November 16, 2013

தனிமை!! தனிமை!!

இந்த உலகத்தின் அணைத்து சுகதுக்கங்களில் இருந்து விலகி நமக்கென தனி உலகை உருவாக்கி கொண்டு ஆட்சி புரியும் இனிய தருணமே தனிமை. சிலருக்கு அது தேனாய் தித்திக்கும். சிலரை அது நெருப்பாய் வாட்டும். ஆக தனிமையின் இனிமை சூழ்நிலையை பொருத்து மாறும். சில சமயங்களில் தனிமை மன அமைதியை தருவதோடு நல்லதொரு புத்துணர்ச்சியையும் தரும். தனிமையில் நம் சுயசிந்தனை அதிகரிக்கும். கஷ்டமான சூழ்நிலையில் தனிமை விபரீதமான முடிவுகளை சிந்திக்க வைக்கும். தனிமை நம் தோல்விகளை அலசி பார்க்குமே ஒழிய அதற்கான தீர்வுகளை பற்றி சிந்திக்க விடாது. தனிமை நம் அறிவுக்கு மதிப்பு தராமல் உணர்ச்சிகளுக்கு புகலிடம் தருகிறது

தனிமையில் இனிமை காண முடியுமா என எனக்கு உறுதியாக தெரியவில்லை.ஆனால் நார்வேயில் நள்ளிரவில் சூரியன் தெரியுமாம். காதலில் தனிமை கற்பனைகளுக்கு வித்திட்டு மட்டற்ற மகிழ்ச்சியை தரும். ஆனால் தோழமையில் தனிமை நம்மை காயப்படுத்தும். கலைஞனின் தனிமை கலைகளை சிந்திக்கும்.சில சமயங்களில் தனிமை நம்மை ஒரு தனி தீவு போலவும் நமக்கு யாருமே இல்லை என்பதுபோலவும் வருந்த வைக்கும். சிலருக்கு அது ஒரு வெறுமையை கூட அளிக்கும். தனிமையில் நாம் சிருஷ்டிக்கும் உலகில் இருந்து நம்மால் வெளியில் வர முடியவில்லையெனில் நம் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று பொருள். இவ்வாறு மனதளவில் பாதிக்கப்பட்ட பல சகோதரர்களுக்கு ஆறுதலுக்கு பதிலாக கிடைத்த தனிமையே காரணமாக இருக்கலாம்.


நம் இந்த பரந்த உலகத்தில் எப்பொழுதும் சகாக்களுடன் வாழ்ந்தாலும் ஒரு சில சமயங்களில் நமக்கு தனிமை தேவைப்படுகிறது. நம்மை நமக்கே புதிதாய் அறிமுகம் செய்விக்கும் தன்மை தனிமைக்கு உண்டு. என் துக்ககரமான நாட்களில் எனக்கு தனிமை தேவைப்படும். இது எனக்கு ஆறுதல் எவ்வாறெனில் என் துன்பம் பிறர் அறியாவண்ணம் இருக்கிறது என்னும் நினைப்பினால் :).


தனிமை என்பதை யாருமே இல்லாத எந்த ஒலியும் இல்லாத சூழல் என கொள்ள முடியாது . நீங்கள் நினைத்தால் எந்த இடத்தில வேண்டுமானால் தனிமையை சிருஷ்டித்து கொள்ளலாம். அதற்க்கு பல மார்க்கங்கள் உள்ளன


நான் என் தனிமையை உருவாக்க எப்பொழுதும் தமிழ் பாடல்களையே நம்புகிறேன். நல்ல இசையை கேர்க்கும்போது நம் மனம் அமைதி கொள்வதோடு அதோடு பயணிக்க ஆரம்பிக்கிறது.அதனால் நாம் நம் சுற்றுபுறத்தை மறந்துவிடுகிறோம். அந்த வகையில் என்னை தனிமைக்கு கொண்டு செல்லும் இரு பாடல்கள்

மறைந்த பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் குரல் எனக்கு மிக பிடிக்கும் அவரின்

"மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச "

எனும் பாடல். மனதில் ஏற்படும் சிந்தனை அலைகள் அனைத்தும் நிறைவு பெற்று மனம் ஒரு தெளிந்த நீரோடையாய் அமைதியாக இருக்கும்


இரண்டாவது பாடல் அலைபாயுதே எனும் படத்தில் வரும் ஸ்வர்ணலதாவின்
" எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் "

எனும் பாடல். இந்த பாடல் கேற்கும் போதெல்லாம் எங்கோ ஒரு இடத்தில எழும் இனிய இசையை நோக்கி யாருமிலலா நள்ளிரவில் நான் நகர்வது போன்ற பிரம்மை ஏற்படும்

அந்த பாடலில் வரும் ஒரு வரி "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன்".



இவ்வாறு தனிமை உங்களுக்கு எந்த மாதரியாக செயல்பட வைக்கிறது? .எப்படி தனிமையை உருவாக்கி கொள்கிறீர்கள்? என்பதை பகிரலாமே

1 comment:

  1. உங்களை நீங்கள் உங்களுடைய பிரபஞ்சத்தின் மையம் என உணர தனிமையின் வெறுமை நீங்கும். தனித்துவத்தின் கருவறை மகத்துவம் விளங்கும். எண்ணத்தின் வீர்யம் அதிகரிக்கும். செயல்களும் பேச்சுகளும் இரண்டாம் பட்சம் என உணர இயலும்

    ReplyDelete