சென்னை வானூர்தி நிலையத்தின் மேற்கூரை நம்மை மேவிவிடுமோ என்ற அச்சத்துடன் கடந்து சென்று பயணிக்க தயாரானோம். காற்று வெளியினில் எங்களை கைப்பிடித்து முகில்களினூடே மூழ்கி சென்றது கோ-ஏர் பறவை
செங்கதிரோன் முகமன் கூற ஆரத்தழுவி வரவேற்றது சாவர்கர் விமான நிலையம்.
அந்தமான் செல்லுலார் ஜெயில் |
சுதந்திர பறவைகளான நாங்கள் பார்க்க வேண்டிய முதல் இடமாக அமைந்து போனது அந்தமான் செல்லுலார் சிறை. ஒவ்வொரு செல்லும் பேசிய ஓராயிரம் வரலாறுகளையும் கதைகளையும் கேட்டுக் கொண்டே நடந்தோம் புரிந்தும் புரியாமலும்
மரினா பூங்காவில் உள்ள ராஜீவ் காந்தி சிலை |
சாவார்கர் துதியையும் புகழையும் கேட்டுக்கொண்டே இருந்த காதுகளுக்கு கொஞ்சம் விடுதலை அளித்தது மரினா அரங்கம்
ஆம் அந்த மாலை வேளையில் அன்ன நடை போட்டோம் மரினா பூங்காவிற்கு . பரந்து விரிந்த சமுத்திரத்தை பின்புலமாக கொண்டு கண்டு களித்தோம் சாயும் அந்தியை.
மீண்டும் சிறைப் பறவையாய் மாறி செல்லுக்குள் சென்று சிறை வரலாற்றை ஒளியும் ஒலியும் சேர்ந்ததொரு கலவையில் கண்டோம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நிறைவடைந்தது முதல் நாள். .
இரண்டாம் நாளின் காலை வேளை மரினா அரங்கில் சுவையான இட்லியுடன் தொடங்கியது.
பிரிட்டிஷ் தலைமையகமாக விளங்கிய ரோஸ் தீவு எங்களை புள்ளினங்களோடு வரவேற்றது.
ரோஸ் தீவின் சின்னங்களை பதிவு செய்கிறார் எங்கள் ஒளிஓவியர் மணி |
ரோஸ் தீவு |
மருண்டு ஓடும் மானும்
மயங்கி ஆடும் மயிலும்
அழைத்து ஆர்ப்பரிக்கும் அலையும்
துதிபாடி வரவேற்றன.
ரோஸ் தீவின் நான்கு முக்கியமான சிலைகள் |
ஆங்கில /சப்பானிய கால நினைவுச் சின்னங்களோடு பாழடைந்த கட்டிடங்களுமாக காட்சி அளித்த தீவின் எழில்மிகு கடற்கரைகளில் எங்கள் கால் தடங்கள் பரவின.
அடுத்ததாக நார்த் பே தீவுக்கு எங்களை கொண்டு சென்றது அந்த சிறு கடலூர்தி.
அழகிய நார்த் பே தீவு |
விளையாடி மகிழ அழகிய கடற்கரையும் கண்டு களிப்பெய்த கலங்கரை விளக்கமும் காட்சி அளிக்க ஆழ்கடல் நடையை நோக்கி மீண்டும் கடலுக்கே சென்றோம்.
தலைக்கவசம் அணிந்து ஆழ் கடலின் தரையில் அழகிய நடை பயின்றோம். அந்த மானை தேடி வந்து இங்கு மீன்களோடு நாங்களும் நீரினுள் விளையாட ஆரம்வித்தோம்.
ஒரு அந்திமாலை பொழுதில் |
எங்களை சுற்றிய மீன் கூட்டங்களினூடே தொட்டு விளையாடிக் கொண்டிருக்க ஆக்ஸிஜன் நிரம்பிய தலைக்கவசம் உதவியது. மீன்களை சாப்பாட்டு தட்டிலேயே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு தண்ணீரின் உள்ளேயே சென்று பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது.
மாலை வேளை மாலையிட்டு வரவேற்க போட் பிளேரின் கார்பின் கவ் கடற்கரை கைநீட்டி அரவணைத்தது.
