலன். தன் சாதுர்யத்தால் சோழ தூதர் பிரம்ம மாராயர் மற்றும் ஜெயசிம்மன் ஆகியோரை நம்ப வைக்கிறான். மேலும் அரிஞ்சயன் எனும் புல்லுருவியையும்  அடியாளம் காண்கிறான் .
விஜயாதித்தனை சந்திக்க மேலை சாளுக்கிய நாடு செல்ல அங்கு அரையன் ராஜராஜன் மகள் செங்கமல செல்வியை சந்திக்கிறான். அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கரிகாலன் அரையன் ராஜராஜன் பாசறைக்கு செல்கிறான். அங்கு அவனை தன் மகன் போல பாவிக்கும் அரையன் ராஜராஜன் போர் பயிற்சிகளையும் வியுகங்களையும் கற்று தருகிறார். வில்வித்தை கற்று தரும் செங்கமல செல்வி கரிகாலனிடம் மையல் கொள்கிறாள். ராஜேந்திர சோழர் தன கங்கை படையெடுப்பை தொடங்க முதலில் சாளுக்கியருடன் போர் செய்ய வந்திய தேவரை அனுப்புகிறார். போர் மந்திராலோசனையில் போர் தேவையில்லை என கூறும் கரிகாலன் சோழ படை தடங்கல் இன்றி முன்னேற வேங்கி நாட்டை விஜயாதிதனுக்கு தாரை வார்க்க அவனை நிரஞ்சனா வெறுக்கிறாள். சோழ பெரும்படை மாசுணி தேசத்தை முற்றுகையிட அந்த மன்னன் கோட்டைக்குள் இருந்து வெளி வராமல் சமாளிக்கிறான் . உணவு பொருள் உள்ளே செல்லும் ரகசிய பாதையை அறியும் கரிகாலன் தன் சிறு படையுடன் உணவு கொண்டு வருபவன் போல் உள்ளே நுழைகிறான். அந்நாட்டின் தளபதி பிரதாபத்திரன் கரிகாலன் சோழ படை தலைவன் என்பதை அறிந்து கொண்டு உன் பிறப்பின் ரகசியம் வேண்டுமானால் சோழர்களின் போர் வியூகத்தை சொல்ல சொல்கிறான். தவறான வியுகத்தை சொல்ல சோழர் படை பிரதாபத்திரன் படையை நிர்மூலமாக்குகிறது. தான் இறக்கும் தருவாயில் கரிகாலனிடம் அவன் சமந்தப்பட்ட தனக்கு தெரிந்த உண்மையை சொல்லிவிட அரையன் ராஜராஜன் கலங்குகிறான். பின் கங்கை வரை பல தேசத்தை வெல்லும் சோழர் படையிலிருந்து சோழ நாட்டுக்கு கரிகாலன் விஜயம் செய்ய அவனை அரச மரியாதையுடன் வரவேற்கும் ராஜேந்திரன் அவன் தோற்றத்தை வைத்து அவன் அரச பரம்பரையை சேர்ந்தவன் என முடிவு செய்கிறான் . கரிகாலன் தாய் மணிமேகலையை கொண்டு கரிகாலன் பற்றிய மர்மத்தை அறிய முயலும் ராஜேந்திரனின் முயற்சிகள்  பலனளிக்காமல் போகிறது . கரிகாலனிடம் அவன் பிறப்பின் ரகசியத்தையும் அது உடைந்தால் சோழ மண்டலத்தில் ஏற்படும் பெருவிளைவுகளையும் கருத்தில் கொண்டு அதை அம்பலபடுத்தகூடாது என சத்தியம் வாங்குகிறார் அவன் தாய் .

வேங்கி  நாட்டுக்கு படையெடுத்து செல்லும் கரிகாலன் அங்கு நரேந்திரனை அரியணையில் அமர வைக்கிறான் . மேலும் தன் நிலையை எடுத்து கூறி நிரஞ்சனாவின் காதலை புறக்கணிக்க முயல ,அவள் கரிகாலனுக்காக தன் நாட்டையே விட்டுவிட்டு வருகிறாள் . இறுதியில் ரகசியத்தை காக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் ??? செங்கமல செல்வியின் நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே இதன் முடிவு


தான் யாரென்று அறியாமல் வரும் இளைஞன் கரிகாலன் தன் அறிவு கூர்மையால் சூழ்நிலைகளை சமாளிப்பதும் மற்றவர்களை நம்ப வைப்பது என பிரம்மிக்க வைக்கிறார். கடைசியில் தான் யார் என்பது தெரிந்தும் நாட்டின் பிற்கால வாழ்வை முன்னிட்டு தியாக உணர்வோடு எடுக்கும் முடிவு நயம். கரிகாலனிடம் காதல் கொண்டு அவனை நம்பி அவன் செயல்களால் அதிர்ந்து வெறுக்கவும் முடியாமல் விரும்பவும் முடியாமல் தவித்து கடைசியில் கரம் பிடிக்கிறார். காலனும் கண்டு அஞ்சும் காவலன் எனும் பெயர்பெற்ற சோழ சேனாதிபதி அரையர் ராஜராஜன் , கரிகாலனிடம் ரகசியத்தை சொல்ல முடியாமல் தவிப்பது அருமை. வீரம் மிகுந்த பெண்ணாக செங்கமல செல்வி ,கடைசி வரை கரிகாலனை வெறுக்கும் பிரம்ம மாராயன்  என பல கதாபாத்திரங்கள் கதைக்கு மெருகூட்டுகின்றன.

சேரன் போரில் தோற்று  பறிகொடுத்த செங்கதிர் மாலையை பறிகொடுக்கும் சேர ஒற்றன் கடைசி வரை கரிகாலனை தொடர்கிறார் .


புத்திசாலித்தனம் அரசியல் மற்றும் போர்களில் எத்தகைய பங்கை ஆற்ற முடியும் என்பதற்கு இந்நூல் மிக சிறந்த உதாரன்ம்

சாண்டில்யனின் இரண்டு நாயகிகள் என்ற யுக்தி இந்த நாவலிலும் தொடர்ந்துள்ளது
பி .கு :

தவிர்க்க முடியாத காரணங்களால் பதிவு காலதாமதமாகிவிட்டது. மன்னன் மகள்  ஒரு நல்ல பயணத்தை கொடுத்தது. வெகு விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!!

வசந்த காலம்,மாதவியின் மனம்- புத்தகம் பற்றிய பேச்சு

சென்ற வாரம் சாண்டில்யன் அவர்கள் எழுதிய இரு நாவல்கள் படித்தேன்

1. மாதவியின் மனம் :

 தென்னிந்தியாவின் அலெக்ஸான்டார் என்று அழைக்கப்பட்ட சமுத்திரகுப்தர் பல்லவ மன்னன் விஜயக்கோபன் மீது படை எடுத்த போது சோழ இளவரசனான சேந்தன் தனது ராஜதந்திரத்தால் காஞ்சியை அழிவிலிருந்து காப்பாற்றினான். ஒரு மாணவனாக காஞ்சியில் நுழைந்து மாதவி என்ற மங்கையுடன் காதல் வயபபடுகிறான். கடைசியில் எவ்வாறு அவன் காஞ்சியை அழிவிலிருந்து காப்பதோடு  எப்படி மாதவியை கரம் பிடிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திருப்பங்கள் உடணும் காதல் வர்ணனைகளுடணும் அழகாக சாண்டில்யன் சொல்லி இருந்தார்


2. வசந்த காலம்:

சேரமான் இரும்பொறை பெருந்திரல் சென்னியின் மீது படை எடுக்கிறான். அவனிடம் படை தளபதியாக உள்ள இளந்திரையன் தனது முறை பெண்ணான சென்னியின் மகளை காதலிக்கிறான். சேரமானின் படையெடுப்பில் இருந்து சென்னியின் நாடு தப்பியதா இளந்திரையன் காதல் கைகூடியதா என்பது கதையின் முடிவு.

October 19, 2013

நான் நாத்திகனா - நீக்கப்பட்ட பாகங்களுடன் கூடியது (இரண்டாம் பாகம்)

மு.கு: இது தனிபதிவல்ல நான் நாத்திகனா என்பதன் வெட்டப்பட்ட (edited ) பாகங்களை ஒன்றிணைத்து கொண்டுவரப்பட்டது தான் இது.ஆகவே இதில் ஒரு தொடர்ச்சி இருக்காது . சபை நாகரிகம் கருதி சிலவற்றை மட்டுமே சொல்லி இருக்கிறேன்

மறவாமல் பின்குறிப்பையும் படித்து விடுங்கள்


மக்களிடம் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிரிவினைகளுக்கும் காரணமாய் விளங்குபவை சாதியையும் மதமும்.அதன் ஆணிவேர்தான் கடவுள்.வேரை தகர்த்தால் தான் சாதியம் எனும் மரம் வீழும் என்றார் ஐயா பெரியார் .மக்களிடம் ஏற்படும் உயர்வு-தாழ்வுகளுக்கு அறிவு ,கலை ,செல்வம் ,வீரம் போன்றவை காரணமாய் இருக்கலாம் .ஆனால் பிறப்பால் ஒருவனை உயர்வு -தாழ்வு என பிரிப்பது எப்படி அறிவுடமையாகும் எனும் கேள்வி எப்போதும் என்னுள்ளே இருக்கும் மனிதனுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை கடவுள் எழுப்பி விடுகிறார மத தீவிரவாதம் எனும் பெயரில்.

