November 17, 2013

தூக்கு தண்டனை-ஒரு விவாதம்

திரு.எண்டமூரி விரேந்தர்நாத் அவர்கள் எழுதிய தூக்கு தண்டனை எனும் நாவல் படித்தேன்.ஒரு நாவலாக மட்டும் முடிந்து விடாமல் என்னுள் பல விவாதங்களை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவு, இருப்பினும் பல்வேறு திருப்பங்களுடன் மிக அருமையான பயணத்தை நல்கியது.


தூக்கு தண்டனையின் அவசியம் குறித்து என்னை யோசிக்க வைத்துவிட்டது. தூக்கு தண்டனையை ஒழிக்க போராடும் ஒருவன் ஒரு நாடகம் ஆடி உலகத்துக்கு தூக்கு தண்டனையின் கொடுமையை புரிய வைக்க முயல்கிறான்.ஆனால் துரதிஷ்டவசமாக அவனை பகடைக்காயாக பயன்படுத்தும் ஒருவர் தன் வஞ்சத்தை தீர்த்து கொள்கிறார்.கடைசியில் அவன் எப்படி மீள்கிறான் என்பதே கதை.


தூக்கு தண்டனை தேவையில்லை என எழுப்பப்படும் கூக்குரல்கள் அதிகரித்து வருகின்றன . ஒரு மனிதனின் உயிரை மற்றவர்கள் சட்டம் என்ற ஒன்றை கொண்டு எடுப்பது தவறு என சிலர் கூறுகிறார்கள் . தண்டனை என்பது ஒருவன் செய்த தவறுக்கு அளிக்கப்படும் பிராயசித்தம் ஆகும்.அப்படி இருக்க தூக்கு தண்டனை என்ற பெயரில் அவனை திருந்த முயற்சிக்காமல் கொலை செய்வது எப்படி சரியாகும் ?? ஒரு கொலைகாரனுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் போது எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்.

மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது.தன் முடிவு தெரிந்த ஒரு மனிதன் தினமும் செத்து செத்து உயிர் வாழும் ஒரு நடைபிணமாக மட்டுமே உயிர் வாழ முடியும். ஒவ்வொரு நாளும் தன் வாழ்நாளை எண்ணி கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது .ஒரு கதையின் முடிவு உங்களுக்கு முன்னரே தெரிந்து விட்டால் உங்களால் ஆர்வமாக படிக்க முடியாது அதே போல் தன் முடிவு தெரிந்த ஒருவனின் வாழ்நாள் நிச்சயம் வெறுமையாக எந்த பிடிப்பும் இல்லாமல் நகரும்.எவ்வளவு பெரிய தண்டனை ??

இதனாலேயே பல்வேறு மரண தண்டனை கைதிகள் மனதளவில் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.கிட்டத்தட்ட 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டனர். சில அரிதான குற்றங்களுக்கு சில நாடுகளில் மரண தண்டனை விதிக்கிறார்கள். அந்த நாடுகளில் எல்லாம் குற்றங்கள் அதிகரிக்கவில்லையே என்ற கேள்வியும் எழுகிறது.

பொதுவாக தண்டனைகள் குறித்த இரு கருத்துருக்கள் உள்ளன.முதல் கருத்து தண்டனைகள் அதிகமானால் தவறுகள் குறையும் என்பது .இதில் எனக்கு உடன்பாடில்லை.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான சட்டங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் வலிமையானதாக இருந்தும் (கற்பழிப்பு குறித்து அமெரிக்க மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள சட்டங்களை கேட்டால் ஆச்சர்ய படுவீர்கள் .) நம் நாட்டில் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன. சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை மிக கொடுமையானது .இருப்பினும் அந்த நாட்டிலும் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன(அவர்கள் சட்டம் தானே எட்டு மாத கர்ப்பிணியை கட்டாய கருக்கலைப்பு செய்து கொல்ல சொன்னது )

இரண்டாவது கருத்து ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் மிக சிறந்த தண்டனை அவனை மன்னிப்பது ஆகும் .அதாவது அவனை மன்னித்தால் அவன் மனசாட்சி அவனை உறுத்தி அவனை நல்ல படியாக வாழ வைக்கும் என்பதாகும் .இதிலும் எனக்கு உடன்பாடில்லை ஏனெனில் நாட்டில் வாழும் அனைவரும் மனசாட்சியுடன் தான் வாழ்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது .காரணம் மனிதன் மட்டும் இங்கு வாழ்வதில்லை மனிதன் என்னும் போர்வையில் ஈவு, இரக்கம் மற்றும் மனித்தன்மையற்ற மிருகங்களும் வாழ தானே செய்கின்றன.அவர்களை கொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.ஒருவன் செய்யும் தவறுக்கு தண்டனையே இல்லையெனில் அவன் மனம் குற்றம் செய்வதை நோக்கி சிந்திக்காதா ??

புத்தர் பிறந்த நாடு இது மனிதனை மன்னிக்கும் மனப்பான்மை மேலோங்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர் .சில குற்றங்களை மறக்கவே முடியாதபோது மன்னிப்பது எங்கனம் .(உதாரணம் நொய்டா நிதாரி படுகொலைகள் ).இன்றும் சிலவற்றை நினைக்கும் போது இதயம் கனக்கிறது . சட்டத்தினால் நிரபராதி என சொல்லப்படும் அனைவரும் அப்பழுக்கற்றவர்கள் என்று கூறிவிட முடியாது.சட்டத்தின் நெளிவு சுளிவுகளால் தப்பித்த அவர்களை ஒன்றும் செய்ய முடியாத சட்டம் சிலருக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்குவதும் எப்படி சரியாகும்.

நம் சுதந்திர போராட்ட தியாகிகள் சிறையில் அனுபவித்த தண்டனையை விட மரண தண்டனை கொடுமையானதா?. ஒரு திரைபடத்தில் சத்ய ராஜ் சொல்வார் மரணம் என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வு அது எப்படி தண்டனையாகும் என்று ? . அது போல் மரணத்தை தண்டனையாக வழங்குவது அந்த மாதிரி குற்றங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்து கொள்ளும் என சொல்ல முடியமா?? .


இல்லை இந்த உலகில் மனிதனாக வாழ தகுதியே இல்லாத ஒருவனை கொல்லாமல் பாதுகாத்து வருவது சரிதானா??

என்ன இது மாத்தி மாத்தி பேசறான்னு பாக்கறீங்களா

எனக்கு ஒண்ணுமே புரியவில்லை

இவ்வளவு விவாதங்கள் என்னுள் நடந்த போதும் என் சிற்றறிவுக்கு எதுவும் எட்ட வில்லை .

உங்கள் கருத்தை சொல்லுங்கள் எனக்கு ஏதாவது தெளிவு ஏற்படுகிறதா என்று பார்ப்போம்
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி வணக்கம்

இனி அந்த புத்தகம் பற்றிய தகவல்
தூக்கு தண்டனை
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு)
மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
விலை :170


வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

 ஒரு சமூக வலைதளத்தின் இந்த பதிவின்  பின்னூட்டத்தில் இருந்து


No comments:

Post a Comment