December 25, 2013

பிரபாகரன் வாழ்வும் மரணமும் -புத்தகம் பற்றிய பேச்சு





அண்மையில் ஈழம் தொடர்பாக ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் பரிந்துரை செய்யுமாறு நம் நண்பர்களிடம் கேட்டு இருந்தேன். அதற்க்கு முருகன் அவர்கள் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.


கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தம் மக்களின் நலனுக்காக போராடி வந்த பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை அவரிடம் நெருங்கிய மக்களுக்கு மட்டுமே தெரியும் .ஆனால் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை . எனவே இந்த நூல் ஈழம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் மற்றும் சில மூத்த போராளிகள் சொன்ன தகவல்களில் இருந்து எழுதப்பட்டுள்ளது என இதன் ஆசிரியர் ராகவன் முன்னுரையிலேயே சொல்லி விட்டார் .


பிரபாகரனின் இளம் பிராயத்திலிருந்து இந்நூல் தொடங்குகிறது. S/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை யாக இருந்த அவர் விடுதலை புலிகளின் தலைவராக மாறிய வரலாற்றை கால நிகழ்ச்சிகளின் ஓட்டத்தோடு சொல்லி இருக்கிறார் ராகவன்.

தமிழரசு கட்சியின் அறப்போராட்ட வழியில் நம்பிக்கை இழந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து இளம் வயதில் ஆல்பர்ட் துரையப்பாவை சுற்று கொன்றதில் ஆரம்பிக்கிறது இவரின் பயணம். பின் தமிழகத்துக்கு தப்பி வந்தது,புலிகள் அமைப்பை ஆரம்பித்தது ,ஆயுத தேடலுக்காக வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டது என அடுத்தடுத்த அத்தியாயங்கள் நிறைகின்றன.ஆளில்லா விமானத்தை வெடிக்க செய்து அதன் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க செய்தார்.

இலங்கையில் பல்வேறு போராட்ட குழுக்கள் இருந்தாலும் அவர்களுடன் பிரபாகரன் எவ்வாறு வேறு பட்டார் என்பதை உணர முடிந்தது. மற்ற குழுக்கள் தங்கள் விடுதலையில் இந்தியாவின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என நம்பிய காலத்தில் அவர் மட்டும் இந்தியாவின் உதவியை நம்பாமல் இருந்திருக்கிறார்.

எதிரிகளால் ஏற்பட்ட காயங்களை விட நம்பிக்கை துரோகம் செய்தவர்களால் ஏற்பட்ட காயம் அவரை எங்கனம் பாதித்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. தங்களின் உறைவிடத்தை தீர்மானித்தது ,ஆயுத கொள்முதல் முறை ,மற்ற நாட்டு போராட்ட முறையை பின்பற்றாமல் தனக்கு தெரிந்ததை தன் குழுவுக்கு போதித்து அவர்களை நடத்தி சென்றது போன்றவற்றில் இருந்து பிரபாகரனின் தெளிந்த அறிவும் கூறிய சிந்தனையும் புலப்படும் .

இதற்க்கு இடையில் திருப்போரூரில் நடைபெற்ற பிரபாகரன் - மதிவதனி திருமணம் ,அதனால் ஏற்பட்ட விளைவுகள் என தொடர்கிறது. ஆயுத கொள்முதல் மற்றும் வர்த்தகத்துக்காக கப்பல் கம்பெனி நிறுவியது முதல் தனி போர்விமானங்கள் பயன்படுத்தியது வரை ஒரு சாதாரண தீவிரவாத கும்பலால் என்னவே முடியாத பலவற்றை அவர் சாதித்து காட்டியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நிதி மற்றும் ஆயுத கொள்முதலுக்கு குமரன் பத்மநாபன் ,உளவு துறைக்கு பொட்டு  அம்மான்,அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் யோசனைகளுக்கு ஆண்டன் பாலசிங்கம் என பல போராளிகளை பற்றியும் அறிய முடிந்தது

மேலும் மாத்தையா ,கருணா ,உமா மகேஸ்வரன் போன்றவர்களின் துரோகங்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் அறிய முடிந்தது.

இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு பற்றியும் அதனால் கண்ட விளைவுகள் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும் .இந்திரா காந்தி காலத்தில் இந்திய உளவு துறை இலங்கை போராளிகளுக்கு பயிற்சி அளித்தது ,பின் ராஜீவ் காந்தி அமைதி நடவடிக்கையாக போர் நிறுத்தம் கொண்டுவந்தது ,இந்திய அமைதி படையை அங்கு அனுப்பியது போன்ற அரசியல் நிகழ்வுகளை அறிய முடிந்தது .

இந்திய அமைதி படை அங்கு நடத்திய "அமைதி " நடவடிக்கைகள் ,போர்நிறுத்த காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட துரோக செயல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.


பின்பு இந்தியவின் தலையீடால் இலங்கையில் இருந்த மற்ற போராளி குழுக்கள் சிதறியது ,அவர்களை விடுதலை புலிகள் கொன்றது ,ராஜீவ் காந்தி படுகொலை என அடுத்த கருப்பு பக்கங்கள் வருகின்றன.


ஒரு தீவிரவாத(அவர்கள் பாசையில்) குழு ஒரு சுதந்திர நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுகள் மேலாக போராடிய வரலாறு இன்னொரு முறை அரங்கேறுவது கடினம். பல கிலோமீட்டர் நிலபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு சிறு எல்லைக்குள் வந்து ஒவ்வொரு விழுதாக வீழ்ந்து கடைசியில் ஆலமரமாய் பிரபாகரன் சரிந்த காரணங்களை விளக்க ராகவன் முற்பட்டுள்ளார்.

பிரபாகரன் மீது உலக சமுதாயம் கூறும் குற்ற சாட்டுகளையும் அதற்கான விளக்கங்களையும் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு.


இறுதியில் இனி என்ன செய்யலாம் என கூறி இருப்பது சிறப்பு

ஆனால் முக்கிய போராளியாக கருதப்பட்ட தமிழ்செல்வன் பற்றியோ நார்வே தூதுக்குழு பற்றியோ எதுவும் சொல்லாதது ஆச்சர்யம் .


ஒரு புத்தகம் அடுத்த புத்தகத்துக்கான தேடலை வழங்குகிறது .அந்த வரிசையில் இது  நிறைய தேடல்களை வழங்கிவிட்டது

No comments:

Post a Comment