மத தீவிரவாதம் எனும் காலன் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து கொண்டுதான் இருக்கிறது.சாதுவான ஒரு மனிதனை கூட வெறியனாக மாற்றும் சக்தி இதற்க்கு உண்டு. ஆக பக்தி என்பது மனிதனின் பகுத்தறிவை ,சுயசிந்தனையை ,மனிதாபிமானத்தை கொன்று அவனை மனிதத்தன்மை அற்றவனாக மாற்றுகிறது.கடவுள் சார்ந்த பல மூடநம்பிக்கைகள் படித்த பண்புடைய மாந்தர்களால் இன்றும் கடைபிடிக்கப்பட்டு தானே வருகின்றன .இன்னொரு உயிரை வதைத்து காணிக்கை செலுத்துவது,பாவ மன்னிப்பு பெறுவது போன்றவை முற்போக்கான சிந்தனைகளா ???


இனி வரும் காலங்களில் காசு இருந்தால் கடவுளையே வாங்கிவிடலாம் என்ற நிலை வந்துவிடும்.இன்று தெருவுக்கு தெரு கட்டுவதை கோவில்கள்  என்றால் அன்று ராசராசனும் ராஜேந்திரனும் கட்டியவற்றிட்கு பெயரென்னவோ ??

கலையை கொன்று மனிதத்தை சிதைத்து இயற்கையை அழித்து யாருக்காக நீங்கள் கோவில் கட்டுகிறீர்கள் என தெரியவில்லை. கோவிலுனுள் தங்க பேழையில் உறையும் கடவுள் வெளியில் மக்களை பிச்சைகாரர்களாகவும் ஆதர்வற்றவர்கலாகவும் வைத்திருப்பது ஏனோ ??

கடவுள் எனும் பெயர் மனிதனின் வட்டத்தை சுருக்கி சுயநலவாதியாக தன்னை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாதவனாக மாற்றுகின்றது உலகில் வலம்வரும் பிற்போக்கான மூடநம்பிக்கைகளின் அஸ்திவாரம் கடவுள்.இதிகாசங்களிலும் புராணங்களிலும் உள்ள நீதிநெறிகளை மறந்து கடவுளை மட்டும் காணும் மடமைக்கு யார் காரணம் ?

தமிழ் மன்னர்களின் வீரமரபுகளை கூட புராண மரபுகளோடு ஒப்புமைப்படுத்தி நம்ப முடியாமல் செய்தது பக்திமான்கள் என்று பறைசாற்றுவோரின் குற்றம் தானே.மூன்று வேளையும் அர்ச்சனையோடு  வாழும் கடவுளுக்கு ஒரு வேளை உணவின்றி மடியும் குழந்தைகளின் நிலைமை தெரியாமல் போனதா??.தன் உடமைகளை காக்க முடியாத கடவுள் மக்களை காப்பது எங்கனம். சுவரை இடித்து சித்திரம் வரைவது போல் மனிதத்தை கொன்று கடவுள் வளர்கிறோம்.

மதசார்பற்ற நாட்டை காவித்தீவிரவாதம் அரசாலும் நிலை கூட வரலாம்.இன்றைய கல்வி முறை பகுத்தறிவையோ முற்போக்கு சிந்தனைகளையோ போதிக்காமல் பழமைவாதிகளுக்கு தூபம் போடுகின்றது. நாத்திகன் என்று சொன்னாலே கேவலமாய் பார்க்க இதுதான் காரணம்.மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சாதிய போதையை ஏற்படுத்துகிறார்கள்.அந்த பிஞ்சு உள்ளத்தில் உயர்வு தாழ்வு என்ற வன்மத்தை ஏற்படுத்துகிறார்கள்.இந்த பிரிவினை பின்னாட்களில் மிக பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கடவுள் பெயரால் நடக்கும் அணைத்து அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் கடவுள் காரணம் இல்லை என்பது ஒரு சிலரின் வாதம். ஆனால் தன் பெயரில் நடக்கும் குற்றங்களை கலையாமல் அவர் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்.கடவுள் உணர்வுபூரவமானவர் எங்கும் உள்ளவர் என வேதாந்தம் பேசுபவர்கள் பிற மதத்தையும் அதன் நம்பிக்கைகளையும் ஏன் ஏற்றுகொள்வதில்லை .

