ஒரு தன்னார்வலனாக வாழையில் இணைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன . இந்த காலகட்டங்களில் வாழை என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களையும் அனுபவங்களையும் அசை போட ஆரம்பித்ததன் விளைவே இந்த பதிவு .
கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பில் இணைத்து, அந்த குழந்தைகளுக்கு கற்பிக்க போகிறோம் என்ற எண்ணத்துடன் எனது முதல் பயிலரங்கிற்கு சென்று இருந்தேன் . அந்த இரு தினங்களும் சிறார்களிடம் கண்ட அன்புதான் இந்த இனிய பயணத்திற்கு வித்திட்டு இன்று இந்த பதிவை எழுத வைத்து இருக்கிறது .அன்றிலிருந்து இன்றுவரை கற்பித்ததை விட கற்றுக் கொண்டவைகள்தான் அதிகம். புத்தகங்களில் உள்ள அச்சிடப்பட்ட எழுத்துக்களை மட்டுமே வெவ்வேறு வழிமுறைகளில் நம்மால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியும் . அவர்களிடம் இருந்து கற்று கொண்ட விளையாட்டுகளும் வாழ்வியல் பாடங்களும் அநேகம் . மிக சாதாரணமாக விளையாட்டுகளினூடே அவர்கள் சொல்லிவிட்டு சென்று விடும் வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்துக்கள் ஆழமானவை
கற்போம் கற்பிப்போம் என்று சொல்வதில் உள்ள உண்மைகள் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தன . ஒருமுறை விளையாட்டாக ஒரு சிறுமி என்னை பார்த்து "உங்களது வீட்டில் உள்ள மிக முக்கியமான சொத்து எது?", என வினவினாள் . நான் உடனே அதிமேதாவிதனமாக, "நான் சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களே மிகவும் அரிய சொத்து " என கூறினேன் . அதற்கு அந்த சிறுமி , " இல்லை அண்ணா , நம் வீட்டின் மிக பெரிய சொத்து நாம்தானே !!! " என்று கேட்டுவிட்டு போய்விட்டாள் . இதைவிடவா பெரிய கற்றல் இருந்துவிட போகிறது ?.
உடன்பிறந்தவர்கள் யாருமில்லையே என்ற வருத்தம் சிறுவயதில் இருந்தே எனக்கு இருந்தது. ஒருமுறை எதேச்சையாக சிறார்களிடம் சொன்னபோது நாங்கதான் இருக்கிறோமே என்று அவர்கள் மொழிந்த வார்த்தைகள் இப்பொழுது நினைத்தாலும் இனிக்கின்றன. . அவர்களுடன் விளையாடிய விடுகதை புதிர்களும் அதை விடுவிக்க முடியாமல் திண்டாடிய தருணங்களும் சுவாரசியமானவை . ஒவ்வொரு சிறாரிடமும் உரையாடும்போதும் விளையாட்டுபோதும் ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாமே பாடங்கள்தான் . அவற்றை பற்றி சொல்லி கொண்டே இருக்கலாம் .
பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் . எண்ணங்களில் , செயல்களில் ,முகபாவங்களில் ,சிரிப்புகளில் என ஒவ்வொன்றிலும் தனித்தன்மை மிக்கவர்கள் சிறார்கள் . கவிதை ,கதை , ஓவியம் , நடனம் , நடிப்பு , விளையாட்டுகள் என ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமைகள் அபிரிவிதமானவை. அவற்றை கண்டறிந்து மெருகு ஏற்றுவதுடன் அவற்றை பறை சாற்றும் விதமான வாய்ப்புகளை ஏற்படுத்தியும் கண்டறிந்தும் தர வேண்டியது அவசியம் என நம்புகிறோம் .
ஒவ்வொரு பயிலரங்கிலும் புதுப்புது அனுபவங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன . ஐந்து நாள் அலுவலக வேலையை முடித்து களைத்து ஓய்ந்து போன முகத்துடன் வெள்ளிகிழைமை இரவு எங்கள் பயணங்கள் ஆரம்பிக்கின்றன . சனிக்கிழமை காலை குழந்தைகளின் வருகையின் போது கிடைக்கும் அந்த புத்துணர்வும் /ஆற்றலும் இரு தினங்களும் சிறார்களுடன் சிறார்களாக மாற்றி நம்மை விளையாட வைத்துவிடும் . திரும்ப திங்கள் அலுவலகம் செல்லும் போது மனதளவில் ஒரு சிறப்பான மலர்ச்சியும் புத்துணர்வும் இருக்கும் .
