November 17, 2013

ஜலதீபம்-புத்தகம் பற்றிய பேச்சு

சாண்டில்யன் மகராஷ்டிராவை வைத்து எழுதிய ஜலதீபம் என்ற புதினம் படித்தேன். பிரிட்டிஷ் ,போர்த்துக்கீசியர்களின் கடலாதிக்கத்தை முறியடித்து அரபிக்கடலில் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிகரற்ற கடல்வீரராக விளங்கிய கனோஜி ஆங்க்ரேயின் கதைதான் இது. மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் கடற்கொள்ளையர் என்றும் மக்களால் ஸார்கேல் (கடற்படை தளபதி) என்றும் அழைக்கப்பட்ட ஆங்க்ரேயின் கடலாதிக்கத்தையும் அவர் போர்களையும் பற்றி படிக்கும் போது மெய்சிலிர்கிறது. இனி கதைசுருக்கம்

{முன் கதை சுருக்கம்: மராதியத்தின் ஒப்பற்ற வீரரான சிவாஜி நிர்மாணித்த சாம்ராஜ்யத்தை அவருக்குப்பின் அவர் மகன் சாம்பாஜி சரியாக நிர்வகிக்காதலால் மொகலாயர் ஆதிக்கம் அதிகரிக்க சாம்பாஜி சூழ்நிலையால் தப்பி தஞ்சை வருகிறார் அங்கு ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொள்ள ஒரு மகவும் பிறக்கிறது. அவருக்கு பின் மராத்தியத்தை மொகலாயர் ஆதரவு பெற்ற ஷாஹூவும் தாராபாய் ஆதரவு பெற்ற சிவாஜியும் ஆண்டுவருகிரார்கள். தஞ்சையில் வளர்ந்து வரும் மூன்றாவது மகன் வீரன் ஒருவனால் கடத்தப்பட அவனை கண்டுபிடிதக்க இக்கதையின் நாயகன் தஞ்சையில் இருந்து புறப்படுகிறான் }




மகராஷ்டிராவின் மூன்றாவது வாரிசை கண்டுபிடிக்க தஞ்சையில் இருந்து வரும் வாலிபன் இதயசந்திரன் பயணித்த கப்பல் கடற்போரில் மூழ்க கரை ஒதுங்கும் அவனை மகராஷ்டிராவில் ஒப்பற்ற செல்வாக்கும் மரியாதையும் உடைய பிரும்மேந்திர சுவாமி காப்பாற்றுகிறார். அங்கு அவன் ஷாஹூவின் மருமகள் பானுமதி தேவி மற்றும் கனோஜி ஆங்க்ரே ஆகியோரை சந்திக்கிறான். தாராபாய்யின் ஸார்கேல் ஆங்க்ரேயை வெறுக்கும் பானுமதி அவரை சிறை செய்ய இதயச்சந்திரனை நாடுகிறார். அவனை தன் அரசியல் லாபத்துக்காக உபயோகிக்க அவனை ஆங்க்ரேயின் பரம வைரி ஸித்திகளிடம் தூது அனுப்புகிறார். அங்கு அவன் ஆங்க்ரேயுடன் சேர விரும்புவதாக தெரிவிக்க அவன் சிறைபடுகிறான்.

அவனை ஆங்க்ரேயின் மகள் மஞ்சு காப்பாற்றி அவள் கப்பலான ஜலதீபத்தில் ஸ்வர்ணசதுக்கம் அழைத்து செல்கிறாள் . அங்கு மாலுமியாக பயிற்சி பெற்று சிறந்த கடல் வீரனாக உருவாகும் அவனை ஜலதீபத்தின் உபதளபதியாக நியமிக்கிறார் ஆங்க்ரே. மஞ்சுவுக்கும் சந்திரனுக்கும் காதல் மலர்கிறது. ஒருமுறை ஆங்கிலேய கப்பலை கொள்ளையிடும் போது காதரின் எனும் மங்கை சிறை பிடிக்க படுகிறாள் ,இதனால் மஞ்சுவுக்கும் அவனுக்கும் இடையே ஊடல் ஏற்படுகிறது .

காதரினை ஒப்படைக்க கொலாபா செல்லும் சந்திரனை தன் காம இச்சைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள முயலும் அவள் இனத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கிறாள் .இதனிடையே ஆங்க்ரேயை ஒடுக்க ஷாஹூ பாஜிராவ் பிங்க்லே தலைமையில் படை திரட்டுகிறார் அவளை வெள்ளையரிடம் ஒப்படைத்துவிட்டு கடல் பிராந்தியத்தில் அமைதி வேண்டி பம்பாய் செல்லும் இதயச்சந்திரன் கவர்னர் ஏஸ்லாபியை சந்திக்கிறான் .

அவனை சிறை செய்ய பிரும்மேந்திர சுவாமியும் பானுமதியும் முயல அவனை காயத்துடன் கவர்னர் காப்பாற்றுகிறார். அவனுக்கு எமிலி எனும் நர்ஸ் சேவை புரிகிறாள். கவர்னரின் காரியதரிசி பிரவுன் அவருக்கு எதிராக சதி செய்ய அவரை இதயசந்திரன் அடித்து விடுகிறான் .இதனால் கவலை கொண்ட ஏஸ்லாபி அவனை நர்ஸ் உடன் தப்ப செய்து நர்ஸ் அவனை காப்பாற்றி கொண்டு ஓடிவிட்டதாக பிரச்சனையை முடிக்கிறார்.