காய்ந்த சருகு போல சகாக்கள் கடலினில் தூக்கி எறிய கரையை எட்டாத இலையாய் அலையில் மிதக்க ஆரம்பித்தேன்.
உற்சாகமான குளியலுடன் அந்த தினத்துக்கான முடிவுரை அமைந்தது.
அடுத்த நாளின் அதிகாலை துரித கதியில் விடிந்தது. அந்த நவீன கப்பலின் சொகுசு அறையில் அமர்ந்து அறுவர் பயணமானோம் ஹேவ்லாக் தீவுக்கு. அந்த அற்புத தீவில் மூங்கில் கம்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த விடுதியில் பயண களைப்பை கலைந்தோம் .
எழில் கொஞ்சும் ராதாநகர் பீச் |
பிற்பகலில் எழில்மிகு ராதாநகர் கடற்கரையில் மையம் கொண்டோம் . சுண்ணாம்புக்கட்டிகளை பொடிசெய்து கொட்டியது போல் இருந்தது அந்த கடற்கரையின் பால் வெண்மணல் . பச்சை மையை சிந்தியது போன்ற வனப்பரப்புக்கும் நீலப்போர்வை போத்தியிருந்த நீர்பரப்புக்கும் இடையிலான இந்த பெருமணல்வெளி கண்ணுக்கெட்டிய துயரம் வரை நீண்டு காட்சியளித்தது.
ராதாநகர் பீச் |
அந்த நீரின் தெளிவை எப்படி விவரிப்பது ? இப்படி சொல்லலாம் . மார்பளவு நீரில் நின்று ஒரு ரூபாய் நாணயத்தை தண்ணீரில் போட்டால் அது தெளிவாக உங்களின் கண்களுக்கு புலப்படும் . அப்படி ஒரு தெளிந்த கடற்பரப்பு
அந்தி சாய்ந்துவிட பிரியா மனமின்றி விடைபெற்றோம் அந்த பூலோக சொர்க்கத்தில் இருந்து
அடுத்த தினம் சில தோழர்கள் ஆழ்கடல் நீச்சல் (ஸ்கூபா டைவிங்கிற்கு இதைவிட பொருத்தமான கலைச்சொல் உருவாக்கி இருக்கலாம் ) சென்று அகமகிழ்ந்து வந்தனர்
நீல் தீவு |
மதிய நேரம் அந்த தீவில் இருந்து பயணமானோம் நீல் கடற்கரை நோக்கி . அந்தமானின் மற்றுமொரு அழகிய சொர்க்கம் நீல். சிறு கடல் விளையாட்டுகள் , சூரிய அஸ்தமனம் பார்க்க சென்று மேகங்களிடம் ஏமாந்தது என அழகாக ஆரம்பித்தது . நாங்கள் தங்கியிருந்த அந்த விடுதி கடற்கரைக்கு மிக அருகில் அமைந்திருந்தது.
நீல் தீவின் லக்ஷ்மான்பூர் கடற்கரை |
இரவு உணவு முடித்துவிட்டு கடற்கரை மணலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். அழகிய நிலவொளியும் மென்மையாக தீண்டி செல்லும் கடற்காற்றும் எங்களை மெய் மறக்க செய்ய, கொஞ்ச நேரம் அந்த உன்னத நிலையில் இருந்து மீளும் போது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது கடல் . சில மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி இருந்தது கடல் . திட்டு திட்டாய் பாறைகள் தெரிய எண்ணிலடங்கா சிறு உயிரினங்களை அந்த பரப்பில் காணமுடிந்தது . கடல் உள்வாங்குவது அந்த கடலில் வழக்கமாக நடக்க கூடியது என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டோம்
அடுத்தநாள் அதிகாலை பரத்பூர் கடற்கரையில் சூர்யோதயத்துடன் இனிதாக ஆரம்பித்தது. சுவையான காலை சிற்றுண்டிக்கு பிறகு நீல் தீவின் பல்லுயிர் கழகமான நேச்சர் பிரிட்ஜ்க்கு சென்றோம் .
