February 23, 2014

தமிழன் உலகின் முன்னோடி -பகுதி 2

இந்த உலகிற்கு தமிழர்கள் கற்று தந்த பல கலைகளுள் போர்க்கலையும் ஒன்று. ஈவு இரக்கமின்றி உயிர்களை துன்புறுத்தும் கொலைக்களம் எப்படி கலையாகும் என நீங்கள் நினைக்கலாம். அதைப்பற்றி விளக்குவதே இப்பதிவு

தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையினை அகம் புறம் என இருண்டு பிரிவுகளாக பிரித்தனர் .இதில் வீரம் புறவாழ்க்கையில் வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை போருக்கு காரணமாக விளங்குபவை மண்ணாசை,பெண்ணாசை , பொன்னாசை, இதைவிட மோசமான அதிகார ஆசை இவை நான்குமே

தமிழர்களின் போர்முறை மிகவும் நேர்மையானது . எதிரி நாட்டின் மீது படையெடுக்கும் மன்னன் ,போருக்கு முன் முறையாக பறைசாற்றி எதிரிக்கு அறிவித்து ,அவன் தயாரானவுடன்தான் போரை தொடங்குவான். எதிரி அயர்ந்த நேரத்தில் தாக்கி வீழ்த்தும் பழக்கம் நம் மக்களுக்கு கிடையாது. போர் என்பது இரு படைவீரர்களுக்கும் இடையில் தான் நடக்கும். அப்பாவி மக்களுக்கு தொந்தரவு தர கூடாதென போருக்கென்றே தனியாக பாலை நிலங்களை உருவாக்கி வைத்திருந்தனர் . இன்று போர் என்றாலே அப்பாவி மக்கள் மீது மனித உரிமை மீறல்களை நடத்துவது என சில அ"சிங்க" குணம் கொண்ட வீணர்கள் நினைக்கிறார்கள்.காலையில் ஆரம்பிக்கும் போர் மாலையில் முடித்துகொள்ளப்படும்.

தான் கைப்பற்றிய நாட்டை,நாட்டு மக்களை வெற்றி களிப்பில் சூறையாடி மகிழும் பண்பாட்டை கொண்ட அயலார்க்கு அவர்களை தம் குடிமக்களாக கொள்ளும் நம் பழக்கம் சற்று வியப்புதானே


நால்வகை படைகளை தமிழ் மன்னர்கள் கொண்டிருந்தார்கள் என் வரலாறு விளம்புகிறது.தேர்ப்படை ,குதிரைப்படை,யானைப்படை,காலாட்படை இவையே.
நம் போர்கள் நிகழும் முறையை இலக்கியங்கள் கூறுகின்றன.அவற்றை பார்ப்போம்

முதலில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் மன்னன் தன் படையை ஏவி எதிரி நாட்டு பசுக்களை கவர்ந்து வர வேண்டும் .அதற்க்கு கரந்தை என்று பெயர் . அந்த பசுக்களை மீட்க அவற்றின் உரியவர் வருவார் அது வெட்சி எனப்படும்

போரை தொடங்கும் மன்னன் பகை நாட்டை எதிர்த்து நின்று தாக்குதலை வஞ்சி என்றும் பகைவர் கோட்டையை முற்றுகை இடுவதும் முற்றுகை இடப்பட்ட மதிலை காத்தலும் உழிஞை என்றும் அழைக்கப்படும் .இரு மன்னர்கள் களத்தில் இறங்கி போர் புரிவது தும்பை என்றும் அதில் வெற்றி பெறுவது வாகை எனப்படும்

கடற்போரில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும் ,அவர்கள் கடாரம் மாநக்காவரம் .ஸ்ரீ விஜயம் போன்ற பகுதிகளை ஆட்சி செய்ததையும் வரலாறு நமக்கு சொல்கிறது. கடற்போர்களில் பயன்படுத்தப்படும் நாவாய்கள் (போர்கப்பல்) அமைத்தலில் கொண்டிருந்த பொறியியல் நுட்பம் அலாதியானது

போரில் விழுப்புண் பட்டு இறத்தலை பெருமையாகவும் புறமுதுகு காட்டி ஓடி தப்பித்தலை இழிவானதாகவும் கொண்டிருந்தனர் .