[ திரவ்பதி என்ற ஒரு பெண்ணின் மானத்தை காக்க அவதரித்த கடவுள் சிங்கள தீவில் ஆயிரகணக்கான எம் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க பட்டபோது எங்கு போனார்
]

ஏழை மீண்டும் ஏழையாவதையும் பணக்காரன் மீண்டும் பணக்காரன் ஆவதையும் கடவுளால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது ஏனோ?.ஒரு மனிதனின் உடமையை மற்றவர் திருடுவதை கடவுள் ஏன் கண்டு கொள்ளவில்லை.தன்னால் உருவாக்கப்பட்ட கடவுளின் தன்னையே ஆட்கொள்வதை ஏன் இன்னும் மனிதன் உணரவில்லை என்பது அதிசயம்தான்.


பி.கு :

நான் இதற்க்கு மனிப்பு கோரமாட்டேன். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் பேச்சும் செயலும் என்னை புண்படுத்திய போது யாரும் அதைப்பற்றி கவலைபடவில்லையே .நான் மட்டும் ஏன் அவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் . மேலும் சுதந்திர நாட்டில் வாழும் நான் என் கருத்துக்களை கூற எனக்கு உரிமை உள்ளது . இந்தியாவில் உள்ள அனைவரும் மற்றவர் மனதை புண்படுத்தாமல் பேசுகிறார்களா ?? மனிப்பு கேட்டு என்னை நல்லவனாக காட்டி கொள்ள விரும்பவில்லை 

October 18, 2013

யவன ராணி - புத்தகம் பற்றிய பேச்சு

கடந்த சில நாட்களாக சாண்டில்யனின் மற்றுமொரு அறிய படைப்பான யவன ராணி படித்தேன். அப்பப்பா ! அன்னம் ,தண்ணீர்  மற்றும் ஆகாரம் என எல்லாவற்றையும் மறக்க வைத்து தன்பால் ஈர்த்துகொண்டாள் யவன ராணி.

அரசியல் சதுரங்கத்தில் சோழர்களை வேரறுக்க பாக்கும் சேர, பாண்டிய மற்றும் வேளிர்கள் ,மன்னரை கொலை செய்து அரியணையை கைப்பற்றும் துரோகி ,யவன நாட்டில் இருந்து தமிழகத்தை ஆள எண்ணி வரும் படை இவ்வற்றை முறியடித்து தமிழகத்தை காக்கும் ஒரு வீரனின் கதை. இனி கதைக்கு வருவோம்.

கதையின் நாயகனாக படையின் உபதலைவன் இளஞ்செழியன் தன் காதலி பூவழகியுடன் ஏற்பட்ட ஊடலால் கடலோரம் நடந்து வர அங்கு யவன ராணி கரை ஒதுங்கி மயக்க நிலையில் கிடக்கிறாள். அவள் வந்த மரக்கலம் தீப்பற்றியதால் நீந்தி கரை ஒதுங்கியவளை தன மாளிகைக்கு அழைத்து செல்கிறான். அவளால் பெரிய பிரச்சனை வரும் என  தன் சேவகன் ஹிப்பாலஸ் கூறியதை சில கணத்தில் உணர்கிறான். தன் நாட்டை  கைப்பற்ற வந்திருக்கும் ராணியை பணயக்கைதியாக்கி யவன படைத்தலைவன் டைபீரியஸ் இடமிருந்து தப்புகிறான். இதனிடையே ராணி தமிழகத்தில் கால் வைத்தவுடன் சோழ புல்லுருவி இருங்கோவேள்  மன்னன் இளஞ்சேட்சென்னியை  கொன்று இளவல் திருமாவளவனை  கைது செய்து தான் மன்னனாகிறான். அவனே புகரை யாவனற்கு அளிக்கிறான்.ராணியை சிறை செய்தது போல் துறவியும் ராஜதந்திரியுமான பிரம்மனந்தர் குடிலுக்கு அழைத்து செல்ல அங்கு வரும் டைபேரியாஸ் அவளை மீட்டு  செல்கிறான் .