தப்பி வரும் அவன் பல குழப்பங்களுக்கு மத்தியில் திருட்டுதனமாக மஞ்சுவை மணம் முடிக்கிறான்.தரை படை தலைவனாக நியமிக்கப்படும் அவன் போர் வியூகத்தின் படி கல்யான் கோட்டையை பிடிக்கிறான் .அப்போது நிம்கர்(அவன்தான் தஞ்சையில் இருந்து மகவை கடத்தி வந்தவன் ) ஆங்கரேயின் தூதுவனாக வருகிறான். போரில் மிக பெரிய பிங்ளேயின் படையை இதயசந்திரன் தன் வியுகத்தால் உடைத்து வெற்றி கொள்கிறான் . அப்போரில் நிம்கர் காயமடைய அவனுக்கு சிகிச்சை அளிக்கிறான். தொடர்ந்து முன்னேறும் ஆங்க்ரே பல கோட்டைகளை கைப்பற்றுகிறார் .

மிகசிறந்த ராஜதந்திரியான பாலாஜி விஸ்வநாத் தன் சாமர்த்தியத்தால் ஆங்க்ரேயை சமாளித்து ஒரு ஒப்பந்தம் செய்கிறார். அதன்படி ஒன்றுபட்ட மராதியத்தின் ஸார்கல் ஆக நியமனம் பெறுகிறார் ஆங்க்ரே. நிம்கரை அழைத்து வரும்படி பாலாஜி ஆணையிட மறுக்கும் இதயசந்திரன் ,கல்யான் கோட்டை பொறுப்பை தன் உபதளபதி சுகாஜியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்கருடன் தமிழகம் தப்ப முயலும் (அவனிடமிருந்து உண்மை வரவழைக்க முடியாததால் ) அவனை மஞ்சு மூலம் கைது செய்கிறார் பாலாஜி. மஞ்சு சூல் கொண்டிருப்பதால் தன் மகள் எதிர்காலம் குறித்து கனோஜி கவலை கொள்கிறார் .நீதி தவறாத பாலாஜி விஸ்வநாத் பல வெற்றிகள் பெற்று மகராஷ்டிராவின் புகழை வளர்த்த இதயசந்திரனுக்கு என்ன தண்டனை அளித்தார் ? இதயசந்திரன் வந்த வேலை என்ன ஆனது ? போன்ற வினாக்களுக்கு விடையளித்து முடிந்தது புதினம் .


அரசியல் லாபத்துக்காக உபயோகிக்க முயலும் ஒருத்தி ,அன்பினால் ஆட்கொண்ட ஒருத்தி ,இச்சைக்காக வளைய வரும் ஒருத்தி ,சேவையினால் மயக்கும் ஒருத்தி என நான்கு பெண்களின் அன்புக்கு மத்தியில் திண்டாடுகிறார் இதயச்சந்திரன். மஞ்சு -இதயசந்திரன் ஊடல் மற்றும் கூடல் காட்சிகள் எதார்த்தம் விஜயசதுர்கம் ,ஜின்ஜீராத் ,கொலாபா போன்ற கடல் துறைமுகங்கள் மற்றும் கோட்டைகளின் வர்ணனை நம் கண் முன்னே அவற்றை சிருஷ்டிப்பதுடன் அதில் வாழ்ந்து பார்க்கவும் வைக்கிறது. அணைத்து மதத்தவரும் ஒற்றுமையுடன் வழிபடும் பரசுராமன் ஆலயம் கொலாபாவில் உள்ள குலாபியின் மகேசுவரி கோவில் என பல்வேறு அதிசயங்களை அறிய முடிந்தது. கடைசியில் பாலாஜியின் விசாரணையில் இதயசந்திரன் செய்யும் தர்க்கங்கள் படிக்க படிக்க சுவைக்கின்றன


மூன்று பாகங்களுடன் கிட்டத்தட்ட 1100 பக்கங்கள் கொண்ட இந்நாவலை ஓரிடத்தில் கூட சலிப்போ வெறுப்போ தோன்றாமல் முதல் அத்தியாயத்தில் இருக்கும் ஆர்வத்தை கடைசி பக்கம் வரை கொண்டு செல்லும் போது சாண்டில்யனின் சிறப்பை நாம் தர்க்கமின்றி ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.


பி.கு :

கதைசுருக்கம் மிக பெரிதாகவே இருக்கும் ஏனெனில் மூன்ற பாகம் கொண்ட பெரிய நாவல் என்பதால். மிகவும் நல்ல கதையோட்டம் . கனோஜியின் நகைச்சுவை மிகுந்த பேசும் பெண்கள் முன் இதயசந்திரன் மன உறுதி குலைவதும் மிக அருமையாக சொல்லப்பட்டுள்ளது .மாலுமியின் வாழ்க்கை முறை மற்றும் அதன் சுக துக்கங்கள் போன்றவற்றை அழகாக சொல்லி இருந்தார் சாண்டில்யன்


ஜலதீபம்
வகை :சரித்திர நாவல் (மூன்று பாகங்களை கொண்டது )
ஆசிரியர் :சாண்டில்யன்
விலை : 300(approx)
பதிப்பகம் :வானதி பதிப்பகம் (2013 வரை 23 பதிப்புகள் )

No comments:

Post a Comment