நேச்சர் பிரிட்ஜ் |
மடிந்த மற்றும் உயிருள்ள பல வகையான பவளப்பாறைகளை காண்பித்து எங்களுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தார் எங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட அந்த சகோதரர் . எலக்ட்ரிக் ஈல் , ஆக்டொபஸ் , நட்சத்திர மீன் , வெள்ளரி மீன் என பலவகை கடல் ஜீவராசிகளை அவர் எங்களுக்கு காண்பித்தார் .
நீல் தந்த இந்த அற்புத அனுபவத்துடன் போர்ட் பிளேர் கிளம்பினோம்
அடுத்த நாள் எங்களுக்கு நள்ளிரவிலேயே விடிந்து விட்டது . சுண்ணாம்புக்கல் குகையை நோக்கி பயணமானோம். ரோட்டோர கடையின் காலை சிற்றுண்டியுடன் வனப்பகுதிக்குள் பயணமானோம் . ஜராவா பழங்குடிமக்கள் குறித்தும் வனப்பகுதியில் நமது வாகனம் பயணிக்கும் போது செய்ய கூடாதவை குறித்தும் நண்பர் நிறைய சொல்லி இருந்தார். பாராட்டங் சென்று அங்கிருந்து மூன்று குழுக்களாக பிரிந்து பயணமானோம் அந்த அழகிய சதுப்பு நில காடுகளினூடே. ஒரு 20 மணித்துளி பயணம் ஆனாலும் அது அவ்வளவு ரம்மியமானதாக இருந்தது .
அங்கிருந்து சிறிது நடைக்கு பிறகு சுண்ணாம்புக்கல் குகையை அடைந்தோம். அதன் சிறப்பு மற்றும் உருவான விதம் குறித்து எங்களுடன் வந்திருந்த வழிகாட்டி எங்களுக்கு எடுத்துரைத்தார் . நிச்சயமாக இந்த சுற்றுலாவின் மிக முக்கியமான இடமாக எனக்கு இந்த வளரும் குகை தோன்றியது. மேய்ச்சல் நிலம் மற்றும் நிறைய கால்நடைகளை காண முடிந்தது . அங்கு இருந்த மக்களின் கூரை வீடுகள் மிக நேர்த்தியாக இருந்தன
மீண்டும் பாராட்டங் சென்று அங்கிருந்து ஜீப் மூலம் மட் வல்கனோக்கள் பார்க்க சென்றோம். மணல் குழம்புகளை தரையில் இருந்து பீறிட்டு வருவது போல இருந்தது .
மத்திய உணவை முடித்துவிட்டு போர்ட் பிளேர் திரும்பும் போது வனப்பகுதியில் சில ஜராவா பழங்குடிமக்களை பார்க்க முடிந்தது.
அடுத்தினம் சித்தியா தோப்பு பூங்கா சென்றோம். முதலைகளின் வருகை இருப்பதால் அந்த பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருருந்தது. சில புகைப்படங்களுடன் திருப்திப்பட்டு கொண்டு அங்கிருந்து கிளம்பி சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு அறைக்கு திரும்பினோம்
அடுத்தினம் பல நண்பர்கள் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிவிட , விமானத்தில் இடம் கிடைக்காததால் நாங்கள் ஐவர்மட்டும் தனித்து விடப்பட்டோம் .
20 ரூபாய் தாளில் தெரியும் நோர்த் பே தீவின் கலங்கரை விளக்க புகைப்படம் , மவுண்ட் ஹெரியாத் தீவில் இருந்து |
அடுத்தினம் எங்களுக்கு மிக சிறப்பாகவே விடிந்தது . காலையில் அந்தமானில் மானுடவியல் அருங்காட்சியகம் (Zonal Anthropological Museum ) சென்றோம் . அந்தமானின் முக முக்கியமான பொக்கிஷம் இந்த மியூசியம். இங்குதான் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்கள் , அதன் புவியியல் கூறுகள் , மக்கள் தொகை மற்றும் அதன் பல்வேறு பழங்குடிமக்கள் குறித்தும் அவர்களின் வாழ்வியல் குறித்தும் அறிய முடிந்தது
அதை முடித்துவிட்டு அங்கிருந்து அக்குவேரியம் சென்றோம் . பலதரப்பட்ட கடல்வாழ் உயிரிகளின் மாதிரிகள் அங்கு பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன . மேலும் பல்வேறு வகையான மீன்கள் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . எனக்கு அங்கிருந்த லாப்ஸ்ட்டர் என்ற உயிரினம் மிக பிடித்துப்போனது . அதன் கொடூர உருவ அமைப்பையே காரணமாக சொல்லலாம்
பின் சத்தம் பகுதிக்கு சென்று அங்கிருந்து மவுண்ட் ஹெரியட் சென்றோம் .அந்த பகுதியில் சில வியூ பாயிண்ட்களில் புகைப்படங்கள் எடுத்துவிட்டு ஒரு சிறு நடையையும் முடித்தோம் . பழங்குடி மக்களின் குடிசைகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன அந்த பூங்காவில்.
பின் அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு சிறு மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம் . ஒரு ராட்சத முதலை , மலைப்பாம்பு , சிறு ஆமைகள் மற்றும் ராஜநாகம் எல்லாம் கண்டு களித்துவிட்டு அறைக்கு திருப்பிமினோம்
மவுண்ட் ஹெரியத் டிரெக்கிங் |
அடுத்தநாள் காலை அந்தமானில் இருந்து விடைபெற்றுக்கொண்டு திரும்பிவிட்டோம் . ஆரம்பிக்கும்போது எட்டு தினங்களா என விளித்து யோசித்தது போய் அதற்கும் பயணம் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்துடன் பயணம் முடிந்துவிட்டது
பிகு
சில துளிகள் :
கடைசிதின நள்ளிரவில் ஒரு தெலுங்கு படம் பார்க்க தியேட்டர் சென்று நம்முடைய இனிமையான தருணங்களில் சினிமாவின் பங்களிப்பை உறுதி செய்தோம் . அரைமணி நேரம் மட்டுமே படம் பார்த்துவிட்டு நான் மீதி நேரம் தூங்கி விழுந்தது வேறு கதை
முருகப்பெருமான் கோவிலின் கும்மியாட்டம் , சத்தம் , முத்துமாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா என தமிழ் மக்களின் வாழ்வியல் துளிகூட மாறாமல் அதே கலை , கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளில் பிரதிபலித்தது
அநேக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் உணவகங்கள் எல்லா இடங்களிலும் இருந்தன . நம் முகத்தையும் தப்பு தப்பா நாங்க பேசுனா ஹிந்தியையம் பார்த்தவுடன் எங்களை கண்டு கொண்டு தமிழில் கதைக்க ஆரம்பித்துவிட்டனர் மக்கள்
பெர்ரியின் கேப்டன் அறைக்கு சென்று அந்த கப்பல் இயங்கும் விதம் மற்றும் அதன் தொழிநுட்பம் குறித்து தெரிந்து கொண்டோம் மற்ற நண்பர்களுக்கு தெரியாமல்
போர்ட் பிளேயரில் ஒரு தமிழ் அக்கா கடையில் மீன் குழப்பு சாப்பிட்டோம். அதன் ருசி இப்பொழுது நினைத்தாலும் தொண்டைக்குழிக்குள் ருசிக்கிறது
பால் பவுடர் டீ குடித்து வெறுத்துப்போன மனங்களுக்கு ஆறுதல் அளித்தது பாராட்டங் பகுதியில் கிடைத்த பால் டீ.
ராதா நகர் , நீல் தீவுக்கடற்கரைகளில் போட்ட உற்சாக குவியல்கள் , மணல்வீடு கட்டி விளையாடிய விளையாட்டுகள் , சுண்ணாம்புக்கல் குகை அருகில் குடித்த லெமன் சோடா போர்ட் பிளேர் மற்றும் இதர பகுதிகளில் சாப்பிடட பலவகை உணவுகள் என நினைவுகள் ஏராளம்
இன்னும் இன்னும் ஏராளாமான நினைவுகள் .
அனைத்தையும் எழுத்தில் வடிக்கும் அளவுக்கு கைதேர்ந்த சிற்பி அல்லவே நான்
Arumaiyana Pathivu....
ReplyDeleteNerul partha unarvu...