March 24, 2017
காஞ்சி பயணமும் காணாமல் போன கட்டப்பாவும்
தலைப்புக்கும் பதிவுக்கும் எப்பவுமே ஏதாவதொரு சம்மந்தம் இருக்க வேண்டுமா என்ன என்ற அரிய சிந்தனையின் அவுட்புட்டே இந்த பதிவு . இந்த பதிவை என்னன்னு டேக் செய்யறதுன்னு சாத்தியமா தெரியல . பயணம்னு போட்டா அந்த மீன் முள்ளுகூட மன்னிக்காது . சரி ,வழக்கம்போல எப்படியாவது ஆரம்பிப்போம் .
நண்பர்களுடன் ஒவ்வொரு நண்பரின் வீட்டுக்கும் சென்று வரவேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாகவே எங்களுக்கு இருந்து வந்தது. அதன் இனிய துவக்கமாக சென்னைக்கு மிக அருகில் உள்ள கோவில்களின் நகரமான காஞ்சிக்கு செல்லலாம், அப்படியே நண்பர்கள் மூவர் வீட்டுக்கும் சென்று தங்கி விழாவை சிறப்பிக்கலாம் என்ற யோசனையில் ஆரம்பமானது இந்த இனிய பயணம்
ஒரு அதிகாலை நேரத்தின் அமைதியான மின்தொடர்வண்டி பயணமது . காலையில் சாப்பிட்ட உளுந்து வடையின் ருசி நாக்குலேயே நின்னாலும் காஞ்சியில் இறங்கியவுடன் பசி மெல்லமாக வெளியில் எட்டி பார்த்தது . தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்று சிறப்பாக சிற்றுண்டியை முடித்தோம் . பயண திட்டப்படி மாமண்டூர் குகைக்கோயில் செல்வதாக இருந்தது .ஆனால் சமயலறையில் இருந்து வந்த பறப்பது , ஓடுறது மற்றும் நீந்தறது என பலதரப்பட்ட ஜீவராசிகளின் மணமும் , வெளியில் நிலவிய வெய்யிலின் ரணமும் எங்கள் மனதை மாற்றிவிட்டது .
மதியம் சாப்பிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சிறு நடைபயணம் செய்து அதிலும் பனிக்கூழ் (ஐஸ் என்பதை இப்படித்தான் சொல்லணுமாம்) , நீர்பூசணி என நிரப்பிவிட்டு வந்தோம்
மதிய உணவை பற்றி சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை . அதிலும் குறிப்பாக இந்த பிரானை சின்ன சின்னதாக நறுக்கி வெள்ளை பூண்டு எல்லாம் சேர்த்து செய்திருந்தது ரொம்ப சிறப்பாக இருந்தது . சாப்பிடவே தெரியாவிட்டாலும் உணவு போராளி என்ற பெயரை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் சாப்பிட்ட நண்டும் அருமையாக இருந்தது . பொதுவாக ஒரு நகைச்சுவை கதை உண்டு . அதிகம் சாப்பிட்டுவிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த ஒருத்தன்கிட்ட ஒருத்தர் சொன்னாராம் . கைய தொண்டைக்குள்ள விட்டு வாந்தியை எடுத்துடு கொஞ்சம் ப்ரியா இருக்கும்னு . அதுக்கு அவன் சொன்னானாம் அந்த அளவுக்கு எடமிருந்தா இன்னொரு ரவுண்ட் சாப்பிட்டு இருப்பேனே என்று . கிட்டத்தட்ட அந்த நிலை
ஊரை சுத்தி பாக்கவந்துட்டு இப்படி கொட்டிக்கிட்டே இருக்கிறோமே என்று யாரும் சொல்லிட கூடாதுன்னு அன்னிக்கு சாயந்தரம் கைலாசநாதர் நாதர் கோவிலுக்கு போனோம் . சென்ற முறை வந்தப்போ நிறைய வரலாற்று கருத்துக்களை தோழி ஒருவர் சொல்லி இருந்தார் . ஆனால் எனக்கு நினைவில் இருந்தது அந்த கோவில் ராஜசிம்மனால் கட்டப்பட்டது என்பது மட்டுமே . அங்க தாயின் கருவறை போன்ற ஒரு அமைப்பு இருப்பதாகவும் அதில் நுழைந்து வெளிவருவது நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு
சென்ற முறை நுழைந்து வரும் போது எழ முடியாமல் சிரமப்பட்ட நியாபகங்கள் கண்முன் வர நான் வரவில்லையென தனியே புல்தரைக்கு சென்றுவிட்டேன். சில நண்பர்கள் சென்றபோது அங்கிருந்த அர்ச்சகர் திருநீறு வைக்காமல் உள்ளே போககூடாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பி எங்களின் கோபத்தை மூட்டிவிட்டார் . இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் ஒரு கோவிலில் இவ்வாறு சொல்லி இருந்தால் பேசாமல் சென்று இருப்போம். கைலாசநாதர் கோவில் இந்திய தொல்லியல் துறையின்கீழ் வரும் ஒரு கோவில் . அது கோவில் என்பதை தாண்டி ஒரு வரலாற்று சுவடு . அங்கு வருபவர்கள் எல்லாம் கடவுளை மட்டுமே நாடி வரும் பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை . தங்களின் வரலாற்று தடங்களை பற்றி அறியும் ஆர்வம் கொண்ட யாவரும் வருவார்கள் . இத கூட தெரியாம இருக்குது இந்திய தொல்லையியல் துறை . இனிமேலாவது அபிஷேகம் மட்டும் பண்ணுங்கய்யா அட்வைஸ் பண்ணாதீங்க
இன்னொரு நண்பரின் வீட்டு சுவையான காஞ்சிபுரம் இட்லியுடன் அந்த நாள் முடிந்தது . காலை ஆரம்பித்ததில் இருந்தே புத்தகங்களையும் திரைப்படங்களையுமே அதிகம் பேசி இருந்தோம் . இரவு சிறிது உரையாடலுடன் இனிதே நிறைவடைந்தது
இரண்டாம் நாள் காலை அருகில் இருந்த மற்றொரு கோவிலுக்கு சென்றுவிட்டு அங்குமொரு வெறுப்பேற்றும் அனுபவத்துடன் திரும்பினோம். மற்றொரு நண்பரின் இல்லத்தில் சிற்றுண்டியை முடித்துவிட்டு மாமண்டூர் குகை கோவில் நோக்கி கிளம்பும் போது மணி பதினொன்றை தொட்டுவிட்டது. வெயிலின் உக்கிரத்தில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் சில மறக்க முடியாத நிழற்படங்களை எடுத்துவிட்டு கிளம்பினோம் . அதற்க்கு முன்னர் வழியில் ஒரு சமண கோவில் சென்று இருந்தோம் . புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளவே அங்கிருந்த சிலைகள் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகளை கொஞ்சம் கவனித்துவிட்டு திரும்பினோம் .
மாமண்டூர் முடித்துவிட்டு வந்தவுடன் முந்தைய மதியம் உண்டது போலவே ஈவு இரக்கமில்லாமல் அணைத்து ஜீவன்களையும் புசி புசியென புசித்துவிட்டு கொஞ்சம் ஒய்வு எடுத்தோம் .
முந்தைய நாள் பேசி தீர்மானித்திருந்தது போல் மாநகரம் திரைப்படம் செல்ல ஆயத்தமானோம் . ஆனால் ஷோ டைம் நாங்கள் சென்ற நேரத்துக்கு இல்லாமல் போனது . உடனே திரும்பி இருக்கலாம் அல்லது வேறு ஆங்கில படத்திற்கு சென்று இருக்கலாம் ஆனால் விதி யாரை விட்டது . மீன் , வித்தியாசமான பெயர் இதை எல்லாம் நம்பி கட்டப்பாவை காணோம் என்ற திரை காவியத்துக்கு போனோம் .
இதுவரை சிறப்பாக சென்ற பயணத்தின் (அல்லது விருந்தின் ) ஒரு திருஷ்டி போட்டு போல அமைந்து விட்டது . டைரக்ட்டர் பெயர் சேயோன் , அதனாலயோ என்னவோ எங்களை வச்சி செஞ்சுட்டார்
இந்த பயணம் நண்பர்களின் வீட்டுக்கு செல்வதுடன் அவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் அவர்களின் குடும்பத்தினருடன் பேசி மகிழவும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது . நண்பர்களின் சின்ன வயது புகைப்படங்கள் , செல்ல பெயர்கள் , சின்ன சின்ன குறும்புகள் எல்லாவற்றையும் பெற்றோர் மூலம் கேட்பது மிகவும் சிறப்பான அனுபவம் . ஆனா இந்த பதிவுல அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லாம முழுக்க முழுக்க சாப்பாடு மட்டும் வந்ததுன்னா அதுக்கு காரணம் அம்மாக்களோட கைப்பக்குவம் .
இப்படியே எல்லா வீட்டு கைப்பக்குவதையும் ரசிச்சு ருசிக்க இன்னும் நிறைய பயணப்படவேண்டியுள்ளது .
ஒரு நெடிய பயணத்தின் ஆரம்பமாக இதை சொல்லலாம்
ஒரு வழிய ட்ரிப் முடிஞ்சு போச்சு
பி.கு :
ரொம்ப நாளாச்சு ஒரு பதிவு எழுதி , அதுவும் புது லேப்டப் வாங்கின நேரம் ஒரு போஸ்ட் கூட எழுத முடியல . அடுத்த பதிவா பயணங்களில் சந்திச்ச சில மறக்க முடியாத மனிதர்களை பற்றிய ஒரு பதிவு "சில பயணங்களில் சில மனிதர்கள் "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment