December 01, 2016

வானொலி"வானொலி கேட்கும் நேரம்
நம் வாழ்வின் உன்னத நேரம் "

அண்மையில் ஹலோ எப்.எம்ல டைரினு ஒரு நிகழ்ச்சி கேட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ரேடியோ கேட்டதுல அந்த நிகழ்ச்சி ரொம்ப புடிச்சு இருந்துச்சு . மேலும் பால்ய காலத்தில் வானொலி கேட்ட அனுபவங்களை அசை போட தூண்டிவிட்டது. அதன் விளைவே இந்த பதிவு

துல்லியமாக எந்த வயதில் இருந்து வானொலி கேட்க ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. அப்பொழுது அதிகம் கேட்கும் அலைவரிசைகள் சென்னை , திருச்சிராப்பள்ளி மற்றும் சிலோன் போன்றவை தான். செய்திகள் , திரை இசைப் பாடல்கள் , சிறார் பல்சுவை நிகழ்ச்சிகள் , நாடகங்கள் மற்றும் ஒலிச்சித்திரங்கள் என பல நிகழ்ச்சிகள் கேட்டு மகிழ்ந்த நினைவு.

மதிய உணவு வீட்டில் 1.45 மணி செய்திகளுடன் முடிய இரவு உணவு 7.15 மணி செய்திகளுடன் ஆரம்பிக்கும். ஆல் இந்தியா ரேடியோ , ஆகாஸவாணி என இரு வேறு செய்திப் பிரிவுகள் இருந்தன.

வாரயிறுதி நாட்களில் ஒலிபரப்பாகும் ஒலிச் சித்திரங்கள் ( திரைப்படம்) மிகவும் பிடித்தமானவை. சிவகாமியின் சபதம் முழு நாவலை வாராவாரம் ஒலிச் சித்திரமாக கேட்டு முடித்தேன்.

பிறகு பண்பலை வானொலிகள் வர ஆரம்பித்தவுடன் வானொலி என்பது எல்லா நேரத்திலும் கேட்க கூடிய ஒன்றானது. நெசவு உள்ளிட்ட தொழில் செய்பவர்களுடன் பன்பலைகள் முழு நேர அங்கமாகின.

எங்க ஊர் சைடுல கொடைக்கானல் எப்.எம் மட்டும்தான் தெளிவா எடுக்கும் . சூரியன் எப்.எம்க்கு அவ்வளவு தெளிவா சமிக்ஞைகள் கிடைக்காது.

இன்னிக்கு வரை எத்தனையோ பண்பலைகள் கேட்டாலும் எனக்கு எப்பவுமே கோடை எப்.எம் மட்டும்தான் பேவரெட். அப்போ காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒலிபரப்பை கொடுத்து வந்தது.

வானவில் , சந்தோஷ சாரல் , சிந்தனை கட்டங்கள் , Knock out damaka , செப்புக செந்தமிழ், குறிஞ்சித் தென்றல், தொட்டு தொட்டு என நிகழ்ச்சிகள் ஏராளம். நேயர்கள் கடிதங்களுக்காகவே இரண்டு மணி நேரம் ஒதுக்கும் அளவுக்கு 22 மாவட்டங்களில் தன் இன்னிசை ஆதிக்கத்தை பரவி இருந்தது .

நேயர்களின் எண்ணங்களுடன் வண்ணம் பெறும் வானவில் நிகழ்ச்சி முக்கியமானது. அப்போது நிலைய இயக்குனராக இருந்த மகாசோமாஸ் கந்தமூர்த்தி ஐயா அவர்கள் ஒருங்கிணைக்கும் வானவில் மிகவும் ரம்மியமானது.

சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் வழங்கிய மீனாட்சி விலாசம் குடுப்பத் தொடரை விடாமல் கேட்டதுண்டு. பாகவதர், பழமொழி பாக்கியத்தம்மாள் என அனைத்து கதாப்பாத்திரங்களும் இன்றும் மனசில் நிற்கின்றன.

ஆங்கில கலப்பு இல்லாமல் சில விதிமுறைகளுடன் வலம் வரும் செப்புக செந்தமிழ், உண்டு களைத்தவுடன் 2 மணிக்கு துள்ளல் இசைப் பாடல்களுடன் வரும் நாக்அவுட் டமாக்கா, விளம்பரதாரர் நிகழ்ச்சியாக நவசதீஷ்குமார் வழங்கும் டாப் 5 சாங்ஸ் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் பசுமையாக இனிய நினைவுகளுடன் பதிந்துள்ளன.

வானொலி வரலாற்றில் குறுக்கெழுத்துப் புதிரை ஒலிபரப்பிய பெருமை கோடைப் பண்பலைக்கு மட்டுமே உண்டு. சிந்தனைக் கட்டங்கள் என்ற பெயரில் ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சிதான் பிற்காலத்தில் நான் சில தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்கள் உருவாக்க உத்வேகமாக இருந்தது.

Tone Tunes என்ற பெயரில் வலம் வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் முக்கியமானது.

பின்னர் இரவு பத்து மணி வரை ஒலிபரப்பை நீட்டித்து தற்போது 24 மணி நேரமும் ஒலிபரப்பாகி வருகிறதென நினைக்கிறேன்.

ஜான் டீ பிரிட்டோ , சித்ரா.எஸ்.ரவி என சில தொகுப்பாளர்களின் பெயர்தான் நினைவில் உள்ளது.

பாட்டு போடுற ஒரு சாதாரண எப்.எம் என கோடைப் பண்பலையை என்னால் நினைக்க முடியவில்லை. அதை தாண்டிய ஒரு பிணைப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

#Kodai_FM #100.5

No comments:

Post a Comment