December 21, 2013

இது யாருடைய வகுப்பறை- புத்தக சந்திப்பு

திருவான்மியூர் அருகே உள்ள பனுவல் புத்தக நிலையத்தில் திரு.ஆயிஷா இரா .நடராசன் அவர்கள் எழுதிய இது யாருடைய வகுப்பறை எனும் நூல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது..சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியர் திரு .கல்யாணி மற்றும் திரு.வேணுகோபால் ஆகியோர் வந்திருந்தனர். நம் கல்விமுறையின் ஆரம்பம் அதன் போக்கு மற்றும் குறைபாடுகள் குறித்து மிக சிறப்பான ஒரு விவாதம் நடந்தது.

நிகழ்ச்சியை காவேரி அவர்கள் தொகுத்து வழங்கினார் .தன் முன்னுரையிலேயே ஆசிரியர்களின் பெருமை மற்றும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களின் மகத்தான பங்களிப்பு குறித்து பேசினார். அதற்க்கு பிறகு ஐயா திரு.கல்யாணி அவர்கள் பேச்சை தொடங்கினார்.

மிக நகைச்சுவையுடன் நம் கவனத்தை சிதற விடவே முடியாத அளவுக்கு தம் பேச்சால் கட்டி போட்டார். குழந்தைகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டிய விதம் மற்றும் அவர்கள் மனநிலை குறித்து பேசினார்.ஒரு ஆசிரியராக தம் அனுபவத்தை முன் நிறுத்தி பல கருத்துக்களை முன் வைத்தார். அவரது பேச்சில் ஆசிரியர் -மாணவர் உறவின் இடைவெளி குறித்த கருத்துக்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. மாணாக்கர்களுக்கான பள்ளி தான் வேண்டுமே ஒழிய மதிப்பெண்களுக்கான பள்ளி தேவையில்லை என்ற வாதத்தை அருமையாக அனைவரும் ரசிக்கும் படி முன் வைத்தார்.

பின் பேசிய திரு.வேணுகோபால் அவர்கள் இன்றைய கல்விமுறை சமூகத்தில் ஏற்ப்படுத்திய தாக்கம் குறித்து பேசினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தங்கள் விருப்பு வெறுப்புகளை திணிக்க கூடாது போன்ற கருத்துக்கள் அதிகம் இருந்தன. இன்றைய தனியார் கல்வியின் மோகம் மக்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அழகாக தற்போதைய நிகழ்வுகளின் வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் அவர் நகைச்சுவையாய் சொன்ன சில வரிகள்

{புத்தகத்தை 'எடு' 'படி' என்று சொல்லி சொல்லி நம்மை எடுபடியாக்கி விட்டார்கள் ↑

இன்றைய நம் கல்விமுறை பில்கேட்ஸ் களை உருவாக்க வில்லை
அவரது வேலையாட்களை உருவாக்கி கொண்டிருக்கிறது

இன்றைய கல்வி முறை வாஷிங் மெசின் போன்றது.பள்ளியில் அழுக்கு துணியாக சேர்க்கப்படும் மாணாக்கர்கள் பிறகு நல்ல வேலையில் சேர்ப்பித்து துவைத்து எடுக்கப்படுவது போல் கையாளப்படுகிறார்கள் }

இடையில் பார்வையாளர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.ஒரு தலைமையாசிரியை தான் மாணவர்களிடம் இருந்து பெற்ற சில நல்ல வித்தியாசனமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.இன்றைய கல்வி முறையின் அவலத்தை கடலூர் வாசிப்பாளர்கள் சார்பில் பங்கேற்ற BSNL நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றும் ஒரு அன்பர் சொன்னார். இன்றைய கல்வி முறையில் தனியார்மயமாதலின் பிரதிபலிப்பு மற்றும் அரசு பள்ளிகள் குறித்தும் சில நண்பர்கள் பேசினார்கள் ←

இறுதியாக தன் புத்தகம் பற்றி ஆயிஷா இரா.நடராசன் பேசினார். கல்வி முறை தோன்றிய வரலாற்றை அழகாக எடுத்துரைத்தார். நம் கல்வி முறை எவ்வாறு உண்டாக்கப்பட்டது மற்றும் அதற்க்கு வித்திட்டோர் குறித்தும் பேசினார். ஆசிரியர் -மாணவர் உறவு மற்றும் ஆசிரியர்கள் குறித்து பல மொழிகளில் எழுதப்பட்ட பல்வேறு நூல்கள் பற்றி விரிவாக பேசினார். நம் கல்வி முறையில் உள்ள பல்வேறு கோட்பாடுகள் எங்கிருந்து தருவிக்க பட்டன மற்றும் கல்வி முறை குறித்து பல்வேறு நாட்டு அறிஞர்கள் கொண்டுவந்த வரையறைகள் பற்றி பேசினார்.

அதில் என்னை பாதித்தது ஜப்பானிய எழுத்தாளர் யாமக்குச்சி (சத்தியமா அது தாங்க பேரு ) எழுதிய God save my children எனும் நாவல் தான். அதன் கதையை கேட்டவுடனே கண்ணீர் வந்து விட்டது. மிக உணர்வுபூர்வமாக பல விசயங்களை பற்றி பேசினார் நடராசன் அவர்கள்.அதில் கல்வி சீரமைப்பு குறித்த கோத்தாரி குழு சமர்ப்பித்த அறிக்கையின் குறைகள் மற்றும் யாஸ்பால் கமிசன் கொண்டுவந்த பல நல்ல விஷயங்கள் மற்றும் நம் கல்வி முறை மாற்றத்தில் UNICEF நிறுவனத்தின் பங்கு இன்னும் பல விஷயங்கள் பற்றி பேசினார்

அதற்குள் நேரமாகிவிட்டது .எனவே நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

பி.கு :

அவர்கள் சொன்ன சில விஷயங்கள் விடுபட்டிருக்கலாம் .அதற்க்கு வருத்தங்கள்.முழுமையாக சொன்னால் இது யாருடைய வகுப்பறை புத்தகம் பற்றியும் பேச வேண்டி வந்துவிடும்


அதை படித்து முடித்தவுடன் புத்தகம் பற்றிய பேச்சில் விரிவாக பேசுவோம்


நன்றி வணக்கம்

வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ்!!!


Books prescribed by Thiru. Aayesha Natarajan on Education:
1) To Sir with love - E. R. Braithwaite
2) Black Skin, White Masks - Frantz Fanon
3) Painted house - john grisham
4) The Little Village school - Gervase Phinn
5) God Save my Children (Double A-Bomb Victim: My Life beneath the Atomic Clouds - Tsutomu Yamaguchi)
6) The Petals of Blood - Ngũgĩ wa Thiong'o
7) Pedagogy of Freedom - Paulo Freire
8 ) Encyclopedia of Creativity, Two-Volume Set - Steven R. Pritzker
9) To Kill a Mockingbird - Harper Lee

No comments:

Post a Comment