January 18, 2014

இந்திய நாடு என் வீடு



சமீப காலங்களில் நான் ஒரு விதமான பேச்சுக்களை கேட்க முடிகிறது. அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் ,ஆளும் வர்க்கத்தின் போக்கு மற்றும் சமூக பிரச்சனைகள் போன்ற காரணங்களினால் அவர்களின் கோபம் நாட்டின் மீது திரும்புகிறது.சிலர் இன்றைய சூழலால் வெறுப்படைந்து சுதந்திரத்தையும் அதை பெற்றுத் தந்த தலைவர்களையும் ஏசும் போது கோபம் தான் வருகிறது அவர்களுக்கு என்னால் இயன்ற பதிலை தருவது தான் இந்த பதிவின் நோக்கம்



இந்தியா புவியியல் அமைப்பிலும் மக்களின் வாழ்க்கை முறையிலும்  மிக பெரிய வித்தியாசம் கொண்ட நாடு. பல்வேறு சாதி,மத மற்றும் இன வித்தியாசம் கொண்ட பல்வேறு விதமான மக்கள் வாழ்கிறார்கள்.பருவ மற்றும் சீதோசன நிலைகளும் இடத்திற்கு  இடம் மாறுபடுகிறது .எனவே இந்தியா துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.பல்வேறு பழக்கவழக்கங்கள் ,கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழ்வதால் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு எனவும் அழைக்கிறோம் (இவையெல்லாம் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் படித்திருப்பீர்கள் )

இந்தியாவில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்கிறார்கள் என நான் சொல்ல வில்லை .ஆனால் தேச பாதுகாப்பு ,பேரிடர் மற்றும் விபத்துக்களின் போது ஒரு ஒற்றுமை ஏற்படவே செய்கிறது. ஆக மக்களுக்கும் ஒற்றுமை இல்லை என சொன்னாலும் வெறுப்புணர்ச்சி இல்லை என்பது உண்மைதானே .



உலகில் மனிதம் என்ற நிலை கடந்து மத வாத சக்திகளே ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் இந்த வேளையில் உலகில் உள்ள ஒரே மதச்சார்பற்ற நாடு நம்நாடு என்பது நமக்கு பெருமைதானே. இன்று மிக வளர்ந்த நாடுகளும் மத நம்பிக்கைகள் எனும் மடமையினால் மனித வன்முறை செய்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் பகுத்தறிவை  போதித்த மாமனிதர்கள் பலர் வாழ்ந்த நாடு இது


அண்மையில் நடந்த சில விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் மக்கள் பலரை நாட்டின் மீது அதிருப்தி அடைய செய்திருக்கலாம். அதற்க்கு ஏற்றாப்போல் XXXXXXX நாட்டின் பிரபல இதழான  XXXXXX   வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தியாவை பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் சேர்த்திருந்தது. கண்டிப்பாக சில கோர சம்பவங்களை யாராலும் நியாயப்படுத்த முடியாது.ஆனால் குற்ற எண்ணிக்கையை மட்டுமே வைத்து ஒரு நாட்டை குறை கூற முடியாது. பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாக தானே இருக்கும். மக்கள் தொகைக்கும் குற்ற எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதாசாரத்தை பார்த்தால் உண்மை நிலை புலப்படும்.

என்னை பொறுத்தமட்டிலும் நாடு என்பதை நான் அதன் வளங்கள் ,கலாச்சாரம் ,மக்களின் வாழ்வியல் ஆகியவற்றுடன் பார்க்கிறேன் .மாறாக அரசுகள்,அரசாங்கம் ,கேளிக்கைகள் என பார்ப்பதில்லை . உலகின் தொன்மையான நாகரிகங்களான எகிப்திய ,கிரேக்க அரேபிய போன்றவை முழுமையாக அழிந்து விட்டநிலையில் ஏறக்குறைய எஞ்சியிருப்பது நமது மட்டுமே. உலகிற்கு மிளகு முதல் சந்திரசேகர் எல்லை வரை தந்தவர்கள் நாம் மட்டுமே. மற்ற எந்த நாட்டின் மீதும் போர் அறிவித்து அதன் பகுதிகளை ஆக்கரமிப்பு செய்யாத ஒரே நாடு நமது நாடுதான் (பிந்தைய வரலாறு மட்டும் ).மேலும் போர் என மற்றவர் வரும்போது எதிர்த்து நின்று தக்க பதிலடியும் கொடுத்துள்ளோம்.

வானுயர வளர்ந்து  நிற்கும் கோபுரங்கள்,நகரமயமாதலால் பாதிக்க பட்டாலும் தன் பெருமையை இழக்காமல் நிற்கும் கிராமங்கள் திகழும் நாடு. உலகின் பல நாடுகள் விடுதலைக்கு ஆயுதம்தான் ஒரே வழி என்ற நிலையில் இருந்த போது அகிம்சை எனும் போர் முறையை போதித்த நாடு.போர் என்றாலே ரத்தமும் மரண ஒலமுமான வெறித்தனமான கொலைகள் என்றறியப்பட்ட கால கட்டத்தில் போரிலும் தர்மம் பார்த்த புண்ணியவான்கள் வாழ்ந்த நாடு. மருத்துவம் ,பொறியியல் ,இலக்கியம் போன்றவற்றில் பல்வேறு சாதனைகள் செய்தாலும் அதை அடுத்தவர் மீது திணிக்காமல் விட்டதால் இன்று எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் தியாகத்தின் சொருபமாக விளங்குகிறோம்.நாட்டின் பெருமைகளை பற்றி பேசினால் இந்த பதிவு பல பாகமாகிவிடும். இவற்றையெல்லாம் மறந்து விட்டு தற்கால நிலைமையை மட்டுமே எண்ணி நாட்டை தூற்றுவது நியாயமாகுமா ?


இன்னொரு விதமான பேச்சையும் நான் கேட்பதுண்டு. வெள்ளையரிடம் அடிமை பட்டு கிடந்த இந்தியாவில் ஊழல் , லஞ்சம் போன்றவை இல்லை எனவும் வெள்ளையரே இந்தியாவை ஆண்டிருந்தால் இன்னுமும் அதிக முன்னேற்றம் கண்டிருப்போம் என சில அறிவு ஜீவன்கள் செப்பி திரிவதை பார்க்க முடிகிறது. இன்று இவர்கள் இப்படி பேசி திரிய காரணம் அன்று பலர் ரத்தம் சிந்தி வாங்கி கொடுத்த சுதந்திரம்தானே. வெள்ளையர்கள் இரும்புபாதை அமைத்து கொள்ளையடித்தவற்றை எளிதாக கொண்டு செல்லவே ஒழிய நம் மக்கள் சொகுசாக பயணம் செய்ய அல்ல என்பது அந்த மேதைகளுக்கு தெரியவில்லை போலும்.வருடத்தில் இரு தினம் மட்டுமே சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை நினைவு கொள்ள முயலும் நமக்கு சுதந்திரத்தின் அருமை புரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. தனி மனித வசதி வாய்ப்புகளை காரணம் காட்டி விடுதலையின் புனிதத்தை இழிவு செய்வது தகுமோ?காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் நாம் வேலைமுடிந்து வீடு திரும்புவோம் என்ற  நம்பிக்கைக்கு காரணமே சுதந்திரம்தானே. 


பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்



நன்றி வணக்கம்

No comments:

Post a Comment