மாறு வேடத்தில் தப்ப முயலும் பிரம்மனந்தர் ,ஹிப்பாலஸ் ,பூவழகி மற்றும் அவள் தோழி இன்ப வள்ளி ஆகியோரை சிறை செய்கிறான் டைபேரியாஸ். இளஞ்செழியன் மட்டும் தப்பி ராணியை மீண்டும் சிறை எடுத்து அதன் பேரில் மற்ற அனைவரையும் யவன படைதலைவனிடமிருந்து மீட்கிறான்.பின் ராணியுடன் கருவூர் சமண அடிகளிடம் திருமாவளவன் மாமன் இரும்பிடர்தலையரை சந்திக்க செல்கிறான் அங்கு இருங்கோவேள் வர பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. திருமாவளவனை கொள்ள தீயிடுகிறார்கள். அதிலிருந்து தீப்புண்களோடு தப்பும் அவருக்கு பூவழகி அடைக்கலம் தர அவளை இளவல் தன் சகோதரியாக பாவிக்கிறார்(காலில் ஏற்பட்ட தீக்காயம் காலை கருப்பாக்கிவிட பூவழகியல் கரிகாலன் என பெயர் பெறுகிறார் வளவன் இனி நாமும்  அவரை கரிகாலன் என்றே அழைப்போம் )அங்கு யாவனர்களால் உருவாக்கப்பட்ட புத்தர் சிலை மர்மத்தை அறிய முயலும் ராணியும் இளஞ்செழியனும் சந்தர்ப்பதால் உறையூர் செல்ல அங்கு டைபெரிஅச் அவர்களுடன் இணைகிறான் . இந்த சூழ்நிலைகளில் ராணி செழியன் மீது கொண்டுள்ள காதல் வலுவடைகிறது.

பின் வஞ்சத்தால் இருவரையும் பிரிக்கும் டைபேரியாஸ் இளஞ்செழியனுக்கு விஷம் கொடுத்து யவன நாடு செல்லும் கப்பலில் அனுப்பி விடுகிறான். அந்த விஷத்தில் இருந்து தப்புதல் , பின் கடல் சுறாக்கள் இடமிருந்து தப்புதல் என தப்பி கடைசியில் அடிமை வணிகனிடம் மாட்டி இறுதியில் கடற்கொள்ளையர்களிடம் சிக்குகிறான். அவர்களை வஞ்சித்து சாம்ப்ராணி தீவின் கொடுங்கோல் மூர்க்கன் இலி -ஆஜூவிடம் சிக்க வைக்கிறான். பின் தன் தந்திரத்தால் அவனிடமிருந்து அவன் மகள் அலீமா உதவியால் தப்புகிறான் . அவள் மூலம் பொன், பொருள் மற்றும் பல மரக்கலங்கள் சம்பாதித்து தமிழகம் திரும்புகிறான். இந்த சமயங்களில் பூம்புகாரில் ரகசிய படைதிரட்டும் கரிகாலனும் அவன் மாமனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் கலைத்து விட்டு காட்டுக்குள் மறைந்து கொண்டு படை திரட்டுகிறார்கள். அதோடு ஆறு மாத காலம் இருங்கோவேளால் சிறைபட்ட பூவழகியை தன் காதலி அல்லி உதவியால் மீட்கிறார் கரிகாலன். பூம்புகார் யவனர் வசமிருந்த இக்காலங்களில் மதில்களையும் படைகளையும் செவ்வென தயார் செய்கிறார் டைபேரியாஸ் .பல காலம் கழித்து தமிழகம் திரும்பும் செழியன் யவனன் போல் அனைவரையும் ஏமாற்றுகிறான். பின்பு வெண்ணி செருக்களத்தில் kariகாலரோடு சேர்ந்து இருங்கோவேள்,சேர,பாண்டிய மற்றும் வேளிர் பெரும்படையை தன் சிறந்த வியுகங்களால் முறியடிக்கிறான் பின் எவ்வாறு டைபீரியாசை வீழ்த்துகிறான்? யவன ராணி ,பூவழகி யாரை கைப்பிடிக்கிறான் என்பதே யவன ராணியின் முடிவு

சிறந்த வீரன் ,அறிவாளியாக ரதப்பந்தயங்களில் அசைக்க முடியாதவன் என அனைவரும் கொண்டாடும் மனிதனாக இளஞ்செழியன் .பூவழகியுடன் ஊடல் கொள்வதிலும்  யவன ராணியுடனான காதலால் தடுமாறுவதும் அருமை . கடலில் அவன் செல்லும் அசாத்திய சாதனைகளும் அவன் தந்திரங்களும் பிரம்மிக்க வைக்கின்றன
தன் மாமன் மகனுடன் ஊடலும் காதலும் கொண்டு பின் ஏங்குவதுமாக வருகிறார் பூவழகி.