ஒரு வழிகாட்டியாக எனது அனுபவங்களை பதிவுசெய்வதும் முக்கியமானது . ஆரம்ப காலகட்டத்தில் அலைபேசி வாயிலாக எனது தம்பியுடன் பேசுவது மிகவும் கடினமானதாக இருந்தது . பயிலரங்கில் நன்றாக உரையாடும் அவன் போனில் அந்த அளவுக்கு பேசுவதில்லை . நான் கேட்கும் சில கேள்விகளுக்கு ஆம் , இல்லை என்ற ஓரிரு வார்த்தை பதில்களையே தருவான் . பிறகுதான் என்னால் உணர முடிந்தது அலைபேசியில் நான் எப்பொழுதும் கேள்விகளையே கேட்கிறேன், அவனுடன் உரையாட முனைவதில்லை என்று . அதன் பிறகு என் அலுவலகத்தில் நட்பு வட்டாரத்தில் நிகழ்ந்தவற்றை நான் பகிர அவனும் பள்ளியிலும் விளையாடும் பொழுதும் நடந்தவற்றை பகிர்வான் . இப்படியாக எங்களது உரையாடல்கள் நீண்டு கொண்டே இருக்கும் .
பள்ளி பருவத்தில் இருக்கும் போது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நிறைய கடிதங்கள் எழுதி உள்ளேன் . பிறகு நவீன தொலைத்தொடர்பு வசதிகள் வந்த பிறகு கடிதப் போக்குவரத்துக்கு என்பதே அற்றுப் போய்விட்டது . இந்நிலையில் வாழை தம்பிகளிடம் இருந்து வரும் கடிதங்கள் மகிழ்ச்சியை தருவதோடு பால்ய கால நினைவலைகளையும் மீட்டுகின்றன .
இந்த மூன்று ஆண்டுகளில் வாழை எனக்குள் ஏற்படுத்திய மாற்றமும் , ஒரு பண்பட்ட முதிர்வும் சிறப்பானவை . என் குணங்கள் ,பொறுப்புணர்வு மற்றும் நடத்தையில் ஏற்பட்டுள்ள இந்த நல்ல மாற்றங்கள் என் குடும்பத்தாரையும் சுற்றத்தாரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
நமது கற்றல் செயல்பாடு குழந்தைகளுடன் நின்றுவிடுவது இல்லை. அதை தாண்டி சக தன்னார்வலர் நண்பர்களிடம் இருந்து கற்றுக்கொள்பவை அதிகம் . அவை அனுபவ பாடங்களாகவும் வாழ்க்கை பாடங்களாகவும் விரிகின்றன . ஒவ்வொரு அமர்விலும் சக தன்னார்வலர்களுடன் உரையாடும் போதும் கற்று கொள்ளும் செய்திகளும் விஷயங்களும் பல புத்தகங்களை வாசிப்பதற்கும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து பேசுவதற்கும் ஒப்பானவை . ஒரே மாதிரியான/ வேறு மாதிரியான எண்ணங்கள் , ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நண்பர்களை வாழை உருவாக்கி கொடுத்து இருக்கிறது .இதன் மூலம் பலதரப்பட்ட தளங்களில் பயணப்படவும் அனுபவப்படவும் முடிகிறது . இன்னும் நிறைய புதிய நண்பர்களை சந்திக்கும் ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது .
ஒவ்வொரு பயிலரங்கிற்கு செல்லும் போதும் பேருந்து வரும்வரை காத்திருக்கும் நேரங்கள் அழகானவை . நமது நண்பர்களை சந்திக்க போகிறோம் என்ற அந்த ஆர்வமே அதற்கு காரணம் . பயிலரங்கிற்கு முன்னர் நடக்கும் தயாரிப்பு பணிகளில் இருந்து கற்று கொள்வது நிறைய . பலதரப்பட்ட எண்ணங்கள் கொண்ட மக்களிடம் அலைபேசியின் வாயிலாக பேசி கருத்து ஒற்றுமையுடன் சிறார்களுக்கு என்ன சொல்லி தர போகிறோம் என்ற முடிவு எடுக்கப்படுகிறது . அதற்கு ஒவ்வொரு தன்னார்வலரும் தரும் பங்களிப்புகள் மிக சிறப்பானவை .
பொதுவாக வாழை என்பதை எனது சமூக கடமையை நிறைவேற்றும் ஒரு களமாகவே நான் கருதுகிறேன் . இந்த சமுதாயம் எனக்கு கற்று கொடுத்த அறிவையும் , ஒழுக்கத்தையும் மற்ற நல்ல விஷயங்களையும் திரும்ப இந்த சமூகத்துக்கு தருவது எனது கடமைதானே ! அதை செய்யும் ஒரு வாய்ப்பை வாழை எனக்கு நல்கி இருக்கிறது
வாழைக்கு ஒரு தன்னார்வலனாக கொடுத்த பங்களிப்புகளை விட அங்கிருந்து கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் மிக அதிகம் .
இந்த நெடிய பயணத்தில் ஒரு பயணியாக தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது
No comments:
Post a Comment