பொதுவாக ஆயுதங்களாக வில் ,வேல் ,வாள் போன்றவையே இருந்தது . இதில் அருகில் இருந்து போர் புரிய வாளும் தூரத்தே இருந்து போர் செய்ய வில் மற்றும் வேல் பயன்படுத்தப்பட்டன. இது தவிர கழல்,கண்ணி,தார் ,அடார்,அரம்,அரிவாள் ,ஆயுதக்காப்பு ,கணிச்சிப்படை ,கலப்பை ,கழிப்பிணி ,காழெக்கம்,கிளிகடிகருவி ,குந்தாலி,குறடு ,கேடகம் ,கோடாலி ,சேறுகுத்தி,நவியம் மற்றும் வளரி போன்ற ஆயுதங்களையும், பயன்படுத்தினர் .

போர்கருவிகள் ஊரு விளைவிக்கா வகையில் புலி தோலால் செய்யப்பட்ட உறைகளையும் கேடயங்களையும் பயன்படுத்தினர்

போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக நினைவிடங்களையும் படைவீடுகளையும் அமைத்து அவர்களை பெருமைப்படுத்தினார்கள்.


ஆயுதம் இன்றி உடல் பலத்தால் மட்டும் நடக்கும் மல்யுத்தம் ,விற்போர்,வளரி வீசுதல் மற்றும் சிலம்பம் போன்றவை வீர விளையாட்டுகளாக இருந்திருக்கின்றன.


நம்முடைய மரபில் இருந்த பெரிய பிரச்னை என்னவெனில் மக்களை கடவுளாக உயர்த்தி கூறுவதுதான். அதாவது மனிதர்களாக அவர்கள் செய்த வீரபிரதாபங்களை ,செயற்கரிய செயல்களை உயர்த்தி கூறுவதாக எண்ணி கடவுளரோடு ஒப்பிட்டு கூறுவதுதான். இதன் மூலம் வீர மரபுகள் புராதான மரபுகளாகி நம்ம முடியாத அளவிற்கு பொய் விடுகிறது

உதாரணமாக சிபி, முசுகுந்தன்,காந்தன் ,செம்பியன் மற்றும் மனு நீதி சோழன் போன்றோரின் வீர வரலாற்றை நம் இந்த புராதான மரபு கெடுத்து விட்டது (சிபி - புறாவை காக்க பருந்திடம் தன் தசையை கொடுத்தவன் ,முசுகுந்தன்-அரக்கர்கள் பலரை வென்று இந்திரனை காதவன் ,காந்தன் - குடகு மலையை பிளந்து காவிரி ஆற்றை வரவிட்டவன் ,செம்பியன் - அரக்கர்களின் பறக்கும் கோட்டையை அழித்தவன் ,மனுநீதிச்சோழன் - உங்களுக்கே தெரியும் )


அடுத்த பதிவில் சந்திப்போம்


பி.கு :
ஒரு முறை மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற போது ஒரு வேற்று மாநிலத்து நண்பர் மயிலுடன் நிற்கும் ஒரு மனிதரின் சிலையை காட்டி அவர் யார் என ஒரு தோழியிடம் வினவ ,உடனே தோழி அது முருகன் என பதிலுரைத்தார். மயிலோடு யாரை பார்த்தாலும் நம் மக்களுக்கு முருகர் நியாபகமே வருகிறது. உடனே குறுக்கிட்ட நான் அவர் பேகன் எனவும் அவர் மயிலுக்கு போர்வை தந்த வரலாற்றை சுருக்கமாக சொன்னேன் உடனே அந்த நண்பர் "அவர் தான் முட்டாள்தனமாக செய்திருக்கிறார் என்றால் அதை பெருமையாய் நினைத்து போற்றுகிறீர்களே ." என கேட்க உடனே நான் "அதை அவ்வாறு எடுத்துக்கொள்ள கூடாது .மக்களுக்கு ஒருவர் உதவி புரிவது இயற்கைதான் .ஆனால் மாக்களுக்கும் உதவி புரிந்த நல்லோர்கள் வாழ்ந்த பூமி எங்கள் பூமி " என கூறினேன் .என்ன நான் சொன்னது சரிதானே ????


 



மூலங்கள் :
>தென்னாட்டு போர்களங்கள் -கா.அப்பாதுரையார்
> பத்தாம் வகுப்பு (2006-2010) தமிழ் துணைப்பாட நூல்
>http://www.santhan.com/index...
>http://ta.wikipedia.org/விக்கி
>http://www.thinnai.com/index...

No comments:

Post a Comment