கதையின் முக்கிய அங்கமான யவன ராணி தன் குருமார்கள் கணிப்பு படி அரசாள வேண்டும் என வருகிறாள் பின் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு யவனர்கள் தோற்றாலும் பரவாஇல்லை தன் காதலன் வெல்ல வேண்டுமென நினைத்து உதவி புரிகிறார்கள்.கடைசியில் அவள் முடிவு ஆச்சர்யம்

துறவியான பின் தன் ராஜதந்திரத்தால் கதையின் ஓட்டத்தை தீர்மானிக்கிறார் பிரம்மனந்தர்.அவரது சீடரான சமண அடிகள் பாத்திரம் அருமை

பிரம்மனந்தர் ஆல் பயிற்றுவிக்கப்பட்டு பின் நாளில் சோழ ராணியாகும் அல்லி ,நாகையில் இளஞ்செழியன்  படைதிரட்ட உதவும் அவன் வளர்ப்பு தாய் காத்தயீ செழியனின் உப தலைவர்களான குமரன் சென்னி ,பரத வல்லாளன் என பலர் கடையை நகர்த்த உதவுகிறார்கள்

கடற்போரில் கடல் கொள்ளையர்களில் அக்கிரமங்கள் பயங்கரம் மூர்க்கன் இலி -ஆஜு வை பற்றி படிக்கும் பொது குலை நடுங்குகிறது .தன் படையில் சரிபாதி உள்ள யவன வீரர்கள் தன் இனம் அழிந்தாலும் தன தலைவன் வெல்ல வேண்டும் என நினைப்பது சிறப்பு

யவன ராணியின் வர்ணனை அவளை தேவலோக பதுமையாக ஒரு தேவதையாக என்ன வைக்கின்றன. யவனர்களின் பொறியியல் நுட்பம் என்னை வியக்க வைத்தது.

 புத்தர் சிலையில் உள்ள ஆயுத  கிடங்கு மற்றும் சுரங்கம்

இந்திரா விழ மண்டபத்தில் இருந்த இரு பெரும் நகரும் தூண்கள்

என அவர்களின் நுண்ணறிவு பிரம்மிக்க வைக்கிறது



மொத்தத்தில் யவன ராணி என்ற காவியம் தமிழர்களையும் அவர்தம் போர்களையையும் உலகிற்கு உணர்த்தும் காலத்தால் வெல்ல முடியாத படைப்பு

வாவ் 2000- புத்தகம் பற்றிய பேச்சு

வாவ் 2000- புத்தகம் பற்றிய பேச்சு

வேலஸ் என்பவர் எழுதிய வாவ் 2000 எனும் புத்தகம் படித்தேன் .1900-2000 க்கு இடையிலான நூறு ஆண்டுகளில் உலகம் சந்தித்த அற்புத நிகழ்வுகள் அசாதாரண கண்டுபிடிப்புகள் பற்றிய அற்புதமான பதிவு . அறிவியல் முன்னேற்றத்தில் மனித சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் பல அறிய கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரங்கேறின. அவை மட்டுமா? இரு பெரும் உலகப்போர்கள் (அமெரிக்க- ரஷ்ய பனிப்போர் நீங்கலாக ),புரட்சிகள் ,படுகொலைகள் இயற்கை சீற்றங்கள் என பல இன்னல்களையும் சந்தித்தது அவற்றை பற்றிய சுவாரசியமான இரத்தின சுருக்கமான பதிவு இது.


ஜார்ஜ் ஸ்டீவென்சன் கண்டறிந்த ரயில் என்ஜினில் இருந்து க்ளோனிங் வரையிலான கண்டுபிடிப்புகளையும் அது கண்டறியப்பட்ட கதைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் மிக அழகாக சொல்கிறது


பிடல் காஸ்ட்ரோ ,சேகுவேரா ,ஹோசிமின் (வியட்நாம்),மா சே துங் ,டெங் ஜியோ பிங் (china) லீ கவான் யூ (சிங்கபூர்) போன்ற உலகின் மிக சிறந்த தலைவர்களையும் ஹிட்லர் ,இடிஅமின் ,போல்பாட் (கம்போடியா) போன்ற சர்வாதிகார கொ(க)லைனர்களையும் இந்த நூற்றாண்டு கொண்டது.

இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்களான மகாத்மா காந்தி மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்ற சிறந்தவர்களை பெற்றதன் மூலம் இந்நூற்றாண்டு பெருமை கொண்டது

மேலும் சிறந்த கலைனர்கலான டாவின்சி ,எஞ்சேலோ ,சார்லி சாப்ளின்,பெர்னாட்ஷா என பலரை பற்றி அறிய முடிகிறது.ஆகா மொத்தம் 19ம் நூற்றாண்டில் நடந்த கலை ,அறிவியல் ,மருத்துவம் ,போர்  என பல நிகழ்வுகளையும் அதனால் உலகம் அடைந்த மாற்றங்களையும் அறிய முடிகிறது. பல அறிய புகைப்படங்கள் (தீக்குளிப்பு சத்தியாகிரகம் ,நேப்பாம் குண்டு ,போபால் சம்பவம் ) காணும் வாய்ப்பும் கிடைத்தது.


போட்டி தேர்வுகளுக்கு தயாரகும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்

இதில் உள்ள சில ஆச்சர்யங்கள்


ஆகாய விமானம் கண்டுபிடிப்பதற்கு முன்பே பாராசூட்டை கற்பனை செய்த ஓவிய விஞ்ஞானி

வாழ்வின் கடைசி காலத்தில் பூனைகளை பார்த்து பயந்த மாவீரன்

நெஞ்சில் காதை  வைத்து பெண்களின் இதயத்துடிப்பை கேட்க கூச்சப்பட்டு  ச்டேதச்கோபே கண்டுபிடித்த டாக்டர்

அமைச்சர் பதவியை தூக்கி எரிந்து விட்டு மீண்டும் புரட்சியாளர் ஆன வீரர்

மலையடிவாரத்தில் துறவியாக வாழ்க்கை நடத்தும் மகாராஜா

என ஆச்சர்யங்கள் நீள்கின்றன .



வாவ் 2000
ஆசிரியர் : வேலஸ்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
விலை : 160
பி.கு

இந்த புத்தகம் மூலம் ஹோசிமின் போன்ற போராளிகளை பற்றி அறிய முடிந்தது. உலக போர்களின் காரணங்களையும் அதில் சில குள்ளநரி நாடுகளின் தந்திரங்களையும் உணர முடிந்தது.சோவியத் யூனியன் உடைந்த காரணங்கள்,கம்முனிச நாடான சீனாவின் எழுச்சியையும் அறிய முடிந்தது


பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீதான என் தவறான கண்ணோட்டத்தை இப்புத்தகம் மாற்றியது

வெற்றி திருநகர் -புத்தகம் பற்றிய பேச்சு

திரு.அகிலன் அவர்கள் எழுதிய வெற்றி திருநகர் என்னும் சரித்திர நாவல் வாசித்தேன் .Dr.மு .வரதராசனார் அவர்களின் முன்னுரையும் அகிலனின் நாவல் பற்றிய முகப்புரையும் ஒரே மூச்சில் நாவலை படிக்க வைத்துவிட்டன. பல்வேறு அந்நிய படையெடுப்புகள் நடந்த போதிலும் தென்னாட்டு கலைசெல்வங்கள் அழியாமல் அரண்போல் நின்று காத்த வெற்றி நகரான விஜயநகர பேரரசின் கதை.இந்தியர்கள் தங்களுக்குள் பிளவுபட்டு வேற்றுமை பாராட்டி கொண்டிருந்த நிலையிலிருந்து தேசிய ஒருமைப்பாட்டை வளர வித்திட்ட காலமது.ராஜிய விஸ்தரிப்புகளாலும் படையெடுப்புகளாலும் மன்னர்கள் தங்களுக்குள் போர் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒன்றுபட்ட பாரத நாட்டுக்காக பாடுபட்ட கிருஷ்ண தேவராயன் எனும் உத்தம அரசனின் கதை



அவரின் வளர்ப்பு மகனாக ,கடமைக்கும் நாட்டுக்கும் மதிப்பளித்து ,பிற்காலத்தில் மதுரையை புனரமைத்த விசுவாச ஊழியன் விசுவநாதனின் கதை . தன் குறிகிய சுயநலத்துக்காக பல சூழ்ச்சிகள் செய்து பெரிய சாம்ராஜ்யத்தை வீழ்த்திய சாளுவ நரசிம்மரின் கதை .தான் கொண்ட காதலால் பல்வேறு சூழ்ச்சிகளில் சிக்கி இறுதியில் தியாக சிகரமாக வாழ்ந்த புண்ணியவதி இலட்சுமியின் கதை.இவ்வாறு பல்வேறு கதைகளுக்கு இடமளித்து சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து நயவஞ்சகர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்த வெற்றி திருநகரின் கதைதான் இது

தன் மகனுக்காக கடமை தவறி அவனாலேயே போர்களத்தில் தோற்கடிக்கப்பட்ட கருவூல அதிகாரி நாகம நாயக்கர் ,மன்னர் கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுதராயர் ,மன்னரின் மருமகன் இராமராயர் ,உண்மை ஊழியர்கள் அரியநாத முதலியார் ,இராமபத்திர நாயக்கர் மற்றும் அப்துல் என பல்வேறு கதாபாத்திரங்கள் நாவலை சுவையுட்டுகின்றன

ஒற்றுமைக்காக வாழ்ந்த மன்னர் கிருஷ்ணா தேவராயரை பற்றி எனும் பொது பெருமையாக உள்ளது .அவர் ஆட்சி திறன் ,பல்வேறு இனத்தவரை கையாண்ட விதம் ,நீதி என நாடு போற்றும்செங்கோல் மன்னனாக திகழ்ந்திருக்கிறார்.அரசன் மக்களின் ஊழியன் என்றும் அரச பரம்பரை தான் அரசாள வேண்டுமென்பதில்லை எனகூரி தன் தம்பியை தனக்கு பின் மன்னராக்கியவர்.குடியாட்சியின் தத்துவத்தை அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார் .

நாட்டு பற்றினால் தன் தந்தையோடு செருக்களத்தில் நேருக்கு நேர் நின்று விசுவநாதன் போர் செய்யும் காட்சிகள் கல்நெஞ்சையும் கரைக்கும் தன்மை கொண்டவை

தமிழகத்தில் சேர ,சோழ ,பாண்டியர்கள் வீழ்ந்து இருந்த காலகட்டதில் ஒரு நிலையான ஆட்சியை உருவாக்க போராடும் விசுவநாதனின் போராட்டம் அருமை .கலை,கடமை,காதல்,போர்கள் என எல்லாம் நிறைந்த அருமையான நாவல்.விசுவநாதன் -இலக்குமி காதல்காட்சிகளில் எதார்த்தம் இழையோடியதை உணர முடிந்தது
பி.கு

பொதுவாக தெனாலிராமன் கதைகளில் மட்டுமே கிருஷ்ணா தேவராயர் எனும் பெயரை கேள்விப்பட்டு இருக்கிறோம் .அதை தாண்டி இந்திய வரலாற்றில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பக்கங்களை பற்றி அறிய அகிலனின் இந்த படைப்பு உதவியது .அரசன் தத்துவ ஞானியாக இருக்க வேண்டும் என்ற புளுட்டோ வின் கூற்றை மெய்பிக்க வந்த மன்னவர்களில் இவருமொருவர் என கூறலாம்

எல்லா சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கும் அந்நிய படையெடுப்புகளும் போர்களும் மட்டும் காரணம் அல்ல என்றும் உற்பகை எனும் கொடிய விசமும் காரணம் என்பதை உணர முடிந்தது


விஜயநகரத்தின் அன்றைய உன்னத நிலையையும் இன்றைய சிதைந்த இழிநிலையையும் எண்ணும் போது ஒரு கணமான உணர்வு நெஞ்சில் ஏற்ப்பட தான் செய்தது .

ஒரு நாவல் எழுதும் முன் அகிலன் செய்யும் ஆய்வுகள் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது .சில அறிய இடங்களின் புகைப்படங்களையும் சேர்த்து தந்திருப்பது சிறப்பு

[
நாவலின் முழு கதையையும் எழுதினால் படிக்கும் ஆர்வம் குறைந்து விடுவதாக நண்பர் ஒருவர் கூறி இருந்தார்.இனி கதையை எழுதாமல் அதன் சிறப்புகளை பற்றி மட்டும் எழுத போகிறேன் ]


நன்றி வணக்கம்


வெற்றி திருநகர்
வகை :சரித்திர புதினம்
ஆசிரியர் :அகிலன்
பதிப்பகம் :தாகம் பதிப்பகம்
விலை : 300(உயர் ரக தாளில் பதிப்பிக்கப்பட்டது )